பூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி!

பூச்சிக்கொல்லிகளினால் விவசாயிகள் மாண்டுவரும் நிலையில் பூச்சிக்கொல்லியின் பாதிப்பினால் இரசாயன விவசாயத்தை புறக்கணித்து இயற்கை விவசாயத்திற்கு மாறிய ஒரு விவசாயியின் அனுபவப் பகிர்வு கள்ளிப்பட்டி கலைவாணியின் கொங்கு தமிழ் கமெண்ட்களுடன் இங்கே!*
 

பூமித்தாயின் புன்னகை - பகுதி எண் 36

விழுப்புரம் மாவட்டம் கண்டேன்மானடி கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் அவர்களை ஈஷா விவசாயக் குழுவினர் சந்தித்தனர், பாரம்பரிய அரிசி வகைகளையும், சிறுதானியங்களையும் உற்பத்தி செய்து விதைக்காக வழங்கி வரும் அவரது அனுபவங்கள் நமது குழுவினருக்காக...

நீங்கள் இயற்கை விவசாயத்திற்கு எப்படி வந்தீர்கள்?

இரசாயன விவசாய பூச்சிக்கொல்லிகளால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன், அந்த பாதிப்புதான் என்னை இயற்கை விவசாயத்திற்கு தள்ளியது. 1987 வருஷம் எனக்கு 30 வயதிருக்கும் காலில் காயம் பட்டிருந்தது சிறிய காயம் என்பதால் பொருட்படுத்தாமல் வயலுக்கு பூச்சிமருந்து (பூச்சிக்கொல்லி) அடித்துக் கொண்டிருந்தேன்.

பயிரின் நடுவே சென்று பூச்சி மருந்தை தெளித்துக் கொண்டிருந்ததால் கால்கள் பயிரின் மேல் உரசி, பூச்சிக் கொல்லி விஷம் காயத்தின் வழியாக புகுந்த விஷம் உடலில் பரவிவிட்டது, சிறிது நேரத்திலேயே எதுவும் செய்ய முடியாமல் விழுந்து விட்டேன், பேச முடியவில்லை ஆனால் நினைவு இருந்தது. அருகில் உள்ளவர்கள் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். மருத்துவர்கள் என்னை பரிசோதித்துப் பார்த்து என்ன பூச்சி மருந்து என்று தெரிந்தால்தான் மருத்துவம் செய்ய முடியும் என்று கூறிவிட்டார்கள்.

எனக்கு லேசாக நினைவிருந்ததால் சற்று சிரமம்பட்டு பூச்சிக்கொல்லி மருந்துகளின் பெயரை எழுதிக்காண்பித்தேன், மருத்துவர் உடனடியாக மாற்று மருந்து கொடுத்ததினால் உயிர் பிழைத்துக் கொண்டேன், அன்றிலிருந்து இன்று வரை வயலுக்கு பூச்சி மருந்தைத் தெளித்ததில்லை.

1989 முதல் 2002 வரையில் அடியுரமாக யூரியா போன்ற உரங்களை பயன்படுத்தினாலும், பூச்சி மருந்தை தெளித்ததில்லை. பயிர்களுக்கு பூச்சிகளால் சிறுசிறு பாதிப்பு வந்தாலும், மகசூல் இழப்பு ஏற்படுமளவிற்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை, 2002ம் ஆண்டில் முழுமையாக இயற்கை விவசாயத்துக்கு மாறினேன்.

"அட துஷ்டன கண்டா தூர விலகுன்னு நம்ம ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க இல்லீங்கோ?! அதுமாதிரி நம்ம ராதாகிருஷ்ணன் அண்ணா பூச்சிக்கொல்லிய தூர வச்சுப்போட்டு இயற்கை விவசாயத்துக்கு மாறுனது ரொம்ப நல்லதா போச்சுங்ணா! அட நம்ம கெரகத்துக்கு ஏதாவது கெடுதல் வந்துசேரும்போது அதைய நாம எப்புடி நல்லதா மாத்தோணும்னு பாக்கோணும் இல்லீங்களா?!"

இரசாயன விவசாயம் தீமை விளைவிக்க கூடியது என்று தெரிந்திருந்தும், இயற்கை விவசாயத்தை ஏன் தாமதமாகத் தொடங்கினீர்கள்?

