காசி அர்ச்சகர்களுக்கு ஈஷா தந்த ஆழமான அனுபவங்கள்!
பாரம்பரியமாக காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தினமும் நிகழ்ந்துவரும் சப்தரிஷி ஆரத்தி, கடந்த டிசம்பர் 21ஆம் தேதியன்று ஈஷாவில் யோகேஷ்வர லிங்கத்தில் நிகழ்ந்தேறியது! இதற்காக காசியிலிருந்து வந்திருந்த அர்ச்சகள் ஈஷாவில் பெற்ற பல ஆழமான அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்தபோது...
 
 

காசியில் பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்துவரும் சப்தரிஷி ஆரத்தி, பரம்பரை அர்ச்சகர்களால் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடத்தப்படுகிறது. ஆதியோகியிடம் கற்றறிந்த யோக விஞ்ஞானத்தை உலகெங்கும் எடுத்துச்சென்ற சப்தரிஷிகள் சிவனை பிரியும் வேளையில், அவனை எங்கிருந்தாலும் உணர்வதற்காக சிவன் வழங்கிய ஒரு செயல்முறையே சப்தரிஷி ஆரத்தி. ஆதியோகி சிவன், சப்தரிஷிகள் தன்னிடமிருந்து பிரிந்து சென்றபோது இதனை அவர்களுக்கு அருளினான்.

முதன்முறையாக காசி நகருக்கு வெளியில், ஈஷா யோக மையத்தில், ஆதியோகி திருஉருவின் முன், சத்குரு அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஷ்வர லிங்கத்திற்கு டிசம்பர் 21, 2017 கதிர்திருப்ப நாளன்று சப்தரிஷி ஆரத்தி நடந்தது . இந்த செயல்முறையில் பங்கேற்றதை காசியிலிருந்து வந்திருந்த அர்ச்சகர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்பதை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

யோகேஷ்வரர், ஆசிரமத்தின் சக்திநிலை, இவற்றிற்கு மூலமாக திகழும் சத்குரு என தாங்கள் அனுபவித்து உணர்ந்ததைப் பற்றி நம்மிடம் பேசுகிறார்கள்.

நேத்ர தரிசனம்

"ஆரத்தி நடந்தபோது எங்கள் கண்கள் இருமுறை சந்தித்தன... இது நடந்தது இரண்டு வருடங்களுக்கு முன் என்றாலும், காசியில் சத்குருவை பார்த்த அந்தக் கணம் இன்னும் பசுமையாக என் நினைவில் இருக்கிறது. வழக்கமாக, ஆரத்தியின்போது லிங்கத்தின் மீது மட்டுமே எங்கள் பார்வை முழுமையாக பதிந்திருக்கும். மற்ற அர்ச்சகர்கள் உடனிருந்தாலும், ஆரத்தி முடியும் வரை எங்களுக்குள் எந்தத் தகவல் பரிமாற்றமும் கண்களால்கூட நடக்காது.

அன்று நான் அப்படி பார்த்தது எனக்கே வித்தியாசமாக தெரிந்தது. அதுமட்டுமின்றி, அன்று ஆரத்தி முடிந்தவுடன் என் கண்கள் சத்குரு அமர்ந்திருந்த இடத்தை நோக்கி தாமாகவே சென்றன. அவர் அங்கில்லை என்றவுடன் அவரை தேடிக்கொண்டு வெளியேவும் வந்து பார்த்தேன். ஆனால் அவர் அங்கிருந்து கிளம்பியிருந்தார். வார்த்தைகளால் விளக்க முடியாத ஏதோ ஒருவகையில் அன்றே என்னை ஆழமாக தொட்டிருந்தார் சத்குரு," என்று பசுமையாக தன் நினைவிலிருக்கும் சத்குருவுடனான தன் முதல் சந்திப்பை விவரிக்கிறார் ஸ்ரீ இராமானந்த் துபை. சப்தரிஷி ஆரத்தியை நிகழ்த்த காசியில் இருந்து ஈஷா யோக மையம் வந்திருந்த 11 அர்ச்சகர்களில் இவரும் ஒருவர்.

