2016 உலக யோகா தினம்... ஈஷாவின் நோக்கமும் செயல்பாடும்!
2016 உலக யோகா தினத்திற்காக ஈஷா மேற்கொண்டுவரும் பலவித செயல்பாடுகளையும், ஈஷாவின் நோக்கம் என்ன என்பதையும் விளக்குவதற்காக இங்கே ஒரு பதிவு! எதிர்வரும் வாரங்களில் ஈஷா மேற்கொள்ளவிருக்கும் அசாதாரண முயற்சிகளையும் இதில் அறியலாம்!
 
2016 உலக யோகா தினம்... ஈஷாவின் நோக்கமும் செயல்பாடும்!, 2016 ulaga yoga dinam ishavin nokkamum seyalpadum
 

2016 உலக யோகா தினத்திற்காக ஈஷா மேற்கொண்டுவரும் பலவித செயல்பாடுகளையும், ஈஷாவின் நோக்கம் என்ன என்பதையும் விளக்குவதற்காக இங்கே ஒரு பதிவு! எதிர்வரும் வாரங்களில் ஈஷா மேற்கொள்ளவிருக்கும் அசாதாரண முயற்சிகளையும் இதில் அறியலாம்!

ஜூன் 21ஆம் தேதியை உலக யோகா தினமாக ஐநா சபை அறிவித்ததை அடுத்து, தற்போது இரண்டாவது உலக யோகா தினத்தைக் கொண்டாட ஈஷா அறக்கட்டளை பலவித செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. ‘அனைவருக்கும் யோகா!’ என்ற நோக்கில் ஜாதி-மதபேதமின்றி, நாடுகள் வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களும் நல்வாழ்வு பெற்று, வாழ்வில் சிறப்படைய வேண்டும் என்ற சத்குருவின் குறிக்கோளை நிறைவேற்றும்பொருட்டு, உபயோகா வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாணவர்களின் நலனுக்காக உப-யோகா!

உபயோகாவை மேற்கொள்வதற்கு அந்த அளவிற்கான ஒரு உகந்த சூழல் அவசியமில்லை! அதை நீங்கள் முறையின்றி செய்யும்போதும் கூட, அது உங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏனென்றால், அது மிகவும் எளிய பயிற்சி. ஆதலால், உங்களால் அதனை முறையற்று செய்ய இயலாது.

கடந்த 20 வருடங்களில் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துவருகிறது. 2014ல் 14 வயதிற்கு உட்பட்ட 1700க்கும் அதிகமான குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர். இந்நிகழ்வு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. முறையான யோகப் பயிற்சிகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம், மாணவர்களின் இந்நிலைமை மாறுவதற்கு யோகா ஒரு முக்கிய பங்குவகிக்கும். இதனைக் கருத்தில்கொண்டு, உலக யோகா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் வாரங்களில் இந்தியா முழுவதும் 25,000 பள்ளிகளில் சுமார் 15 மில்லியன் மாணவர்களுக்கு உபயோகா பயிற்சி வழங்கும் முயற்சிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது. இந்த வகுப்புகள் யோகா தினம் முடிந்தபின்னரும் கூட, வருடம்முழுவதும் தொடர்ந்து நிகழவுள்ளது. இதன்மூலம் குழந்தைகள் ஆனந்தமாகவும் அமைதியாகவும் கல்வி கற்றல் செயல்முறையை கையாளும் திறம்பெறுவது உறுதிசெய்யப்படும்.

நல்வாழ்விற்காக 5 நிமிடங்கள் செய்யக்கூடிய இந்த எளிய பயிற்சிகளை மக்களிடத்தில் கொண்டுசேர்க்கும் இச்செயல்திட்டத்தை நிறைவேற்ற, 45,600 பள்ளி ஆசிரியர்கள் உபயோகா வகுப்புகளை நடத்துவதற்கான பயிற்சியை ஈஷா அறக்கட்டளை மூலம் பெற்றுள்ளனர்.

