அவள் அருளால் அவள் தாள் பணிந்து...

லிங்கபைரவியில் தேவி சேவை செய்ய ஆண்களுக்கு மட்டுமே வாய்ப்பு இருந்து வந்தது. ஒரு சில மாதங்களுக்கு முன், இந்த வாய்ப்பு பெண்களுக்கும் வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, தேவியின் அருகில், அவளது அருளில், அரவணைப்பில் இருந்து சேவை செய்ய பல பெண்கள் காத்திருக்க, அந்த சேவையை செய்த ஒரு அன்பரின் பகிர்தல் இங்கே...
 


லிங்கபைரவியில் தேவி சேவை செய்ய ஆண்களுக்கு மட்டுமே வாய்ப்பு இருந்து வந்தது. ஒரு சில மாதங்களுக்கு முன், இந்த வாய்ப்பு பெண்களுக்கும் வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, தேவியின் அருகில், அவளது அருளில், அரவணைப்பில் இருந்து சேவை செய்ய பல பெண்கள் காத்திருக்க, அந்த சேவையை செய்த ஒரு அன்பரின் பகிர்தல் இங்கே...

ரம்யா, தர்மபுரி.

லிங்கபைரவியில் சேவை செய்ய பெண்களுக்கும் அனுமதி உண்டு என்று கேட்டவுடன், முதலில் ஏதோ நம்மால் முடிந்தவரை தேவிக்கு பணிவிடை செய்யப் போகிறேன் என்று மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆரம்பமே கோலாகலமாக இருந்தது. தேவி சேவா பௌர்ணமியன்று துவங்கியது. முதல் மூன்று நாட்கள் மௌனத்தில் இருக்க வேண்டும். சம்யமா வகுப்பு முடித்தபின் நான் மௌனத்தில் இருப்பது இதுவே முதல்முறை.

மூன்று நாட்கள் மௌனத்தில் இருக்க வேண்டும் என்று நான் அறிந்தபோது முதலில் மிகவும் கஷ்டமாக இருந்தது. பேசாமல் எப்படி இருக்கப் போகிறோமோ என்று தோன்றியது. ஆனால் அந்த மூன்று நாட்கள் என் வாழ்க்கையின் புதிய ஆரம்பமாக இருந்தது.

அவள் அன்பையும், அருளையும் தாய்மையையும் எங்களுக்காக பொழிந்தாள். அவளுடைய இருப்பை எல்லா இடங்களிலும் எங்களால் உணர முடிந்தது.
இத்தனை நாட்கள் என் கண்கள் அகலத் திறந்திருந்தாலும் நான் ஒரு பார்வையற்றவளாகவே இருந்திருக்கிறேன் என்பதை, மௌனம் காத்த அந்த மூன்று நாட்களில் நான் உணர்ந்தேன். ஏதோ ஓர் தேடல் எனக்குள் ஆரம்பமானது. நான் எப்படிப்பட்ட உயிர், எதற்காக இங்கு வந்திருக்கிறேன், எனப் பல தேடல்கள் எனக்குள் ஆழமானது இந்த மூன்று நாட்களில்தான்.

விளையாட்டாக, மகிழ்ச்சியாக, ஆழமான வித்தோடு ஆரம்பமானது எனது பயணம். என் தேவிக்காக ஏதோ செய்யப்போகிறேன் என்று ஆனந்தம் அதிகமாக இருந்தது.
அன்று தைப்பூசம். சிவாங்கா விரதம் மேற்கொண்ட அனைத்து பெண்களும் உலகெங்கிலும் இருந்து தேவியை உணர வந்திருந்தார்கள். அன்று என்னால் கோவிலுக்குள் நிற்க முடியவில்லை. தேவி மிகத் தீவிரமாக இருந்தாள். ஒரு புதுவிதமாக அன்று நான் தேவியை உணர்ந்தேன். 15 நாட்கள் எப்படி சென்றதென்றே தெரியவில்லை.

இந்த தேவி சேவையை சில பெண்கள் சேர்ந்து செய்தோம். முதலில் இது விளையாட்டாக இருந்தது. சுத்தம் செய்வதற்கு, "நான் செய்றேன், நான் செய்றேன்", என்று நாங்கள் சண்டையிட்டுக் கொள்வோம். கோவிலை சுத்தம் செய்த அனுபவம் மிக அற்புதமாக இருந்தது. இந்த 15 நாட்களில் நாங்கள் அனைவரும் குழந்தைகளாகவே மாறிவிட்டோம்.

இந்த 15 நாட்களும் தேவி எங்களோடு எப்போதும் இருப்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். அவள் 100% எங்களுடன் இருந்தாள். இது கற்பனை செய்ய முடியாதது. என்ன நடக்கிறதென்று எங்களால் நம்பவே முடியவில்லை. அவள் அன்பையும், அருளையும் தாய்மையையும் எங்களுக்காக பொழிந்தாள். அவளுடைய இருப்பை எல்லா இடங்களிலும் எங்களால் உணர முடிந்தது. நாங்கள் எங்கு சென்றாலும், எந்த வேலை செய்தாலும் தேவி அங்கே எங்களுக்காக இருந்தாள்.

தேவியின் அன்பையும், அருளையும் இவ்வளவு ஆழமாக நான் எப்போதுமே உணர்ந்ததில்லை. நான் ஒன்றுமே செய்யவில்லை. என்னை முழுமையாக அவளுக்கு சமர்ப்பித்தேன், அவ்வளவே. தேவியின் ஒரு அங்கமாகவே ஆனதைப்போல் உணர்கிறேன். அவளின் அன்பு, கருணை மற்றும் தாய்மையை எடுத்துச் சொல்ல வார்த்தைகள் இல்லை. சேவை செய்த இந்த 15 நாட்கள் முடிந்து பல நாட்களும் ஆகிவிட்டது, ஆனால் அவள் அன்பு மழையில் இன்றும் ஆனந்தத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றேன்.

இப்படி ஒரு வாய்ப்பை இந்த புவியில் பிறந்த ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு அருளிய சத்குருவிற்கும், ஈஷாவிற்கும் என் சிரம்தாழ்த்தி மிக்கபணிவுடன் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேவி சேவையை செய்து முடித்தபின் என்னுடைய வாழ்க்கை முன்புபோல் இல்லை.
2

லிங்கபைரவியில் இருந்து சேவை செய்யும் வாய்ப்பு அனைத்து ஈஷா தியான அன்பர்களுக்கும் உண்டு. ஒவ்வொரு மாதமும் அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை ஆண்களுக்கும், பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை பெண்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அடுத்து வரும் தேவி சேவை நாட்கள்

ஆண்கள்: ஏப்ரல் 14 - மே 5
பெண்கள்: மார்ச் 31 - ஏப்ரல் 18

மேலும் தொடர்புக்கு:
94864 94865