விழுந்தது விதை

"2014ம் ஆண்டு இறுதியில் காசி சென்றிருந்தபோது, ஒருமுறை தியானலிங்கத்தின் புகைப்படத்தை அர்ச்சகர் தயானந்தருக்கு காட்டினேன். அப்போதே ஆசிரமத்தில் சப்தரிஷி ஆரத்தி செய்வதற்கான முதல் விதை விழுந்துவிட்டது..." என்று துவங்கினார் வினோத் ராஜேஷ்வரன். தன்னார்வத் தொண்டரான இவரின் முன்முயற்சியால் முதன்முறையாக ஈஷா யோக மையத்தில் சப்தரிஷி ஆரத்தி நடைபெற்றுள்ளது. அன்று நடந்தவற்றை முழுமையாக விவரிக்கிறார் வினோத் அண்ணா...

தியானலிங்கத்தின் புகைப்படத்தை பார்த்த உடனே தயானந்தர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, "தியானலிங்கத்தில் நாங்கள் சப்தரிஷி ஆரத்தி செய்யமுடியுமா?" என்று என்னிடம் கேட்டார். எந்த வழிபாடுகளும் இன்றி எப்போதும் ஆழ்ந்த அமைதியில் நிச்சலனமாக இருக்கும் தியானலிங்க வளாகத்தில் இப்படி சடங்குகள் நிறைந்த ஒரு செயல்முறையை, என்னால் கற்பனையில்கூட நினைத்து பார்க்க முடியவில்லை. எனவே இது சரிப்பட்டு வராது என்று அவரிடம் தெரிவித்தேன். யோகேஷ்வர லிங்க பிரதிஷ்டையின்போது, லிங்கத்திற்கு பின்புலமாக, சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ள சப்தரிஷிகளை நான் பார்த்தவுடன் மின்னலாக "சப்தரிஷி ஆரத்தி செய்ய முடியுமா..?" என அன்று தயானந்தர் என்னிடம் கேட்டது அப்போது என் காதுகளில் மறுஒலிபரப்பானது.

இதுகுறித்து சத்குருவின் அனுமதியை கேட்டதும் விரைந்து ஒப்புதல் அளித்தார். இதை அர்ச்சகர்களிடம் தெரிவித்தவுடன், படிப்படியாக ஒவ்வொன்றாக நடக்கத் துவங்கியது. மற்ற அர்ச்சகர்களுடன் கலந்து பேசியபின், அக்டோபர் 7ம் தேதியன்று தினேஷ், இராமானந்தர், தயானந்தர் மூவரும் ஆசிரமம் வந்து சத்குருவை சந்தித்து பேசுவது என்றும், ஆரத்தி ஏற்பாடுகளுக்கு தேவையான குறிப்புகளை பகிர்ந்துகொள்வது என்றும் முடிவானது.

சத்குரு என் கையைத் தொட்ட அந்த கணத்தில் எனக்குள் விஸ்வநாதரை கண்டேன்.

கருணை மழை

"சத்குருவை பார்த்த மாத்திரத்தில், காந்தத்தின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்படும் இரும்பு துண்டாக எனை உணர்ந்தேன்"- சத்குருவை முதன்முதலாக சந்தித்த அக்டோபர் 7ம் தேதியை நினைவுகூறும் அர்ச்சகர் தினேஷ் அவர்கள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இரட்டை Ph.D பட்டம் பெற்றவர். தங்கள் நிறுவனங்கள் மற்றும் இல்லங்களில் பூஜைகளை நடத்தி வைக்க, பிரதிஷ்டை செய்திட என பெரிதும் விரும்பி அழைக்கப்படும் காசியின் முக்கிய அர்ச்சகர்களில் ஒருவர்.

"ஆன்மீகப் பாதையில் நம் தேசத்தில் உள்ள குறிப்பிடத்தக்க குருமார்கள், சுவாமிகள், ஆச்சாரியார்கள் என அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு இறையருளால் எனக்கு வாய்த்திருக்கிறது. ஆனால், சத்குருவை சந்தித்தபோது ஏற்பட்ட அனுபவம் இதற்கு முன் யாரை சந்தித்தபோதும் எனக்கு ஏற்படவில்லை. நிச்சயமாக எங்களுக்கு சத்குருவுடன் பூர்வஜென்ம பந்தம் ஏதோ இருக்கிறது என்றே நினைக்கிறேன்..." பேசும்போதே குரல் தழுதழுக்க கரைகிறார் தினேஷ்.

