சத்குரு: இந்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி, பத்தாண்டுகளுக்குப் பின் நான் மீண்டும் டாவோஸ் நகரத்தில், 2020 உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டேன். பாதிநாள் தியான நிகழ்ச்சி ஒன்றை நடத்தவும், "1 ட்ரில்லியன் மரங்கள்" நடும் இயக்கத்தின் துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் அங்கு சென்றிருந்தேன்.

பத்தாண்டுகளுக்கு முன்பு, நான் முதல்முறையாக டாவோஸ் சென்றிருந்தபோது, சிலர் வருத்தம் தெரிவித்தனர். அதில் ஒருவர், பெரிய கணினி தயாரிக்கும் நிறுவனமொன்றின் தலைவர். அவர் என்னிடம், "தொழில் மாநாட்டில் ஒரு ஞானிக்கு என்ன வேலை?" என்று கேட்டார். அதற்கு நான், "நீங்கள் கணினி தயாரித்தாலும், விண்களம் தயாரித்தாலும், குண்டூசி தயாரித்தாலும், என்ன செய்தாலும், அடிப்படையில் தொழில் என்பது மனித நல்வாழ்வுக்குத்தான். அதுதான் என் தொழிலும்!" என்றேன். ஒவ்வொருவரின் தொழிலும் மனித நல்வாழ்வுக்குத்தான். அது பல்வேறு நிலைகளில் கையாளப்படுகிறது.

இன்று தேசத்தலைவர்கள் யோகா பற்றியும் மனிதர்களின் உள்நலன் பற்றியும் பேசுவதைக் காண்பது வியப்பூட்டுகிறது. இதற்கு அர்த்தம் என்னவென்றால், மனிதகுலம் நல்வாழ்வை, ஒரு நம்பிக்கையாகவோ, எதேச்சையாக நடக்கும் ஒன்றாகவோ இல்லாமல், ஒரு அறிவியலாக பார்க்கத் துவங்கியிருக்கிறது. நல்வாழ்வை விழிப்புணர்வாக உருவாக்கும் அறிவியல்பூர்வமான ஒரு செயல்முறையை நாம் விரும்புகிறோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உலகப் பொருளாதார மாநாட்டில், தொழிலுக்கான ஒரு தளத்தில், பாதி நாள் தியான நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. தரமான மனிதர்களை உருவாக்காமல் தரமான உலகம் இருக்காது என்பதை அவர்கள் புரிந்துள்ளதால் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது அனைவருக்கும் அதிமுக்கியமானது, குறிப்பாக, லட்சக்கணக்கான மக்கள் வாழ்வை பாதிக்கக்கூடிய தலைவர்களுக்கு இது மிகவும் முக்கியம். தலைவர்கள் விழிப்புணர்வான, அரவணைப்பான தலைமைப்பண்பைத் தழுவுவது முக்கியம். மனித விழிப்புணர்வை உயர்த்துவதன் மூலமாக மட்டுமே விழிப்புணர்வான உலகத்தை உருவாக்கமுடியும்.

நாம் பூமியின் சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையில் இருக்கிறோம், இதுதான் விழிப்புணர்வான, அரவணைப்பான பொருளாதாரம், மற்றும் சூழலியல் இலக்குகளை நிர்ணயிப்பதற்கான நேரம். டாவோஸில் துவங்கப்பட்ட 1 ட்ரில்லியன் மரங்கள் நடுவதற்கான இயக்கம், இந்த நோக்கத்தில் ஒரு மிக முக்கிய படி.

சூழலியலின் சமநிலையை மீட்டெடுப்பதில், மரங்களை முக்கிய அங்கமாக உலகம் பார்க்கத்துவங்கியிருப்பது உற்சாகமளிக்கிறது. இவ்வியக்கம், பூமியுடைய சூழலியலின் கதியை மாற்றி, பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும். 1 ட்ரில்லியன் மரங்களை நடும் இலக்கினை அடையவிரும்பும் இத்திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம், மரங்கள் நடுவதை மக்களுக்கு பொருளாதார நன்மைதரும் செயல்முறையாக மாற்றுவதாகும். சூழலியலும் பொருளாதாரமும் கைகோர்க்காவிட்டால், சந்தேகத்திற்கிடமின்றி பொருளாதாரம் தான் வெற்றிபெறும், சூழலியல் பாதிப்புக்குள்ளாகும். சூழலியல் வெற்றிபெறவேண்டும் என்றால், சூழலியலுக்கும் பொருளாதாரத்திற்கும் நாம் திருமணம் செய்துவைக்க வேண்டும்.

