இந்தியக் கலாச்சாரம், சடங்குகள், பாரம்பரியப் பழக்கவழக்கங்களுக்கு பெயர் போனது. இன்று அவற்றில் பலவற்றை 'மூடநம்பிக்கை' என்று நாம் முத்திரை குத்தினாலும், அவற்றிற்கு பின்னே தெளிவான அறிவியல் விளக்கங்கள் இருக்கத் தான் செய்கிறது. 'பாரத' நாடு ஏன் ஆன்மீக நாட்டம் கொண்ட பலரையும் தன்பால் ஈர்த்தது என்றும், இந்தியக் கலாச்சாரம் மற்றும் அதன் சடங்குகளில் பொதிந்து இருக்கும் விஞ்ஞானம் பற்றியும் இப்பகுதியில் சத்குரு விவரிக்கிறார்.

சத்குரு:

ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரமும் அங்கங்கு வாழ்பவருக்கு முக்கியம் தான். அது அவர்களின் உணர்ச்சிகளுக்கும், நாட்டின் எல்லையை குறிப்பதற்கும் அவசியம். ஆனால் இந்தியக் கலாச்சாரத்தின் முக்கியத்துவம் அதையும் தாண்டி விரிகிறது. இந்தக் கலாச்சாரத்தில் தான், மனித நல்வாழ்விற்கும், மனிதனின் உச்சபட்ச விடுதலையான முக்திக்கும் விஞ்ஞானப் பூர்வமான வழிகள் அமைக்கப் பட்டிருந்தன. மனிதனை இந்த அளவிற்கு ஆழமாக பார்த்துப் புரிந்து கொண்ட கலாச்சாரங்கள் வேறு இல்லை. இதை ஒரு அறிவியலாகக் கருதி, மனிதன் தன் மேன்மையான அறுதிநிலைக்கு உயர்வதற்கு தேவையான வழிகளை, வேறு எந்தக் கலாச்சாரமும் வகுக்கவில்லை. வெளிப்படையாக சொல்வதானால், 'ஞானமடைந்த மனிதர்களை' உருவாக்கும் தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இதை ஒரு அறிவியலாகக் கருதி, மனிதன் தன் மேன்மையான அறுதிநிலைக்கு உயர்வதற்கு தேவையான வழிகளை, வேறு எந்தக் கலாச்சாரமும் வகுக்கவில்லை.

ஆன்மீகக் கோட்பாடுகள், நம்பிக்கையையும், விசுவாசத்தையும் வலியுறுத்துபவை அல்ல. இவை முறையாக வடிவமைக்கப்பட்ட செயல்முறைகளைக் கொண்டுள்ளது. இந்த செயல்முறைகளை தொடர்ந்து பின்பற்றினால், இவை நம் உடலையும் மனதையும் கூர்மையாக வைத்திடும். உலகின் பல இடங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். அங்கெல்லாம் பலதரப்பட்ட மக்களையும் சந்தித்திருக்கிறேன். உயர்நிலை விஞ்ஞானிகள், அறிஞர்கள், மிகப் பிரபலமான, மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் என இன்னும் பலதரப்பட்ட மக்களுடன் நான் பேசியிருக்கிறேன். எனினும், மற்ற எல்லா இடங்களைக் காட்டிலும், நான் இந்தியாவில் சந்திக்கும் மனிதர்கள் மிகக் கூர்மையான புத்திசாலித்தனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பக் காலத்தில் பலர் தடுமாற்றத்துடன் பயணிக்க, நாம் மட்டும் தடையின்றி எளிதாய் மிதந்து வந்து கொண்டிருக்கிறோம். இதற்கு முக்கியக் காரணம், நாம் பின்பற்றும் ஆன்மீக செயல்முறைகள், நம் அறிவை கூர்தீட்டி வைத்திருப்பது தான். முன்காலத்தில் இந்தக் கோட்பாடுகளை பிரம்மாண்டமாய், அறிவுப்பூர்வமாய் வழங்கினார்கள். ஆனால் கடந்த இருநூறு ஆண்டுகளாய் நம்மை தன் கொடும்பிடியில் ஆழ்த்திவிட்ட வறுமையால், அது கொஞ்சம் திரிந்துவிட்டது. ஒவ்வொரு தலைமுறையும், காலத்தினால் நிகழும் திரிபை அகற்றி, அதை அதன் பழைய வடிவத்திற்கு திருத்தி அமைக்க வேண்டும். அப்போது தான், அது நம் முக்திக்கும், நல்வாழ்விற்கும் ஏதுவான கருவியாய் தொடர்ந்து திகழும்.

