இந்தவார சத்குரு ஸ்பாட்டில், நம் வாழ்க்கையில் நாம் நீண்ட தூரம் செல்வதற்குத் தடையாகவும், சுமையாகவும் இருக்கும் விஷயங்கள் குறித்து சத்குரு விளக்குகிறார். அதோடு, நம் அனைவருக்கும் காலம் கடந்தோடிக் கொண்டே இருக்கையில், நாம் சென்றடைய விரும்பும் இலக்கை சீக்கிரமாக சென்றடைய வேண்டும் என்றும் நினைவுபடுத்துகிறார்.

"ஆன்மீகம்" என்ற சொல்லை உச்சரித்தவுடன், பற்றின்றி இருப்பது பற்றி பேசுவார்கள். ஏதோவொரு உறவு என்று சொன்னவுடன், பற்றுதல் வேண்டும் என்று வலியுறுத்துவர். "உனக்கு என் மேல் அவ்வளவு பற்று இல்லை, அதுதான் பிரச்சனை." பற்றுதல், பற்றின்றி இருத்தல், இதெல்லாம் என்ன? பிறப்பு என்பது பற்றுதலோடே வருகிறது. உங்கள் தாயின் உடலோடு பற்றுதல் இல்லாமல் நீங்கள் பிறந்திருக்க முடியாது. பிறப்பு என்பது பற்றுதலோடு வருகிறது. இறப்பும் பற்றுதல்தான், ஆனால் அனைத்தையும் அரவணைக்கும் ஒரு பற்றுதல் - நீங்கள் பூமியுடன் ஒன்றிவிடுகிறீர்கள். ஆனால், இது பாரபட்சமில்லாத பற்றுதல் என்பதால், எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதில்லை.

உடலும், மனதும் தனித்து இருப்பவை என்ற தவறான புரிதலால்தான் பற்றுதல் பிறக்கிறது. உங்கள் உடலும், மனதும் தனித்து இயங்குபவை என்று நீங்கள் நினைப்பதால், சிக்கியிருப்பது போல உணர்கிறீர்கள். வேறு எவரும் நுழையமுடியாத ஒரு சிறையை உங்களுக்கு நீங்களே உருவாக்கியுள்ளீர்கள் என்பதை நீங்கள் இறக்கும்வரை கூட உணராமல் போகலாம். நீங்கள் சிக்கியிருப்பது போல உணர்வதால், சிறை கம்பிகளுக்கு வெளியே கைநீட்டி, இன்னொருவரின் கையை பிடித்துக்கொள்ள விரும்புகிறீர்கள். ஏதோவொரு தொடர்பு வேண்டுமென்று விரும்புகிறீர்கள்.

உங்களைக் கடந்துசெல்ல நேரிடும் அந்த துரதிருஷ்டவசமான மனிதரை பிடித்துக்கொண்டு, கைவிட மறுக்கிறீர்கள். இதுதான் காதல் என்று கூறப்படுகிறது. பிறகு இந்த ஒரு மனிதர் மீது உங்களுக்கு ஆழமான பற்றுதல் ஏற்படுகிறது. ஏனென்றால், பிரபஞ்சத்திடமிருந்து உங்களை நீங்கள் மறைத்துக் கொள்கிறீர்கள். அந்த மனிதரும் உங்களைப் போன்ற நிலையில்தான் இருக்கிறார், அதனால் அவருக்கும் உங்கள் மீது ஆழமான பற்று ஏற்படுகிறது.

இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லமுடியாத துன்பங்களை உருவாக்கிக் கொள்கிறீர்கள், இருந்தும் விடாமல் பற்றிக்கொள்கிறீர்கள். கைவிட்டால், உங்கள் சுயசிறையில் தனித்திருக்க நேரிடுமே. 730 கோடி மனிதர்கள் இருக்கும் பூமியில், ஒருவர் இல்லாமல் போனால் தாளா தனிமையினால் வாடுவீர்கள். நீங்கள் தனிப்பட்ட ஒரு படைப்பு எனும் தவறான நினைப்பில் இருப்பதால், இன்னொருவரை பற்றிக்கொள்வதற்கான தேவை ஏற்படுகிறது. நீங்கள் தனிப்பட்ட நிகழ்வல்ல என்பதற்கு உங்கள் சுவாசமே அத்தாட்சி. பிரபஞ்சம் முழுவதுடனும் நீங்கள் இடைவிடாது தொடர்பில் இருக்கிறீர்கள்.

