சத்குரு: மேலைநாடுகளில் “யோகா” என்ற வார்த்தையைச் சொன்னாலே, துரதிர்ஷ்டவசமாக, அது உடலை 'ரப்பர் பாண்ட்' போல் முறுக்கி வளைப்பது என்றோ, தலைகீழாக நிற்பது என்றோ நினைக்கின்றனர். யோகா என்பது உடற்பயிற்சி முறையல்ல. யோகா என்றால் 'சங்கமித்தல்' என்று பொருள். இன்றைய நவீன விஞ்ஞானம், இப்படைப்பு முழுவதும் ஒரே சக்திதான் என்று நிரூபித்துள்ளது. இப்படைப்பு முழுவதும் ஒரே சக்திதான் என்றால், அதை அவ்வாறு நம்மால் ஏன் உணரமுடியவில்லை?'நான் தனித்துவமானவன்' எனும் கற்பனைத் தளையினின்று விடுபட்டு, இப்படைப்பின் ஒருமைநிலையை நீங்கள் உணரத் துவங்கும் நிலைதான் யோகா. உலக மதங்கள் அனைத்தும் 'இறைவன் எங்கும் இருக்கிறான்' என்று காலம்காலமாக கூறி வந்துள்ளன. மதங்களின் 'இறைவன் எங்கும் இருக்கிறான்' என்பதும், விஞ்ஞானத்தின் 'அனைத்தும் ஒரே சக்தியின் வெளிப்பாடு' என்பதும் ஒன்றுதானே? இவையிரண்டும் ஒரே நிதர்சனம்தான். கணித முறைப்படி இதை நிரூபித்தால், அது விஞ்ஞானம். இதை நம்பிக்கையாய் பின்பற்றினால், அது மதம். அதுவே இந்நிலையை அடைவதற்கு வழிவகுத்தால், அது யோகா. எனவே 'எது யோகா? எது யோகா இல்லை?' என்ற கேள்விக்கு அர்த்தமில்லை.

வாழ்வின் செயல்முறைகளைப் பயன்படுத்தி உங்கள் வரையறைகளைக் கடந்து சென்றால், அது யோகா. நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும், சுவாசிப்பது, அமர்வது, நிற்பது, உண்பது, நடப்பது, வேலை செய்வது என எல்லாமே யோகாவாக ஆகலாம்.

ஹட யோகா: உங்கள் உடற்சக்தியை வழி நடத்துதல்

யோக அனுபவத்தை பெறுவதற்காக, அதாவது 'படைப்போடு சங்கமித்தல்', 'எல்லையற்ற நிலையை உணர்தல்' எனும் அனுபவத்தை பெறுவதற்காக, நம் சக்திகளை தக்கமுறையில் கையாண்டு நம் உடலமைப்பை குறிப்பிட்ட வகையில் செலுத்துவோம். 'உடல் அமைவுகள்' (Physical postures) என்பது இம்முயற்சியின் ஒரு அங்கம். ஹடயோகா என்பது உடற்பயிற்சி அல்ல. நம் உடலமைப்பின் இயக்க அடிப்படையை உணர்ந்து, தேவையான சூழ்நிலையை உருவாக்கி, அதன்பின் உடலை (அ) உடல் அமைவுகளைப் பயன்படுத்தி உடற்சக்தியை ஒரு குறிப்பிட்ட திசைநோக்கிச் செலுத்துவதுதான் 'ஹடயோகா' அல்லது 'யோகாசனம்'. .

ஹட யோகா: ஒரு ஆயத்த வழிமுறை

ஹடயோகா என்பது யோகாவிற்கு ஒரு ஆயத்த வழிமுறை. 'ஹ' எனும் எழுத்து சூரியனை குறிக்கும். 'த' சந்திரனை குறிக்கும். ஹட என்றால், உங்களுக்குள் உள்ள சூரிய-சந்திரனை (அ) பிங்களா - ஈடா வை சமநிலைக்கு கொண்டு வரும் யோகமுறை என்று பொருள். ஹடயோகத்தை ஆழமாக உணர்ந்து பயன்படுத்தும்போது, அது குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளைக் கடந்து செல்வதற்கும் கூட உங்களுக்கு உதவும். என்றாலும், அடிப்படையில் அது உங்கள் உடலை ஒரு உயர்ந்த சாத்தியத்திற்கு தயார்படுத்தும் வழி.