  • மாணவர்கள் தற்கொலைகள் அதிகம் நிகழும் பகுதியான இராஜஸ்தான் கோட்டா பகுதியிலுள்ள பயிற்சி நிறுவனங்களில், மாநில அரசின் துணையுடன் சுமார் 1.5 லட்சம் மாணவர்களிடத்தில் பிரத்யேக கவனம் செலுத்தி, யோகாவை கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது.
  • மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் பள்ளிகளுக்கான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் யோகா ஆசிரியர் பயிற்சிகளை வழங்குவதற்கான அனுமதியை ஈஷா அறக்கட்டளைக்கு கேந்திரிய வித்யாலயா வழங்கியுள்ளது. சுமார் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இந்த யோகா ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
  • ஜூன் 16ல், மஹாராஷ்டிராவில் Brihanmumbai (Greater Mumbai) Municipal Corporation பள்ளிகள் அனைத்திலுமுள்ள உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, உபயோகா கற்றுத்தருவதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த ஆசிரியர்களுடன் 17 இடங்களிலுள்ள ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களும் சேர்ந்து 2000 ஆசிரியர்களாக, 260 பள்ளிகளில் 57,000 மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்க உள்ளனர்.
  • உத்திரபிரதேச மாநிலத்தில் 140 பள்ளிகளிலுள்ள ஆசிரியர்களை ஈஷா அறக்கட்டளை பயிற்றுவித்துள்ளது. பலவித நடைமுறைச் சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கும் மத்தியில் தொடர்ந்து யோகா வகுப்புகளை வழங்குவதன் மூலம் இந்த ஆசிரியர்கள் 1,40,000 மாணவர்களுக்கு யோகா பயிற்சிகளை வழங்கிவருகின்றனர்.
  • இதே போல ஆந்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, குஜராத் போன்ற பிற மாநிலங்களிலும் பலவித முயற்சிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யோகா ஆசிரியர்களாக உருவாகும் மாணவர்கள்

மாணவர்கள் யோகாவை கற்றுக்கொள்வதோடு, யோகா ஆசிரியர்களுக்கான பயிற்சியையும் பெறுகிறார்கள். 2016 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், ஈஷா யோகா மையத்திற்கு வருகைதந்த பார்வையாளர்களில் சுமார் 25,000 பேருக்கு ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் 150பேர் யோகா ஆசிரியர்களாக இருந்து, உபயோகா வகுப்பை வழங்கியுள்ளனர். சண்டிகர் - ஸ்நேகாலயாவிலுள்ள 11 வயதே நிரம்பிய குழந்தை குஷி, மிகவும் இளவயது யோகா ஆசிரியராக உபயோகா வகுப்புகளை வழங்கி வருகிறாள். ஸ்நேகாலயாவின் பொறுப்பாளர் திரு.சதீஷ் வர்மா அவர்கள் கூறுகையில், “யோகா இனி குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில் முக்கியமான ஒரு அங்கமாக இருக்கும்” என்றார்.

உபயோகா என்றால்...

சத்குரு: ‘உபயோகா’ என்று அழைக்கப்படும் பயிற்சிகள் குறித்தும், அதனை அனைவரும் மேற்கொள்ளும் சாத்தியம் இருப்பது குறித்தும், யோகா செய்துவரும் மக்கள் உட்பட உலகின் பெரும்பான்மையான மக்கள் அறிந்துகொள்ளாமலே உள்ளனர். உடல் மற்றும் மனநிலை சார்ந்த பலன்களை வழங்கக் கூடிய இந்த உபயோகா, ஆன்மீக பரிமாணத்தை தொடுவதில்லை!

‘யோகா’ என்பது ஒரு உடற்பயிற்சி முறையன்று. அது மிக சூட்சும நிலையான ஒரு பரிமாணமாகும். உடல்நிலை கடந்த ஒரு பரிமாணத்தை உங்களுக்குள் உயிர்ப்புள்ள ஒரு அனுபவமாக உணர்வதற்கான ஒரு தொழிற்நுட்பமாகும். யோகா உங்கள் வாழ்வில் ஒரு உயர்ந்த சாத்தியத்தை வழங்குகிறது. உள்நிலைப்பரிமாற்றம் நிகழ்த்தவல்ல எந்தவொன்றும் தவறாக கையாளப்படுமானால், அது பாதிப்பையும் ஏற்படுத்தும். எனவே மிகவும் ஏதுவான சூழலில் மட்டுமே யோகாவை மேற்கொள்ளவேண்டிய தேவை உள்ளது. ஆனால், உபயோகாவை மேற்கொள்வதற்கு அந்த அளவிற்கான ஒரு உகந்த சூழல் அவசியமில்லை! அதை நீங்கள் முறையின்றி செய்யும்போதும் கூட, அது உங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏனென்றால், அது மிகவும் எளிய பயிற்சி. ஆதலால், உங்களால் அதனை முறையற்று செய்ய இயலாது.

உபயோகாவின் பலன்கள்

  • தசைகளுக்கு நல்ல உடற்பயிற்சி, மூட்டுகளுக்கு உயவுத்தன்மை, நரம்பு மண்டலத்தை தூண்டி புத்துணர்ச்சிகொள்ளச் செய்தல்
  • மூளையில் நியூரான் செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தல், நினைவாற்றல் மற்றும் புத்திக் கூர்மை
  • தூக்கத்தின் அளவு குறைதல் மற்றும் முதுகுத்தண்டில் புத்துணர்ச்சி
  • ஆழ்ந்த அமைதியை உணர்தல், புதுவித உயிர்சக்தியை உணர்தல் மற்றும் நல்வாழ்வு

உலக யோகா தினத்தில் ஐநா சபையில் சத்குரு!

