சாதாரணமான ஒரு போட்டியாளரான சத்குரு, நிறைய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, பலவற்றில் உயர்வும் அடைந்திருக்கிறார். அவருடைய கால அட்டவணை ஒத்துழைத்தால், வாலிபால், பில்லியர்ட்ஸ், க்ரிக்கெட், பறக்கும் தட்டு போன்ற பல விளையாட்டுகளை விளையாட எப்பொழுதும் தயாராக இருப்பார்.

சமீபத்தில் அமெரிக்காவில் சத்குரு முதல் முறையாக கோல்ஃப் விளையாடினார். அது முதல், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், மீட்டிங்கிற்கும் கான்ஃப்ரன்ஸுக்கும் இடையில், உலகில் எந்த மூலையில் இருந்தாலும், சிறிது நேரம் விளையாடத் தவறியதில்லை. இங்கே இந்த விளையாட்டைப் பற்றியும், இந்த விளையாட்டினால் தான் அடைந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார்.

சத்குரு: கோல்ஃப் விளையாட என்னை தூண்டுவது என்னவென்றால் அந்த அதிசயத்தக்க பந்துதான். வேறு எந்த விதமான பந்தும் – அதாவது க்ரிக்கெட் அல்ல ஹாக்கியில் உபயோகப்படுத்தும் பந்துகளுக்கு எழும்பிப் பாயும் தன்மை இல்லை. நான் முதன் முதலில் விளையாட ஆரம்பித்த பொழுது, கோல்ஃப் விளையாடும் சிலரிடம் கேட்டேன். “போட்டிகளில் குறி பார்த்து அடித்தால் பந்து எவ்வளவு தூரம் போகும் வாய்ப்பு உண்டு?” “நல்ல குறி பார்த்து, வேகமாக அடித்தால் 300 அடிகள் வரை போகலாம். அதற்கும் மேலேயும் போக வாய்ப்பு உண்டு ஆனால் 300 அடிகள் என்பது நல்ல தூரம் என்றும் 200 அடிக்கு மேலேயே நல்ல தூரம்தான் என்றுதான் கணக்கு என்றும் சொன்னார்கள். சரியென்று நான் குறி பார்த்து முதல் முறை அடித்த பொழுது சுமார் 325 அடிகளில் சென்று விழுந்தது. ஆனால் அவர்களோ “சத்குரு இது சாத்தியமே இல்லை, நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் விளையாடி இருக்கிறீர்கள்” என்றார்கள். நானோ நிச்சயமாக எனக்கு இந்த விளையாட்டு பரிச்சயமில்லை ஆனால் இந்த பந்தை குறி பார்த்து இவ்வளவு தூரத்திற்கு அப்பால் அடிக்க வேண்டும் என்று சொன்னால் அதை சரியாக அனுப்பி வைப்பேன். வாழ்க்கையும் அப்படித்தான் என்னைப் பொறுத்த வரை. இதை இப்படி செய்ய வேண்டும், இவ்வளவு தூரம் போக வேண்டும் என்றால் அங்கு எப்படி அனுப்புவது என்று தெரியும், அதற்கு வேண்டியதை செய்து முடிப்பேன். அதைத் தாண்டி வேறு ஒன்றும் தெரியாது. அதுதான் எல்லோருக்கும் தெரிய வேண்டும். இல்லையென்றால் எல்லா விஷயமும் தெரிந்து இருந்தும், எப்படி அதை செய்து முடிப்பது என்பதே தெரியாது.

என்னுடன் இருந்தவர்கள் மூன்று வருடங்களாக கோல்ஃப் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். கோல்ஃப் பற்றி எல்லா விஷய ஞானமும் உண்டு. கோல்ஃப் பற்றி நிறைய படித்து இருக்கிறார்கள், தினமும் கோல்ஃப் கோர்ஸ் செல்வார்கள், கோல்ஃப் மட்டையை எந்த பொருளில் எப்படி செய்கிறார்கள் – எல்லா தொழில் நுட்பங்களும் தெரியும் – ஆனால் பந்தை எப்படி அடிப்பது என்று மட்டும் தெரியாது.

வாழ்வில் எளிமையான விஷயங்களைக் கூட, உள் நிலை சீராக இல்லாத்தால், மக்களால் செய்ய முடிவதில்லை. உள் நிலையை சீர் செய்துவிட்டால், எப்படி ஒருவருக்கு ஸ்பூனும்-முள்ளும் வைத்து சுலபமாக உணவு உண்ணத் தெரிகிறதோ அதே போல் ஒரு கோல்ஃப் பந்தை அதன் குழிக்குள் அடிக்கவும் தெரிந்து விடும். பெரிய விஷயமே இல்லை. சிறிது பழக்கம் வேண்டி இருக்கலாம், ஆனால் அவ்வளவு கஷ்டப்படத் தேவையில்லை. எப்படி நிற்க வேண்டும், எப்படி மட்டையை பிடித்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. அந்த அளவிற்கான புத்திசாலித்தனம் எல்லோரிடமும் உண்டு. உணவை எப்படி வாயில்தான் போட வேண்டும் என்ற புத்திக்கூர்மையும், கட்டுப்பாடும் எல்லோரிடமும் உண்டோ, அதே புத்திக்கூர்மையும், கட்டுப்பாடும் கோல்ஃப் விளையாடும்போதும் இருக்கும்.

வாழ்க்கையை கஷ்டப்படாமல் வாழ முடியும். உள் நிலை சீராக இல்லாததால்தான் எல்லாவற்றிற்கும் ப்ரயத்தனம் செய்ய வேண்டி உள்ளது.

