கேள்வி: சத்குரு, நான் எப்பொழுதும் என்னுடைய வாழ்க்கை முழுவதையும் நெட்ஃபிளிக்ஸ் நிகழ்ச்சிகள் பார்த்துத் தீர்த்துவிடலாம் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் லாக் டௌனுடைய கடந்த சில நாட்களில், இணையத்தில் இருக்கும் அனைத்தையும் பார்த்து எனக்கு மிகவும் சலித்துவிட்டது! போரடித்துவிட்டது!

சத்குரு: போரடிப்பது என்பது நிச்சயமாக பிரபஞ்ச அளவிலான தன்மை அல்ல, அது மனோரீதியான ஒரு விஷயம். உங்கள் மனதிற்குள் மோசமான விஷயங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தால், உங்களுக்கு போரடிக்கும். இங்கே அமர்ந்திருக்கும்போது நீங்கள் அற்புதமான விஷயங்களைப் பற்றி சிந்தித்தால் புத்துணர்வாக உணர்வீர்கள். உங்கள் மனதிற்குள் நிகழ்ந்துகொண்டிருப்பது, உங்கள் நாடகம். உங்கள் நாடகமே உங்களுக்கு போரடித்தால், இந்த ஐந்து வார காலமும் உங்களிடம் சிக்கிக்கொண்ட மற்றவர்களின் நிலைமையை யோசித்துப் பார்க்க முடிகிறதா? இதற்கு முன்பு, வேலை, கடைவீதி செல்லுதல் மற்றும் பிற சமூகப் பொறுப்புகள் என்று, உங்கள் கவனத்தை சிதறடிக்க பல விஷயங்கள் இருந்தன. இப்போது, உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் நாடகத்தில் சிக்கியிருக்கின்றனர்.

ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு, ஒரு இரண்டு நிமிட இடைவேளை; இது உங்களுக்கு நீங்கள் செய்யும் மிக அற்புதமான விஷயம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எல்லாத் தொலைக்காட்சி சேனல்களும் சில நிமிடங்களுக்கு ஒருமுறை விளம்பர இடைவெளி எடுத்துக்கொள்கின்றன. உங்களுடைய நாடகத்தை உங்களால் நிறுத்த முடியாது என்பதை நான் அறிவேன், ஆனால் உங்கள் நாடகத்திற்கு குறைந்தபட்சம் இந்த அளவுக்கு இடைவெளி விடுங்கள். ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு, ஒரு இரண்டு நிமிட இடைவேளை; இது உங்களுக்கு நீங்கள் செய்யும் மிக அற்புதமான விஷயம்.

சலிப்பு ஏற்படும்போது என்ன செய்வது

உங்களிடம் நான், எதையாவது செய்துகாட்டுங்கள் என்று கேட்டால், நீங்கள் "எப்படி?” என்று கேட்கலாம். ஆனால், “எதுவும் செய்ய வேண்டாம்”, என்று நான் கூறும்போதும், “எப்படி?” என்று கேட்டால், பிறகு நான் என்ன சொல்வது? எதுவும் செய்யாமல் இருப்பது என்றால் என்ன? ஒன்றும் இல்லாதது என்றால், வெறுமனே ஒன்றும் இல்லாமல் இருப்பது. அதை எப்படி கற்றுக்கொடுப்பது? ஒன்றும் செய்யாமல் இருப்பது என்பது, உங்களைச் சுற்றி நிகழும் எதோடும் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளாமல், பின்வாங்கிக் கொள்வது. சுற்றி நிகழும் எதோடும் என்று குறிப்பிடும்போது, அது உங்களுடைய உடல்ரீதியான மற்றும் மனோரீதியான செயல்களையும் உள்ளடக்கியது. ஏனென்றால், இரண்டுமே நீங்கள் வெளியிலிருந்து சேகரித்தவை.

மக்களால் உங்களுக்கு போரடித்துவிட்டதாக நீங்கள் நினைக்கவேண்டாம் – உங்களின் குப்பைகளினால் உங்களுக்கு போரடித்துள்ளது. உங்களுக்கு நடக்கும் விஷயங்களால்தான் உங்களுக்கு போரடிக்கிறது.

