படித்த இளைஞர்கள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்தான் இந்த மகத்தான மாற்றத்துக்கு அடித்தளமிட்டவர். அவரின் உணர்ச்சிமிகு உரைகளை யூ-டியூப்பில் பார்த்து அதன் விளைவாக இயற்கை விவசாயத்தில் கால் வைத்த இளைஞர்கள் ஏராளம். அதில் திண்டுக்கல் கார்த்திகைவேலும் ஒருவர். இன்ஜினியரிங் படித்துவிட்டு கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த கார்த்திகைவேல், நம்மாழ்வாரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு தற்போது சொந்த கிராமத்திலேயே இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில் உள்ள விருதலைப்பட்டி என்னும் கிராமத்தில் வசிக்கும் கார்த்திகைவேலை சந்திப்பதற்கு மாலை வேளை ஒன்றில் சென்றிருந்தேன். வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து டூ-விலரில் தனது தோட்டத்துக்கு அவர் என்னை அழைத்து சென்றார். செல்லும் வழியெங்கும் இருபுறமும் சரளை கற்கள் நிறைந்த செம்மண் பூமியாக இருந்தது.

“இந்த பக்கம் பூரா இப்படி தாங்க இருக்கும். எல்லாமே சரள பூமி. இங்க விவசாயம் பண்றது கொஞ்சம் சிரமம்தாங்க. எங்க ஊருக்கு ஆத்து பாசனமோ வாய்க்கா பாசனமோ கிடையாது. கிணத்துல ஊர்ற கொஞ்சம் தண்ணீயையும் போர் தண்ணீயையும் வச்சுதான் விவசாயம் பண்றோம். சுத்துவட்டாரம் பூரா மானாவாரி நிலங்குறதுனால, நெல், கரும்பு, வாழை மாதிரி நஞ்சை பயிர்களை பயிரிட முடியாது. இங்க நிலக்கடலையும் சிறுதானியங்களும்தான் அதிகம் விளையும். இதுதவிர கொஞ்சம் காய்கறி சாகுபடி பண்ணலாம்” என்று வழிநெடுக இயற்கையான சவால்களை சொல்லிக்கொண்டு வந்தார்.

அவரது தோட்டத்தை அடைந்ததும் கார்த்திகைவேலின் தாய்மாமா கிருஷ்ணமூர்த்தி நம்மை புன்னகையுடன் வரவேற்றார். இருவரும் அருகருகே இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். கிருஷ்ணமூர்த்தி 8 ஏக்கரில் பகுதி நேரமாகவும் கார்த்திகைவேல் 10 ஏக்கரில் முழுநேரமாகவும் இயற்கை விவசாயம் செய்துவருகின்றனர்.

தோட்டத்துக்கு அழைத்து சென்று காட்டிய கார்த்திகைவேல், “நான் பி.இ. முடிச்சுட்டு கோயம்புத்தூர்ல வேல பாத்துக்கிட்டு இருந்தேன். சொந்த ஊரு, அப்பா, அம்மா எல்லாத்தையும் விட்டுவிட்டு வெளியூர்ல போயி வேல பாக்குறது எனக்கு பிடிக்கல. அப்போ யூ-டியூப்ல நம்மாழ்வார் ஐயா வீடியோக்கள் நிறைய பாத்துக்கிட்டு இருந்தேன். அந்த வீடியோக்கள பாக்கும்போது விவசாயத்து மேல எனக்கு இருந்த ஆர்வம் அதிகமாயிக்கிட்டே வந்துச்சு. நான் சின்ன வயசுல இருந்தே அப்பா, அம்மாவுக்கு ஒத்தாசையா விவசாய வேலைகள பாத்துக்கிட்டு இருந்ததுனால, விவசாயம் பண்றது எப்படினு எனக்கு நல்லாவே தெரியும். அதனால தைரியமா வேலய விட்டுவிட்டு விவசாயம் பண்ண சொந்த ஊருக்கே வந்துட்டேன். அதுமட்டுமில்லாம பண்ணா இயற்கை விவசாயம்தான் பண்ணனும்னு உறுதியா இருந்தேன்.