ஒரு மென்மையான ஆட்டம்


சத்குரு: கோல்ஃப் ஒரு மிக மென்மையான விளையாட்டு. அதன் எளிமை எல்லோரையும் விளையாடத்தூண்டும், ஆனால் அதன் மென்மை அவர்களை ஏமாற்றும். இந்த விளையாட்டைப் பொறுத்த வரை இதை யாருடனும் விளையாடுவது இல்லை என்பது மிக முக்கியமான விஷயம். இது பெரும்பாலும் உங்களைப் பற்றியது, கோல்ஃப் விளையாடும் இடம், மற்றும் சூழ்நிலையைப் பற்றியது. போட்டி என்றாலும், அடிப்படையில் இவ்விளையாட்டு உங்களைப் பற்றியது. க்ரிக்கெட் விளையாட்டில் யாரோ பந்து வீசுவார்கள், நீங்கள் அடிக்க மட்டுமே வேண்டும். கோல்ஃபில் பந்து கீழே இருக்கும். பார்த்தால் முட்டாள்தனமாகவும், எளிமையான விளையாட்டாகவும் இருக்கும், ஆனால் விளையாடும் பொழுதுதான் தெரியும் எவ்வளவு மென்மையான ஒன்று என. யாருடனும் போட்டி போடவே தேவையில்லை. உங்களுடைய உடலும் உங்களுடைய மனமுமே உங்களுக்கு எதிர்மறையாக வேலை செய்யும். அதிலிருந்து மீள தேர்ச்சி பெற வேண்டும். மிக எளிமையான விஷயத்தைச் செய்ய முடிய வில்லையென்றால், உங்களுக்கே அது முட்டாள்தனமாக தெரியும். மற்ற போட்டிகளைப்போல இதில் ஒன்றும் உடற்கட்டோ, சுறுசுறுப்போ தேவையில்லை, ஆனாலும் உங்களுக்கு இது மிக நுட்பமான சவாலாக இருக்கும்.

பல விதங்களில், கோல்ஃப் என்பது எதிர்காலத்தின் விளையாட்டு. இந்த விளையாட்டைப் பற்றி புரிதல் ஏற்பட்டால், மக்கள் இதை விளையாட ஆரம்பிப்பார்கள். இதன் வெற்றி அடைவது என்பது உடல் திறமையை விட புத்திக்கூர்மை சார்ந்த விஷயம்.

நான் வெகு நாட்களாக இந்த உடல்-மனம் விவகாரத்தில் இருப்பதால் எனக்கு இதைப் பற்றி மிக நன்றாக தெரியும். பெரும்பாலும் இந்த உடல் நீங்கள் நினைப்பது போல் எப்பொழுதும் நடப்பதில்லை. கோல்ஃப் விளையாடும்பொழுது இதை நன்றாக உணர முடியும், ஏனென்றால் பந்தை அடிக்கும் பொழுது நீங்கள் ஒரு இடத்தை நோக்கி அடித்தால், அது வேறு எங்கோ போகும். மற்ற விளையாட்டுகளில் இதை உடனே பார்க்க முடியாது ஏனென்றால் எல்லாமே துரிதமாக நடக்கின்றது. கால் பந்து விளையாட்டில் பத்து பேர் உங்களை தடுக்க முயன்று கொண்டிருப்பார்கள். ஆனால் கோல்ஃபில் எல்லாமே மெதுவாக இயங்குகிறது, அதனால் நன்றாக புரியும்.

வயதானவர்களுக்கு ஏற்ற விளையாட்டு ஆனால் இப்பொழுது இளைஞர்களும் நாட்டம் கொண்டு வருகிறார்கள். முன்பைப் போல் இளைஞர்களுக்கு இப்பொழுது உடல் உறுதி இல்லை, ஆதலால் கோல்ஃப் சீக்கிரமாக வரும். தன்னையே வெகு உயர்வாக நினைத்துள்ள மக்களை இது சிறிது கீழே இழுத்து வரும். அது நல்லது அல்லவா?

கோல்ஃபில் சிறிய விஷயம் கூட பெரிதுதான் – எண்ணிக்கை மட்டுமல்ல, எல்லா விஷயங்களும். ஏதோ பெரிதாக செய்ய வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருப்பீர்கள்.

என்றோ ஒரு நாள் நீங்கள் எல்லாம் புரிந்து கொண்டு இந்த மாதிரிதான் இன்று குறி வைக்க வேண்டும், இந்த மட்டையைத்தான் உபயோகப்படுத்த வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அன்று எதுவுமே உதவாது. இது எங்கோ உள்ள நக்ஷத்திரங்களினால் அல்ல, அது ஒரு ஒழுங்கு-முறை – அப்படித்தான் நடக்கும். இந்த விழிப்புணர்வு என்னுள் எப்பொழுதும், எது செய்தாலும் இருக்கும். சில நாட்களில் நான் சில காரியங்களை எடுத்து செய்ய மாட்டேன், ஏனென்றால் எனக்கு தெரியும் அந்த நாள் என்னுடையது அல்ல என்று. கோல்ஃபில் இது நன்றாகத் தெரியும். இது புரிந்தவர்களுக்கு ஒரு நாளில் எல்லாமே நன்றாக நடந்தால், இது ஏதோ அதிர்ஷ்டமான நாள் அல்ல, ஆனால் உடல்-மனம் இரண்டுமே ஒன்றாக வேலை செய்கிறது என்று தெரியும். ஒரு மனிதனுக்கு தன்னை புரிந்து கொள்ளக் கூடிய விழிப்புணர்வு இல்லையெனில், கோல்ஃப் அவனுக்கு ஒரு கருவியாக இருக்க வாய்ப்பு உண்டு.