மேற்கத்திய கலாச்சாரங்கள் அரசியல் சிந்தனையில் சுதந்திரமும், விடுதலையும் வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த சுதந்திரமும் விடுதலையும் மனிதராகப் பிறந்த நம் ஒவ்வொருவரின் அடிப்படை அம்சங்கள். இந்தக் கலாச்சாரத்தின் முக்கியத்துவமே, இதில் நாம் செய்யும் சின்னசின்ன விஷயங்களும் கூட நம் வளர்ச்சியை கவனத்தில் கொண்டே வடிவமைக்கப் பட்டிருப்பதுதான். இதற்குக் காரணம், இங்கு மனிதர்களுக்கு வாழ்வில் ஒரேயொரு லட்சியம் தான் உள்ளது. அது முக்தி. மேற்கத்திய சமுதாயத்தில் தனிமனித சுதந்திரம், சமுதாய சுதந்திரம் எல்லாம் பேசுகிறார்கள். ஆனால் வாழ்வென்று வந்துவிட்டால், அது நம் கையில் இல்லை. அது கடவுளின் விருப்பம், அவர் கையில் தான் இருக்கிறது என்கிறார்கள். நம் நாட்டிலோ, "உங்கள் வாழ்வில் எதையுமே கடவுள் நிர்ணயிக்கவில்லை. உங்களுக்கு நடப்பதெல்லாம் உங்கள் 'கர்மா'வினால் தான்" என்றே சொன்னார்கள். அப்படியென்றால் உங்கள் வாழ்வில் நடப்பதெல்லாம் உங்களால் தான். உங்கள் வாழ்வை இப்படி வடிவமைத்திருப்பதும் நீங்கள் தான். இந்த விஷயம் இங்கு மனிதர்கள் செய்த ஒவ்வொரு விஷயத்திலும் மீண்டும் மீண்டும், அவர்கள் மனதில் பதியுமாறு வலியுறுத்தப்பட்டது. காலம் செல்லச் செல்ல, போர் மாற்றி போர் நாம் தோற்றபோது, கர்மா என்பது விதியாகத் திரிந்துவிட்டது. கர்மா என்பது தவிர்க்கமுடியாதது என்பதாக கருதப்பட்டு விட்டது. ஆனால் உண்மையில், 'உங்கள் வாழ்க்கை உங்கள் கர்மா' என்று நாம் சொல்லும்போது, கடவுள் எதையும் நிர்ணயிக்கவில்லை, உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் தான் இருக்கிறது என்றே சொல்கிறோம். உங்கள் வாழ்வின் உச்சபட்ச நோக்கம், உங்கள் வாழ்வின் அம்சம், விடுதலை. உங்கள் முன்முடிவுகள், பயம், மரணம், எல்லாவற்றில் இருந்துமே விடுதலை.

மேற்கத்திய கலாச்சாரங்கள் அரசியல் சிந்தனையில் சுதந்திரமும், விடுதலையும் வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த சுதந்திரமும் விடுதலையும் மனிதராகப் பிறந்த நம் ஒவ்வொருவரின் அடிப்படை அம்சங்கள்.