பற்றுதல், இன்னொருவர் மீது இருக்கவேண்டிய அவசியமில்லை. உங்கள் உடலுடன்தான் அதிகமாக சிக்கியிருக்கிறீர்கள். அதையும்விட அதிகமாய், உங்கள் எண்ணத்துடனும் உணர்வுகளுடனும் சிக்கியிருக்கிறீர்கள். உங்கள் எண்ணம் உங்களுக்கு தலையாயதாய் இருக்கிறது. நீங்கள் சிந்திக்கும் விதத்தில்தான் இந்தப் பிரபஞ்சம் இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள். இந்தப் பிரபஞ்சம் உங்கள் சிந்தனைப்படி நடக்காவிட்டால், உங்கள் சிந்தனையில் தவறு இருக்கக்கூடும் என்று உங்களுக்குத் தோன்றுவதில்லை. பிரபஞ்சத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்.

இப்படி பற்றுதல் ஏற்படுவதற்கு ஒரு காரணம், உங்களை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்கிறீர்கள். உங்கள் பற்றுதலை துளித்துளியாக உடைக்க முயன்றால், வாழ்நாள் முழுக்க ஆன்மீக சர்க்கஸ் நடந்துகொண்டே இருக்கும். பற்றுதலை விடும் உங்கள் முயற்சியில், யாரையும் பார்த்து நீங்கள் சிரிக்காமல் இருக்க முயற்சிக்கலாம். பற்றுதல் என்பது மனதில் நீங்கள் உருவாக்கியது. உருவாக்குவதை நிறுத்திவிட்டால், அது இருக்காது. சுய-முக்கியத்துவத்தின் பக்கவிளைவாக பற்றுதல் இருக்கிறது. இந்த பக்கவிளைவு உங்களுக்கு வேண்டாவிட்டால், மாத்திரையை விழுங்காதீர்கள். சுய-முக்கியத்துவம் என்பதை நீங்கள் அப்புறப்படுத்தாமல், ஆன்மீக செயல்முறை உங்களை எங்கும் கொண்டு சேர்க்காது.

பெரும்பாலான மனிதர்களுக்கு, வாழ்க்கை அவர்களை அடித்து துவைத்த பிறகுதான் புத்தி வேலைசெய்ய ஆரம்பிக்கிறது. என்ன பரிதாபம்! எது உங்களுக்கு சிறந்ததோ, எது உங்களுக்கு மிக உயர்ந்ததோ, அதுதானே இயற்கையாகவே அனைத்திலும் முக்கியமானதாக இருக்கவேண்டும்? பேரிழப்பும் நோயும் வாழ்க்கையில் வந்தபிறகு மாறுவதல்ல. எல்லாம் நலமாக இருக்கும் சமயம்தான், உங்களுக்கான உச்சபட்ச சாத்தியம் என்னவென்று பார்ப்பதற்கான நேரம். வாழ்க்கை உங்களை அடித்துத் துவைத்து, அதிலிருந்து மீளமுடியாத நிலைக்கு கொண்டுவரும் வரை காத்திருக்காதீர்கள்.

