மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் சத்குருவுடனான தனி உரையாடல்களில், பொது சந்திப்புகளில் மற்றும் பயணங்களில் ஏற்பட்ட தனது சுவாரஸ்ய அனுபவங்களை "அற்புதர்" எனும் பெயரில் நூலாக தொகுத்து வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகத்தில் அப்படியென்ன அற்புதம் உள்ளது?! இங்கே ஒரு பார்வை!

புத்தகம் என்பது நமக்கு நண்பனாகலாம். அவற்றுள் சில, பொருள் சார்ந்த வாழ்விற்கு வழிகாட்டும் கருவியாகலாம். சில புத்தகங்கள், நமக்கு ஒரு பொழுதுபோக்கு சாதனமாக இருக்கலாம். ஆனால், ஒரு சில புத்தகங்கள் மட்டுமே நம்மை சிந்திக்க வைக்கின்றன. முழுமுதற் உண்மையை நோக்கி நம்மை செலுத்துவதாய் அமைகின்றன. அப்படியொரு நூலாக 'அற்புதர்' அமைந்துள்ளது.

'அற்புதர்' புத்தகம் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சொல்லும்போது...

"மரியாதைக்குரிய சத்குரு அவர்கள் ஈஷா யோக மையத்தின் ஊடாக மகிழ்ச்சி குன்றாத மானுட வாழ்வுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார். சமூக நீரோட்டத்தை மடைமாற்றம் செய்ய ஈஷா அறக்கட்டளையின் வழி பற்பல தொண்டுகளை ஆற்றி வருகிறார்.

அற்புதர் என்னும் இந்த அருந்தொகுப்பு, சத்குருவை அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் மரபின் மைந்தன் முத்தையா அவர்களால் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஒரு சிறந்த வாழ்வியல் நூலாகவும் சிந்தனையைத் தூண்டும் சீரிய கருத்துக்களின் பெட்டகமாகவும் திகழ்கிறது.

சத்குருவுக்கு மரபின் மைந்தன் அறிமுகமானது முதல் அவரோடு அவர் பயணப்பட்ட - தனித்துரையாடிய - பல்வேறு காலகட்டங்களில் சந்தித்த அனுபவங்களின் இனிய தொகுப்பு இது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளப் பெருந்தொகுப்புகள் இருந்தாலும் 25 அத்தியாயங்கள் கொண்ட இந்தக் குறுந்தொகுப்பிலும் அவரது அறிவின் பிரம்மாண்டத்தையும் ஆன்ம ஞானத்தின் ஆழத்தையும் அறிய முடிகிறது.

இந்தத் தொகுப்பின் புனைவு நடை - விவரிப்பு நடை என இரு நடைகளுமே வாசிப்பதற்குச் சுகமான எளிய நடை; நம்மை ஈர்க்கும் நடை. அடுத்தடுத்து வரும் இவ்விரண்டு அத்தியாயங்களும் மாறி மாறி ஒரு நூலில் இரு நூல்களைப் படிப்பது போன்ற வித்தியாச அனுபவத்தைத் தருகின்றன. இந்தத் தொகுப்பெங்கும் வாசகர்கள் அள்ளிக்கொள்ள சத்குருவின் ஞான முத்துக்கள் ஆங்காங்கே கொட்டிக்கிடக்கின்றன.

55ஆவது நூலாக இந்த அற்புதர் தொகுப்பை வெளியிட்டுத் தன் வயதைவிடவும் அதிகமான நூல்களைப் படைத்த சாதனை மைந்தனாகத் திகழும் மரபின் மைந்தனை வாழ்த்துகிறேன்.

என் வாழ்த்துப் பூக்களைத் தூரத்திலிருந்தே தூவுகிறேன்."

சிந்தனையைத் தூண்டும் பேச்சாளர் திரு.சுகி சிவம் அவர்களின் பார்வை...

