Question: சத்குரு, நாங்கள் செய்யும் ஆன்மீகப் பயிற்சிகள், நாங்கள் ஒரு நிலைக்கு சென்றவுடன் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளுக்கு எடுத்துச்செல்லும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இது குறித்து விளக்கமாகச் சொல்லமுடியுமா?

சத்குரு:

இதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டும் என்றால், நீங்கள் ஒரு வயதை எட்டியிருந்தால், மக்கள் புகைப்பிடித்து புகையை வளையங்களாக விடுவதைக் கண்டிருப்பீர்கள். இப்போதெல்லாம் அப்படி எவரும் செய்வதில்லை, ஏனென்றால் இப்போது பொது இடங்களில் புகைப்பிடிப்பது குற்றமாகிவிட்டது. எனக்குத் தெரிந்த ஒரு விஷமத்தனமான எழுத்தாளர், தனது பெயரை கன்னட எழுத்துக்களில் கைலாஷம் என்று புகையாலேயே எழுதுவார். புகை மறையும்முன் சில நொடிகளுக்கு அந்த எழுத்துக்களை நீங்கள் வாசிக்கலாம், மக்கள் அவரிடமிருந்த அந்த திறமைக்கு அவரை பாராட்டினார்கள். இன்று மேடைகளில் தங்கள் திறனை நேரடியாகக் காட்டும் நகைச்சுவை கலைஞர்களைப் போல, அவர் நேரடியாக அரசியலை நையாண்டி செய்த கலைஞர். அந்த நிகழ்ச்சி முடியும்போது அவரது பெயரை இப்படி புகை வளையங்களாக எழுதி முடிப்பார். அது அவருடைய முத்திரைச்சின்னம், அவரது நிகழ்ச்சிக்கான விளம்பரப் போஸ்டர்கள் அனைத்திலும் அது இடம்பெற்றிருக்கும்.

வாயின் அதே துவாரத்தை நீங்கள் பல விதங்களில் பயன்படுத்த முடியும் - பேசலாம், சீட்டி அடிக்கலாம், பாடலாம், அல்லது புகை வளையங்கள் விடலாம். அதிலிருந்து என்ன வருகிறது என்பதுதான் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. வெறும் காற்றாக இருந்தால் சீட்டியாகிறது. சத்தம் உங்கள் குரல்வலைகளைக் கடந்து வந்தால் அது பாடலாகிறது. புகை வெளியே வந்தால் அது பல வடிவங்களாகிறது.

ஒரு யோகப்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் சக்திநிலை சூத்திரம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சக்திநிலை சூத்திரம்

ஒரு யோகப்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் சக்திநிலை சூத்திரம். அது உங்கள் தற்போதைய இயல்பைப் பொருத்து பரிணமித்து வெளிப்படுகிறது. அதே எளிய கருவியை பயன்படுத்தி, உங்கள் நிபுணத்துவத்தையும் திறமையையும் பொருத்து நீங்கள் பல விஷயங்கள் செய்யமுடியும். மனிதர்கள் அனைவரும் அதே எலும்பாலும் சதையாலும் உருவானவர்களே, ஆனால் எவ்வளவு விதமான வடிவங்கள்! அழகான வடிவங்களும் உண்டு, அசிங்கமான உருவங்களும் உண்டு. அதேபோல ஆன்மீக செயல்முறையை அழகாகவும் பயன்படுத்த முடியும், அசிங்கமாகவும் பயன்படுத்த முடியும்.

ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியிலுள்ள மாந்திரீக அம்சத்தை நீக்குவதற்கு எனக்கு 21 வருடங்கள் எடுத்தது. இப்பயிற்சியால் நீங்கள் வல்லமை படைத்தவராகும்போது நீங்கள் செய்யக்கூடிய அசிங்கமான செயல்களை அகற்றுவதற்காகவே இது செய்யப்பட்டது. இல்லாவிட்டால் நீங்கள் இன்னொருவரை உங்கள் இலாபத்திற்கு பயன்படுத்திக்கொள்ள அவர்களது மனதிலுள்ளதை கண்டறிய விரும்பக்கூடும். அல்லது இன்னொருவரின் எதிர்காலத்தை நீங்கள் கணித்து அதன்மூலம் அவர்களை ஏதோவொரு விதத்தில் ஏமாற்ற விரும்பலாம். அல்லது அவர்களை பார்வையாலே அழிக்க விரும்பலாம். உங்கள் உயிர்சக்தி மீது உங்களுக்கு ஆளுமை இருந்தால், நீங்கள் இன்னொருவரை ஞானோதயத்திற்கும் உந்தித்தள்ளலாம், அழிவை ஏற்படுத்தும் அதலபாதாளத்திற்குள்ளும் தள்ளலாம், இரண்டும் சாத்தியமே. நீங்கள் இருக்கும் நிலையைப் பொருத்தே நீங்கள் உங்கள் சக்தியை பயன்படுத்தவும் நிலைமாற்றவும் செய்வீர்கள்.

ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியிலுள்ள மாந்திரீக அம்சத்தை நீக்குவதற்கு எனக்கு 21 வருடங்கள் எடுத்தது
அதனால் ஷாம்பவி போன்ற ஒரு செயல்முறையை பரிமாறும்போது, எதிர்மறையானதை களைவதற்கு சற்று கவனம் செலுத்தத் தேவையிருக்கிறது. ஆனால் அதற்குமேல் அதனை எப்படி வெளிப்பட அனுமதிக்கிறீர்கள், அதனை உங்கள் முதுகுவலியை சரிசெய்ய பயன்படுத்துகிறீர்களா அல்லது உயர்ந்தநிலையில் இருப்பதற்கு பயன்படுத்துகிறீர்களா என்பது உங்கள் கைகளில் உள்ளது. நல்வாழ்வை வழங்குவது நோக்கி பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் எதனை நீங்கள் நல்வாழ்வு என்று கருதுகிறீர்கள் என்பதும் இதில் முக்கியமாக இருக்கிறது. நல்வாழ்வு குறித்த உங்கள் கருத்து சற்று மேலான ஆரோக்கியமும் உங்கள் செயலில் வெற்றியுமாக இருக்கலாம், அது கிடைத்தவுடன் எல்லாம் கிடைத்துவிட்டதாக நீங்கள் நினைக்கலாம். அதனால்தான் நீங்களாக எந்த இலக்கையும் நிர்ணயிக்காதீர்கள், அதுவாக பரிணமிக்கட்டும் என்று நான் சொல்கிறேன். நீங்கள் கற்பனையிலும் நினைத்திராத இடத்திற்கு அது பரிணமித்துச் செல்லட்டும். நீங்கள் ஏற்கனவே அறிந்த ஒன்றில் சிக்குண்டு கிடக்காதீர்கள். நீங்கள் பரிணமித்து வளர வளர, பயிற்சியும் ஒரு உயர்ந்த நிலையில் செயல்படும்.

இலவச மதுபானங்கள்!

ஒரு நாள் இப்படி நடந்தது. ஒரு மனிதர் ஒருநாள் மதுபானம் அருந்தும் பாருக்குள் வந்து, "இன்று அனைவருக்கும் இலவச மதுபானங்கள்! இன்றைய மதுபான செலவு மொத்தத்தையும் எங்கள் நிர்வாகம் சுமக்கும்." என்று அறிவித்தார். மதுபானம் பரிமாறும் பார்டென்டரைப் பார்த்து, "உனக்கும் சேர்த்து." என்றார். பார்டென்டர் உட்பட அனைவரும் குடித்தார்கள். பணம் கொடுக்கும் நேரம் வந்தபோது, அங்கு வந்திருந்த ஆளிடம் ஒரு பைசா கூட பணமில்லை என்பது தெரியவந்தது. பார்டென்டர் அவரின் முகத்திலேயே குத்தி, அவரை தூக்கி பாருக்கு வெளியே வீசினார். அடுத்தநாள் மாலை அதே மனிதர் மீண்டும் வந்து, "இன்று அனைவருக்கும் இலவச மதுபானங்கள்!" என்று அறிவித்தார். பார்டென்டரைப் பார்த்து, "உனக்கு மட்டும் கிடையாது." என்றார். கோபம் கொப்பளிக்க அவரைப் பார்த்த பார்டென்டர், "ஏனென்று நான் தெரிந்துகொள்ளலாமா?" என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர், "நீ குடிபோதையில் உன் கட்டுப்பாட்டை இழந்து வன்முறையில் ஈடுபடுகிறாய்." என்றார்.