எனக்கு இயற்கை விவசாயம் செய்ய ஆர்வமாகத்தான் இருந்தது, ஆனால் தற்போது இருப்பது போல் இயற்கை விவசாயம் குறித்து தெளிவான பயிற்சிகளோ, தகவல் தொடர்புகளோ அப்போது இல்லை, அதனால் எனக்கு தெரிந்த அளவு மட்டுமே இயற்கை விவசாயம் செய்தேன்.

இயற்கை விவசாயப் பயிற்சிகள் எனக்கு 2002ம் ஆண்டில்தான் கிடைத்தது,  டாக்டர் விஜயலட்சுமி என்பவர் சென்னை அருகே படாளத்தில் இயற்கை விவசாயப் பயிற்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த பயிற்சியில் நானும் கலந்து கொண்டேன், ஒரு மாதம் காலம் அங்கேயே தங்கியிருந்து இயற்கை விவசாயத்தை கற்றுக் கொண்டேன், அந்தப் பயிற்சி எனது விவசாய முறையை மாற்றியமைத்தது.

தற்போது நீங்கள் முன்னோடி இயற்கை விவசாயியாக இருக்கிறீர்கள், இயற்கை விவசாயப்பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறுங்களேன்?

இயற்கை விவசாயம் தொடங்கியபோது எனக்கு தோல்விதான் கிடைத்தது. நான் இயற்கை விவசாயத்தை செயல்முறையாக புரிந்துகொள்ள இரண்டு வருடங்கள் ஆனது. ஆரம்பத்தில் அமிர்தக் கரைசலைத் தயாரித்து எப்படி விடுவது என்பதுகூட சரியாகத் தெரியவில்லை, என் விருப்பம் போல் விடுவேன்.

எனினும் படிப்படியாக நுணுக்கங்களை தெரிந்து கொண்டேன், அருகில் உள்ள விவசாயிகள் இரசாயன உரம் போட்டு 30 மூட்டை எடுத்தாலும், நான் உரச்செலவுகள் இல்லாமலே 25 மூட்டை அறுவடை எடுத்துவிடுவேன். படிப்படியாக நம்மாழ்வார் ஐயா, பாலேக்கர் ஐயா போன்ற பெரியோர்களின் தொடர்புகள் கிடைத்ததினால் இயற்கை விவசாயத்தை மேலும் நன்றாகத் தெரிந்து கொண்டேன். 2015ல் ஈஷா ஒருங்கிணைத்த சுபாஷ் பாலேக்கர் ஐயாவின் வகுப்பிலும் கலந்து கொண்டேன், அப்போது அவர் ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கமாகச் சொல்லிக் கொடுத்தார், தற்போது ஒரு வெற்றி பெற்ற இயற்கை விவசாயியாக இருக்கிறேன்.

"அட கூடா நட்பு கேடாய் முடியும், நல்லோர் நட்பு நல்லதாவே முடியும்னு என்ற ஊர்ல பெரியவூட்டு ஆத்தா அடிக்கடி சொல்லுங்கண்ணா! அதுமாறி நம்ம எண்ணமும் நம்ம நட்பும் நல்லா இருந்தா எப்படியாவது உதவி வந்துசேரும் இல்லீங்களா?! அதுமாறி நம்ம ராதாகிருஷ்ணன் அண்ணாவுக்கு இயற்கை விவசாயம் சொல்லித்தர எத்தனை பெரியவங்க வந்துருக்காங்க பாருங்கோ!"

தற்போது என்னென்ன பயிர்கள் சாகுபடி செய்து வருகிறீர்கள்?

என்னிடம் தற்போது 12 ஏக்கர் நஞ்சை நிலம் இருக்கு, இதில் பத்து ஏக்கர் சம்பா நெல் சாகுபடி செய்கிறேன், நெல் சாகுபடி முடிந்ததும், ஐந்து ஏக்கரில் எள்ளு அல்லது உளுந்து சாகுபடி செய்கிறேன், தொடர்ந்து நிலத்தை வளப்படுத்த ஒன்று அல்லது இரண்டு முறை பலதானியங்களை விதைத்துவிடுவேன். மீதமுள்ள இரண்டு ஏக்கரில் சிறுதானியங்களை சாகுபடி செய்கிறேன்.

நெல் சாகுபடியை எந்த முறையில் செய்கிறீர்கள்?

