3 கோடி மரங்கள் நட்டது எப்படி சாத்தியமானது?
உண்மையில் பசுமைக் கரங்கள் 3 கோடி மரங்களை நட்டுள்ளதா... நம்ப முடியலயே?! என்ற சந்தேகப் பார்வை என்பது பகுத்து ஆராயும் புத்திக்கு இயல்பான ஒன்றுதான்! அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் விதமாக, இப்பதிவு அமைகிறது.
 
3 கோடி மரங்கள் நட்டது எப்படி சாத்தியமானது? , 3 kodi marangal nattathu eppadi sathiyamanathu?
 

நாம் அனைவரும் ஒரு மரமாவது நட்டு சுற்றுச்சூழலை காக்க துணை நிற்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கும் அதே வேளையில், ஈஷா பசுமைக்கரங்கள் சுற்றுச்சூழலுக்காக இதுவரை மேற்கொண்டுள்ள பணிகளை எடுத்துரைக்கும் விதமாகவும் அமைகிறது இந்தப் பதிவு.

உண்மையில் பசுமைக் கரங்கள் 3 கோடி மரங்களை நட்டுள்ளதா... நம்ப முடியலயே?! என்ற சந்தேகப் பார்வை என்பது பகுத்து ஆராயும் புத்திக்கு இயல்பான ஒன்றுதான்! அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் விதமாக, இப்பதிவு அமைகிறது.

கடந்த 10 வருட காலமாக ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் மக்களுக்கு ஊக்கமும் உதவியும் உத்வேகமும் அளித்து 3 கோடி மரங்கள் தமிழகத்தில் நடப்படுவதற்கு துணைநின்றுள்ளது. மாறும் தட்பவெப்பநிலையை சீராக்கும் நோக்கிலும், மண்ணரிப்பை தடுக்கும் நோக்கிலும், தமிழகத்தில் பசுமைப்பரப்பை 10% அளவிற்கு அதிகரிக்கும் குறிக்கோளை கொண்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் துணையோடு செயல்பட்டு வருகிறது.

ஈஷா பசுமைக் கரங்களுடன் இணைந்து இந்த முயற்சியில் துணைநின்ற இரண்டு விவசாயிகளின் வெற்றிக்கதைகள் இங்கே!

திருவண்ணாமலை விவசாயி பசுமைக்கரங்களால் மலர்ந்தது எப்படி?

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான திரு.சக்திபிரசன்னா அவர்கள் பசுமைக் கரங்களுடன் தனக்கு ஏற்பட்ட அந்த மறக்கமுடியாத அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

2012ல் வறண்டு காய்ந்துபோன நிலமாக இருந்த என்னுடைய நிலம், இன்று எனது கிராமத்தைச் சுற்றியுள்ள மற்ற விவசாயிகளுக்கு ஒரு மாதிரிப் பண்ணையாக இருப்பதை பார்க்கும்போது கிடைக்கும் சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளில்லை!

“தற்போது என்னுடைய நிலமெங்கும் பசுமைமிகு மரங்கள் நிறைந்திருப்பதைப் பார்ப்பதற்கு மிகவும் பெருமையாகவும் மனநிறைவாகவும் உள்ளது. என்னுடைய இதயம் முழுக்க ஈஷாவிற்கான நன்றிகள்தான் நிறைந்துள்ளன. பசுமை விகடன் பத்திரிக்கையில் ஈஷாவின் விளம்பரம் ஒன்றை முதன்முதலில் பார்த்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. அந்த விளம்பரத்தில் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் மரங்கள் கிடைப்பதாகவும், விவசாய நிலங்களில் வேளாண்காடுகள் உருவாக்கம் குறித்த தொழிற்நுட்ப இலவச ஆலோசனைகளை அவர்களே நேரில் வந்து வழங்குவதாகவும் சொல்லப்பட்டிருந்தது.

