ஆன்மீக வரலாற்றில் ஓர் திருப்புமுனை! - ஆதியோகி திருமுகம் திறப்பு!
ஈஷா மஹாசிவராத்திரி, இந்த ஆண்டு கூடுதல் சிறப்பைப் பெற்றது என்பதை பாரதம் மட்டுமல்லாமல், உலகமே அறிந்து கொண்டது. கடந்த பிப்ரவரி 24, மஹாசிவராத்திரியன்று சத்குருவால் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 112 அடி உயர ஆதியோகி சிவனின் திருமுகத்தை, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
 
 

ஈஷா மஹாசிவராத்திரி, இந்த ஆண்டு கூடுதல் சிறப்பைப் பெற்றது என்பதை பாரதம் மட்டுமல்லாமல், உலகமே அறிந்து கொண்டது. கடந்த பிப்ரவரி 24, மஹாசிவராத்திரியன்று சத்குருவால் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 112 அடி உயர ஆதியோகி சிவனின் திருமுகத்தை, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.

"சாதாரண மனிதர்களை சத்குரு அவர்கள் யோகிகளாய் ஆக்கியிருக்கிறார். வீட்டில் இருந்தபடியே செயல்படும் யோகிகளாய் மாற்றியிருக்கிறார்."

பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே மாலை 6 மணியளவில் பிரதமர் மோடி அவர்கள் வான்வழியாக வெள்ளியங்கிரி அடிவாரத்திற்கு வந்து இறங்கினார். ஈஷா யோகா மையத்தில் பிரதமருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்ற சத்குரு அவர்கள், பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்திவாய்ந்த இடங்களான சூரியகுண்டம், நந்தி, தியானலிங்கம், லிங்கபைரவி ஆகிய இடங்களுக்கு பிரதமரை உடன் அழைத்துச் சென்றார்.

சூரியகுண்டத்தில் பிரோக்ஷனம் செய்த மோடி அவர்கள், பின் நந்தி சிலை வழியாக தியானலிங்கத்தை அடைந்தார். பஞ்சபூத ஆராதனையில் பங்கேற்ற அவர், பின்னர் லிங்கபைரவியை தரிசித்தார்.

7 மணியளவில் மஹாசிவராத்திரி விழா மேடைக்கு பிரதமரை அழைத்து வந்த சத்குரு, யோகேஷ்வர லிங்கத்திற்கு கைலாய தீர்த்தத்தை அர்ப்பணிக்கக் கேட்டுக்கொண்டார். கைலாயத்தின் தென்முகத்தின் அடிவாரத்தில் பெறப்பட்ட அந்தத் தீர்த்தத்தின் மகத்துவத்தைக் குறிப்பிட்ட சத்குரு, ஆதியோகி திருமுகத்தை திறந்து வைக்குமாறு மோடி அவர்களை அன்புடன் அழைக்க, பிரதமர் திறக்க, ஆதியோகி திருமுகம் நீலநிற விளக்கொளிகளில் ஜொலித்தது!

ஆதியோகியின் அருளும் அழகும் ததும்பும் முகத்தைப் பார்த்த ஆனந்தமும், கூடவே பாரதப் பிரதமர் ஆதியோகியைத் திறந்து வைத்த சந்தோஷமும் ஒன்றுகூட, மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தினர்.

5000 சிவாங்கா சாதகர்கள் சிவனுக்கு உகந்த டமரு சேவை செய்த அந்தத் தருணத்தில் சத்குருவும் பிரதமரும் டமரு இசைத்தபடி குழுவுடன் இணைந்தது ஒரு வரலாற்று நிகழ்வு என்றே சொல்ல வேண்டும்!

பின்னர் விழாவில் பேசிய சத்குரு, ஆதியோகிக்கு காணிக்கையாக உலகமெங்கும் நடைபெறவுள்ள மஹா யோக யக்னத்தை மாண்புமிகு பிரதமரை புனிதத்தீ மூட்டித் துவக்கி வைக்குமாறு அழைக்க, பிரதமர் வேள்விக்கு தனது கரங்களால் தீ மூட்டினார். மஹா யோக யக்னா என்பது ஒரு எளிய யோகப் பயிற்சியை 10 லட்சம் பேர்கள், ஒருவர் குறைந்தது 100 பேருக்குக் கற்றுத்தந்து, அடுத்த மஹாசிவராத்திரிக்கு முன்பாக 10 கோடி மக்களுக்கு யோகாவை கொண்டு செல்லும் ஒரு சீரிய முயற்சியாகும். இதுபோல் மக்களுக்கு யோகாவை கொண்டு செல்பவர்கள் “யோக வீரர்கள்” என்று அழைக்கப்படுவர். அப்படிப்பட்ட ஒரு யோக வீரராக பிரதமர் விளங்குவதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார் சத்குரு.

விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘மற்ற விழாக்களுக்கெல்லாம் இல்லாத சிறப்பு மஹாசிவராத்திரிக்கு உள்ளது என்பதை அந்த வார்த்தையிலுள்ள ‘மஹா’ எனும் சொல் குறிக்கிறது,’’ என்று உரையைத் துவக்கினார். ‘‘தேவர்களுக்கெல்லாம் தேவன் என்பதை ‘மஹாதேவன்’ என்ற வார்த்தை குறிப்பதைப்போல, மந்திரங்களிலெல்லாம் உயர்ந்த மந்திரமாக சிவனுக்கான மஹாமந்திரம் விளங்குவதைப்போல, மஹாசிவராத்திரி மகத்துவம் வாய்ந்தது,’’ என்று குறிப்பிட்டார்.

யோகா நம்மை “ஜீவா” எனும் நிலையில் இருந்து “ஷிவா” எனும் நிலைக்குப் பரிமாற்றமடையச் செய்கிறது என்பதை தனது உரையில் வெளிப்படுத்திய அவர், யோகாவை தொடர்ந்து பயிற்சி செய்வதால், ஆரோக்கியம் நிச்சயம் என்பதையும் தெளிவுபடுத்தினார். மேலும், பெண்கள் மேம்பாடு என்பது நாட்டின் நலனுக்கு முக்கியமானது என்பதையும், அதை உணர்ந்த நம் கலாச்சாரத்தில் பெண்மையை கடவுள்களாக வணங்கி வருவதையும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “சாதாரண மனிதர்களை சத்குரு அவர்கள் யோகிகளாய் ஆக்கியிருக்கிறார். வீட்டில் இருந்தபடியே செயல்படும் யோகிகளாய் மாற்றியிருக்கிறார். எந்த மாதிரியான சூழ்நிலையில் ஒருவர் இருந்தாலும் அவர் யோகியாய் இருக்கமுடியும். ஆனந்தமான, பிரகாசமான பல முகங்களை ஈஷாவில் என்னால் பார்க்க முடிகிறது. முழு உத்வேகத்தோடு உயர்ந்த எண்ணத்திற்காக தன்னை அர்ப்பணிக்கும் பல மனிதர்களை இங்கு நான் பார்க்கிறேன். என் நன்றிகளை சத்குருவிற்கு தெரிவித்துக் கொள்கிறேன்,” என பிரதமர் சத்குருவிற்கு புகழாரம் சூட்டினார்.

“இங்கு 112 அடி உயர ஆதியோகி திருமுகத்திற்கு முன், யோகேஷ்வரருக்கு முன் நிற்கும்போது பிரம்மாண்டமான ஒரு இருப்பினை நான் உணர்கிறேன். இவ்விடம் தன்னை உணர விரும்பும் அனைவருக்கும் ஒரு தூண்டுகோலாய் இருக்கும்.

உலக யோகா தினம் கடந்த 2 ஆண்டுகளாக வெகுசிறப்பாக நடைபெற்றுள்ளது. அனைத்து நாட்டிலுள்ள பல்வேறு தரப்பட்ட மக்களும் யோகாவை வரவேற்று, பயிற்சி செய்வதையும் அவர் குறிப்பிட்டார். யோகா நெடுந்தூரம் பயணம்செய்து வந்திருக்கிறது. புதிதாய் பல யோகமுறைகள் தோன்றியிருக்கின்றன. யோகா தொன்மையாய் இருக்கும் அதே சமயத்தில் நவீனமானதாகவும் இருக்கிறது. யோகாவின் அடிப்படை சாரம் மட்டும் மாறவேயில்லை.

விழாவில் மேதகு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி, பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் ஆகியோரும், பல மத்திய-மாநில அமைச்சர்களும் கலந்துகொண்டு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் அங்கமாகினர்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1