இந்தியாவின் தலைசிறந்த ஓவியக் கலைஞர்களின் ஒருவரான அக்பர் பதம்ஸி அவர்கள் ஜனவரி 6ம் தேதி) இரவு கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் காலமானார். நவீன இந்திய ஓவியக் கலைஞரான அக்பர் பதம்ஸி, நவீன இந்திய ஓவியக்கலையில் முன்னோடியாகத் திகழ்ந்தார். 15 ஆண்டுகளுக்கு மேல் ஈஷாவுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

91 வயதான இவர், தனது இறுதி நாட்களை ஈஷா ஆசிரமவாசியாக வாழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரது இறுதிச்சடங்கு ஜனவரி 6ம் தேதி இரவு 10:45 மணியளவில் ஈஷா யோக மையத்தில் நடைபெற்றது. 

 “அக்பர் பதம்ஸி, வண்ணம் மற்றும் கலைநயத்தின் வித்தகர், வாழ்வின் கடைசிப்பகுதியை எங்களுடன் ஈஷா யோகா மையத்தில் கழித்தது எங்கள் அதிர்ஷ்டம். உங்கள் வர்ணஜாலத்தை, வரும் தலைமுறைகள் பலவும் கண்டு ரசிக்கும், ஊக்கம்பெறும்.” என்று சத்குரு தனது ட்விட்டர் பதிவில் தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவுசெய்துள்ளார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கடந்த சில ஆண்டுகளாக, பதம்ஸியும் அவரது மனைவி பானுவும் ஈஷா யோக மையத்தில் வசித்துவந்துள்ளனர். யோக மையத்தை சிலமுறை பார்வையிட்ட பிறகு, அவர்கள் நிரந்தரமாக அங்குசெல்ல முடிவு செய்துள்னர். “நானும் என் மனைவியும் ஈஷாவின் ஹோல்னஸ் நிகழ்ச்சி பற்றி அறிந்ததும், நாங்கள் அதற்குப்பதிவு செய்தோம். நான் சத்குருவிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது, அவர் என்னைப் பற்றி கேள்விப்பட்டதாகக் கூறினார். அடுத்தமுறை நான் ஆசிரமத்திற்கு வந்தபோது யாரோ ஒருவர் வந்து சத்குரு என்னை சந்திக்க விரும்புகிறார் என்று சொன்னார். நான் திகைத்தேன். அப்போது தொடங்கப்படவிருந்த ஈஷா ஹோம் ஸ்கூலின் கலைத்துறையைப் பற்றி சத்குரு பேசினார். மேலும், என்னிடம் அதற்காக சில பரிந்துரைகளைக் கேட்டார்.” என்று பதம்ஸி அவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளார்.

AkbarPadamseeWithSadhguru-tamil

எந்தவொரு குறிப்பிட்ட கலைத்துறை சார்ந்தவராகவும் வரையறுக்க இயலாத பதம்ஸி அவர்கள் கூறும்போது, எனக்கோ அல்லது எனது கலைப்படைப்பிற்கோ எவ்வித முத்திரையும் குத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். அவரது ஓவியங்கள் இயற்கையின் கூறுகளையும் நுட்பங்களையும் விரிவாக சித்தரித்தன. "இது உண்மையில் சிவனைப் பற்றிய சித்தரிப்பு தான்," என்று அவர் ஒரு ஓவியத்தைப் பற்றி கூறினார். நான் தியானலிங்கத்தைப் பற்றி புத்தகங்கள் மூலம் அறிந்துகொண்டேன். ஒரு புத்தகத்தின் அட்டைப்படத்தில் தியானலிங்க வளாகத்தின் படத்தைப் பார்த்த தருணம், நான் 21ம் நூற்றாண்டின் கோவிலைப் பார்க்கிறேன் என்பதை உணர்ந்தேன்” என்று அவர் ஈஷா மையத்திலுள்ள தியானலிங்கம் பற்றி குறிப்பிடுகிறார்.

அக்பர் பதம்ஸி தனது மாறுபட்ட கலைத்திறமிக்க ஓவியங்களுக்காக மிகவும் பிரபலமானவர் என்றாலும், அவர் ஒரு புகைப்படக் கலைஞர், சிற்பி, திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் அச்சுக்கலை வல்லுநர் என பன்முகம் கொண்டவராவார். ஆனால், பதம்ஸி தனது ஓவியங்களுக்காகவே மிகவும் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டார், அவரது ஓவியங்கள் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள சிறப்புமிக்க அருங்காட்சியகங்களிலும் காட்சிப்பொருளாகி அவரது பெயரைப் பறைசாற்றுகின்றன.

இவரது சகோதரர் மறைந்த புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும் விளம்பரப்பட இயக்குனருமான அலிக் பதம்ஸி ஆவார். ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த பதம்ஸி, ஒரு சுதந்திரமான பல்நோக்கு தேடுதலைக் கொண்ட கலைஞராக திகழ்ந்தார் என்பது, அவரது படைப்பின் பல்துறை கருப்பொருட்களில் பிரதிபலித்தது. பதஞ்சலியின் யோகசூத்திரங்கள் குறித்த விவேகானந்தரின் விளக்கங்களால் அவர் ஈர்க்கப்பட்டார். சிற்பக் கலை குறித்த பண்டைய நூலான ஷில்ப சாஸ்திரத்தைப் படித்துள்ள அவர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நுட்பமான பரிமாணங்களை புரிந்துகொள்வதற்கு பல மணிநேரங்கள் செலவழித்ததாக பதிவுசெய்துள்ளார்.

2010ம் ஆண்டில் பதம்ஸிக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. “நான் ஆசிரமத்திற்கு புறப்படத் தயாரான ஒரு இரவில்தான் இந்த அறிவிப்பு வந்தது. எனக்கு ஏதேனும் நல்லது நடக்கும்போது, நான் ஆசிரமத்திற்கு வருகைதருவது முக்கியமாகிறது” என்று பதாம்ஸி கூறியிருந்தார். பல உலகளாவிய கலை அமைப்புகளின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இவர், லலித் கலா அகாடமி மற்றும் JD.ராக்ஃபெல்லர் அறக்கட்டளை ஆகிய அமைப்புகளிலிருந்தும் அங்கீகாரத்தையும் உதவித்தொகையையும் பெற்றுள்ளார்.

பஞ்சத்தின்போது தனது களஞ்சியத்திலுள்ள அனைத்து தானியங்களையும் கட்ச் நகரில் உள்ள தனது கிராமத்திற்கு விநியோகித்ததால் அவரது தாத்தா “பத்மஸ்ரீ” என்ற பட்டத்தை பெற்றார். அதைத் தொடர்ந்து அக்குடும்பம் “பதம்ஸி” என்ற பெயரைப் பெற்றது.