உங்களுக்கு குடும்பம் வேண்டும். அதன் துணையோடு முக்தி நோக்கி செல்ல விரும்புகிறீர்களா? அதுவும் சரி. குடும்பம் எல்லாம் வேண்டாம், நான் நேரிடையாக தனியாகவே நடை போடுகிறேன் என்கிறீர்களா? அதுவும் சரி. எவ்வழியில் வேண்டுமானாலும் செல்லுங்கள், ஆனால் இம்மண்ணில் பிறந்துவிட்டால், உங்கள் வாழ்வின் நோக்கம் மட்டும், முக்தி தான். இந்தக் கலாச்சாரத்தின் ஒவ்வொரு அம்சமும் இப்படித்தான் 'வடிவமைக்கப்' பட்டிருக்கிறது. முக்தி நோக்கி செல்ல வேண்டுமானால் நீங்கள் எப்படி இருக்க வேண்டும்?

உதாரணத்திற்கு, நம் ஈஷா வித்யா பள்ளிகளுக்கு முதன்முதலாக வருபவர்கள், குழந்தைகள் தரையில் அமர்ந்து பாடம் பயில்வதை பார்த்து அதிர்ச்சியுறுகின்றனர். இது நாம் நாற்காலிகள், மேஜைகள் வாங்குவதில் மிச்சம் செய்வதற்காக அல்ல. கால்களை மடக்கி, சம்மணமிட்டு அமரும் போது, நம் உடலளவில் பல நன்மைகள் உண்டாவதோடு, இது மூளை வளர்ச்சியிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. இதே போல் வாழ்வின் ஒவ்வொரு சிறு அம்சமும், நம் வளர்ச்சிக்கு உதவும் வண்ணம், கூர்மையான, தெளிவான சிந்தனையோடு வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

இதனால் தான் நம் கலாச்சாரத்தை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும். உணர்வளவில் இதில் நாம் ஈடுபட்டிருக்கிறோம் என்பதற்காக அல்ல, இது ஒரு விஞ்ஞானப் பூர்வமான செயல்முறை என்பதால். செய்யும் ஒவ்வொரு செயலும், ஒருவரை அவரது முக்தி நோக்கி வளரச் செய்வது போன்ற ஒரு கலாச்சாரத்தை மீண்டும் செதுக்க வேண்டுமென்றால், ஆயிரமாயிரம் ஆண்டுகள் தேவைப்படும். நீங்கள் நின்றாலும், உட்கார்ந்தாலும், வேறு என்ன செய்தாலும், அவற்றை எப்படி செய்தால் அது உங்கள் நல்வாழ்விற்கு வழி வகுக்கும் என்று திட்டமிட்டு, தெளிவாய் இந்தக் கலாச்சாரத்தில் வழங்கி இருக்கிறார்கள். இசை, நடனம், இன்னும் எல்லாமே உங்கள் விடுதலை நோக்கியே வடிவமைக்கப் பட்டிருக்கிறது. நம் பாரம்பரிய இசையிலும், நடனத்திலும் ஆழமான ஈடுபாடு கொண்டவர்கள், இயல்பாகவே ஆன்மீக வழியில் ஈர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு வேறு வழியே இருக்காது.

இந்த கலாச்சாரத்தை நாம் ஸ்திரமாக்குவது மிகமிக அவசியம். இந்த கலாச்சாரம் மட்டும் அழிந்துவிட்டால், இக்கிரகத்தில் ஆன்மீக செயல்முறைகள் மறைந்து விடும்.

