ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஈஷா வித்யா பள்ளிக்கு வந்து சிறப்பு திட்டம் ஒன்றை துவங்கிவைத்தார் ஆந்திரா மாநில முதல்வர் திரு.சந்திர பாபு நாயுடு அவர்கள். இதைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்...

ஆந்திர பிரதேச முதல்வர் திரு.சந்திர பாபு நாயுடு அவர்கள் ஈஷா வித்யாவின் அரசுப் பள்ளி தத்தெடுப்பு திட்டத்தை சித்தூர் மாவட்டம் குப்பத்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று துவங்கி வைத்து சிறப்பித்தார். அவருடன் இணைந்து சித்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சித்தார்த் ஜெயின் மற்றும் மாவட்ட கல்வித்துறையின் பல மூத்த அதிகாரிகளும் ஈஷாவின் இத்திட்டத்தை துவக்கி வைத்தனர். குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்பித்த ஆந்திர முதல்வர் அவர்கள், புரிந்துணர்வு ஒப்பந்த உடன்படிக்கையினை (MoU file) வெளியிட்டார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் ஈஷா வித்யாவின் திட்ட இயக்குனர்களுக்கிடையே உடன்படிக்கை பரிமாறிக் கொள்ளப்பட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நிகழ்ச்சியில் ஈஷா வித்யாவின் பிரதிநிதிகளால் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றிய ஆந்திர முதல்வர் அவர்கள், கல்வியை முன்னேற்றமடையச் செய்வதற்கான தனது தொலைநோக்குப் பார்வையையும் குப்பத்தை முன்மாதிரியான கல்வி மையமாக உருவாக்குவதற்கு தான் முன்னெடுத்து வரும் திட்டங்களையும் பற்றி எடுத்துரைத்தார். பின், ஈஷா வித்யாவின் முக்கிய கற்பித்தல் அம்சமான கரடி பாதை மேஜிக் ஆங்கில நிகழ்ச்சி கற்பித்தல் முறையை அருகிலிருந்த வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்த ஈஷா வித்யா ஆசிரியரின் வகுப்பை பார்வையிட்டார். பின் அந்த வகுப்பிலிருந்த குழந்தைகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட திரு. சந்திரபாபு நாயுடு அவர்கள் குழந்தைகளுக்கு மேஜிக் ஆங்கில புத்தகங்களோடு இனிப்புகளையும் வழங்கினார்.

சத்குருவின் வழிகாட்டுதலில் இயங்கிவரும் ஈஷா அறக்கட்டளையின் கல்வி மனிதநேய சேவை திட்டம், கிராமப்புற இந்தியாவின் கல்வி மேம்பாட்டிற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 9 வருடங்களாக சிறந்த திறம்மிக்க ஆசிரியர்களைக் கொண்ட 9 ஈஷா வித்யா பள்ளிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வருவதோடு, தமிழகத்தில் மொத்தம் 56 அரசு பள்ளிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஈஷாவின் அரசு பள்ளித் தத்தெடுப்புத் திட்டம் (GSAP), தரமான கல்வியை வழங்குவதில் உள்ள இடைவெளிக்கு ஒரு பாலமாக அமைந்து, அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு துணை நிற்கிறது.

ஈஷாவின் இந்த முயற்சிகளால் தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் கல்விநிலை வெகுவாக மேம்பட்டுள்ளதைப் பார்க்கமுடிகிறது. அதோடு முதன்முலாக கடந்த கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சியடைந்துள்ளதோடு, 89% சராசரி மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஆந்திராவில் ஈஷா வித்யா 460 பள்ளிகளை தத்தெடுத்துள்ளது. இதன்மூலம் 38,368 மாணவர்கள் பலன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பள்ளிகளுக்கு ஈஷா வித்யாவின் சார்பாக நன்கு பயிற்சி பெற்ற 18 ஆசிரியர்கள் கூடுதலாக வழங்கப்படுகிறார்கள்

பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனங்களை (NGOs) பரிசீலனை செய்த பிறகு, ஆந்திர அரசு ஈஷாவின் கல்விமுறை சீர்திருத்தங்களையும், ஆங்கில மொழிப்பயிற்சி மற்றும் மகிழ்ச்சியான வகுப்பறை பயிற்சியையும் தேர்ந்தெடுத்துள்ளது.

மகிழ்ச்சியான வகுப்பறையை உருவாக்குதல்:

கற்றல் அனுபவத்தை மாணவர்களுக்கு இனிமையானதாக மாற்றும் எளிமையான வழிமுறைகளின் மூலம், மாணவர்கள் விரும்பும்படியான வகுப்பறை சூழலை ஆசிரியர்கள் உருவாக்கி, அங்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.

ஆங்கில மொழிவளத்தை மேம்படுத்த சிறப்பு பயிற்சிகள்:

ஆங்கில உரையாடல் மற்றும் உச்சரிப்பு திறன் மேம்படும் வகையில் "கரடி பாதை மேஜிக் ஆங்கில நிகழ்ச்சி" எனப்படும் கற்பித்தல் வழிமுறையின் மூலம், மாணவர்களுக்கு ஆங்கிலக் கற்றல் எளிமையாகவும் இனிமையாகவும் மாற்றி அமைக்கப்படுகிறது.

பாடவாரியான பயிற்சிப் பட்டறைகள்:

இந்தப் பயிற்சிப் பட்டறையின் மூலம் மெதுவாகப் பயிலும் மாணவர்களுக்கென பிரத்யேகமான கையேடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் மாணவர்களுக்கு யோகா:

மாணவர்களின் மனக்குவிப்புத் திறனையும் ஆற்றலையும் தெளிவையும் மேம்படுத்தி, பொதுத் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறுவதற்காக மாணவர்களுக்கான பிரத்யேக யோக வகுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.