"மண்ணும் தண்ணியும் இருந்தா விவசாயம்ங்குறது மத்த தொழில்கள விட நல்ல லாபகரமான தொழில்தான். வீடு, வாசல்னு நிறைய சொத்து சேக்கலாம்.

என்னோட மாமா எனக்கு முன்னாடி இருந்தே இயற்கை விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்காரு. அவருதான் என்னைய ஈஷா விவசாய இயக்கம் நடத்துன பயிற்சி வகுப்புக்கு கூட்டிக்கிட்டு போனாரு. இயற்கை விவசாயம் சம்பந்தமா யூ-டியூப் வீடியோக்கள் பாத்து சில விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டாலும் நேரடி களப் பயிற்சில அனுபவப்பூர்வ கத்துக்கிட்டதுதான் இப்பவரைக்கும் கைக்கொடுக்குது” என்று, தான் இயற்கை விவசாயத்துக்குள் நுழைந்த கதையை விரிவாக கூறினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அவர் தனது நிலத்தில் நிலக்கடலையை பிரதான பயிராகவும், திணை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, தட்டைப்பயறு, பாசி பயறு உள்ளிட்டவற்றை ஊடுபயிராகவும் விளைவித்து வருகிறார்.

கார்திகைவேலின் டிப்ஸ்...

“மொதல்ல நிலத்த நாலு உழவு நல்லா ஓட்டிருவேன். 4-வது உழவு ஓட்டும்போது வேர் அழுகல் நோய் வராம தடுக்குறதுக்காக ஏக்கருக்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு தூவிவிட்டுருவேன். அதுக்கப்பறம் பார் இழுத்து நல்லா பருத்த நிலக்கடலைகளை ஏக்கருக்கு 40 கிலோங்குற அளவுல கொத்து போட்டு நட்டுருவேன். கடலை போடும்போது ஒரு விஷயத்தை முக்கியமா கவனிக்கணும். உடைஞ்ச கடலை, தோல் உரிஞ்ச கடலைகள போட்டா அதுக முளைக்காது. அதுனால, முன்னாடியே நல்ல கடலைகளா பாத்து பெறக்கி வைச்சுக்கணும்.

கடலை போட்டத்துக்கப்பறம் திணை, குதிரைவாலி, கேழ்வரகு இந்த மூணுல ஏதாவது ஒண்ணு நிலம் பூரா பரவலா தூவிவிட்டுருவேன். அதோடு சேர்த்து நைட்ரஜன் ஃபிக்சிங்க்காக தட்டைப்பயறு, இல்ல பாசிப்பயறை ஏக்கருக்கு கால் கிலோங்குற அளவுல ஒவ்வொரு பாத்தியிலயும் நெட்டுக்க நட்டுருவேன். எல்லாத்தையும் நட்டு முடிச்சதும் ஒரு தண்ணீ பாய்ச்சிரணும்.

அடுத்து 22-வது நாள் முதல் களை எடுப்போம். அப்போ மண் புழு அதிகமா வர வைக்கிறதுக்காக ஏக்கருக்கு 200 ஜீவாமிர்த கரைசலை தண்ணீயோட கலந்துவிட்டுருவேன். பூச்சி தாக்குதல தடுக்குறதுக்காக ஏக்கருக்கு 10 பாட்டில் வேப்பங்கொட்டை கரைசலையும் ஸ்பிரே பண்ணிவிட்டுருவேன்.

40 – 45 நாள்ல 2-வது களை எடுக்கணும். அப்போ ஏக்கருக்கு 100 கிலோங்குற அளவுல கன ஜீவாமிர்தம் போட்டுருவேன். இடையில பூச்சி தாக்குதல் வந்தா பத்திலை கசாயம் இல்ல அக்னி அஸ்திரம் யூஸ் பண்ணிக்கிருவேன். பூச்சி தாக்குதல் வருதோ இல்லையோ இதுகள எல்லாம் முன்னாடியே ரெடி பண்ணி வைச்சுக்கிறது ரொம்ப நல்லது.

