அலெக்ஸாண்டர், அமெரிக்கா

அலெக்ஸாண்டர் வயது 22, அமெரிக்காவில் இருந்து ஈஷாவிற்கு சில நாட்கள் வந்து தங்கியிருக்கும் இளைஞர். கைலாஷ் யாத்திரை செல்வதுதான் அவருடைய எதிர்கால கனவு. இந்தியாவின் ஆன்மீக வரலாற்றை அறிந்து அதன் சாரத்தை உணர வந்துள்ள மேல்நாட்டு மைந்தனிடம் சில கேள்விகள் கேட்டோம்...


Question:
இந்த இளம் வயதில் ஆன்மீக ஆர்வம் உங்களுக்கு வந்தது எப்படி? அமெரிக்காவை பற்றி இந்திய இளைஞர்கள் காணும் கனவே வேறாயிற்றே...

அலெக்ஸ்:
உண்மை தான் இளைஞர்கள் பலர் அமெரிக்காவை சொர்க்கம் என்றே நினைத்து வருவதுண்டு. நான் இந்தியாவின் ஆன்மீக செல்வத்தை மதித்து இங்கு வந்துள்ளேன். எனக்கு ஆர்வமூட்டியது என்னவோ என் அப்பாதான். அவர் ஒன்பதுமுறை இந்தியா வந்திருக்கிறார். கைலாஷ் யாத்திரையில் அவர் உணர்ந்த ஆன்மீக நெகிழ்ச்சியை கண்டு நானும் ஈடுபாடு கொண்டேன்.

கிறிஸ்துவ பாதிரியான என் அம்மா, தேவாலயப் பணிகளில் ஈடுபட்டுள்ளார், நான் ஆனந்தமாக, அமைதியாக, ஆரோக்கியமாக இப்போது இருப்பதை பார்த்து மகிழ்ந்து, இங்கு அனுப்பி வைத்தார்.

என் கல்லூரி நாட்களில், குளிர்கால விடுமுறையில் என் அப்பாவுடன் ஈஷா வகுப்பு முடித்தேன். ஹட யோகா, சூன்ய தியானம், பாவ ஸ்பந்தனா, சம்யமா, அனாதி என எல்லா வகுப்புகளையும் 6 மாத காலத்தில் முடித்து விட்டேன், இதை எப்படி வார்த்தைகளில் விளக்குவது என்றே தெரியவில்லை. அத்தனையும் அற்புதமான விவரிக்க முடியாத அனுபவங்கள்.

Alex3

Question: இந்தியாவைப் பற்றி உங்கள் பார்வை என்ன? உங்கள் எதிர்பார்ப்பும், உங்கள் அனுபவமும் ஒன்றுபட்டதா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
அலெக்ஸ்:
இந்தியாவை நோக்கி என்னை ஈர்த்ததே சத்குருவின் மாறுபட்ட முற்போக்கான எண்ணங்கள்தான். என் இந்திய நண்பர்களோ அவர் பாரம்பரிய விஷயங்களை விஞ்ஞானப்பூர்வமாக விளக்குவதை விரும்புகிறார்கள்.

கலாச்சார அடிப்படையில் இந்தியா என் நாட்டை விட மாறுபட்டுள்ளது. இரண்டு ஆண்கள் அமெரிக்காவில் கைகோர்த்துக் கொண்டு செல்வதைப் பார்க்க முடியாது. இங்கு கிராமத்தில் நான் தன்னார்வத் தொண்டு செய்தபோது, என்னிடம் அன்பை வெளிப்படுத்தும் முயற்சியில் ஒரு இளைஞர் எதேச்சையாக என் கைகளை அன்புடன் பிடித்துக் கொண்டார். என் நாட்டிற்கும், இந்தியாவிற்கும் இவ்விஷயத்தில் எவ்வளவு வித்தியாசம். இந்த கலாச்சார வேறுபாடுகளை உணர்ந்துக் கொள்ளவே சில காலம் பிடித்தது.

பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். உப்பு காரத்தோடு இருக்கும் உணவை கையில் எடுத்து சாப்பிடுவது அருமையான அனுபவம். நீங்கள் சாப்பிடுவதுபோன்றே தட்டில் உள்ள சாப்பாட்டை பிசைந்து சாப்பிடவும், நன்றாக ஊறுகாய் சாப்பிடவும் கற்றுக் கொண்டுள்ளேன். இந்திய கழிவறைகளுக்கும் பழகிக் கொண்டேன். இந்தியாவின் சாலைகளில் கார் பயணம் செய்வது ஒரு திகிலான அனுபவமாக இருக்கிறது. மர்மமான இந்திய சாலைகளில் பயணிப்பது சிரமம் என்றாலும் எப்படியோ சாலையில் எல்லாமே சரியாக போவது ஆச்சரியமாகவே உள்ளது.