பிரபஞ்சத்தில் உங்களுடைய உண்மையான இடத்திற்கு மேல் உங்கள் மனதில் உங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டால், நீங்கள் ஒருதலைபட்சமாக மாறிவிடுகிறீர்கள். அதிலிருந்து, விருப்பு வெறுப்புகள் தோன்றுகின்றன. இவை அனைத்தும் சுய-முக்கியத்துவம் என்ற அடிப்படையான நோயின் அறிகுறிகள். நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அதை மிகைப்படுத்துவது, வாழ்க்கை முழுவதும் உங்களை பலவிதங்களில் வேதனைப்பட வைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, உயிர்விடும் தருணம் வரும்போது, அது வலிமிகுந்ததாக இருக்கும்.
பரந்துவிரிந்த பிரபஞ்சத்தில் நீங்கள் இன்னுமொரு உயிரினம் மட்டுமே. இதை நீங்கள் புரிந்துகொள்ளவிட்டால், ஒரு மலைமீது ஏறி நின்றபடியோ ஒரு விமானத்தில் பறந்தபடியோ கீழே தெரியும் மனிதர்களைப் பாருங்கள். இவ்வளவு சின்னச்சின்ன உயிர்கள், தங்களைப் பற்றிய மிக தவறான புரிதலோடு வலம் வருகிறார்கள். நீங்கள் இன்னுமொரு சிறிய உயிரினம் மட்டுமே, ஆனால் எவ்வளவு ஆசீர்வாதங்களுடன் இங்கு வந்துள்ளீர்கள், எவ்வளவு ஆற்றல்கள், எவ்வளவு திறமைகள். இந்த நிதர்சனத்தைப் பற்றிய விழிப்புணர்வுடன் நீங்கள் இருந்தால், இயல்பாகவே உச்சபட்ச சாத்தியம் நோக்கிச் செல்வீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்களுக்கு நீங்களே பகட்டான முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டால், ஒரு அடிதான் கொடுக்கவேண்டும். "இல்லை சத்குரு, நான் நல்ல மனிதர்," என்று நீங்கள் சொல்லலாம். உங்களில் நிறையபேர் நல்லவர்கள்தான் என்று எனக்குத் தெரியும், ஆனால், இதுவும் மோசமான ஒரு பிரச்சனைதான்.

இதுபோல் ஒருமுறை நடந்தது... பெண் ஒருவர் நியூயார்க் நகரின் ஒரு வீதி வழியாக நடந்து சென்றுகொண்டு இருந்தார். எதிரே வந்த ஒரு இளைஞன் அவருடைய பர்ஸை அபகரித்துவிட்டு ஓடினார். உடனே இன்னொரு இளைஞன் அவனை துரத்திச் சென்று, சில நிமிடங்களில் பர்ஸுடன் திரும்பி வந்து அதை திருப்பிக் கொடுத்தார். நன்றியுணர்வு பொங்க அந்த பெண்மணி பர்ஸை திறந்து பார்த்தார். அதில் ஒரு 50 டாலர் நோட்டும், இரண்டு 20 டாலர் நோட்டும், ஒரு 10 டாலர் நோட்டும் இருந்தன.

அவருக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துவிட்டு, "என் பர்ஸில் ஒரே ஒரு 100 டாலர் நோட்டுதான் இருந்தது. ஆனால், இப்போது சில்லறையாக இருக்கிறதே, இது எப்படி நடந்தது?" என்றாள். அதற்கு அந்த இளைஞன், "கடைசியாக ஒரு பெண்ணிடம் பர்ஸை திருப்பிக் கொடுத்தபோது, எனக்கு சன்மானம் கொடுக்க அவரிடம் சில்லறை இல்லாமல் போய்விட்டது," என்று சொன்னான்.

உங்களை எப்படி கையும் களவுமாகப் பிடிப்பது என்று நமக்குத் தெரியும். இது உங்கள் நற்குணம் பற்றியதல்ல. நீங்கள் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி, ஒரு உயிராக இருப்பதைப் பற்றியது. இவ்வளவு இயல்பான ஒன்று ஏன் இவ்வளவு கடினமாக மாறிவிட்டது? பெரும்பாலான மனிதர்களை சமுதாயம் உருவாக்குகிறது. நாம் குடும்பம், சமுதாயம், தேசம், என்று எல்லாவற்றையும் நம் வசதிக்காகவே உருவாக்கினோம், நம் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், சில விஷயங்களை கிடைக்கும் விதமாக வைத்துக்கொள்ளவும் இப்படி செய்துள்ளோம். ஆனால் படைப்பின் மூலம் உங்களை உருவாக்குவதற்கு பதிலாக, சமுதாயம் உங்களை உருவாக்குகிறது. சமுதாயம் எல்லாவிதமான மனிதர்களாலும் உருவானது. அதில் பெரும்பாலானவர்களுக்கு, அவர்கள் வாழ்க்கையை வைத்து என்ன செய்துகொள்கிறார்கள் என்பதே புரிவதில்லை.

