அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம், வரவிருக்கும் முதல் சர்வதேச யோகா தினத்திற்கு ஒரு முன்னோட்டமாக "நவீன வாழ்க்கை முறையில் யோகாவின் பங்கு" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த சத்குருவின் உரைப் பற்றி சில துளிகள்...

இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த சத்குருவின் உரை!

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம், வரவிருக்கும் முதல் சர்வதேச யோகா தினத்தை (ஜூன் 21, 2015) முன்னிட்டு, மே 11, 2015 அன்று, "நவீன வாழ்க்கை முறையில் யோகாவின் பங்கு" என்ற தலைப்பில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் உரையை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியை அமெரிக்காவின் இந்திய தூதர் திரு. அருண் கே.சிங் துவக்கி வைத்து உரையாற்றினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நவீன வாழ்க்கை முறையில் யோகாவின் பங்கு!

சத்குரு அவர்கள் 'நவீன வாழ்க்கை முறையில் யோகாவின் பங்கு' என்பதைப் பற்றி பேசுகையில், "யோகா என்பது ஒருவரின் வாழ்க்கையை இனிமையான அனுபவமாக ஆக்கவல்லது. தற்போதைய தலைமுறை மக்கள்தான் உலகிலேயே அதிக சௌகரியங்களையும் வசதிகளையும் அனுபவிக்கிறோம். இருந்தாலும், நாம் அதிக சந்தோஷமும் அமைதியும் கொண்ட தலைமுறையாக இல்லை. ஒருவரை ஆனந்தமான மனிதராக மாற்றும் பரிமாணம்தான் யோகா. யோகா என்பது ஒரு கருவி, ஒரு தொழில்நுட்பம். வெளி சூழ்நிலையை கையாள்வதற்கு நம்மிடம் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இருப்பதுபோல், நம் உள்நிலையைக் கையாள யோகா எனும் கருவியையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இன்று உலகின் 200 கோடி மக்கள் யோகாவின் ஏதாவது ஒரு செயல்முறையை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அது மென்மேலும் வளர வேண்டும்" என்றார். உரையாடலின் முடிவில், பார்வையாளர்களின் கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்தார்.

அமெரிக்காவில் யோகா தின கொண்டாட்டங்கள்!

அமெரிக்காவின் இந்திய தூதரகத்தில் சத்குருவின் உரை!, Americavin india thootharagathil sadhguruvin urai

இந்திய தூதர் அருண் கே.சிங் தனது உரையில், "இந்திய அரசு, முதல் சர்வதேச யோகா தினத்தை அமெரிக்கா உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் கொண்டாட முடிவு செய்துள்ளதாகக் கூறினார். அமெரிக்காவின் இந்தியத் தூதரகம், அமெரிக்காவின் சில்வன் தியேட்டரில் அமைந்துள்ள நேஷனல் மாலில், சில யோக அமைப்புகளின் கூட்டமைப்பான 'யோகாவின் நண்பர்கள்' என்னும் அமைப்புடன் சேர்ந்து, ஜூன் 21ம் தேதியன்று முதல் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட உள்ளதையும் தெரிவித்தார். காலை 8.30 மணி முதல் 11 மணி வரை நடக்கவுள்ள அந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாகக் கலந்துகொள்ளலாம்.

அந்த நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் வீடியோ செய்தியுடன் யோகா வல்லுனர்களின் யோகாசன செய்முறைகள், இந்திய இசை மற்றும் நாட்டியம் ஆகியவையும் நடைபெறும். அந்த கொண்டாட்டத்திற்கு தங்கள் நண்பர்கள் பலரையும் அழைத்து வந்து கலந்துகொள்ளுமாறு இந்திய தூதர் அங்கே இருந்த பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பாரத பிரதமர் வித்திட்ட விதை!

செப்டம்பர் 27, 2014 ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் பேசியவற்றை இந்திய தூதர் நினைவு கூர்ந்தார். அவர் பேசும்போது, "யோகா என்பது இந்தியாவின் பண்டைய மரபின் விலைமதிப்பற்ற பரிசாகும். யோகா என்பது, உடல், மனம், எண்ணம் மற்றும் செயல் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை உள்ளடக்கியது; இயற்கை மற்றும் மனிதன் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தி, ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வுக்கான ஒரு மரபு வழி அணுகுமுறையாக அது உள்ளது. இது உடற்பயிற்சி செய்வது பற்றியல்ல, உங்களுக்கும், இந்த உலகம் மற்றும் இயற்கைக்கும் இடையே உள்ள ஒருமையைக் கண்டறிவது. நம் வாழ்க்கை முறையை மாற்றி விழிப்புணர்வை உருவாக்குவதன் மூலம், நாம் காலநிலை மாற்றத்தை சமாளிக்க இது துணை புரியும். நாம் அனைவரும் இணைந்து சர்வதேச யோகா தினத்தைக் கடைபிடிக்க பணிபுரிவோம்."

இந்திய தூதர் திரு. சிங் குறிப்பிடும்போது, "டிசம்பர் 11, 2014 அன்று இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு வரைவு தீர்மானத்தை முன்வைத்தது. இந்த வரைவு தீர்மானம் வரலாறு கண்டிராத பரந்த ஆதரவை பெற்று 177 நாடுகளால் முழுமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது" என்றார்.

மே - ஜூன் மாதங்களில் கொண்டாட்டங்கள்!

சர்வதேச யோகா தினத்தின் முன்னோட்டமாக, இந்திய தூதரகமானது அமெரிக்காவில் பல தொடர் யோகா நிகழ்ச்சிகளை மே - ஜூன் 2015 மாதங்களில் பல இடங்களில் நடத்தவுள்ளது. உலக வங்கி, துர்கா கோவில், விர்ஜீனியாவில் அமைந்துள்ள ராஜ்தானி கோவில் ஆகிய இடங்கள் இதில் குறிப்பிடத்தக்கவை.