பல கோவில்களுக்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு புறம் அதற்கு தேவை இல்லை என்பதும் புரிகிறது. எனக்கு தேவையானவை அனைத்தும் ஈஷாவில் எனக்கு கிடைத்துவிட்ட திருப்தி எனக்குள் இருக்கிறது. இதை நான் செய்த பாக்கியமாகவே பார்க்கிறேன்.

Question: அப்படி ஈஷாவில் நீங்கள் கண்டுணர்ந்தது என்ன?

அலெக்ஸ்:
இங்கு என் அனுபவங்கள் எல்லாம் ரொம்ப ஆழமாக உள்ளது. குறிப்பாக சத்குருவை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், என் மனதில் ஆச்சரியம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. “இவருக்கு தெரியாதது ஒன்றுமே இல்லையா?” என்று பிரமிக்கும்படியான மனிதராக இருக்கிறார் சத்குரு. நகைச்சுவையோடும், நயத்தோடும், தனிப்பட்ட தோரணையோடும் அவர் பேசும் பாங்கு, ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை வேறெங்கும் கேட்க முடியாது. அபாரமானவை!

நான் இங்கு மதச் சடங்குகள் அற்ற தியானமும் யோகாவும் செய்கிறேன், பெரும்பாலான நாட்களில் அதிகாலை 5 மணிக்கு எழும் போதே மிகுந்த உயிர்ப்புடன், மிகவும் மசிழ்ச்சியாக உணர்கிறேன். சும்மா ஒரு இடத்தில் வெறுமனே உட்கார்ந்திருந்தாலும் எப்படி மகிழ்ச்சியாக, நிம்மதியாக உணர்வது என்று கற்றுக் கொண்டேன். இதை தேடி எந்த கோயிலுக்கோ கிளப்பிற்கோ போக அவசியமில்லை என்பத என் அனுபவ உண்மை. இது என் மீதமுள்ள வாழ்க்கை முழுவதுக்கும் கிடைத்த அதிர்ஷ்டப் புதையலாகவே பார்க்கிறேன்.

Question: இங்கு இருந்த நாட்களில் குறிப்பிட்ட மறக்க முடியாத நிகழ்ச்சி...

அலெக்ஸ்:
எனக்கு கலைகளில் அதிக ஆர்வம் உண்டு. நான் அடிப்படையில் வித்தைகள் செய்யும் ஓர் கலைஞன். நெருப்பு நடனம், நெருப்பைக் கக்குவது, மலைகளில் சைக்கிள் ஓட்டுவது, கயிறு மேல் நடப்பது போன்ற பல வித்தைகளையும் செய்வேன்.

என் திறமைகளை இங்கு வெளிகாட்டி பகிர்ந்துக் கொள்ள ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தேன். எதிர்பார்த்ததைவிட விரைவிலேயே அந்த சந்தர்ப்பம் வந்தது. போன மஹாசிவராத்திரி அன்று நிகழ்ந்த அந்த அனுபவம் பிரமாதமானது. இங்குள்ள பிரம்மச்சாரிகள் சிலரை ஒரு குழுவாக சேர்த்து பயிற்சி அளித்தேன். அவர்கள் பிரமிப்பூட்டும் வேகத்தில் அதை சில நாட்களிலேயே பழகிவிட்டார்கள், இந்த குழுவை ஒருங்கிணைத்து பல லட்சக்கணக்கான மக்களுக்கு முன்னால் நெருப்பு வித்தைகளை அரங்கேற்றியது அந்த பூரிப்பை, என்னால் மறக்கவே முடியாது.

Question: அமெரிக்கா திரும்பும் நீங்கள் மீண்டும் இங்கு வர வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

அலெக்ஸ்:
நிச்சயமாக. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அமெரிக்கர்கள் கலாச்சார முறைப்படி வாழ்க்கை என்பதை வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். நான் ஆன்மீகத்தின் மேல் ஈடுபாடு கொண்டிருந்தாலும், எனக்கு எங்கள் கலாச்சாரத்தையும் ஆழமாக புரிந்துக் கொள்ள விருப்பமாக உள்ளது. அதையும் கூர்ந்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அமெரிக்காவில் சில காலம் பணிபுரிய வேண்டும். பணம் சம்பாதித்து, அத்தனை பணத்தையும் கைலாஷ் யாத்திரைக்கு செலவு செய்யப் போகிறேன் (சிரிக்கிறார்).

நான் நிச்சயம் திரும்ப வருவேன். அதில்தான் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

See you soon Alexander !