‘ஆடிப்பட்டம்’ விதைகளின் கொண்டாட்டம்!
"ஆடிப்பட்டம் தேடி விதை" - இது பழமொழி. சித்திரை முதல் ஆனி வரை வெயிலின் தாக்கம் முடிந்து, ஆடியில் காற்றுடன் மழையும் பெய்யும். எனவே அதனால் ஆடியில் விதை விதைக்க வேண்டும். ஆனால் விதைக்கு எங்கே செல்வது? அறிந்துகொள்வோம்...
 
 

"ஆடிப்பட்டம் தேடி விதை" - இது பழமொழி. சித்திரை முதல் ஆனி வரை வெயிலின் தாக்கம் முடிந்து, ஆடியில் காற்றுடன் மழையும் பெய்யும். எனவே அதனால் ஆடியில் விதை விதைக்க வேண்டும். ஆனால் விதைக்கு எங்கே செல்வது? அறிந்துகொள்வோம்...

ஒரு விதை என்பது ஒருதுளி விருட்சம்! ஒரு பெரிய ஆலமரமானாலும் சரி, ஒரு சிறிய கடலைச் செடியானாலும் சரி, அது ஒரு விதைக்குள்தான் அடங்கி இருக்கிறது. விதைகள், தாங்கள் நல்லமுறையில் முளைத்து வருவதற்கு தகுந்த பருவகாலம் வரை மண்ணுக்குள் பல வருடங்கள் கூட காத்துக்கிடக்கின்றன.

ஈஷா பசுமைக்கரங்களின் துவக்க காலத்தில் தமிழகம் முழுக்க ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் பசுமைக் கரங்களின் பணிகளுக்காக தங்கள் பங்களிப்பை வழங்குமாறு சத்குருவால் வழிகாட்டப்பட்டனர்.

இந்த ஆடிமாதமானது விதைகளை விதைப்பதற்கு தகுந்த பருவநிலையாக இருக்கிறது. ஆடிப்பெருக்கு என சொல்லப்படும் ஆடிப்பதினெட்டாம் நாள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆடிப்பட்டத்தை உறுதிசெய்யும் என்பது நமது கலாச்சாரத்தில் ஒரு நம்பிக்கையாக இருக்கிறது. இப்போது கூட அரசாங்கம் ஆடிப்பதினெட்டு அன்று அணைகளிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீரைத் திறந்துவிடும் வழக்கம் உள்ளது.

என்னதான் ஆடிப்பட்டம் வந்துவிட்டாலும் நம்மிடம் விதைப்பதற்கு விதை இருப்பது முக்கியம்தானே?! தற்போது, விதைகளை நாம் வெளிநாட்டு கம்பெனிகளிடமிருந்து எதிர்பார்க்கும் நிலை பரலாக உள்ளது. விதைகளை நாம் வெளிநாட்டினரிடம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், பின் நம் வாழ்க்கை நம் கையில் இருக்காது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இயற்கை விஞ்ஞானி திரு. நம்மாழ்வார் அவர்கள் விதைகள் வெளிநாட்டுக் கம்பெனிகளிடம் சென்றுவிட்டால், அதன்பின் நிகழவிருக்கும் விபரீதம் குறித்து பல இடங்களில் தனது வேதனையை பதிவு செய்து சென்றுள்ளார்.

எனவே நமக்கான விதைகளை நாமே சேகரித்து தரமான இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்வது அவசியமாகிறது. இந்த இடத்தில் ஈஷா பசுமைக்கரங்களின் விதை சேகரிப்பு குறித்து சொல்லியாக வேண்டும்!

ஈஷா பசுமைக்கரங்களின் துவக்க காலத்தில் தமிழகம் முழுக்க ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் பசுமைக் கரங்களின் பணிகளுக்காக தங்கள் பங்களிப்பை வழங்குமாறு சத்குருவால் வழிகாட்டப்பட்டனர். ஆங்காங்கு ஈஷா நாற்றுப் பண்ணைகள் உருவாக்கும் பணிகளும் அப்போதுதான் துவங்கப்பட்டன. நாற்றுப் பண்ணை உருவாக்குவதற்கான வழிமுறைகள் அனைத்தும் பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்களால் அந்தந்த ஊர்களுக்குச் சென்று கற்றுத்தரப்பட்டன. கடலூர் மாவட்டம் முழுக்க ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதென்று முதலில் தீர்மானிக்கப்பட்டது. அப்போது ஒரே நாளில் இத்தனை மரங்கள் நடுவதற்கான ஆட்கள் இருந்தார்கள். ஆனால், அவ்வளவு விதைகள் கையில் இல்லை. எனவே, தன்னார்வத் தொண்டர்களால் விதை சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