நானும் தொடக்கத்தில் 20 முதல் 25 கிலோ விதை நெல்லை பயன்படுத்தியே சாகுபடி செய்தேன். நெல் ஜெயராமன், ஆலங்குடி பெருமாள் போன்ற நெல் சாகுபடியில் அனுபவமுள்ள பெரியவர்களின் தொடர்பு கிடைத்ததினால் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். நபார்டு வங்கியின் உதவியுடன் உழவர் மன்ற விவசாயிகள் அனைவரும் ஆலங்குடி பெருமாள் ஐயாவின் பண்ணையை சென்று பார்த்தோம். நெல் விதைப்பு மற்றும் நாற்று நடவின் போது என்னென்ன தொழில்நுட்பத்தை கடைபிடிக்கிறார் என்பதை தெரிந்து கொண்டோம், கிச்சிலி சம்பா 52 மூட்டை அறுவடை கிடைத்ததையும் நேரடியாகப் பார்த்தோம், தொடர்ந்து ஆலங்குடி பெருமாள் ஐயா முறையில் கால்கிலோ விதைநெல்லைப் பயன்படுத்தி சாகுபடி செய்யத் துவங்கினோம்.

எனது முதல் சாகுபடியில் மாப்பிள்ளை சம்பா 45 மூட்டையும், பொன்னி 40 மூட்டையும் அறுவடை கிடைத்தது, நெல் நல்ல எடையுடன் இருந்ததால் அரைத்தபின் 75 கிலோ மூட்டைக்கு 50 கிலோ அரிசியும், 3 கிலோ நொய்யும் கிடைத்தது. சாதாரண முறை சாகுபடியில் 42 கிலோ அரிசிதான் கிடைக்கும்.

புதிய இயற்கை விவசாயிகளுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

விதைத்தேர்வில் கவனமாக இருக்கணும், நல்ல மகசூலுக்கு நல்ல விதைகளும், விதைநேர்த்தியும் அவசியம். முட்டைக்கரைசல் பயன்படுத்தி தேர்வு செய்த விதைகளையே பயன்படுத்தணும். புதிய இயற்கை விவசாயிகள் ஜீவாமிர்தத்துடன் மீன் அமிலத்தையும் பயன்படுத்துவது சிறந்தது. வளமில்லாத மண்ணிற்கு மீன் அமிலம் பாய்ச்சுவதன் மூலம் மண் வளமாகிறது, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மீன் அமிலம் அவசியம், அதன்பின் மீன் அமிலம் தேவைப்படாது. ஒரு பயிருக்கும் மற்றொரு பயிருக்கும் இடைவெளி அதிகமாக இருந்தால் அந்தகாலத்தில் பலதானிய விதைப்பு செய்து மண்ணை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனது பண்ணைக்கு அருகில் உள்ள விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 ஆயிரம் வரை செலவு செய்கிறார்கள், எனக்கு ஒரு ஏக்கருக்கு 10 முதல் 12 ஆயிரம் மட்டுமே செலவாகிறது. எனக்கு ஆள்கூலி குறைகிறது, ஸ்பிரேயர் செலவு இல்லை, டிஏபி, யூரியா, பூச்சிக்கொல்லி செலவுகள் இல்லை. இரசாயன விவசாயத்தின் மூலம் அவர்களுக்கு என்னைவிட 5 மூட்டை நெல் கூடுதலாக வந்தாலும் அந்த நெல்லில் தரம் இல்லை, அரிசி எடை கிடைப்பதில்லை. விளையும் நெல்லை குறைவான விலைக்கே அவர்கள் விற்கிறார்கள், எனது பொன்னி நெல் மூட்டை 2400 ரூபாய் விலை போகிறது, அவர்களின் பொன்னி நெல்லை 1200 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரிகள் வாங்குகிறார்கள்.

"அட சாமி... இந்த இளைஞர்களெல்லாங்  டவுன்பக்கம் போயி கம்ப்யூட்டர் வேலை பாத்து, நிறைய சம்பாதிக்கணும் நினைக்கிறாங்கோ. ஆனா அதுல தப்பு இல்லிங்கண்ணா! ஆனாலும் வருங்கால தலைமுறை சிலபேரு விவசாயத்தக் கையில எடுத்தாதானுங்க அடுத்த தலைமுறைக்கும் தரமான உணவு  கிடைக்கும். நம்ம ராதாகிருஷ்ணன் அண்ணாவோட இந்த விவசாய அனுபவம் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்கும்னு நினைக்கிறேங்கோ!"