தயாளனாக...

சப்தரிஷி ஆர்த்தியின் கணக்குவழக்குகளை கவனித்து கொள்ளும் தயானந்தர் சத்குருவை சந்தித்தபோது நிகழ்ந்த மாற்றத்தை சொல்கையில், "சத்குருவை ஆசிரமத்தில் மாலை வேளையில் சந்தித்தோம். சத்குரு என் கையைத் தொட்ட அந்த கணத்தில் எனக்குள் விஸ்வநாதரை கண்டேன். அன்று இரவு முழுவதும் அழுதேன். என் கண்களில் இருந்து கண்ணீர் பெருகிக்கொண்டே இருந்தது," என்றார்.

காசியிலிருந்து வந்திருந்த ஒரே ஈஷா தன்னார்வத் தொண்டரான ஆனந்த், அர்ச்சகர்கள் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது அவர்களை கவனித்துக் கொண்டவர். "கணக்குவழக்குகளில் எப்போதும் கவனமாக இருப்பதால் கறாரானவர் என பெயர் பெற்றவர் தயானந்தர். ஆனால், சத்குருவை சந்தித்த பிறகு, சத்குரு என்று யாராவது அவரிடம் பேசத் துவங்கினாலே அவர் கண்கள் கனிந்து கண்ணீர் பெருகுகிறது," என்று சத்குருவின் சந்திப்புக்கு பிறகு தயானந்தரின் தன்மையே அடியோடு மாறியதை பதிவுசெய்கிறார்.

எங்கும் நிறைந்தோனே...

சப்தரிஷி ஆர்த்தி நிறைவடைந்த அடுத்த நாள் அர்ச்சகர்களை சந்தித்து அவர்களது அனுபவங்களை கேட்க கிடைத்த வாய்ப்பு அற்புதமானது. நம்பமுடியாத அளவிற்கு அவர்களிடம் இருந்த ஏற்றுக்கொள்ளும் தன்மையை நேரடியாக கண்டுணர முடிந்தது.

"21ம் தேதி ஆரத்தியின்போது சத்குரு அமர்ந்திருந்த விதம், சாட்சாத் அந்த பரமசிவனே நேரில் வந்தமர்ந்து தனக்கு நடக்கும் ஆரத்தியை பார்ப்பது போலவே உணர முடிந்தது. எங்களுக்குள் ஏதோ பூர்வஜென்ம பந்தம் இருப்பதாகவே உணர்கிறேன்," இப்படிச் சொன்னது அர்ச்சகர் இராமானந்தர்.

அனைத்தையும் தன்னுள் ஏற்றுக்கொள்ளும் தன்மையுடைய யோகேஷ்வர லிங்கத்துடன் தான் அறியாமலே தொடர்பு ஏற்படுத்தியிருந்த அர்ச்சகர் தினேஷ், "சத்குரு இப்போது இருக்கும் உருவ வரையறைக்குள் சிக்கியவர் அல்ல என்பது நன்றாக தெரிந்தது. ஆரத்தியின்போது, தன் இருக்கையில் மட்டுமின்றி எங்கும் அவர் நிறைந்திருப்பதை நான் கண்டேன்," என பகிர்ந்துகொண்டார்.

ஆரத்தி நிறைவடைந்த பிறகு அர்ச்சகர்கள் சத்குருவிடம் பாதநமஸ்காரம் செய்தனர். முழுமையாக கரைந்தவர்களாக, அர்ச்சகர்கள் தயானந்தர், விகாஷ் இருவருமே கண்ணீர் பொங்க நின்றனர். பொதுமக்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் இப்படி வெளிப்படையாக இருக்கவேண்டாம் என்பதால் சப்தரிஷி சிற்பங்களுக்கு பின்புறமாக சென்று அவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நேர்ந்தது.

ஆசிரமத்தின் பல்வேறு இடங்களில் சத்குரு பிரதிஷ்டை செய்துள்ள 11 தியானலிங்க 'குடி'களின் ஷக்தியை உணர்ந்த காசி அர்ச்சகர்கள்அவை ஒவ்வொன்றும் ஒரு ஜோதிர் லிங்கங்கத்தின் தன்மையை கொண்டுள்ளது என பெயர் குறிப்பிட்டும் அழைத்தனர்.