உச்சபட்ச இயல்பை நோக்கிச் செலுத்தும் உள்ளார்ந்த ஒரு புத்திசாலித்தனம் மனிதர்களுக்கு உண்டு. ஆன்மீகமாக இருப்பவர்கள் சிலரும், இல்லாதவர்கள் பிறரும் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொள்கிறீர்கள். ஆன்மீகமாக இருப்பதென்றால், விழிப்புணர்வாக உங்களை நீங்களே நிறைவாக்குவதை நோக்கிச் செல்வது. ஆன்மீகத்தில் அல்லாது "பிறர்" என்று நாம் சொல்பவர்களைப் பற்றி பார்ப்போம்.

யாரோ ஒருவர் பணம், சொத்து, இன்பம், அன்பு, அறிவு, மது, போதை, என்று எதை விரும்பினாலும், அவர்களும் சுய-நிறைவு நோக்கியே செல்கின்றனர். இவை அவர்களை நிறைவாக்குகின்றன என்று நினைக்கிறார்கள். இது தடம் மாறிவிட்ட ஆன்மீகம். தடம் புறண்டுவிட்டால், இலக்கைச் சென்றடைவதற்கான வாய்ப்பு குறைகிறது. நீங்கள் வெற்றிபெற விரும்பினால், விழிப்புணர்வாக சரியான திசையில் செல்லவேண்டும்.

இது சரி தவறு பற்றிய கேள்வியல்ல. எது அர்த்தமுள்ளது என்பதைப் பற்றியது. உங்கள் புத்திசாலித்தனத்தை நீங்கள் பயன்படுத்தாவிட்டால், உயிரின் இயல்புக்கு எதிர்மறையாக இருப்பீர்கள். அடிப்படையில் உங்கள் வாழ்க்கை, நீங்கள் நிறைவு காண்பதைப் பற்றியது.

வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்தாலும் சரி, திருமணம் செய்துகொண்டாலும், பிரம்மச்சரியம் எடுத்தாலும், வேறென்ன செய்தாலும், நீங்கள் நிறைவுகாணும் வழி என்று நீங்கள் நினைப்பதால் செய்கிறீர்கள். ஆனால், அதை இப்படி சுற்றிவளைத்து செய்தால், வழியை கண்டுபிடிக்கும் முன், உங்களுக்கான நேரம் முடிந்துவிடலாம்.

இந்தியாவில் காலத்தை உக்கிரமாகவும் கொடூர வடிவங்களாகவும், காளியாக அல்லது காலனாகவும் சித்தரிக்கிறோம். நம் அனைவருக்குமே நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது என்பது கசப்பான ஒரு உண்மை. நேரம் விரயமாகிக் கொண்டு இருக்கும்போது, நாம் செல்ல விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்லவேண்டும். கவனம் சிதறல்கள் மனதினால் உருவாக்கப்படுகிறது. உயிர் உங்களை உயிரிலிருந்து விலக்குவதில்லை.

பெரும்பாலான மனிதர்கள், தங்கள் மனதில் நிகழ்வது உண்மையல்ல என்பதை இன்னும் உணரவில்லை. அவர்கள் மனதில் நிகழ்பவற்றுடன், செல்போனில் நிகழ்வதும் உச்சபட்ச உண்மையாக இருக்கிறது. உங்கள் எண்ணங்கள் உங்களைவிடப் பெரிதாகி எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதுதான் பிரச்சனை.

உங்களுக்கென்று ஒரு பொய்யான நிதர்சனத்தை உருவாக்கிவிட்டால், அதனை உங்களோடு சுமந்துசெல்ல வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் தேன் உற்பத்தி திடீரென பெரிய அளவில் சரிந்தது. அதற்கு முக்கிய காரணம், தேனீக்களின் முதுகில் இருந்த ஒட்டுண்ணிகள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டுண்ணிகளின் கூடுதல் எடை, தேனீக்களை அதிக தூரம் சென்று போதுமான தேன் சேகரிக்க அனுமதிக்கவில்லை. அதனால் தேனீ கூட்டங்கள் அழிந்தன, தேன் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது.