விவசாயத்தைக் கைவிட நினைத்திருந்த வேளையில் இது ஒரு கடைசி வாய்ப்பாக எனக்கு தோன்றியது. கடந்த சில வருடங்களில், மஹாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் செயல்படுத்த பட்டதற்குப் பின்னர், விவசாய வேலைக்கு கூலிஆள் கிடைப்பதென்பது குதிரைக் கொம்பாகிப்போனது. அதுமட்டுமல்லாமல், தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் வாடிமடிந்தன. பசுமைக்கரங்களின் அந்த விளம்பரம் நம்பிக்கை அளிப்பதாய் இருந்தது. ‘இனி இழப்பதற்கு ஏதுமில்லை, முயன்று பார்ப்போம்!’ என நான் எண்ணினேன். அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணிற்கு அழைத்து பசுமைக்கரங்களின் தன்னார்வத் தொண்டருடன் பேசினேன். ஈஷாவின் வேளாண் ஆலோசகர் என்னுடைய கதையை கேட்டுவிட்டு, வேளாண் காடுகள் குறித்து விளக்கியதோடு, நான் என்ன செய்யவேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார். மேலும் அவர்கள் எந்த விதத்தில் எனக்கு உதவமுடியும் என்பதையும் கூறினார்.

அடுத்த ஒருசில தினங்களில், ஒரு பசுமைக்கரங்களின் குழு என்னுடைய பண்ணைக்கு வந்து பார்வையிட்டதோடு, மண், தண்ணீர் மற்றும் தட்வெப்ப நிலவரம் ஆகியவற்றை ஆராய்ந்தனர். அதன்பின்னர் எனது நிலத்திற்கு ஏற்ற மரவகைகளை அவர்கள் பரிந்துரைத்தனர். அதன்பிறகு, திருவண்ணாமலை ஈஷா நாற்றுப்பண்ணைக்கு சென்று மரக்கன்றுகளைப் பெற்று வந்தேன். தேக்கு, செஞ்சந்தனம், மலை வேம்பு மற்றும் வேம்பு ஆகிய டிம்பர் வேல்யூ உள்ள மரவகைகளை அவர்களின் அறிவுரைப்படி நட்டதால், அனைத்தும் நன்கு வளர்ந்தது. முழுவதுமாக பயிர்களை விவசாயம் செய்வதை விடுத்து, மரப்பயிர்களை பயிர் செய்ததால் வேலை ஆட்களின் தேவை குறைவாக உள்ளது.

இதுநாள் வரை, ஈஷா நாற்றுப்பண்ணையிலிருந்து 550 மரங்களை வாங்கி நட்டதில் 90% சிறப்பாக வளர்ந்துள்ளன. ஈஷாவின் ஆலோசனைப்படி ஊடுபயிர் முறையையும் பின்பற்றிவரும் நான் தற்போது அதற்கென சிறியரக ட்ராக்டர் ஒன்றையும், கவாத்து செய்வதற்கான ஒரு உபகரணத்தையும் வாங்கியுள்ளேன். என்னுடைய பணியை இவை எளிமையாக்கியுள்ளன.

2012ல் வறண்டு காய்ந்துபோன நிலமாக இருந்த என்னுடைய நிலம், இன்று எனது கிராமத்தைச் சுற்றியுள்ள மற்ற விவசாயிகளுக்கு ஒரு மாதிரிப் பண்ணையாக இருப்பதை பார்க்கும்போது கிடைக்கும் சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளில்லை!

ஒரு ஜோதிடரின் இயற்கை ஆர்வம்!

ஈரோடைச் சேர்ந்த திரு.நந்தகுமாருக்கு மரங்கள் நடுவதில் பெரும் ஈடுபாடு இருந்தபோதும், அதனை எப்படி தொடங்குவது, தனது ஆர்வத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதில் வழிகாட்டுதல்கள் இல்லாமல் இருந்தது. அவருக்கு பசுமைக்கரங்களுடன் கிடைத்த அனுபவம் இங்கே...

“நான் தொழில்முறையில் ஒரு ஜோதிடர்! ஆனால், எனது இதயம் முழுக்க மரங்களும், மரங்களை வளர்க்கும் பேரார்வமும்தான் இருந்தது.” அவரது குரலில் ஒரு உறுதி தெரிந்தது. “ஒரு நண்பரின் பரிந்துரையின்பேரில், நான் பசுமைக் கரங்களின் ஒரு நாற்றுப்பண்ணையை பார்வையிட்டேன். அங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகளின் தரத்தைப் பார்த்து வியந்தேன். அவை உண்மையிலேயே அற்புதமாக காட்சியளித்தன.