சக்தி மையம்

அர்ச்சகர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சொன்னது... "எங்களுக்கு விஸ்வநாதர் ஆலயத்திற்கு வெளியில் ஆரத்தி செய்கிறோம் என்ற உணர்வே இல்லை. யோகேஷ்வர லிங்கத்திற்கு நிகழ்ந்த ஆரத்தியின் அனுபவம் அப்படியே காசியில் நடப்பது போலவே இருந்தது," என்பதுதான்.

"வழக்கமாக ஆரத்தி நிறைவடையும்போது நாங்கள் களைப்பாக உணர்வோம். ஆனால், இங்கே இந்த இடத்தின் சக்தி அதிர்வு அற்புதமாக இருக்கிறது. ஆரத்திக்கு பிறகு அதிகாலை ஐந்து மணிவரையிலும் எங்கள் யாருக்கும் தூக்கமே வரவில்லை," என்று பகிர்ந்துகொண்டார் தினேஷ்.

அவரது சகோதரர் கணேஷ் பேசும்போது, "காசியில் ஒவ்வொரு முறை நாங்கள் ஆரத்தி முடித்தவுடன் எங்கள் முதுகுத்தண்டுவடத்தில் ஒருவித உணர்வு ஏற்படும், ஆனால், அந்த உணர்வை நான் ஆசிரமத்திற்குள் வந்தது முதற்கொண்டு உணர்கிறேன்," என்று அளப்பரிய சக்தி மையமாக திகழும் ஈஷா யோக மையத்தின் தனித்துவத்தை வியக்கிறார்.

இந்த மண்ணின் மகிமையை கால்வைத்த உடனே உணரமுடிந்தவர் அடுத்து என்ன செய்திருப்பார்...? ஆசிரமத்தில் தங்கியிருந்த நாட்களில் காலணிகள் அணிவதை தவிர்த்துவிட்டு, இந்த சக்தியை மேலும் உள்வாங்கிக் கொள்ள ஏதுவாக வெறும் கால்களில் நடந்திருக்கிறார்.

ஜோதிர்லிங்கம்

வந்திருந்த ஒருசில நாட்களில் இந்த ஆசிரம சூழலையும் சத்குருவையும் எவ்வளவு ஆழமாகவும் தீவிரமாகவும் உணர்ந்திருக்கிறார்கள் என்பதை கண்டதும் "இதைதானே நாம் விரும்புகிறோம்" என உள்ளிருந்து ஒரு உற்சாகம் கிளம்புகிறது.

ஆசிரமத்தின் பல்வேறு இடங்களில் சத்குரு பிரதிஷ்டை செய்துள்ள 11 தியானலிங்க 'குடி'களின் ஷக்தியை உணர்ந்த காசி அர்ச்சகர்கள், அவை ஒவ்வொன்றும் ஒரு ஜோதிர் லிங்கங்கத்தின் தன்மையை கொண்டுள்ளது என பெயர் குறிப்பிட்டும் அழைத்தனர்.

விடுதலை

"இந்த இடம் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது. இது வரையில் என் வாழ்க்கையில் இது இல்லையே என்று எதற்குமே நான் ஏங்கியதில்லை. பொருளாதார ரீதியாக பெரும் வசதிகள் இல்லை என்றாலும், பெருமைமிகுந்த காசி மாநகரில், அதுவும் விஸ்வநாதருக்கு அருகிலேயே வாழ்கிறோம் என்பதே போதும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இப்போது, 'நான் யார்' என்பதை உணரவேண்டும் என்கிற தீவிரம் என்னைத் துளைக்கிறது. என்னை சிறைவைத்துள்ள கட்டுப்பாடுகளை கடந்து விடுதலையடைய வேண்டும் என்கிற இந்த வேட்கையை இனிமேலும் என்னால் தாங்க முடியாது. இங்கேயே தன்னார்வத் தொண்டனாக இருந்து இந்த புனிதமான ஆசிரமத்துடனும் சத்குருவுடனும் ஒரு அங்கமாக கரைந்திட வேண்டும்," எனச் சொல்லும் தினேஷின் குரலில் இருக்கும் உறுதி, கண்களிலும் தெரிகிறது.

