IYO-Blog-Mid-Banner  

கேள்வி: வலிமை மிகுந்த எனது பாலுணர்வு விருப்பங்களிலிருந்து நான் எப்படி விடுபடுவது?

சத்குரு: நாம் எப்போதுமே எதிலிருந்தாவது எப்படி விடுபடுவது என்ற ரீதியிலேயே சிந்திக்கிறோம். எதிலிருந்தும் வலுக்கட்டாயமாக உங்களால் விடுபட முடியாது. கட்டாயப்படுத்தி நீங்கள் எதையாவது விட்டுவிட முயற்சித்தால், அது வேறொரு வழியில் மேலே கிளம்பி வருவதுடன், வேறொரு விதமான வக்கிரம் உங்களுக்குள் மேலோங்கும். அதை நீங்கள் நிறுத்துவதற்கு முயற்சித்தால், அது உங்கள் மனதையும், தன்னுணர்வையும் முழுமையாக ஆட்சி செய்யும். ஆனால் தற்போது நீங்கள் என்ன அறிந்திருக்கிறீர்களோ அதைவிட ஆழமான ஒன்றைக் கண்டுகொண்டால், எது குறைந்த முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறதோ, அது தானாகவே குறைந்துபோகும். இதை நீங்கள் பார்த்திருக்கலாம், அறிவு சார்ந்த செயலில் ஆழமான ஈடுபாடு கொண்டவர்கள், உடல் சார்ந்த பாலியல் விஷயங்களில் ஈடுபடுவதைவிட ஒரு புத்தகம் வாசிப்பதையே விரும்புவார்.

நீங்கள் பாலுணர்வின் பின்னால் ஓடிக்கொண்டிருப்பது ஏனென்றால், தற்போது நீங்கள் அறிந்திருப்பதிலேயே மிகப்பெரிய இன்பம் அதுதான். உங்களிடம், ''அது கெட்டது, அதை விட்டுவிடுங்கள்'' என்று யாராவது சொன்னால், நீங்கள் அதனை விட்டுவிடப் போகிறீர்களா? நீங்கள் விடமாட்டீர்கள். ஆனால் அதைவிடப் பெரியதாக இருக்கும் ஒன்றை நீங்கள் ருசித்துவிட்டால், பிறகு அதை விட்டுவிடுமாறு யாராவது உங்களுக்குக் கூறவேண்டுமா என்ன? தானாகவே அது குறைந்துவிடும். எனவே ஒரு பெரும் சாத்தியம் உங்களுடைய வாழ்வில் நிகழ வேண்டுமென்றல்,‌ அதற்குத் தேவையான செயல்களைச் செய்வதற்கு நீங்கள் உங்களது நேரத்தில் சிறிதளவு முதலீடு செய்ய வேண்டும். இன்னும் பிரம்மாண்டமான, மென்மேலும் ஆனந்தமும், பரவசமுமான ஒன்றை நீங்கள் பெற்றால், இயல்பாகவே சிறிய இன்பங்கள் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிடும். அது வேண்டாம் என்று நீங்கள் ஒதுக்கிவிடவில்லை, ஆனால் உங்களுக்கான மிகப்பெரிய ஒன்றை உங்களுக்காகவே நீங்கள் கண்டுபிடித்துவிட்ட காரணத்தால், இனி மேன்மேலும் அதில் நீங்கள் ஈடுபடப்போவதில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பாலுணர்வு என்பது உங்களின் ஒரு சிறு பகுதி மட்டுமே. மக்கள் அதிகப்படியான பாலுணர்வில் இருந்து வருவதற்கு முட்டாள்தனமான நன்னடத்தை நெறிமுறைகள்தான் காரணமாக இருக்கிறது, ஏனென்றால் அவர்கள் வலுக்கட்டாயமாக அதை விலக்குவதற்கு முயற்சி செய்கின்றனர்.

உங்கள் வாழ்க்கையின் எத்தனையோ அம்சங்களில் இது நிகழ்ந்திருக்கக்கூடும், குழந்தையாக இருந்தபோது உங்களுக்கு உலகமாகத் தோன்றிய அனைத்தும், நீங்கள் உயர்ந்ததாக நினைத்த வேறொன்றை நீங்கள் கண்டுவிட்ட காரணத்தால், குழந்தைப் பருவத்தின் விஷயங்கள் நழுவிவிட்டன. அதுதான் இதற்கும் பொருந்துகிறது. மேலும் ஆழ்ந்த தீவிரமான, அதிக ஆழமான இன்பமும், பரவசமுமான ஒன்றை உங்களுக்கென்று நீங்கள் கண்டுவிட்டால், பிறகு இவையெல்லாம் குறைந்துவிடும்.