உங்கள் உடல் என்ன சொல்கிறதோ சொல்லட்டும் - ஆனால் நீங்கள் வெறுமனே அமர்ந்திருப்பது. உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அது சொல்லட்டும், ஆனால் நீங்கள் ஈடுபாடு கொள்ளாமல் வெறுமனே அமர்ந்திருப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கும் எந்த குறிப்பிட்ட எண்ணத்தின் பின்னால் ஓடாமலும், கெட்டது என்று நீங்கள் நினைக்கும் எதையும் தவிர்க்க முயற்சிக்காமலும் இருப்பது. இரண்டும் இல்லாமல், இந்த நேரத்தை நல்லவிதமாகப் பயன்படுத்த நினைத்து, உங்கள் மனதுக்குக் கூடுதல் வேலை கொடுப்பதல்ல. ஒரு புதிய சாத்தியத்தை உங்களால் யோசிக்க முடியாது; ஏற்கனவே இருப்பதை மேம்படுத்துவதைப் பற்றி வேண்டுமானால் நீங்கள் யோசிக்கலாம். வாழ்வின் புதிய பரிமாணங்கள் உங்களுக்குப் புலப்படுவது, நீங்கள் அவற்றைத் தேடிப்போவதால் அல்ல – உங்களுக்குத் தெரியாததை நீங்கள் எப்படித் தேடுவீர்கள்? அது என்னவென்றால், உங்களுடைய தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் சிக்கிப்போகாமல் இருந்தால், புதிய சாத்தியங்கள் உங்களுக்குத் தென்படும். புதிய சாத்தியங்கள் எப்போதும் உங்களைச் சுற்றி இருந்துகொண்டிருக்கின்றன, ஆனால் அவைகள் உங்களுக்கு ஏன் தென்படுவதில்லை என்றால், உங்களுடைய தற்போதைய சூழ்நிலைகளில் நீங்கள் முழுவதுமாக மூழ்கியிருக்கிறீர்கள். அதிலும் பெரும்பாலானவர்கள், கடந்தகால சூழ்நிலைகளிலும் சிக்கியுள்ளீர்கள். பத்து வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த விஷயங்கள் இன்னமும் உங்கள் தலைக்குள் ரீங்கரித்துக்கொண்டு இருக்கின்றன. நீங்கள் வாழும் கால அளவு ஒரு பத்து இலட்சம் ஆண்டுகள் என்று இருந்தால், இந்த சாகசங்களோடு நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்க முடியும். ஆனால் மனித ஆயுட்காலத்தை நீங்கள் முழுமையாக வாழ்ந்தால்கூட, அப்போதும் அது ஒரு மிகக் குறுகிய வாழ்க்கைதான். மேலும், இப்போது உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளவில்லை என்றால், பதினான்கு நாட்களில் உங்களைப் பலி வாங்குவதற்காக இந்த வைரஸ் வேறு, ஒரு பக்கம் அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது.

சலிப்பு தாக்கும்போது, கவனமாக இருங்கள்!

உங்களைச் சுற்றி இருப்பவை அனைத்தும் மிகவும் நுட்பமான சிக்கலான ஒரு படைப்பு. இதில் உங்களுக்கு போரடிக்கிறது என்றால், என்னால் நம்பவே முடியவில்லை! ஒரே ஒரு இலை மீது நீங்கள் கவனம் செலுத்தினால், பல வருடங்கள் இதை மட்டுமே நீங்கள் செய்துகொண்டிருக்க முடியும். ஏனென்றால் அது அவ்வளவு சிக்கலாகவும், நுட்பமாகவும், புரிந்துகொள்ள முடியாமலும் இருக்கிறது. இன்னமும் எறும்புகள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் – இந்த வாழ்க்கையின் முழு பிரம்மாண்டமும், இந்த அகண்டவிரிந்த வானமும் உள்ளது. பிரபஞ்ச அளவின் உண்மையான பரிணாமத்தோடு இருக்கும் ஏதோ ஒன்றோடு நீங்கள் ஈடுபட்டால், போரடிப்பது என்பதற்கே இடமில்லை. ஏனென்றால், இது மகத்தான ஒரு பிரம்மாண்டமான விஷயமாக இருக்கிறது. உங்கள் மனதில் நீங்கள் ஒரு அற்பமான செயல்முறையில் ஈடுபட்டிருக்கும் காரணத்தால், உங்களுக்கு போரடிக்கிறது. வாழ்க்கையினால், மக்களால் உங்களுக்கு போரடித்துவிட்டதாக நீங்கள் நினைக்கவேண்டாம் – உங்களின் குப்பைகளினால் உங்களுக்கு போரடித்துள்ளது. உங்களுக்கு நடக்கும் விஷயங்களால்தான் உங்களுக்கு போரடிக்கிறது. உங்களைச் சுற்றி என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதுகூட உங்களுக்குத் தெரிவதில்லை.