இது மனிதர்களுக்கும் பொருந்தும். நீங்கள் சுமக்கும் இந்த கூடுதல் எடை, முழுவீச்சில் உங்களைப் பறக்க அனுமதிப்பதில்லை. உங்கள் முதுகில் இருக்கும் கூடுதல் எடை, உங்கள் கர்வம், அகங்காரம், சுய-முக்கியத்துவம் ஆகியவைதான். இம்மூன்றும் நீண்ட தூரம் பறக்க அனுமதிக்காமல் உங்கள் முதுகில் அமர்ந்திருக்கும் மிகப்பெரிய சுமைகள்.

முழுதும் பறந்து கடக்க விரும்பினால், முதலில் அதற்குத் தேவையான சக்தி உங்களுக்கு வேண்டும். தேவையான சக்தி இல்லாவிட்டால், அதனுடன் இந்த கூடுதல் சுமையும் இருந்தால், நீங்கள் அதிக தூரம் செல்ல மாட்டீர்கள்.

உதாரணமாக, தென்னிந்தியாவில் பச்சையும் பழுப்பும் கலந்த தட்டாம்பூச்சிகளை பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு வருடமும் இந்த சிறிய பூச்சிகள், ஆப்பிரிக்கா வரை பயணிக்கின்றன. அங்கு இனப்பெருக்கம் செய்து, அடுத்த தலைமுறை பூச்சிகள், பருவக்காற்றுடன் பயணித்து இந்தியாவிற்குத் திரும்புகின்றன. அவை இந்திய பெருங்கடலை தங்கள் இறக்கையின் பலத்தால் கடப்பதில்லை, காற்றுடன் பறந்து கடக்கின்றன. காற்றின் அருளால் பயணிக்கின்றன.

வாழ்க்கையை நீங்கள் முழுவதுமாக கடக்க விரும்பினால், அருள் வேண்டும். அருள் எப்போதும் இருக்கிறது. அதை பெற்றுக்கொள்ளும் விதமாக நீங்கள் எப்படி திறந்திருப்பது? ஆன்மீக செயல்முறை நிகழ, உங்கள் முதுகில் இருக்கும் இந்த ஒட்டுண்ணிகளை அப்புறப்படுத்த வேண்டும்.

உங்கள் கர்வத்தையும் அகங்காரத்தையும் சுய-முக்கியத்துவத்தையும் கீழே வைத்தால், அருளுக்கு நீங்கள் பாத்திரமாவீர்கள். என்னைப் போன்ற ஒரு குருவுடன் அமரும்போது, என்னிடம் என்ன கேட்கிறீர்கள் என்று நீங்கள் முதலில் தெரிந்திருக்க வேண்டும்.

ஒருமுறை இப்படி நடந்தது, ஒரு குற்றவியல் நீதிமன்றத்தில், தீர்ப்பு வழங்கும் தருணத்தில், "நீதிபதி அவர்களே, எனக்கு கொஞ்சம் காலஅவகாசம் கொடுங்கள், நான் நிரபராதி என்று என்னால் நிரூபிக்கமுடியும்," என்று குற்றவாளி கெஞ்சினார். நீதிபதி அவரைப் பார்த்து, "சரி, பத்து வருடங்கள். அடுத்து," என்றார். கேட்டதைவிட அதிகமாகவே அவருக்கு கிடைத்தது.

ஆறுதல் தேடுபவராய் இருந்தால், நீங்கள் நம்பிக்கை வைத்திருப்பதை வழிபடுவது உதவியாக இருக்கும். தீர்வினைத் தேடினால், கரைந்துபோவதுதான் ஒரே தீர்வு. இது பருவமழைக் காலம். காற்றடிக்கும் பக்கமெல்லாம் மழைமேகம் பயணம் செய்யும். அவை தம்மை உதிர்க்கும் இடங்களில் மழை பொழியும். மயில்கள் நடனமாடும், மலர்கள் மலரும், பயிர்கள் விளையும், மக்கள் உண்பார்கள். மேகங்கள் தம்மை உதிர்ப்பதால் வாழ்க்கை அழகாக நடக்கிறது. பருவமழைக் காலத்தில், உங்களை நீங்களே உதிர்க்க கற்றுக்கொள்ள வேண்டும். அதே தென்றல்தான் அனைவருக்கும் வீசுகிறது. அதே அருள்தான் அனைவருக்கும். அதை எந்த அளவு உள்வாங்கிக் கொள்கிறீர்கள் என்பது உங்கள் கைகளில்.

Love & Grace