மேலும், அவை எந்தவித வேதி உரங்களோ கலப்புகளோ இல்லாமல் முற்றிலும் இயற்கை முறையில் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்தபோது என்னால் நம்ப முடியவில்லை! இன்றைய உலகில் இரசாயனம் இல்லாமலா? அது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. அது உண்மையென்பதை உணர்ந்தபோது, அதைப்பற்றி மேலும் அறிவதற்கு ஆர்வமானேன். உடனே பசுமைக் கரங்களின் ஆலோசகரை தொடர்புகொண்டேன், அனைத்தும் நிகழத்துவங்கின. இன்று, என்னுடைய எட்டு ஏக்கர் நிலத்தில் 2000 மரங்களை வளர்த்துள்ளதில் பெரும் மகிழ்ச்சிகொள்கிறேன்.”

ஒரு மரம் உங்கள் வாழ்க்கையை மாற்றும்!

“கிளி வளர்த்தேன்; ஒருநாள் பறந்து போனது! அணில் வளர்த்தேன்; அதுவும் ஓடிப்போனது! பின் ஒரு மரம் வளர்த்தேன், அவை இரண்டும் திரும்பி வந்துவிட்டது!” -டாக்டர்.அப்துல்கலாம், முன்னாள் இந்திய ஜனாதிபதி.

ஈஷா பசுமைக்கரங்களின் வழிகாட்டுதலில் உருவாகியுள்ள சுமார் 500 விவசாயிகளில் சக்திபிரசன்னா மற்றும் நந்தகுமார் ஆகிய இந்த இரு விவசாயிகளையும் உதாரணமாக இங்கே காட்டியுள்ளோம். இதில் பலர் தங்களுடைய வருமானத்திற்காக வேளாண் காடுகளை உருவாக்கியுள்ள அதேவேளையில், மற்றசிலர் தங்களின் மனநிறைவிற்காகவும் மரங்களை வளர்த்து வருகின்றனர். காரணம் எதுவாக இருந்தாலும், அனைவரின் முயற்சிகளும் நமது தமிழகத்தின் பசுமைப்பரப்பை அதிகரிப்பதில் துணைநிற்கிறது.

ஈஷா மரங்களை நடுகிறதா?

ஈஷா பசுமைக்கரங்கள் தனிப்பட்டமுறையில் இவ்வளவு மரங்களை நட்டுவிட்டதாக ஒரு தவறான பார்வை பொதுவாக உள்ளது. இது உண்மையல்ல! பசுமைக்கரங்கள் பொதுவாக மரங்களை நடுவதில்லை. அது மரங்களை நடும் பொதுமக்களை உறுப்பினராக கொண்டுள்ளது. பசுமைக்கரங்கள் மக்களிடத்தில் இயற்கை குறித்த விழிப்புணர்வையும், மரம் நடுவதன் அவசியத்தை விளக்கி அவர்களை மரம் நடச்செய்கிறது.

விவசாயி, தனியார் அமைப்பு, பள்ளிமாணவர், தொழில் நிறுவனம், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றாக ஒருங்கிணைத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் அவர்களை ஊக்குவித்து அதற்கான தளங்களை அமைத்துக்கொடுக்கிறது. விவசாயிகளுக்கு வருமானம், குழந்தைகளுக்கு இயற்கை மீதான ஆர்வத்தை தூண்டுவது, நிறுவனங்களில் பணியாளர்களை ஊக்குவிப்பது போன்ற பலதரப்பட்டவர்களை அவர்களுக்கு ஏற்ற விதத்தில் பசுமைக்கரங்கள் அணுகுகிறது.

65 ரகங்களில் தரமான மரக்கன்றுகள் தமிழகம் முழுவதும் உள்ள 40 நாற்றுப்பண்ணைகளில் கிடைக்கின்றன. இவை பொதுமக்களிடத்தில் முறையான வழிகாட்டும் நிகழ்ச்சியை வழங்கியபின்னர் விநியோகம் செய்யப்படுகின்றன.