இப்பயிற்சிகள், உங்கள் உயிர்நிலையில் செயல்படும் விதமாக அளவிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. நான் ஷாம்பவி மஹாமுத்ரா தீட்சையின் தீவிரத்தை அதிகப்படுத்தினால், உங்களில் 80 முதல் 90 சதவிகிதத்தினரால் அதன்பிறகு எழுந்து நிற்கக்கூட முடியாது. தியானலிங்க பிரதிஷ்டைக்கு முன்பு ஷூன்ய தியானத்திற்கு தீட்சை பெற்றவர்கள் இப்படி உணர்ந்திருப்பீர்கள். அந்த சமயத்தில் தீட்சை பெற்ற 70 முதல் 80 சதவிகித மக்கள் தீட்சை நிகழ்ந்த இடத்தைவிட்டு வெளியேசெல்ல முடியாத நிலையில் இருப்பர். அதனால் எத்தனை பங்கேற்பாளர்களோ அத்தனை தன்னார்வத் தொண்டர்கள் தேவைப்படுவார்கள், ஏனென்றால் அவர்களில் பலரை தூக்கிச்செல்லவோ, தோள்கொடுத்தோ, அல்லது குறைந்தபட்சம் கைகொடுத்தாவது கூட்டிச்செல்ல வேண்டியிருக்கும். அவர்கள் முற்றிலும் திகைத்துப்போய் இருப்பார்கள். அந்தச் சமயத்தில் நிறைய பானம் அருந்தினாலும் தள்ளாடாத மனிதர்களைக் கண்டறியும் விதமாக தீட்சை வழங்கிக்கொண்டு இருந்தோம். நாம் செய்ய விரும்பிய தீட்சைக்கு இது மிக்கியமாக இருந்தது, அதைச் செய்யவேண்டிய அவசரம் இருந்தது.

. உங்கள் உயிர்சக்தி மீது உங்களுக்கு ஆளுமை இருந்தால், நீங்கள் இன்னொருவரை ஞானோதயத்திற்கும் உந்தித்தள்ளலாம், அழிவை ஏற்படுத்தும் அதலபாதாளத்திற்குள்ளும் தள்ளலாம், இரண்டும் சாத்தியமே.

வளர்ச்சிக்கு அளவிடப்பட்டுள்ளது

தியானலிங்க பிரதிஷ்டைக்கு முன்னதாக, எனக்கு நிறைவேற்றுவதற்கு ஒரு திட்டம் இருந்தது, என்னுடைய திட்டமல்ல, என் குரு எனக்கு கட்டளையிட்டுச் சென்ற திட்டம். இப்போது மனிதர்கள் வளர விரும்பினால் அதற்கான கருவிகளை மட்டும் வழங்குகிறோம். அவர்கள் வளர விரும்பவில்லை என்றால் எந்த அவசரமுமில்லை. என்னை நீங்கள் தியானலிங்கப் பிரதிஷ்டைக்கு முன்பு பார்த்திருந்தால், நான் முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதராக இருந்தேன். பிரதிஷ்டை முடிந்தபிறகு, நான் நடக்கும் விதம், பேசும் விதம், உடை உடுத்தும் விதம், நான் சாப்பிடும் விதம் என்று எல்லாவற்றையும் விழிப்புணர்வாக மாற்றிக்கொண்டேன். முன்பு என்னை அறிந்தவர்கள் இப்போது என்னைப் பார்த்து நான் இப்போது எல்லாவற்றையும் தொலைத்துவிட்டேன் என்று நினைக்கிறார்கள், ஏனென்றால் நான் இப்போது அந்த அளவு உக்கிரமாக இல்லை.

இப்போது இருக்கும் விதத்தில் இது இருப்பது நல்லது. இன்று பெரும்பாலானவர்கள் தீட்சை செயல்முறை முழுவதும் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள், அதன்பிறகு அனைவரும் எந்தப் பிரச்சனையும் இன்றி வீடு திரும்புகிறார்கள். ஏனென்றால் தீட்சை செயல்முறையின் தீவிரம் எல்லோருக்கும் பொருந்தும் விதமாக குறைக்கப்பட்டுவிட்டது. அவர்களுக்கு எப்படித் தேவையோ அப்படி இருக்கும், அதற்கு அதிகமாகவும் இருக்காது, அதற்குக் குறைவாகவும் இருக்காது. அது உங்களோடு வளரும் விதமாக அளவிடப்பட்டுள்ளது. நீங்கள் இப்போது தயாராக இல்லாத நிலைக்கு உங்களை நாங்கள் தள்ளுவதில்லை. அது உங்களை மீறிச்சென்றால் அற்புதம், ஆனால் வெளிச் சூழ்நிலைகளை சமாளிப்பதில் சற்று சிரமத்தை சந்திப்பீர்கள். இதன் தீவிரத்தை இதற்கு மேலும் நாங்கள் குறைக்க விரும்பவில்லை, அப்படிச்செய்தால் அது நீர்த்துப்போய்விடும். இப்போது வழங்கப்படும் தீட்சை, உங்கள் தற்போதைய அனுபவ நிலையைக் கடந்த சாத்தியங்களும் பரிமாணங்களும் உள்ளன என்பதை நீங்கள் பார்க்க அனுமதிக்கிறது. அதனை நீங்கள் அடைய விரும்பினால், உங்களை இன்னும் கொஞ்சம் தயாராக்கினால் அது தன்னால் பரிணமித்து வளரும்.