சலிப்பும், மரணமும்

போரடிப்பது என்றால், ஏதோ ஒரு வழியில் நீங்கள் மரணத்தைத் தேடுகிறீர்கள். ஏதோ ஒருவிதத்தில், வாழ்க்கை வாழத் தகுதியானதாக இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். “இல்லை, இல்லை, அப்படியில்லை எனக்கு ஒரு பத்து நிமிடங்களுக்குத்தான் போரடிக்கிறது” என்று நீங்கள் கூறலாம். ஆமாம், அந்தப் பத்து நிமிடங்களுக்கு நீங்கள் இதைதான் தேடுகிறீர்கள். உங்கள் உடலமைப்பு எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்றால், உங்கள் விழிப்புணர்வில் நீங்கள் எப்படி யோசிக்கிறீர்கள், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள், இவையனைத்தும் உங்கள் உடலமைப்பிற்கு சொல்லும் செய்தி. அவை எவ்வளவு உறுதியாக, எவ்வளவு ஒருங்கமைப்பாக, எவ்வளவு நுண்ணுணர்வாக, இது எந்த அளவிற்கு ஒரு சாத்தியமாக இருக்கிறது என்பது, கணத்திற்குக் கணம் எந்த மாதிரியான செய்திகள் இதற்குள் போகிறது என்பதைப் பொறுத்தே அமைகிறது. இந்த எந்திரம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட மென்பொருள் மூலம் இயங்குவதால், நீங்கள் ஒரு மோசமான மென்பொருள் உற்பத்தியாளராக இருப்பதால், ஒரு நாளில் ஐந்து, பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை போரடிப்பது மாதிரி நீங்கள் செய்துகொண்டீர்கள். அந்த பத்து நிமிடங்களில் “இந்த வாழ்க்கை வாழ தகுதியானதாக இல்லை” என்று சொல்லிக்கொள்கிறீர்கள். அந்த செய்தி இந்த உடலமைப்பு முழுவதிற்கும் செல்கிறது.

“எனக்கு போரடிக்கிறது,” என்று நீங்கள் சொன்னால், நீங்கள் வாழ்க்கைக்கு “NO” சொல்கிறீர்கள். உங்களுக்கு கோபம் வந்தால், நீங்கள் வாழ்க்கைக்கு “NO” சொல்கிறீர்கள். நீங்கள் ஏமாற்றம் அடைந்தால் வாழ்க்கைக்கு “NO” சொல்கிறீர்கள். நீங்கள் மனக்கவலை அடைந்தால் வாழ்க்கைக்கு “NO” சொல்கிறீர்கள். நீங்கள் எரிச்சலடைந்தால் வாழ்க்கைக்கு “NO” சொல்கிறீர்கள். இப்படி மாற்றி மாற்றி கூறுவதால் இந்த உயிர்தன்மையே குழம்பிப் போகிறது, இதனால் வெறும் உடல்தன்மையே உங்களை பரபரப்பாக வைத்திருக்கும். யோகாவுடைய நோக்கம் என்னவென்றால், நீங்கள் எந்த அளவிற்கு “YES” ஆக மாறவேண்டுமென்றால், இந்த உடலையும் இந்த மனத்தினுடைய செயல்முறைகளையும் ஒரு ஓரமாக வைத்து, அதை அடித்தளங்களாக பயன்படுத்தி, வாழ்க்கையின் உயர்ந்த சாத்தியங்களை உங்களால் அணுக முடியவேண்டும். இது சரியான நேரம், சாதனாவிற்கான நேரம், இது போரடிப்பதற்கான நேரம் அல்ல, நெட்பிலிக்ஸ் பார்ப்பதற்கான நேரமும் அல்ல, வைரஸ் அறிவியலில் பட்டப்படிப்பு படிப்பதற்கான நேரமும் அல்ல. இது வாழ்க்கைக்கு நூறு சதவிகிதம் “Yes” ஆக மாறுவதற்கான நேரம். இப்படிதான் வாழ்க்கையுடைய சாத்தியங்கள் உங்களுக்குள் திறக்க முடியும், இல்லையென்றால் YES, NO, YES, NO என்று மாற்றிக்கொண்டே இருந்தால், வாழ்க்கைக்கு அது தேவையா இல்லையா என்றே தெரியாமல் போய்விடும். ஏனென்றால், நீங்கள் கூறும் செய்தி அனைத்தையும் அது உள்வாங்கிக்கொள்கிறது, நாள் முடிவில் நீங்கள் என்னதான் கேட்க வருகிறீர்கள் என்று அதற்கு புரியாமல் போய்விடும். வாழ்க்கைக்கு நீங்கள் நூறு சதவீதம் “YES" என்று, நீங்கள் தெளிவாக இந்த அமைப்பிற்கு சொல்லிவிட வேண்டும்.