சத்குரு:

உங்களுக்கு ஆசை இல்லை என்றால், இந்தக் கட்டுரையின் அடுத்த வரிக்குப் பார்வையை எடுத்துப் போக முடியாது. அவ்வளவு ஏன்... நிற்க முடியாது, நடக்க முடியாது, சாப்பிட முடியாது.

'ஆசையினால் சாப்பிடுகிறேன் என்று யார் சொன்னது? பசிக்காகத்தான் சாப்பிடுகிறேன்' என்று நீங்கள் விதண்டாவாதம் செய்யலாம்.

நல்ல பசியான நேரத்தில் உறவினர் வீட்டுக்குப் போயிருக்கிறீர்கள். இலை போட்டு ருசி மிக்க சாப்பாட்டைப் பரிமாறுகிறார்கள். நீங்கள் முதல் கவளத்தை வாயருகில் கொண்டு போகும்போது, உங்களை அசிங்கமாக என்னென்னவோ ஏசுகிறார்கள். அடுத்த கவளம் உள்ளே இறங்குமா?

பசி தீரவில்லை. ஆனால், சாப்பிடவும் முடியவில்லை. ஏன்?

ஆசையினால் செய்யாமல் அவசியத்துக்காக எதைச் செய்தாலும், அது முழுமையான சந்தோஷத்தைக் கொண்டுவராது.

உங்கள் அடிப்படை இயல்பே மகிழ்ச்சியாக இருப்பதுதான். நீங்களாக வரவழைத்துக் கொண்ட துன்பங்களால்தான், அது காணாமல் போகிறது.

சந்தோஷமாக இருக்க வேண்டுமானால், முதலில் நீங்கள் சுயநலத்தோடு இருக்க வேண்டும். சுயநலத்தில் கூடக் கஞ்சத்தனம் வேண்டாம். முழு சுயநலவாதியாக இருங்கள்.

ஒருமுறை சங்கரன் பிள்ளையின் மகனுக்குக் கடுமையான காய்ச்சல். டாக்டர் வந்தார். 'இது தொற்று நோய்க்கிருமியால் வந்திருக்கும் காய்ச்சல். ஏற்கெனவே, இதை எவ்வளவு பேருக்கு உங்கள் மகன் பரப்பிவிட்டானோ? இனி, உடம்பு சரியாகும்வரை பள்ளிக்குப் போக வேண்டாம்' என்று எச்சரித்தார். சிகிச்சை சில நாட்களுக்குத் தொடர்ந்தது.

மகனுக்கு ஒரு வழியாகக் காய்ச்சல் குறைந்து குணமாகிவிட்டான்.

டாக்டர் பில்லை நீட்டினார்.

தொகையை பார்த்து சங்கரன் பிள்ளை சண்டைக்குப் போய்விட்டார்.

டாக்டர் விளக்கம் கொடுத்தார். "ஒன்பது முறை, உங்கள் வீட்டுக்கே வந்து ஊசி போட்டிருக்கிறேன். அதுவும் விலை உயர்ந்த மருந்து!"

சங்கரன் பிள்ளை கொதித்தார்.shankaranpillai-caratoon-pic

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"விளையாடுகிறீர்களா? என் மகன் ஊரெல்லாம் காய்ச்சலைப் பரப்பியதால்தானே உங்கள் பிஸினஸ் படு ஜோராகப் போய்க் கொண்டு இருக்கிறது. என்னிடம் எப்படிப் பணம் கேட்பீர்கள்? நியாயமாக நீங்கள் அல்லவா எனக்குப் பணம் தர வேண்டும்?"

இப்படித்தான் எது கிடைத்தாலும், அதனால் ஆதாயம் உண்டா, அதை வைத்துக் கொண்டு எப்படியாவது உலகத்துப் பணத்தையெல்லாம் சுருட்டித் தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்ள முடியுமா என்று பேராசை கொண்டு பலர் அலைகிறார்கள்.

அப்பேர்ப்பட்ட சுயநலத்தை நான் சொல்லவில்லை. நான் சொல்லும் சுயநலம் இன்னும் பெரிது.

இந்தச் சட்டை என்னுடையது. இந்த வீடு என்னுடையது என்ற குறுகிய சுயநலத்தை விடுங்கள். இந்த ஊர் என்னுடையது, இந்த நாடு என்னுடையது, இந்த உலகமே என்னுடையது என்று எல்லாவற்றையும் உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் டெய்லராக இருங்கள். ஆட்டோ ஓட்டுபவராக இருங்கள். ஆபரேஷன் பண்ணும் டாக்டராக இருங்கள். காய்கறி விற்பவராக இருங்கள். கம்ப்யூட்டர் தயாரிப்பவராக இருங்கள்.