பாலுணர்வு என்பது உங்களின் ஒரு சிறு பகுதி மட்டுமே. மக்கள் அதிகப்படியான பாலுணர்வில் இருந்து வருவதற்கு முட்டாள்தனமான நன்னடத்தை நெறிமுறைகள்தான் காரணமாக இருக்கிறது, ஏனென்றால் அவர்கள் வலுக்கட்டாயமாக அதை விலக்குவதற்கு முயற்சி செய்கின்றனர். ஒரு ஆண் அல்லது ஒரு பெண் என்று நீங்கள் எதை அழைக்கிறீர்களோ, அது குறிப்பிட்ட ஒரு இயற்கை வழிமுறைக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரு சிறிய உடல்ரீதியான வித்தியாசம் மட்டுமே. உடலின் ஒரு பாகத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்? உடலின் எந்தப் பகுதியும் இவ்வளவு முக்கியத்துவம் தருவதற்கான தகுதி பெற்றிருக்கவில்லை. அந்த விதமான முக்கியத்துவத்தை உடலின் ஏதோ ஒரு பாகம் பெறவேண்டுமென்றால், ஒருவேளை மூளைக்கு அந்தத் தகுதி இருக்கலாமே தவிர, பாலுறுப்புகளுக்கு இல்லை.

"நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டும், இதைப் பற்றி நீங்கள் நினைக்கக்கூடாது" என்று எல்லா இடங்களிலும் கூறப்படும் முட்டாள்தனமான போதனைகளின் காரணத்தால், துரதிருஷ்டவசமாக இங்கு எல்லாமே தலைகீழாக மாறியிருக்கிறது. மக்கள் அதிலேயே மூழ்கிவிட்டதுடன், முழுவதுமாக குழப்பத்திற்கு ஆளாகிவிட்டார்கள். வாழ்க்கையை அது எப்படி இருக்கிறதோ அப்படிப் பார்த்தால், பாலுணர்வு என்பது அதற்கான இடத்தில் சரியாகப் பொருந்தி இருக்கும் – உங்கள் வாழ்க்கையில் அதற்கு ஒரு சிறிய இடம்தான்; இவ்வளவு பெரிய அம்சமாக இருக்காது. அப்படித்தான் அது இருக்க வேண்டும். எல்லா உயிரினங்களிலும் அது அப்படித்தான் இருக்கிறது. விலங்குகள் எல்லா நேரமும் இதையே சிந்தித்துக்கொண்டு இருப்பதில்லை. அவைகளுக்குள் அந்த உணர்வு இருந்தால், அது இருக்கிறது, இல்லையென்றால் எப்போதும் ஆண் யார், பெண் யார் என்று சிந்தித்துக்கொண்டு இருப்பதில்லை. மனிதர்கள் மட்டும்தான் அதனுடனேயே சிக்கிப்போய்விட்டார்கள். அவர்களால் ஒரு கணம்கூட அதை விட முடியவில்லை. வாழ்க்கையுடன் எந்தத் தொடர்பும் இல்லாத முட்டாள்தனமான போதனைகளும், நன்னெறிகளும் அவர்களுக்குள் ஊன்றியுள்ளதுதான் இதற்கான காரணமாக இருக்கிறது.

வாழ்க்கையை அது எப்படி இருக்கிறதோ அப்படி அவர்கள் பார்த்தால், பெரும்பாலான மக்களும் மிகக் குறுகிய காலத்திலேயே இதிலிருந்து வெளியில் வந்துவிட முடியும். பலராலும் அதற்குள் செல்லாமலேயே அதிலிருந்து வெளிவர முடியும். வாழ்வின் மீதான தவறான கண்ணோட்டத்தின் காரணமாக எல்லாமே மாறுபட்டும், பெரிதுபடுத்தப்பட்டும் இருக்கிறது, அவ்வளவுதான். இல்லையென்றால், மக்களில் ஒரு பெரும் சதவிகிதத்தினர் அதில் ஆர்வம் கூட இல்லாமல் இருப்பதையோ அல்லது அவர்களது ஆர்வம் மிகச் சாதாரணமாக இருப்பதையோ நீங்கள் காண்பீர்கள். இப்போது அது முக்கியத்துவம் பெற்றிருப்பதைப்போல இருக்காது.

ஆசிரியர் குறிப்பு: சத்குரு, தந்த்ரா மற்றும் பாலுணர்வு பற்றிப் பேசுவதுடன், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட இது குறித்த பொதுவான கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துகளையும் தெளிவுபடுத்துகிறார்.