சத்குரு:

சிவனைப் பற்றி அவர்களால் ஜீரணித்துக்கொள்ள இயலாத கதைகளை நீக்கிவிட்டிருக்கிறார்கள். ஆனால், அதில்தான் சிவனின் சாராம்சம் அடங்கி இருக்கிறது.

உலகின் பெரும்பாலான பகுதிகளில், தெய்வீகம் என மக்கள் அழைப்பது நல்லதாய் தோன்றும் ஒன்றைத்தான். சிவபுராணத்தைப் படித்தால் எந்த இடத்திலுமே சிவனை நல்ல மனிதனாகவோ அல்லது கெட்ட மனிதனாகவோ அடையாளப்படுத்த முடியாது. சிவன் எல்லாமாயும் இருக்கிறான். அவன் அகோரமானவன், அவனே சுந்தரன். அவன் சிறந்தவன், அவனே கீழ்தரமானவன். அவன் ஒழுக்கசீலன், அவனே குடிகாரன். கடவுளர்கள், பேய்கள் என எல்லாவித உயிர்களும் அவனை வழிபடுகின்றனர். நாகரிகமற்றவை என "நினைத்து" குறிப்பிட்ட சில மரபைச் சார்ந்தவர்கள், சிவனைப் பற்றி அவர்களால் ஜீரணித்துக்கொள்ள இயலாத கதைகளை நீக்கிவிட்டிருக்கிறார்கள். ஆனால், அதில்தான் சிவனின் சாராம்சம் அடங்கி இருக்கிறது.

முற்றிலும் மாறுபட்ட இருவேறு பரிமாணங்கள் சிவனின் பிம்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. அவன், பிரபஞ்சத்திலுள்ள அனைத்து குணங்களின் சிக்கலான கலவையாய் தென்படுகிறான். அதனால், அவனை ஒரு தனிப்பட்ட மனிதன் என்று ஏற்க மனம் மறுக்கிறது. இந்தவொரு மனிதனை நீங்கள் மனமார ஏற்றுக்கொண்டால், உங்களால் வாழ்க்கையையே கடந்து சென்றுவிட முடியும். எது சரி, எது சரியில்லை என்பதிலேயே வாழ்க்கை முழுக்க கடந்தோடி விடுகிறது. இந்தவொரு மனிதனை மட்டும் ஏற்றுக்கொண்டால், வாழ்வில் எதை வேண்டுமானாலும் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சிவபுராணத்தில் எழுதப்பட்டுள்ள கதைகளை கவனமாய் வாசித்தால், அங்கு சார்பியல் தத்துவமும், குவான்டம் மெக்கானிக்சும், நவீன பௌதீகமும் - கதை வடிவில் மிக அழகாக சொல்லப்பட்டிருப்பதை பார்க்கலாம். (சத்குரு இங்கு குறிப்பிடுவது வேத வியாஸரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட சிவபுராணம் எனும் தொகுப்பினை)

சிவபுராணத்தை சற்று ஆழமாய் பார்த்தால், யோக அறிவியலையும் சிவபுராணத்தையும் பகுத்துப் பார்க்க இயலாது.

நம் கலாச்சாரம் வாய்மொழி வழக்கால் வளர்ந்த கலாச்சாரம். இங்கு அறிவியல் உண்மைகள், கதை மூலமாக சொல்லப்பட்டன. அனைத்துமே உருவகப்படுத்தப்பட்டன. ஆனால், காலப்போக்கில் மக்கள் அறிவியலை விட்டுவிட்டு, கதைகளை மட்டுமே பிடித்துக் கொண்டனர். ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்கு செல்லும்போது, கதைகள் திரித்துக் கூறப்பட்டன. இன்று வெறும் கட்டுக்கதைகளை மட்டுமே கேட்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். அந்தக் கதைகளில் சொல்லப்பட்ட அறிவியல் உண்மையை நாம் மீட்டெடுத்தால், அறிவியலை வெளிப்படுத்த அழகான வழிகள் பிறக்கும்.

மனித இயல்பை மேலெழுப்ப, விழிப்புணர்வின் உச்சத்தை அடைய, சிவபுராணம், அறிவியல்பூர்வமாய் கதை வடிவில் வழங்கப்பட்டது. யோகத்தை கதைகள் சேர்க்காமல் அறிவியலாய் வழங்கிச் சென்றிருக்கின்றனர். ஆனால், சிவபுராணத்தை சற்று ஆழமாய் பார்த்தால், யோக அறிவியலையும் சிவபுராணத்தையும் பகுத்துப் பார்க்க இயலாது. ஒன்று கதைகளை விரும்புபவர்களுக்கு, மற்றொன்று அனைத்தையும் விஞ்ஞானப்பூர்வமாய் ஆராய விழைபவர்களுக்கு. ஆனால், இரண்டுமே ஒரே அடிப்படையில் இருந்தே தோன்றியிருக்கின்றன.

நவீன கல்விமுறையைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். 20 வருடம் ஏட்டுக் கல்விமுறையில் பயின்று வெளிவரும் ஒரு குழந்தை, தன் அறிவில், குறிப்பிடும்படியான சதவிகிதத்தை மீட்க இயலாதபடி அழித்துக்கொள்கிறது என்று இவர்கள் சொல்கிறார்கள். அப்படியானால், கைவசம் தகவல்களை மட்டுமே வைத்துள்ள முட்டாள்களாய் இவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். கதை வடிவில், விளையாட்டு ரூபத்தில் கல்வி புகட்டுவதே சிறந்த வழி என்று இவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். ஒரு சில கல்வி நிறுவனங்கள் இதை நோக்கி சீரிய முயற்சிகள் எடுத்திருந்தாலும், பெரும்பாலான நிறுவனங்கள் அடக்குமுறை சார்ந்த கல்வியையே வழங்குகின்றன.

கல்விச் சாலைகளில் வழங்கப்படும் அதிக எண்ணிக்கையிலான தகவல்கள், மூளையை மழுங்கச் செய்கிறது. அதனையே கதை ரூபத்திலோ, வேறுசில வடிவங்களில் வழங்கும் போதோ அப்படி ஆவதில்லை. கதை வடிவில் கற்பித்தல் நடப்பது மிகச் சிறந்தது. நம் கலாச்சாரத்தில் இதனையே செய்தனர். மிக மிக உயரிய பரிமாணங்கள் யாவும் கதை வடிவில் சொல்லப்பட்டன.

ஆசிரியர் குறிப்பு : "சிவன் இயற்கை விதிகள் அடங்காதவன்" - என்ற சத்குருவின் மிக சுவாரசியமான இந்த புத்தகத்தின் ஆன்லைன் பதிப்பு உங்களுக்காக..

மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது. வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.

msr-banner-tamil