அது வெறும் விதை சேகரிப்பு பணியாக இருக்கவில்லை; விதை சேகரிப்பு திருவிழாவாக இருந்தது. ஒவ்வொரு விதையைப் பற்றியும், அதன் இயல்புகள் குறித்தும் ஈஷா பசுமைக்கரங்களின் தன்னார்வத் தொண்டர்களால் சொல்லித்தரப்பட்டதோடு, அவற்றை எப்படி விதை நேர்த்தி செய்ய வேண்டும் என்பதும் கற்றுத்தரப்பட்டது. இந்த விதை சேகரிப்பு பணியானது தன்னார்வத் தொண்டர்கள் ஒன்றாகக் கூடுவதற்கும் ஒரு ஊடகமாக அமைந்தது. ஆட்டம், பாட்டம், விளையாட்டு என கொண்டாடி, ஒன்றாக ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து உணவு உண்டு மகிழ்வார்கள். ஈஷா தன்னார்வத் தொண்டர்களின் இந்த உத்வேகமும் முயற்சியும் இன்று ஒவ்வொரு இந்திய விவசாயிகளுக்கும் தேவைப்படுகிறது.

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்

ஈஷா அறக்கட்டளையின் பசுமைக் கரங்கள் திட்டம் மூலம், தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகமெங்கும் மொத்தம் 35 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ளது.

நீங்கள் கொய்யாவை ருசித்துச் சாப்பிடுங்கள்; மாங்கனியை உண்டு மகிழுங்கள்; நெல்லிக்கனியை நாவினிக்க சுவையுங்கள். ஆனால் அதன் விதைகளை மட்டும் ஈஷா பசுமைக் கரங்களிடம் சேர்த்திடுங்கள்! ஒரு எலுமிச்சம் பழத்திலுள்ள விதைகளிலிருந்து சுமார் 12 எலுமிச்சை செடிகளை உருவாக்க முடியும். நாவல் பழத்தின் ஒரு விதையிலிருந்து மட்டும் 8 நாவல் மரங்கள் வளரும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம்! விதைகளுக்குள் விருட்சங்கள் ஒளிந்து கிடக்கின்றன.

விதைகளின் தன்மை... எலுமிச்சை விதைகள் பழத்திலிருந்து எடுத்த 1 வாரத்திற்குள் நடப்பட வேண்டும். அதில் சாம்பலைச் சேர்த்து பாதுகாத்தால் இன்னும் சிறிதுகாலம் தாக்குப்பிடிக்கும். வேப்ப விதைகளை மூன்றிலிருந்து 6 மாதங்களுக்குள் நடப்பட வேண்டும். நாவல் பழ விதைகள் பழத்திலிருந்து எடுக்கப்பட்ட 2 நாட்களுக்குள் நடப்பட வேண்டும். மாவிதைகள் 15 நாட்களிலும் கொய்யா விதைகள் 16 நாள் வரையிலும் தாக்குப் பிடிக்கும். எனவே இதுபோன்ற பழவிதைகள் உங்கள் கையில் கிடைக்கும்போது, குறிப்பிட்ட நாட்களுக்குள் நாற்றுப் பண்ணைகளில் சேர்த்திடுங்கள். வசதி வாய்ப்புகள் இருப்பின், நீங்களே நட்டு வளருங்கள்.

உலக வெப்பமயமாதல் என்று ஒருபுறம் மிகப் பெரிய அச்சுறுத்தல்; தண்ணீர்ப் பற்றாக்குறை என இன்னொரு புறம் அபயக்குரல்; இப்படி நம் செவிகளை வந்தடையும் எச்சரிக்கை மணிகளுக்கு இப்போதாவது நாம் காதுகொடுத்தே ஆகவேண்டும். அதற்கு, மரம் நடுவதும் மரக்கன்றுகளை உருவாக்குவதுமே சிறந்த தீர்வாக இருக்கும்.

ஈஷா பசுமைக் கரங்களுடன் உங்கள் கரங்களையும் இணைத்திடுங்கள். உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் விதைகளைக் கொண்டு சேர்ப்பதற்கும், குறைந்த விலையில் பல அரிய வகை மரக்கன்றுகளைப் பெறுவதற்கும் 94425 90062 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும். இதுவரை வீணே வீழ்ந்திருந்த நாம் இனி இந்த ஆடிப்பட்டத்தில் விதைபோல் முளைத்தெழுவோம்! விருட்சங்களாவோம்!

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1