"ஆன்மீக உண்மைகளை வெறும் மொழி வல்லமையால் எழுதவோ, பேசவோ இயலாது. மோனத்தை மொழி பெயர்க்கும் ஞானம் அவசியம். முத்தையா அதற்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர். சத்குருவும் சதானந்த குருவும் (சாட்சாத் தட்சிணா மூர்த்தியைத்தான் சொல்கிறேன்) அவருக்கு மொழியும், மொழியின் ஒளியும், ஒளியின் ஒலியும் தந்து அவரைப் பேசவும், எழுதவும் வைத்துள்ளனர்.

அற்புதர் என்கிற எழுத்துக் கோவிலில், தமது குருநாதர் சந்நதி அனுபவங்களை வார்த்தை வழிபாடாக வடித்து வழங்குகிறார். நறுமணமான நடை, ஆன்மாவில் அதிர்வுண்டாக்கும் அதிசய வலிமையுள்ள படைப்பு. "மரம் நடும் சாமி" இவருள் ஒரு கற்பக மரத்தையும் நட்டு வைத்துள்ளார் என்பதற்கு இது ஓர் அடையாளம்.

சத்குருவின் மஹாசிவராத்திரி உரைகளை மட்டுமல்லாமல் மௌனத்தையும் கூட முத்தையாவால் ஒலிபெயர்க்க முடியும். அது சத்குரு அவருக்களித்த ஆசி.

கங்கையின் மடியில் குருவுடன் கனிந்த அனுபவங்கள் லிங்கப் பிரதிஷ்டையின் உயிர்ப்பான படப்பிடிப்பு. சத்குரு என்கிற மகாமனிதரின் பிரத்யேகமான குணாம்சங்கள், சீடர்களின் இதயத் தாமரையை மொட்டவிழ்க்கும் சூரிய தீட்சைகள் என்று புத்தகம் முழுவதும் ஞானம் மணக்கிறது. உலகம் பயன்பெற, முத்தையாவின் பயணம் நிறைவேற என் ஆசிகள்!"

நூல் வெளியீட்டு விழா

பிப்ரவரி 1ம் தேதி கோவையில், "அற்புதர்" நூல் வெளியீட்டு விழா வெகு சிறப்பாக நிகழ்ந்தேறியது. நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் திரு. நாஞ்சில்நாடன் அவர்கள் தலைமை தாங்க, புத்தகத்தை பத்மஸ்ரீ சுதா ரகுநாதன் அவர்கள் வெளியிட, முதன்படியை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் திரு. ம.கிருஷ்ணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். விழாவிற்கு "செந்தமிழ் வாரிதி" முனைவர். இரா. செல்வகணபதி அவர்கள் சிறப்புரை ஆற்ற, கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்கள்.

இதை அடுத்து மார்ச் 28ம் தேதி திருச்சியில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில், திருச்சி தினமலர் இணை ஆசிரியர் திரு. ராமசுப்பு அவர்கள் தலைமை தாங்க, கவிஞர் திருமதி. ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சிகரம் உங்கள் உயரம் தலைவர் திரு. க. சிவகுருநாதன், செயலாளர் திரு. வீரசக்தி, அம்மன் ஸ்டீல்ஸ் நிர்வாக இயக்குனர் திரு. எம். சோமசுந்தரம், முனைவர் திரு. இராஜாராம் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஞானத்தின் பிரம்மாண்டமாக, ஒப்பற்ற சக்திப் பெருக்காக விளங்கும் சத்குருவுடன் அருகிலிருந்து பேசிப் பழகிய பாக்கியம் பெற்ற முத்தையா அவர்கள், சத்குருவின் பெருந்தன்மையை, எளிமையை, தாய்மையை தான் உணர்ந்த விதம் பற்றி இந்நூலில் மனம் திறந்திருக்கிறார்.

இந்நூலினை பெற இங்கே க்ளிக் செய்யவும்.

மேலும் தொடர்புக்கு: 0422 - 2515415