50-வது நாள்ல செடியில காய்ப்பு அதிகமா வர்றதுக்காக 10 லிட்டர் தண்ணியில அரை லிட்டர் புளிச்ச மோர கலந்து ஸ்பிரே பண்ணிருவேன். அதுக்கப்பறம் 55, 65, 75-வது நாள்கள்ல கடலை நல்லா திரட்சியா வர்றதுக்காக 10 லிட்டர் தண்ணியில 100 மில்லி மீன் அமிலத்தை கலந்து ஸ்பிரே பண்ணிருவேன். இதுக்கு இடையில தண்ணீ பாய்ச்சுறத தவிர்த்து வயல்ல பெரிசா எந்த வேலையும் இருக்காது.

70 - 100 நாள்ல தட்டைப்பயறு, பாசிப்பயறு அறுவடை பண்ணிருவேன். 80 – 90 நாள்ல சிறுதானியம் அறுவடை பண்ணிருவேன். 100 – 110 நாள்ல நிலக்கடலை அறுவடை பண்ணிருவேன்” என்று பயிர் நடுவதில் இருந்து அறுவடை வரையிலான செயல்முறைகளை விளக்கமாக பகிர்ந்துகொண்டார் கார்த்திகைவேல்.

இதனிடையே நம்மிடம் பேசிய இயற்கை விவசாயி கிருஷ்ணமூர்த்தி "மார்கழி, ஆடி இந்த இரண்டு பட்டம்தான் நிலக்கடலை சாகுபடிக்கு உகந்த பட்டம்ங்க. மத்த பட்டத்துல தக்காளி, கத்திரினு காய்கறிகளையும் சோளத்தையும் போட்டு எடுக்கலாம்” என்றார்.

மன திருப்தியை தாண்டி இந்த வறண்ட நிலத்தில் போதிய லாபம் கிடைக்கிறதா என்று கார்த்திகைவேலிடம் கேட்டேன். அதற்கு "மண்ணும் தண்ணியும் இருந்தா விவசாயம்ங்குறது மத்த தொழில்கள விட நல்ல லாபகரமான தொழில்தான். வீடு, வாசல்னு நிறைய சொத்து சேக்கலாம்.

இந்த மாதிரி தண்ணி இல்லாத இடங்கள்ல கொஞ்சம் சிரமம்தான். ஆனா, என்னோட அனுபவத்துல நஷ்டம் எதுவும் இல்ல. எங்க வீட்டுல இருக்குற எல்லாரும் வயல்ல வேலப் பாக்குறதுனால செலவு ரொம்பவும் மிச்சமாகுது. களை பறிக்குறதும் அறுவடைக்கும்தான் பெரிசா செலவாகும். போன தடவை ஏக்கருக்கு 1,300 கிலோ நிலக்கடலை மகசூல் வந்துச்சு. கிலோ 65 ரூபாய்க்கு போச்சு. அதோட சேர்த்து கேழ்வரகு, பயறு வகைகள்ல இருந்தும் ஒரு வருமானம் வந்துச்சு. கூட்டி கழிச்சு பாத்தா எல்லா செலவும் போக குறைஞ்சபட்சம் ஏக்கருக்கு 75 ஆயிரம் லாபம் வந்துருக்கும். விவசாயத்தை தவிர 40 செம்மறி ஆடுகள வளர்க்குறேன். நிலத்துல பட்டி போடும்போது நிலத்துக்கு தேவையான உரம் கிடைச்சமாதிரியும் ஆச்சு. வளர்ந்ததுக்கப்பறம் வித்தா நல்ல வருமானம் பாத்த மாதிரியும் ஆச்சு. மனசுல நம்பிக்கை இருந்தா வழி தானா பொறக்கும்” என்று சிறு புன்னகையுடன் பேசி முடித்தார் கார்த்திகைவேல்.

இயற்கை விவசாயத்தின் மீது நம்பிக்கை வைத்து துணிந்து இறங்கினால், வறண்ட நிலத்திலும் லாபம் பார்க்கலாம் என்பதற்கு அவரே சிறந்த உதாரணம்.

ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் களப் பயிற்சிகளில் கலந்துகொள்ள 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

விதை விதைப்போம்...

நன்றி: தினத்தந்தி

குறிப்பு: இந்த கட்டுரை தினத்தந்தி நாளிதழில் வெளியானது

ஈஷா விவசாய இயக்கம் பற்றிய விவரங்களுக்கு முகநூல் மற்றும் Youtube channelலில் இணைந்திடுங்கள்!