வித்தியாசமான புதிய வழிமுறைகளில் பசுமைக்கரங்களின் தன்னார்வத் தொண்டர்கள் மரக்கன்றுகளை மக்களிடத்தில் விநியோகம் செய்வதுடன், அடுத்த தலைமுறையினருக்கு பசுமையான உலகை வழங்குவதற்கான நம்பிக்கையை உருவாக்குகின்றனர். திருமண நிகழ்ச்சிகளிலும், பிறந்தநாள் போன்ற வாழ்வின் சிறப்பான தருணங்களிலும் மற்றும் பொதுநிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டில், ஆர்வம் மிக்க தம்பதிகள் பலர், தங்களை எப்போதும் நினைவுறுத்தும் விதமாக, தங்கள் திருமணத்திற்கு வருகை தந்திருந்த விருந்தினர்களுக்கு 10 லட்சம் மரக்கன்றுகளை பரிசளித்தனர்.

 

பசுமைக்கரங்கள் துவங்கப்படுவதற்கு முன் பல வருடங்களாகவே ஈஷா “மக்களின் மனங்களில் மரங்களை நடும்பணியில்” ஈடுபட்டு வந்தது எனச் சொல்லும் சத்குரு மேலும், “தற்போது மக்களின் மனங்களில் மரங்கள் நன்றாக வேரூன்றிவிட்டபடியால் இனி நிலங்களிலும் மிகச் சுலபமாக நிகழ்ந்துவிடும்!” என்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சில நிகழ்ச்சிகள் பிற மாநிலங்களிலும் நிகழ்கின்றன. சூழ்நிலை பொறுத்து அவை ஒரு மணி நேர நிகழ்ச்சி முதல் ஒரு வார கால நிகழ்ச்சி வரை தீவிர நிலையில் நடைபெறுகின்றன. இவை, மரக்கன்றுகள் உயிர்ப்புடன் சிறப்பாக வளர்வதை உறுதி செய்கிறது.

இது மரங்கள் பற்றியது மட்டுமல்ல...

2002 முதல், வெள்ளியங்கிரி மலைகளின் புனிதத் தன்மையை காக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மலையேற்ற தன்னார்வத் தொண்டர் குழுவினர் மூலம் குப்பைகளை அகற்றுவது போன்ற பல்வேறு முயற்சிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது. மேலும், புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு குப்பைகளை போடுவதற்காக துணிப்பைகளை வழங்கி வருவதோடு, மலைகளின் இயற்கைச் சூழலை பாதிக்காத வண்ணம் மக்கள் சென்றுவருவதற்கு அறிவுறுத்துகிறது.

மேலும், பசுமைக்கரங்கள் திட்டம் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வையும் அறிவையும் வழங்கி, அவர்களை இயற்கை விவசாயத்திற்கு திருப்பும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. பூச்சிகளை கட்டுப்படுத்தக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிமுறைகளும் இந்த வழிமுறைகளில் வழங்கப்படுகின்றன.

பிற அமைப்புகளுடன் கைகோர்த்தபடி...

பசுமைக்கரங்கள் திட்டம் துவக்கத்திலிருந்தே பிற அமைப்புகளுடனும் தனியாருடனும் இணைந்தே தனது பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக தொடக்க காலத்தில், சுமார் அரை நூற்றாண்டுகளாக சுற்றுச்சூழலுக்காக தனது வாழ்வை செலவழித்த இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் நம்மாழ்வார் அவர்களின் ஒத்துழைப்பும் ஊக்கமும் பசுமைக்கரங்களுக்கு கிடைக்கப்பெற்றன. குறிப்பாக நிலப்பரப்பிற்கு தகுந்த வகைகளை தேர்வு செய்வது போன்ற விஷயங்களில் நம்மாழ்வார் அவர்கள் தனது வழிகாட்டுதல்களை பசுமைக்கரங்களுக்கு வழங்கி, இந்த திட்டத்தில் ஒரு முக்கிய ஆலோசகராக திகழ்ந்தார். வேளாண் காடுகள் உருவாக்கும் திட்டத்திற்காக நம்மாழ்வார் அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்கள் விலைமதிப்பில்லாதது!