இந்த உலகமே உங்களுடையதென்று மனதார ஏற்றுக்கொண்டுவிட்டால், அதில் உள்ளவர்கள் உங்களைச் சேர்ந்தவர்களாகிவிடுவார்கள். அதன்பின், அவர்களுக்காக நீங்கள் எதைச் செய்தாலும் எப்படிச் செய்வீர்கள்? உங்களுக்கே செய்து கொள்வதாக நினைத்து, மிகுந்த ஈடுபாட்டுடன், முழு அர்ப்பணிப்புடன் செய்வீர்கள் அல்லவா? அப்படி அன்போடு, ஆசையோடு செய்யும்போது அதன் தரம் எப்படி இருக்கும்? உச்சத்தில் இருக்கும். அப்புறம் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பலனை நீங்களே வேண்டாம் என்று மறுத்தாலும் அது தானாக வந்து உங்கள் காலடியில் கொட்டும், உண்டா? இல்லையா?

எப்போதுமே நூறு சதவிகித ஈடுபாட்டுடன், சந்தோஷத்துடன் செயலாற்றுங்கள். பலன்தான் சந்தோஷம் என்று நினைக்காமல், செய்வதையே பிரியத்துடன் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். முதல் முறை வெற்றி கிடைக்கவில்லையானால், உங்களுக்குப் பிரியமானதைச் செய்ய இன்னொரு வாய்ப்பு கிடைத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்.

மறுபடியும் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுங்கள். ஒவ்வொரு முறையும் சந்தோஷம்தான் கிடைக்கும். வலி தெரியாது, வேதனை இருக்காது.

யோசியுங்கள்... உங்கள் திறமை முழுவீச்சல் எப்போது வெளிப்படுகிறது? நீங்கள் சந்தோஷமாக இருக்கும்போதா? படபடப்பிலும், துக்கத்திலும் இருக்கும்போதா? ஆசையோடு, சந்தோஷமாக ஒரு வேலையைச் செய்யும்போது, வெற்றி கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பே இல்லை.

 

நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது. நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களால் மற்றவர்களுக்கும் சந்தோஷம் இருக்க வேண்டும். சுற்றி இருப்பவர்கள் உங்களைச் சந்தோஷத்தோடு ஏற்கவேண்டும்.

lionandelephant-sgstory-cartoon-picகாட்டில் ஒரு சிங்கம் கால்களை வீசி கர்வத்தோடு நடந்தது. அந்தப் பக்கம் போய்க் கொண்டிருந்த முயல் குட்டியை சட்டென்று பிடித்தது.

lionandelephant-sadhgurustory-cartoonpic"ஏய், இந்தக் காட்டில் யார் ராஜா?" என்று கேட்டது. முயல் குட்டி பற்களெல்லாம் கிடுகிடுக்க, "சந்தேகமென்ன? நீங்கள்தான்" என்றது.

சிங்கம் முயலை விட்டுவிட்டு, அடுத்ததாக ஒரு நரியைத் தாவி பிடித்தது. அதே கேள்வியைக் கேட்டது.

lionandelephant-sadhgurustory-cartoonpicநரி நடுக்கத்துடன், "தலைவா... உனக்கேன் இந்த சந்தேகம்? உன்னைத் தவிர, வேறு யார் இங்கே ராஜாவாக இருக்க முடியும்?"

அப்புறம் வழியில் எதிர்ப்பட்ட மிருகங்கள் எல்லாம் பணிவாக மண்டியிட்டு சிங்கத்திடம், "நீங்கள்தான் ராஜா" என்று அச்சத்தில் அலறின.

சிங்கத்துக்குப் பெருமை பிடிபடவில்லை. இன்னும் கொஞ்சம் தூரம் போனது.

lionandelephant-sadhgurustory-cartoonpicஅங்கே ஒரு யானை, சிங்கத்தைப் பொருட்படுத்தாமல் அதுபாட்டுக்கு மரத்தில் இருந்து இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தது.

சிங்கம் அதன் எதிரில் போய் நின்று, "ஏய் முட்டாளே, யார் இந்த காட்டுக்கு ராஜா?" என்று கர்ஜித்தது.

யானை திரும்பியது. தும்பிக்கையால் சிங்கத்தைச் சுருட்டித் தூக்கியது. ஓங்கித் தரையில் அடித்தது.

lionandelephant-sadhgurustory-cartoonpicசிங்கத்தின் முதுகெலும்பே முறிந்து போயிற்று. "ஏம்ப்பா, இப்ப நான் என்னப்பா கேட்டுப்புட்டேன்? வாய் வார்த்தையாகச் சொல்லப்படாதா?" என்று வலியில் முனகியபடி கேட்டது சிங்கம்.

"இனிமேல் இந்த விஷயத்தில் உனக்குக் குழப்பமே வரக்கூடாது பார்!" என்றது, யானை.

சுற்றியிருப்பவர்கள் உங்களை மகிழ்ச்சியுடன் ஏற்காவிட்டால், சிங்கத்திற்குக் கிடைத்த அனுபவம்தான் உங்களுக்கும் கிடைக்கும்.

இப்படி வேறு யாராவது உங்களுக்குக் கற்பிப்பதற்கு முன் உங்கள் வாழ்க்கையை நீங்களே இனிதாக அமைத்துக்கொள்ளக் கற்றுக்கொள்ளுங்கள்.

எதைச் செய்தாலும் முழு ஆசையோடு செய்யுங்கள்!

ஆசிரியர் குறிப்பு: நமது வாழ்வில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுக வழிசெய்யும், வாழ்வின் மறைஞான விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் சத்குருவின் கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.

sg-tam-app