பொங்கும் கவி வெள்ளம்

தன் உணர்வுகளை வெளிக்காட்டாத முகத்துக்குச் சொந்தக்காரரான இராமானந்தர், ஆசிரமத்தில் தங்கியிருந்த நாட்களில் தனக்குள் இருக்கும் கவிஞனுக்கு நன்றாகவே தீனி போட்டிருக்கிறார். "நான் சந்தோஷமாக இருந்தால் பஜன்கள் எழுதுவது வழக்கம். சரியான வார்த்தைகள் சரியான இடங்களில் தாமாகவே அமையும். இந்த இரண்டு நாட்களில் இதுவரையில் நான்கு பஜன்களை எழுதியுள்ளேன். அதுமட்டுமல்ல, இந்தச் சூழ்நிலையே முற்றிலும் வேறுவிதமாக இருக்கிறது.

சாதாரணமாக நான் இட்டுக்கொள்ளும் சந்தனம், இங்கு வேறுவிதமாக இருக்கிறது. குடிக்கும் தண்ணீர் இங்கு வேறுவிதமாக இருக்கிறது. ஆழமான சுவாசம் எடுக்கிறேன், அதுவும் வேறுவிதமாக இருக்கிறது. நிச்சயமாக இந்த இடத்திற்கும் எங்களுக்கும் ஏற்கனவே ஏதோ ஒரு தொடர்பு இருந்திருக்க வேண்டும்." மீண்டும் ஒருமுறை அதை உறுதிசெய்து கொள்வதுபோல பேசுகிறார் இராமானந்தர்.

உருகியது நெஞ்சம்

அவர்கள் எதைப்பற்றி பேசினாலும், ஏதாவதொரு வகையில் யோகேஷ்வர லிங்கத்திற்கு சப்தரிஷி ஆர்த்தி நடத்த தங்களுக்கு கிடைத்த வாய்ப்புக்கு பணிவன்புடன் நன்றி தெரிவிப்பதிலேயே வந்து முடிகிறது. ஆர்த்தி நிகழ பலவகைகளிலும் முன்னின்று முயற்சி எடுத்த வினோத் அண்ணாவுக்கும் அவர்களது நன்றிகள் நிறைகிறது.

"ஆரத்தி நிறைவடைந்த பிறகு எங்கள் கண்கள் முதலில் சந்தித்தபோது, இருவர் கண்களிலும், 'யோகேஷ்வரா.. உனக்கு ஆரத்தி செய்திட எப்போது எங்களுக்கு அடுத்த வாய்ப்பு தருவாயோ,' என்ற ஏக்கமே நிறைந்திருந்தது," சொல்லும்போதே கண்களில் நீர் நிறைகிறது இராமானந்தர், தினேஷ் இருவருக்கும்.

என்னுள் கண்டேன்

எங்கள் அருகில் அமர்ந்திருந்து அனைவரது அனுபவங்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த தயானந்தரை பார்த்து, "நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா..?" என்று இறுதியாக கேட்டோம். "சொல்வதற்கு இன்னும் என்னய்யா இருக்கிறது..." என்று உரத்தக் குரலில் கிட்டத்தட்ட கூவினார் தயானந்தர், கண்களில் கண்ணீர் தழும்ப.

"அவரது கண்கள் பேசுகிறது; கைகள் பேசுகிறது; அவரை தொட்டதும் என்னுள் குடிகொண்டுள்ள ஈஸ்வரனை கண்டேனய்யா.." தழும்பிய கண்ணீர் அருவியாக பெருக, கதறலாக முடிக்கிறார் தயானந்தர். "எங்களிடம் இதற்கு மேல் வார்த்தைகள் இவ்லை," என்று கண்கள் நிறைக்க விடைகொடுக்கிறார் அர்ச்சகர் தினேஷ். மீண்டும் அவர்களை ஆசிரமத்தில் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் கண்கள் நிறைக்க நாமும் விடைபெறுகிறோம்.

