சத்குருவின் சக்தி அதிர்வுகளில், தான் கரைந்த நிலையை விவரிக்கும் மஹேஷ்வரி, ஏசி பஸ்ஸில் செல்வதே இவ்வளவு அலுப்பாக இருக்கிறதே! என்று கூறி, நடைபயணமாக புத்தகயாவை அடைந்த புத்தரின் வைராக்கியத்தை எண்ணி மெய்சிலிர்க்கும் எழுத்துக்கள் சுவாரஸ்யமானவை!

காசி - உண்மையைத் தேடி... பகுதி 5

மஹேஷ்வரி:

மூன்றாவது நாள்

சத்குருவுக்குத்தான் நம் மீது எத்தனை கருணை! ஆம்..! மீண்டும் ஒரு சத்சங்கம். திடீரென இடமும் நேரமும் முடிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் துவங்கின. காலையில் பயிற்சி முடித்து விட்டு 8 மணி சத்சங்கத்திற்கு வந்து அமர்ந்தோம். சத்குரு வந்ததும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அமைதியாக கண் மூடி உட்கார்ந்திருந்தார். நாங்களும் அவருடன் கண் மூடி இருந்தோம்.

அறை முழுக்க நிரம்பிய அந்த நிசப்தம் என்னை வேறு ஒரு சக்திநிலைக்கு கொண்டு சென்றது. அந்த சக்திநிலையில் மிதந்த எனக்கு "சத்குருவின் சக்திநிலைக்கு முன்னால் காசி ஒன்றும் பெரிதில்லை," என்று தோன்றியது. பின்பு சிவ ஷம்போ உச்சாடனத்துடன் சத்சங்கம் முடிந்தது.

பிறகு அங்கிருந்து புத்தகயாவிற்கு புறப்பட்டோம். பஸ் கிளம்பியதும் அனைவரும் தூங்க ஆரம்பித்துவிட்டார்கள். பிரம்மச்சாரி ஒருவர் எழுந்து வந்து யாரும் தூங்கக் கூடாது என்று அனைவரையும் தட்டி எழுப்பினார். விளையாடலாம் வாங்க என்று அனைவரையும் குதூகலப் படுத்தினார். அன்று விளையாடியதை என்றும் மறக்க முடியாது. விளையாட்டு படு அமர்க்களப்பட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அந்த பிரம்மச்சாரி (மா) தான், பஸ்ஸில் இருந்தவர்களை 5 நாளுமே வழி நடத்தினார். மா, ஒவ்வொரு முறையும் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கும்போதும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு திரும்பி வர வேண்டும் என்று சொல்வார். ஆனால் ஒவ்வொரு முறையும் யாராவது தாமதமாக வந்து கொண்டேதான் இருப்பார்கள். ஆனால் எந்த பதட்டமும் இல்லாமல் எப்போதும் சிரித்த முகத்துடனே இருந்தார்.

அவர், பஸ்ஸிலிருந்து இறங்கியதும் சாப்பாடு பரிமாற ஓடி வந்து விடுவார்; சாப்பாடு முடிந்ததும் மீண்டும் பஸ்ஸிற்கு வந்து விடுவார். இவரைப் போலவே மற்ற பிரம்மச்சாரிகளும் தன்னார்வத் தொண்டர்களும் வெவ்வேறு குழுவின் பொறுப்பை ஏற்றனர். அவர்களின் அர்ப்பணிப்பால்தான் எங்களால் காசியை முழுமையாக உணர முடிந்தது.

விளையாட்டு முடிந்த களைப்பில் அனைவரும் தூங்கிவிட்டனர். தூங்கி எழுந்து பார்த்தால் இன்னுமா புத்தகயா வரவில்லை.
"எப்போதுதான் புத்தகயா வரும்? இப்படி ஏஸி பஸ்ஸில் சுகமாக தூங்கிக் கொண்டு வரும் போதே இப்படி அலுப்பாக இருக்கிறதே, இவ்வளவு தூரத்தை புத்தர் எப்படி கால்களால் கடந்திருப்பார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடைகளோ மனிதர்களோ இல்லை. காடு போல் இருக்கும் இந்த இடம் 2500 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும். வழியில் ஒரு பெரிய பாலம் இருபுறமும் கங்கை வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நமக்கு இப்போது பாலம் இருக்கிறது.

புத்தர் எப்படி கங்கையை கடந்திருப்பார்? அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வோம் என்று தெரியாத நிலையில் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத இந்த காட்டில் தனியாக பயணம் செய்த அந்த மனிதருக்குள் என்ன மாதிரி தீவிரமான தேடல் இருந்திருக்க வேண்டும்? என்ன மாதிரி உறுதி இருந்திருக்க வேண்டும்? எல்லா வசதிகளும் இருந்தும் வழி காட்ட ஒரு குரு இருந்தும் நான் எத்தனை தடைகள் வைத்திருக்கிறேன்.

கண்டே தீருவேன் என்று வீட்டை விட்டு வெளியே வந்த அந்த மனிதருக்குள் எத்தனை வைராக்கியம் இருந்திருக்கும்? புத்தரின் உறுதியை உணர்ந்து பார்க்க இந்த காட்டுக்குள் பயணம் செய்தே ஆக வேண்டும்!" என்று எண்ணிக் கொண்டிருக்கும்போதே புத்தகயா வந்துவிட்டது.

புத்தர் ஞானோதயம் அடைந்த அந்த புனிதமான இடத்தில் பிரம்மாண்டமான கோவில், மிகப் பெரிய புத்தர் சிலை, மிகவும் ரம்மியமான அந்த இடத்தில் அடைமழைக் கொட்டிக் கொண்டிருந்தது. கோவிலுக்கு செல்வதற்கு முன், 'எங்கே அந்த மரம்?!' என்றே என் மனம் தேடிக் கொண்டிருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் சில தியான அன்பர்கள் போதி மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்ய துவங்கிவிட்டனர். அந்த இடத்தின் அதிர்வுகள் கூர்மையான கத்தி முனை விழிப்புணர்வு அனுபவத்தை அளித்தது.

(பயணிப்போம்...)

அடுத்த வாரம்...

கடுமையான புத்த மத சாதனாவை விவரிக்கும் அடுத்த வாரப்பகுதி ஈஷாவின் சாம்பார் மணத்தையும் சொல்ல மறக்கவில்லை. அடுத்த வாரப் பகுதிக்குக் காத்திருங்கள்!

காசி புனித பயணம்

ஒளியின் நகரம் என்றழைக்கப்படும் காசி, 15000 வருடங்கள் பழமையானது. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு பின்பும், இன்றளவும் இந்நகரம் உயிரோட்டமாகவும், அதிர்வுமிக்கதாகவும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்த வண்ணம் உள்ளது. புனிதமான இந்நகரத்திற்கும், மேலும் பல்வேறு புனித ஸ்தலங்களுக்கும், ஈஷாவிலிருந்து யாத்திரை அழைத்துச் செல்வது வழக்கம்.

அவ்விதத்தில், வரும் காசி யாத்திரை நவம்பர் 21-25 தேதிகள் வரை நடக்கவுள்ளது.

மேலும் விபரங்களுக்கு: sacredwalks.org

தொ.பே: +91 9488 111 333
இ -மெயில்: tn@sacredwalks.org

Akash Mondal @ flickr, Anandajoti@flickr, Matt Stabile@flickr, Peter Verkhovensy@flickr