நியூயார்க்கில் ஜூன் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் ஐநாவின் தலைமை மையத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர செயல்திட்டம் ஏற்பாடு செய்கிறது. இந்த நிகழ்ச்சியின் மையக் கருவானது, “நிலையான வளர்ச்சிகொண்ட குறிக்கோள்களை அடைவதற்காக யோகா! (Yoga for the Achievement of Sustainable Development Goals (SDG))” என்பதாகும். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சத்குரு அவர்கள் யோகா வகுப்பு ஒன்றை வழங்கவிருக்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் மிக முக்கிய ஆளுமைகளுள் ஒருவரான சத்குரு, நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் உரையாற்றவிருக்கிறார். SDG எனும் குறிக்கோளை எட்டுவதற்கு யோகா எப்படி முக்கிய பங்கு வகிக்கும் என்பதை விளக்கும் விதமாக சத்குருவின் உரை அமையவிருக்கிறது.

வறுமையை ஒழித்தல், பூமியைக் காத்தல் மற்றும் வளங்களை பெருக்குதல் போன்ற 17 குறிக்கோள்களை இலக்குகளாகக் கொண்டுள்ள புதிய நிலையான SDGயை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஒவ்வொரு குறிக்கோளும் அடுத்த 15 ஆண்டுகளுக்குள்ளாக நிறைவேறுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கினை எட்டுவதற்கு அரசாங்கங்கள், தனியார் துறைகள், சமுதாய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவையாகிறது.

தமிழகத்தில் உலக யோகா தினம்!

உலக யோகா தினத்திற்கான ஆசிரியர் பயிற்சி வகுப்புகளை ஜூன் 5ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் சத்குரு துவங்கி வைத்தார். இதில் சுமார் 4500 பேர் உபயோகா கற்றுத்தரும் வகையில் பயிற்சி பெற்றனர். தமிழகத்தில் 11,500 பேருக்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்கள் உபயோகா வகுப்பினை வழங்கிவருகிறார்கள். ஜூன் 21ல், உப-யோகா வகுப்புகள் 6000 பள்ளிகள், கல்லூரிகள், அரசு மருத்துவ கல்லூரிகள், சிறைகள், பல்கலைக்கழகங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் நிகழவுள்ளன. திருப்பூர், ஈரோடு, விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், கடலூர், தேனி மற்றும் நாகர்கோயில் மாவட்டங்களிலும், அதோடு பாண்டிச்சேரியிலும் உள்ள பள்ளிகளில் உடற்கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்குவதற்கான பிரத்யேக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகின் பிற பகுதிகளில் ஈஷாவின் செயல்பாடுகள்!

நேபாளம், சிங்கப்பூர், மலேசியா, லெபனான், தென் கொரியா மற்றும் சீனா போன்ற அண்டை நாடுகளிலும் ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்க நாடுகள், ஐரோப்பா & ஆப்பிரிக்கா என 80க்கும் மேற்பட்ட நாடுகளில், 6 கண்டங்களில் உலக யோகா தினத்திற்கான ஈஷாவின் செயல்பாடுகள் உத்வேகம்கொள்ளத் துவங்கியுள்ளன. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சுமார் 50,000 இடங்களில் பல்லாயிரக்கணக்கான பயிற்றுநர்கள் யோகா வகுப்புகளை வழங்க தயாராகியுள்ளனர்.

ஆயுஷ் அமைச்சகத்தின் உறுதுணையுடன்...

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து ஈஷா அறக்கட்டளை 2016 உலக யோகா தினத்திற்காக பல்வேறு செயல்திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறது.

8 நாட்கள் ஹத யோகா நிகழ்ச்சி!

உலக அளவிலான ஒரு முயற்சியாக ஈஷா அறக்கட்டளை 8 நாட்கள் ஹத யோகா நிகழ்ச்சியை ஈஷா யோகா மையத்தில் நிகழ்த்தியது. இந்நிகழ்ச்சியில் ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன், ப்ரெஞ்ச், ஸ்பானிஷ், மண்டரின், ரஷ்யன், அரபிக், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடி மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது. 39 நாடுகளிலிருந்து வந்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உபயோகா, சூரிய க்ரியா மற்றும் யோகாசனப் பயிற்சிகள் கற்றுத்தரப்பட்டன.

நீங்களும் பங்குபெறலாம்!

உங்கள் ஊர்களில் உப-யோகா வகுப்புகளை வழங்கிட ஈஷா அறக்கட்டளை உங்களை அன்புடன் வரவேற்கிறது. 90 நிமிடங்கள் நிகழக்கூடிய இந்த பயிற்சி வகுப்பில் அன்பு, அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம், வெற்றி போன்ற பலன்களை நல்கும் உப-யோகப் பயிற்சிகள் அடங்கும். அனைத்து உபயோகா பயிற்சிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

AnandaAlai.com/YogaDay என்ற இணையதளத்தின் மூலமும் உப-யோகப் பயிற்சிகளை கற்றுக்கொள்ளலாம்! 7 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த பயிற்சியை செய்யமுடியும்!

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1