விருந்தினர்களை கவனித்துக் கொள்ளும் துறையைச் சேர்ந்த ராஜேஷ், "இதுவரையில் இப்படிப்பட்ட விருந்தினர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. விருந்தினர்கள் விடைபெறும்போது அவர்களை பிரியமுடியாமல் அழுததும் இதுவே முதல்முறை," என்கிறார். பணிவன்புடன் அர்ச்சகர்கள் விடைபெறும் நேரத்தில் அவர்களை பிரிய மனமின்றி அங்கு கூடியிருந்த ஆசிரமத்தை சேர்ந்தோர் கண்கலங்கினர்.

பரம்பரையான செயல்முறை

சப்தரிஷி ஆரத்தி என்பது பரம்பரையாக நடந்துவரும் ஒரு செயல்முறை. குடும்பத்தில் வழக்கமாக தந்தை மகனுக்கு இதைக் கற்றுத்தர, அப்படியே அடுத்தடுத்த தலைமுறைகளை வந்து சேர்கிறது. கிருஷ்ணானந்தர், இராமானந்தர், தயானந்தர் மூவரும் காசி விஸ்வநாதர் ஆலய அர்ச்சகர்களில் ஒருவரான மறைந்த பிரேமானந்தரின் குமாரர்கள்.

"முதன் முதலில் சப்தரிஷிகள் இந்த ஆரத்தியை செய்த நாளிலிருந்து இன்று வரை அதன் தூய்மையான வடிவை ஒவ்வொரு தலைமுறையிலும் எங்கள் முன்னோர்கள் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்," இராமானந்தர் ஒரு தகவலாக இதைச் சொன்னாலும், எத்தனை எத்தனை மனிதர்கள் என்னென்ன சூழ்நிலையை கடந்து இதனை நமக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்களே என்று நினைக்கும்போதே ஏதோ ஒன்று உள்ளுக்குள் கரைகிறது.

உனக்காக பிறந்தேன்...

பரம்பரையாக இது எப்படி நடக்கிறது என அறியும் ஆர்வத்தில், "அப்படியானால் சிறுவயதிலேயே உங்களுக்கு ஆரத்தி செய்ய பயிற்சி கொடுத்தார்களா?" இராமானந்தரிடம் இப்படி கேட்டது பிசகு என்பது பிறகுதான் தெரிந்தது.

"பயிற்சியா..?" என்று முகத்தை சுருக்கியவர் "நான் பிறந்ததே விஸ்வநாதர் திருக்கோயிலில்தான். எப்போது நாம் இவருக்கு ஆரத்தி செய்வோம் என சிறுவயதிலிருந்தே ஏங்கி தவமல்லவா கிடந்தேன். பாரம்பரிய வழக்கப்படி எனக்கு 13 வயதான பிறகுதான் என் தந்தை என்னை ஆரத்தி செய்ய அனுமதித்தார். ஆரம்பத்தில் அவருக்கு உதவியாக இருந்து, கடந்த 25 ஆண்டுகளாக கிட்டத்தட்ட தினமும் செய்து வருகிறேன்," நிறைவுடனும் அர்ப்பணிப்புடனும் பேசும் இராமானந்தரது கண்களில் பக்தியின் பரவசம்.

கலாச்சாரத்தின் அடையாளம்

ஆனால், இதே அர்ச்சகர்கள் தானே காசியில் சப்தரிஷி ஆரத்தி முடிந்தவுடன் தட்சிணையை கேட்டு வாங்குகிறார்கள் என்பது உள்ளூர நெருடலாகவே இருந்தது. ஆனந்த், வினோத் அண்ணா இருவரும் அதன் பின்னணியை விளக்கினர்.

விஸ்வநாதர் ஆலயத்தில் அரசின் கட்டுப்பாட்டில் வராத ஒரே அம்சம் சப்தரிஷி ஆரத்தி மட்டுமே. பரம்பரை பரம்பரையாக சப்தரிஷிகளின் சந்ததியினர் மட்டுமே தொடர்ந்து நடத்தி வரும் செயல்முறை இப்படியே தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைகளிலும் எடுத்துச்செல்லப்பட வேண்டும் என்பதால் இவர்கள் இதற்கென அரசிடமிருந்து ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்வதில்லை. ஆனால் தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரம் மற்றும் தங்கள் பிள்ளைகள் தொடர்ந்து இதை நடத்த முன்வர வேண்டும் என்பதால் பொதுமக்களிடம் சந்தனம், மாலை முதலான ஆரத்தி அர்ப்பணங்களை வழங்கி பொருள் ஈட்டுகின்றனர்.