இதைத்தான் நாங்கள் தென்னிந்தியாவில் காவேரி கூக்குரல் இயக்கத்தின்மூலம் செய்கிறோம். இத்திட்டம், காவேரி வடிநிலத்தின் 50 லட்சம் விவசாயிகளை ஈடுபடுத்தி, வேளாண் காடுவளர்ப்பு மூலம் 242 கோடி மரங்களை அவர்களது நிலங்களில் வளர்க்கச்செய்ய விழைகிறது. வேளாண் காடுவளர்ப்பு என்பது மரங்களை ஊடுபயிர்களுடன் சேர்த்து வளர்ப்பதாகும். நிலத்தில் மரங்கள் இருந்தால், பயிர்களின் ஊட்டச்சத்தும் விளைச்சலும் மேம்படும், மண்வளம் பெருகும், நிலத்தடி நீர்மட்டம் உயரும், எல்லாவற்றும் மேலாக வெட்டுமரங்கள் நல்ல விலைக்குப் போகும். வேளாண் காடுவளர்ப்புக்கு மாறுவதன் மூலம், ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் விவசாயி வருமானம் 300% முதல் 800% அதிகரிக்கமுடியும்.

தற்போது, துரதிர்ஷ்டவசமாக, உலகின் பெரும்பாலான வெட்டுமர வியாபாரம் சட்டத்திற்குப் புறம்பானதாக இருக்கிறது. மக்களுக்கு வெட்டுமரங்கள் தேவைப்படுகிறது. ஆனால் பூமியிலுள்ள காடுகளை இதற்குமேல் நாம் சுரண்டமுடியாது. அப்படியானால் இனி வெட்டுமரங்களை நாம் காடுகளிலிருந்து வரும் விளைபொருளாகப் பார்க்கமுடியாது. வெட்டுமரங்கள் வேளாண் விளைபொருளாக மாறவேண்டும்.

வெட்டுமரங்களை வேளாண் விளைபொருளாக மாற்றாவிட்டால், அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் நாம் இந்த தேசத்தில் உணவு விளைவிக்கும் ஆற்றலை இழந்துவிடுவோம். கடந்த 20 ஆண்டுகளில், குன்றும் மண்வளத்தாலும் குறையும் நீர்வளத்தாலும், 3 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தேசத்தில் தற்கொலை செய்துள்ளார்கள். நாங்கள் மேற்கொண்ட சில ஆய்வுகளில், தமிழக விவசாயிகளில் ஐந்து சதத்திற்கும் குறைவானவர்கள்தான் தங்கள் குழந்தைகள் விவசாயம் செய்யவேண்டும் என்று விரும்புகிறார்கள். அடுத்த தலைமுறை விவசாயிகளை நாம் இழந்துகொண்டு இருக்கிறோம். இந்திய ஜனத்தொகை 2050ற்குள் 150 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது, எனவே நாம் நிச்சயம் மிக மோசமான உணவு பற்றாக்குறை நோக்கிச் செல்கிறோம். இதை நாம் தடுக்கவேண்டும் என்றால், வெட்டுமரங்கள் வேளாண் விளைபொருளாக மாறவேண்டும், அவற்றை விவசாயிகள் வளர்த்து, வெட்டி, விரும்பும் இடத்திற்கு கொண்டுசென்று விற்கமுடிவது அதிமுக்கியமாகிறது.

1 ட்ரில்லியன் மரங்கள் நடும் இயக்கத்துடன் கைகோர்த்து, நாம் சுலபமாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் 242 கோடி மரங்கள் வளர்க்கும் இலக்கை, இந்திய நதிகளின் வடிநிலப்பகுதி நெடுகிலுமுள்ள தனியார் நிலங்களில் மட்டுமே, 5000 கோடி மரங்களாக அதிகரிக்க முடியும். இது விவசாயியின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, மரக்கன்றுகள் உயிர்பிழைக்கும் வாய்ப்பை குறைந்தபட்சம் 90 சதமாக்கும். விவசாயியின் தொழிலே இதுதான் என்பதால் அவர் இயற்கையாகவே மரக்கன்றுகளை நன்கு கவனித்துக்கொள்வார். இதுதான் சூழலியலுக்கும் பொருளாதாரத்திற்கும் திருமணம் செய்துவைக்க சிறந்த வழி.

சரித்திர நிகழ்வான இந்த 50வது உலகப் பொருளாதார மாநாட்டில், பொருளாதாரத்திற்கும் சூழலியலுக்கும் சரிசமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, பூமியின் வருங்காலத்தை விழிப்புணர்வாக வடிவமைப்போம்.