அடுத்த சில வருடங்களில், விருதுகள் பல பெற்ற லாபநோக்கமற்ற சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல தனியார் அமைப்புகளும் அரசு அமைப்புகளும் ஈஷா பசுமைக்கரங்களுடன் கைகோர்த்தன. ஈவ்ஸ் ரோச்சர் நிறுவனம்(Yves Rocher Foundation) பிரான்ஸ், சுஸ்லான் நிறுவனம்(Suzlon Foundation), இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி, சோனி இந்தியா பிரைவேட் லிட், ஃபார்மசெல், கரூர் வைசியா வங்கி மற்றும் தமிழக கல்வித்துறை ஆகியவை இதில் அடங்கும். மரம் நடுவதில் பசுமைக்கரங்களின் பெரியதொரு பங்குதாரராக ஈவ்ஸ் ரோச்சர் நிறுவனம் திகழ்கிறது.

இந்த பங்குதாரர்கள் மரக்கன்றுகள் விநியோகம், இயற்கை விவசாயம், வேளாண் காடுகள் உருவாக்கம், பசுமை பள்ளி இயக்கம் போன்ற பல தரப்பட்ட முயற்சிகளில் தங்களுக்கு விருப்பமானவற்றை தேர்ந்தெடுத்து அதில் பங்களிப்பை வழங்குகிறார்கள். செயல்திட்ட வளர்ச்சி நிலைகளின் தகவல்கள் இந்த பங்குதாரர்களுக்கு பசுமைக்கரங்களிடமிருந்து முறையாக அவ்வப்போது அனுப்பப்படுவதால், தொடர்ந்து அவர்கள் தொடர்பில் இருப்பதொடு, எதிர்கால திட்டங்களிலும் பங்களிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

 

  • 2006ல் அதிகபட்சமாக 8,52,587 மரக்கன்றுகளை தமிழகத்தின் 27 மாவட்டங்களில் மூன்று நாட்களில் நட்டு, பசுமைக்கரங்கள் கின்னஸ் உலக சாதனை படைத்தது.

3 கோடி மரங்கள் நட்டது எப்படி சாத்தியமானது? , 3 kodi marangal nattathu eppadi sathiyamanathu?

  • 2008ம் வருடத்திற்கான இந்திரா காந்தி பார்யவரன் புரஸ்கார் விருது (சுற்றுச்சூழலுக்கான இந்தியாவின் மிக உயரிய விருது) முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர். அப்துல்கலாம் அவர்களால் வழங்கப்பட்டது.

3 கோடி மரங்கள் நட்டது எப்படி சாத்தியமானது? , 3 kodi marangal nattathu eppadi sathiyamanathu?

  • பியாண்ட் ஸ்போர்ட்ஸ் சம்மிட் (BEYOND SPORT SUMMIT), உலகத்தில் சமூக மாற்றங்களை நல்முறையில் நிகழ்த்தவும் அதற்கு நிதி உதவி அளிக்கவும் செயல்படுகின்ற ஒரு உலக அமைப்பு இது. இந்நிறுவனம் பசுமைக் கரங்கள் திட்டத்திற்கு சுற்றுச்சூழலுக்கான விருதினை வழங்கியது. சுமார் 438 அமைப்புகளிலிருந்து பசுமைக்கரங்கள் இவ்விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையினாரால் வழங்கப்படும் “சுற்றுச்சூழல் துறையில் சிறப்பாக பணியாற்றும் அமைப்பிற்காகன விருது” 2012ல் வழங்கப்பட்டது.

பசுமைக்கரங்கள் பற்றி பிறர் சொல்வது:

Government of India Press Release about Indira Gandhi Paryavaran Puraskar
The UN’s Billion Tree Campaign details PGH’s involvement (pdf – page 48)
The Yves Rocher Foundation on their Collaboration with PGH
The Hindu newspaper covers Isha’s Velliangiri Hills cleaning campaign

 

பசுமைக்கரங்களுடன் தொடர்பில் இருக்க அதன் Facebook பக்கத்தைப் பார்வையிடுங்கள்!

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1