"அவர்கள் பணம் கேட்டு வாங்குவதும், கேட்கும் முறையும் அந்தச் சூழ்நிலைக்கு பொருந்தாததாக இருக்கலாம். ஆனால், தங்கள் வாழ்க்கைக்கு தேவையான பொருளாதார உதவி இல்லாமல் விலைமதிப்பற்ற இப்படிப்பட்ட தொன்மையான கலை, கலாச்சார அடையாளங்களை இவர்கள் எப்படி தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்ல முடியும்?

இவர்களை மட்டுமல்ல, நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அனைவரையும் பார்த்துக்கொள்ள வேண்டிய தார்மீக கடமை பொதுமக்களாகிய நமக்கல்லவா இருக்கிறது? தவறும்போது நாம் இழக்கப்போவது நம் கலாச்சார அடையாளங்களை மட்டுமல்ல, நம் மனிதத்தன்மையையும் சேர்த்துத்தான்," வினோத் அண்ணாவின் ஆழமான விளக்கத்தில் தெளிகிறது மனம்.

நேரலை

ஆதியோகி மற்றும் சத்குருவின் முன்னிலையில் நிகழ்ந்த இந்த சக்திமிக்க செயல்முறையில் 4500க்கும் மேற்பட்ட தியான அன்பர்கள் நேரில் கலந்துகொண்டனர். நேரலையாக YouTubeல் ஒளிபரப்பான சப்தரிஷி ஆரத்தி, நேரில் கலந்துகொள்ள இயலாத உலகம் முழுவதும் உள்ள ஈஷா தியான அன்பர்களுக்கு அதே அனுபவத்தை வழங்கியது என பகிர்ந்துகொள்கிறார் ஈஷா தியான அன்பர் ஒருவர்.

"சப்தரிஷி ஆரத்தியில் கலந்து கொள்வதற்காகவே இரண்டு முறை நாங்கள் வாரணாசி சென்றிருந்தோம். ஆனால், கோவிலில் இருந்த கூட்ட நெரிசலில் வேறு ஒரு பகுதியில்தான் இடம் கிடைத்தது. உச்சாடனங்களை கூட சரிவர கேட்கமுடியாமல் செயல்முறைகளை மட்டுமே திரையில் பார்த்தோம். இந்த நேரலை மூலம் எங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த சக்திமிக்க செயல்முறையில் கலந்துகொள்ளும் வாய்ப்பை வழங்கிய சத்குருவிற்கு எங்கள் பணிவான நன்றியும் நமஸ்காரமும்," என்றார்.

சுந்தரமூர்த்தி

ஆரத்தியின்போது அர்ச்சகர்கள் பல்வேறு விதங்களில் எழுப்பிய நாத ஒலிகள், சாமவேதத்தில் ஓதப்படும் "யே ஷிவ ஷம்போ" மந்திர உச்சாடனம் மற்றும் சில வேத மந்திரங்களுமே ஆகும். ஆரத்தி செயல்முறையின் ஒவ்வொரு நிலையிலும் யோகேஷ்வர லிங்கத்திற்காகவே தயாராக காத்திருந்த பிரத்யேகமான மலர்மாலைகளை ஒன்றன்பின் ஒன்றாக அணிவித்து அலங்கரித்ததும், 7 அர்ச்சகர்களும் ஒரே லயத்தில் சேர்ந்து அர்ப்பணங்களை சமர்ப்பித்ததும், தேர்ந்த கலைஞர்களால் துல்லியமான அசைவுகளுடன் நிகழ்த்தப்படும் ஒரு நுட்பமான நாட்டியத்தை நம் கண்முன் கொண்டு வந்தது.

ஈஷாவின் வரலாற்றில் முதல்முறையாக நிகழ்ந்த சப்தரிஷி ஆரத்தி அதன் சக்திமிக்க செயல்முறைக்காக மட்டுமின்றி, மலர்மாலைகள் சூடி சுந்தரமூர்த்தியாக திகழ்ந்த யோகேஷ்வரரின் திருக்கோலத்திற்காகவும் என்றும் நம் நினைவில் நிற்கும்.

 

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1