ஒருவர்கிரியா யோகா,செய்ய விரும்பினால், முதலில் அவரை ஹடயோகா மூலம் ஆயத்தப்படுத்துவோம். ஏனெனில் தயார்நிலையில் இல்லாவிட்டால், உயர் பரிமாண சக்திநிலைகளை அவ்வுடல் தாங்காது... உடைந்துபோகும். தயார்நிலையில் இல்லாத குழாயில் அதிகளவு அழுத்தத்தை செலுத்தும்போது, அதைத் தாங்கமுடியாமல் அது உடைவது போல்தான் இதுவும். அதனால் ஹட யோகா என்பது, உயர் அழுத்தத்தை ஏற்பதற்கு அக்குழாயை தயார்செய்ய மேற்கொள்ளும் வழிமுறைகள் போல் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இதற்கு வேறு பரிமாணங்களும் உண்டு. ஆனால் எளிதாகச் சொல்வதானால், 'ஒருவர் எப்படி அமர்ந்திருக்கிறார்' என்பதை வைத்தே, அவருக்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் சொல்லிவிட முடியும். உங்களை நீங்கள் கவனித்திருந்தால், கோபமாக இருக்கும்போது நீங்கள் ஒருவிதமாக அமர்வீர்கள், சந்தோஷமாக இருக்கும்போது வேறுவிதமாக அமர்வீர்கள், சோகத்தில் அமிழ்ந்தால் வேறொரு விதமாக அமர்வீர்கள். விழிப்புணர்வு நிலை ஒவ்வொன்றிற்கும் அல்லது உங்கள் மன, உணர்வு நிலைகள் ஒவ்வொன்றிற்கும் ஏற்றவாறு, இயல்பாகவே உங்கள் உடல் குறிப்பிட்ட விதத்தில் அமரும். இந்த விஞ்ஞானத்தின் மறுபக்கம்தான் யோக விஞ்ஞானம். அதாவது, விழிப்புணர்வோடு உங்கள் உடலை குறிப்பிட்ட சில 'அமர்வு நிலை' (ஆசனங்களில்) அமர்த்தும்போது, உங்கள் விழிப்புணர்வை நீங்கள் மேலெழும்பச் செய்யமுடியும்.

ஆனால் இன்று பல இடங்களில் நீங்கள் பார்ப்பது, வெறும் அதன் கூடு மட்டும்தான். ஏதோ உடற்பயிற்சி போல், ஹடயோகத்தை உடலளவில் மட்டும் செய்து வருகிறார்கள்.

ஹட யோகா உயிர்ப்போடு நடக்கவேண்டும், உயிரோட்டம் நிறைந்த செயல்முறையாய் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் வாழும் குருவுடன் இருக்கவேண்டும் என்று காலம்காலமாக தேடல் நடக்கிறது. வெறும் மந்தமான உடற்பயிற்சியாக இல்லாமல், அதை உயிரோட்டம் நிறைந்த ஒரு செயல்முறையாய் அவர் மாற்றுவார் என்பதற்காக!

பாரம்பரிய ஹடயோகா

கடந்த 20 ஆண்டுகளில் மேலை நாடுகளில் யோகா பரவி புகழ் அடைந்திருக்கிறது. அவ்விடங்களில் யோகா பயிற்றுவிக்கும் முறையில் பல குறைபாடுகள் இருந்தாலும், அந்தக் குறுகிய நிலையிலும், யோகா செய்வதால் ஏற்பட்டிருக்கும் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை யாரும் மறுக்கமுடியாது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், உங்கள் வாழ்க்கைமுறை எப்படிப்பட்டதாக இருந்தாலும் இது பொருந்தும். யோகா பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை இன்று பெருமளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், அறிவியல் சமூகம் மெதுவாக யோகாவின் ஆழத்தையும் பரிமாணத்தையும் புரிந்துகொள்ள ஆரம்பித்திருப்பதுதான். ஆனால் தவறான, நெறிபிறழ்ந்த யோகா பரவினால், இன்னும் பதினைந்தே ஆண்டுகளில், 'யோகா எப்படி மனித நல்வாழ்விற்கு கேடு விளைவிக்கிறது' என்பதை ஆதாரப்பூர்வமாக அறிவியல் ஆய்வுகள் வெளியிடும். பின் அதுவே இதன் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும்.

அதனால் பாரம்பரிய யோகமுறையை சிறிதும் பிறழாமல், அதன் உண்மையான வடிவத்தில் மீண்டும் நிலைநிறுத்துவது மிக அவசியம். சரியான சூழ்நிலையில், பணிவுடனும், எல்லாவற்றையும் அரவணைக்கும் உணர்வுடனும் இது பயிற்றுவிக்கப்பட்டால், இது ஒரு அற்புதமான செயல்முறையாக உருவெடுக்கும். இதன்மூலம், அந்த தெய்வீகத்தை வரவேற்பதற்கு எல்லா வகையிலும் தகுதிபெற்ற ஒரு அற்புதமான கருவியாய் நீங்கள் உருமாறுவீர்கள்.

ஹட யோகாவின் சில குறிப்பிட்ட பரிமாணங்கள் இன்று கிட்டத்தட்ட அழிந்தேவிட்டன. சில இடங்களில் அவை இன்றும் இருக்கிறது என்றாலும், பொதுவாக அறியப்பட்ட இடங்களில் அவை வழக்கத்தில் இல்லை. அந்தப் பரிமாணங்களை மீண்டும் வழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

இது ஒரு சக்தி வாய்ந்த வாழ்க்கை முறை. சக்தி என்றால் மற்றவர் மீது செலுத்தக்கூடியது அல்ல. உங்கள் உயிரை அணுகுவதற்கான சக்தி.