தியானலிங்க பிரதிஷ்டையில் விஜி, பாரதி இருவருமே தீவிரமாக ஈடுபாட்டுடன் கலந்து கொண்ட போதும், அவர்களது கர்மவினைகள் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் அவர்களை செல்ல விடாமல் தடையாக இருப்பதை உணர்ந்தோம். தியானலிங்க பிரதிஷ்டையின்போது உடனிருந்த மக்களுக்கு நிகழ்ந்த அனுபவங்களை கேள்விப்பட்டால்,மனிதவாழ்வில் இப்படியும் நடக்கமுடியும் என்ற அளவில்கூட உங்களால் நம்பமுடியாது. காரண அறிவிற்கு அப்பாற்பட்ட அனுபவங்கள் ஒருவருக்கு ஏற்படும்போது, அதை தாங்கிக் கொள்ளவே உள்ளுக்குள் ஒருவிதமான சுதந்திரமான நிலை தேவைப்படுகிறது. எனவே கர்மயாத்திரை செல்வதன் மூலம் அந்தத் தடைகளை அகற்றலாம் என முடிவு செய்தோம்.

- சத்குரு

பாரதி: தியானலிங்க பிரதிஷ்டை இறுதிகட்டத்தை நெருங்கும்போது நாங்கள் எங்களது உடலுடன் மிகக்குறைந்தபட்ச அளவில் தொடர்பு வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நானும் விஜியும் எங்களது கர்மவினைகளை கரைத்து கொள்ளும் இறுதி முயற்சியாக ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ஒரிசா மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட இடங்களுக்கு ஒருசில வாரங்கள் கர்மயாத்திரை செல்ல முடிவானது. எங்களது முந்தைய பிறவிகளில், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடங்களுக்கு நேரில் சென்று, தியானத்தில் அமர்ந்து எங்களது கடந்தகால பிணைப்புகளை கடந்தோம். இந்த கர்மயாத்திரையின்போது ஒருசில இடங்களைப்பற்றி, அதுவரையில் நாங்கள் யாருமே அந்த இடங்களுக்கு சென்றதில்லை என்றபோதிலும், அந்த இடங்கள் எப்படி இருக்கும், அதன் அடையாளங்கள் என்ன என்பதை பற்றி சத்குரு எங்களிடம் தெள்ளத்தெளிவாக விவரிப்பார். அதுவரையில் அந்த ஊர்களின் பெயரைக்கூட கேள்விப்படாத நாங்கள், தொலைதூரத்தில் இருந்த அந்த இடங்களுக்கு நேரில் சென்றபோது, அந்த இடங்கள் சத்குரு குறிப்பிட்டிருந்த அதே அடையாளங்களுடன் அப்படியே இருந்தன. முக்தேஷ்வரில் உள்ள ஒரு சிவாலயத்தில் தங்கியிருந்தபோது, மிகச் சக்திவாய்ந்த ஆன்மீக செயல்முறைகளை சத்குரு மேற்கொண்டார். இந்த செயல்முறைகளின் தீவிரம், நாங்கள் மூன்று பேராக இருந்த போதிலும், உடலளவிலும் சக்தி அளவிலும் ஒருவர் மட்டுமே இருக்கிறோம் எனும் அளவுக்கு ஒருமை நிலையை உணரச்செய்தது. தியானலிங்க பிரதிஷ்டைக்கான ஏற்பாடுகள் துவங்கியது முதல், இந்த ஒருமை நிலையை அடையவே முழுமுயற்சி நடந்து வந்திருந்தது. பலவிதங்களிலும் இந்த ஒருமைநிலையை நாங்கள் உணர்ந்தோம். பலநேரங்களில், உடலளவில் எங்களுக்குள் பல மைல்கள் இடைவெளி இருந்தாலும், மற்ற இருவரின் சக்தி, உடல், மனம் மற்றும் உணர்ச்சிகளில் என்ன நடக்கிறது என்பதை தெளிவாக உணர முடிந்தது. இது உண்மையிலே அப்படித்தான் இருக்கிறதா என்பதையும் அவர்களிடம் கேட்டு, சரிபார்த்து, பலமுறை உறுதிசெய்து கொண்டிருக்கிறேன். காலமும் இடமும் இனிமேலும் எல்லைகளாக இருக்க முடியாது என்றே அப்போது தோன்றியது. கர்மயாத்திரை முடிந்து திரும்புகையில், அடுத்த இரு பௌர்ணமி தினங்களுக்குள் தியானலிங்கத்தை பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயித்தார் சத்குரு. அதாவது அடுத்த நாற்பத்தைந்து முதல் நாற்பத்தெட்டு நாட்களில் பிராண பிரதிஷ்டை நிறைவடைந்திருக்க வேண்டும்.

ஆனால், அது அப்படியே நடக்கவில்லை. அடுத்த பௌர்ணமி தினத்தில் தமது உடலை விட்டு நீங்கி மஹாசமாதி அடைந்தார் விஜி. தனி ஒருவராக இருந்து தியானலிங்க பிரதிஷ்டையை முழுமையாக்க வேண்டிய பெரும் சவாலான சூழலை இது சத்குருவுக்கு ஏற்படுத்தியது. நடப்பதை எல்லாம் பார்க்க, எனக்குள் சிறிது குழப்பம் உருவானது. தமது பொறுப்பை விஜி முழுமையாக உணர்ந்திருந்தாரா என எனக்குள் என்னை நானே பலமுறை கேட்டுக் கொண்டேன். தியானலிங்க பிரதிஷ்டை நிறைவடைய வேண்டிய தருணத்தில், அவர் சத்குருவிற்கு சிக்கலையே ஏற்படுத்தியிருக்கிறார் என்றே தோன்றியது. இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலை தன் குருவுக்கு ஏற்படுத்துமென்றால் விஜியின் மஹாசமாதி யால் என்ன பயன் என்றே அப்போது எனக்குத் தோன்றியது. விஜியின் இழப்பு ஏற்படுத்திய வருத்தத்தை விட அவரது பங்களிப்பு இனிமேல் இல்லை என்ற வருத்தமே எனக்கு அதிகமாக இருந்தது. நான் இப்படி சொல்வது இரக்கமற்றதாககூட உங்களுக்கு தோன்றலாம். ஆனால் என்னளவில், தியானலிங்க பிரதிஷ்டை நிகழ்ந்து கொண்டிருந்தபோது, எனது ஒரே நோக்கம் இதை முழுமையடையச் செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது. வேறு எதுவுமே ஒரு பொருட்டாக தோன்றவில்லை. என்னை சுற்றிலும் இருந்த மக்களோ, உணர்ச்சிகளோ அல்லாது வேறு எதுவாக இருந்தாலும், என்னளவில் அது இரண்டாம் பட்சமாகவே இருந்தது. இந்தத் தீவிரத்தில் இருந்ததால், விஜியின் தெய்வீகத்தன்மையையும் உடல்கடந்து செல்லும் ஆற்றலையும் ஏற்றுக்கொள்ள முடிந்த என்னால், தனது கடமையை நிறைவேற்றாமல் தற்காலிகமாக சத்குருவிற்கு நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியதை மட்டும் மன்னிக்கவே முடியவில்லை.