ஓர் நாடென்று பார்த்தால், இந்தியாவின் ஒவ்வொரு 50ல் இருந்து 100 கி.மீ தொலைவில் இருக்கும் இடங்களின் இடையே, மக்களின் முக அமைப்பு, பாஷை, உணவு, உடை, இசை, நடனம் என எல்லாமே வித்தியாசப்படும். இந்நாட்டில் வாழும் மக்களிடையே அனைத்தும் வித்தியாசப்பட்டாலும்... இழையோடும் கலாச்சாரம் அவர்களை ஒன்றாக இணைக்கிறது. இந்தியா எனப்படும் இந்த கலாச்சாரம், இதுதான், இவ்வளவு தான் என்று நீங்கள் வரையறுக்க முடியாது. ஆனால் இது எல்லோரிடத்திலும் ஊறியிருக்கிறது. இவ்வுலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், ஒரு இந்தியனைப் பார்த்தால், அவன் அமரும் விதம், நடக்கும் விதம் இவற்றைக் கொண்டே அவன் ஒரு இந்தியன் என்று நாம் சொல்லிவிடலாம்! இழையோடும் இந்த கலாச்சாரத்தை நாம் ஸ்திரமாக்குவது மிகமிக அவசியம். இந்த கலாச்சாரம் மட்டும் அழிந்துவிட்டால், இக்கிரகத்தில் ஆன்மீக செயல்முறைகள் மறைந்து விடும். இங்கொருவர், அங்கொருவர் என தனித்தனியே மனிதர்கள் வளர்ச்சி பெறலாம், ஆனால் சமூக அளவில் ஆன்மீக செயல்முறைகளே இருக்காது. இந்தியக் கலாச்சாரம் ஏதோ எப்படியோ உருவானதல்ல. ஒவ்வொரு மனிதனும் தன் விடுதலை நோக்கி, முக்தி நோக்கி, பயணிக்க வேண்டும் என்று தெளிவாய் சிந்தித்து, ஞானிகள் அழகாய் செதுக்கிய கலாச்சாரம் இது.

இந்தக் கலாச்சாரத்தை வடிவமைத்த ஞானிகள், இந்தக் கலாச்சாரத்தில் ஓரளவிற்கு மென்மையும் கனிவும் புகுத்தி இருக்கிறார்கள். இந்தக் கனிவும் மென்மையும் இருந்தால், இந்தக் கலாச்சாரத்தின் சாரத்தை, 'தெய்வீகம்' என்ற பெயரில் யாரும் துஷ்பிரயோகம் செய்யமுடியாது. தனிநபர்கள் அவரவர் அளவில் பலவற்றை துஷ்பிரயோகம் செய்யலாம், ஆனால் அவர்கள் செய்வதை 'தெய்வீகம்' என்ற பெயரோடு அவர்கள் செயல்படுத்த முடியாது. இதனால் இங்கு வாழ்ந்த மக்களிடம் ஒரு மென்மை மலர்ந்தது. ஆனால் இந்த மென்மையை, வலுவின்மை என்று வெளிநாட்டவர் கருதியதால், அதன் விளைவுகளை இந்தக் கலாச்சாரம் சந்திக்க நேர்ந்துவிட்டது.

படை வீரத்திலிருந்து, பொருளாதார தீரத்திற்கு இவ்வுலகம் நகர ஆரம்பித்துவிட்டது. இது தான் இந்தக் கலாச்சாரம் மீண்டும் துளிர்விட வேண்டிய சரியான நேரம். இந்தக் கலாச்சாரத்தின் பழைய வலிமையை அதற்கு நாம் மீட்டுத் தர வேண்டும். ஒவ்வொரு மனிதனும், தன்னை எல்லாவற்றில் இருந்தும் விடுவித்துக் கொண்டு, முக்தி நோக்கி நடைபோடுவதற்காக உருவாக்கப்பட்ட கலாச்சாரம் இது. உடலளவிலும், மனதளவிலும் இந்த நோக்கத்தோடு மனிதர்கள் செயல்பட்டால், அவர்கள் வாழ்க்கை தடையின்றி மிக எளிதாய் நடக்கும். இந்த நோக்கத்தை மக்கள் மனதில் நிலைநிறுத்துவது மிக அவசியம். இதன் துணை இல்லாட்டால், சுற்றி இருக்கும் பலவற்றிலும் கவனம் சிதறி, மனிதர்கள் தடம் மாறி தொலைந்து போவார்கள். 'முக்தி தான் வாழ்வின் நோக்கம். அதை தவிர்த்து வேறு ஒன்றுமே எனக்கு வாழ்வில் முக்கியமில்லை' என்று ஒருவர் நிலையாக இருந்தால், அந்த எண்ணம் ஒன்றே அவரை எல்லா விதத்திலும் ஆற்றல்மிக்கவராய் மாற்றிடும்.