இயற்கை விவசாயம் செய்வது லாபகரமாக இருக்கிறதா?

ஆமாம் லாபகரமாகவே இருக்கிறது, 10 ஏக்கரில் நெல் சாகுபடி செய்தால் 2 லட்சம் வரை செலவும், 5 லட்சம் வருமானமும் கிடைக்கிறது, செலவு போக நிகர வருமானமாக 3 லட்சம் கிடைக்கிறது. சிறுதானிய சாகுபடியின் மூலம் வரும் வருமானத்தையும் சேர்த்து 4 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. மேலும் குடும்பத் தேவைக்கான காய்கறிகளையும் உற்பத்தி செய்து கொள்கிறேன். உப்பும், துவரம் பரும்பு மட்டுமே கடையில் இருந்து வாங்குகிறேன். இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கியதிலிருந்து எனது வங்கிக் கணக்கில் எனது பணம் பத்திரமாக இருக்கிறது, நான் யாருக்கும் கடனாளியாகவும் இல்லை, இது இயற்கை விவசாயத்தினால் எனக்குக் கிடைத்த வெற்றி!

காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம், அப்படின்னு ஒரு பாட்டு இருக்கில்லீங்கோ?! விவசாயத்தில லாபம் இல்லன்னு பொதுவா சொல்றாங்கோ. ஆனா செய்யுற மாதிரி செஞ்சா கண்டிப்பா லாபம் பாக்கலாமுங்க. நம்ம ராதாகிருஷ்ணன் அண்ணா எப்புடி வெகரமா இயற்கை விவசாயத்துக்கு மாறி லாபம் சம்பதிக்காருனு அல்லாரும் புரிஞ்சுக்கோணுமுங்க. அட அதுமட்டுமில்லாம, தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு தனக்கு தெரிஞ்ச வெகரத்த அல்லாருக்கும் சொல்லிக்கொடுக்குறாருங்கோ நம்ம ராதாகிருஷ்ணன் அண்ணா!"

இயற்கை விவசாயத்தை மற்றவர்களுக்கு கொண்டு செல்ல என்னென்ன செய்து வருகிறீர்கள்?

எனது பண்ணையில் அருகில் உள்ள சில விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள், அவர்களுக்கு முட்டைக்கரைசல் மூலம் விதைத்தேர்வு செய்வதையும், பீஜாமிர்தம் மூலம் விதைநேர்த்தி செய்வதையும் சொல்லிக் கொடுத்தேன், அதன் பயனாக 25 மூட்டை விளைச்சல் எடுத்தவர்கள் தற்போது 35 மூட்டை வரை விளைச்சல் எடுக்கிறார்கள்.

ஈஷா விவசாய இயக்கம் ஒருங்கிணைத்த 'பூச்சிகளை கவனிங்க' பயிற்சியில் 'பூச்சி' செல்வம் அவர்கள் இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார், அவற்றையும் எனது பயிற்சியில் சேர்த்து புதிய விவசாயிகளுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறேன், வாரம் ஒரு முறை ஆரோவில் சென்று இயற்கை விவசாயப் பயிற்சியை அளித்து வருகிறேன்.

பூச்சிக் கொல்லிகளால் நான் அடைந்த பாதிப்பு மற்றவர்களுக்கும் ஏற்படக்கூடாது என்பதே எனது விருப்பம், எனக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதினால் மனதுக்கு ஒரு திருப்தி கிடைக்கிறது, இந்த விஷயத்தில் என் மனைவியும் எனக்கு உறுதுணையாக இருப்பது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

ராதாகிருஷ்ணன் அவர்களின் சிறுதானிய சாகுபடி அனுபவங்களையும் அவற்றை எப்படி சந்தைப்படுத்துகிறார் என்பது குறித்தும் அடுத்த பதிவில் படிக்கத் தவறாதீர்கள்...

தொடர்புக்கு:திரு.ராதாகிருஷ்ணன்: 9840559532

தொகுப்பு:ஈஷா விவசாய இயக்கம்: 8300093777

முகநூல்:ஈஷா விவசாய இயக்கம்