சத்குருவிற்கு மோட்டார் சைக்கிளின் மேல் உள்ள தீவிர உணர்ச்சி இன்றும், அன்று கல்லூரி நாட்களில் இருந்தது போலவே சற்றும் குறையாமல் இருக்கின்றது. எப்படி அது ஒரு வாகனம் என்பதை விட மிக அதிகமாக அவருக்காக உழைத்தது என்பதை அவர் பகிர்ந்து கொள்கிறார்.

நான் மோட்டார் சைக்கிளிலேயே வாழ்ந்தேன்.

சத்குரு: ஒரு காலத்தில் நான் மோட்டார் சைக்கிளிலேயே வாழ்ந்தேன் என்றால் மிகையாகாது. நான் அதில் எந்த இடத்திற்குச் சென்றாலும், அந்த ஊரில் தங்குவதற்காக என்று எந்த ஹோட்டலையும் தேடிச் செல்லவே மாட்டேன். மோட்டார் சைக்கிளிலேயே படுத்து தூங்கி விடுவேன். பையை அதன் ஹேண்டில்பாரில் குறுக்கு பாரிலும் தொங்க விட்டு-விட்டு, படுத்து நன்றாக தூங்கிவிடுவேன். பலர் என்னிடம் கேட்டு இருக்கிறார்கள், ‘உங்களால் எப்படி கீழே விழாமல் தூங்க முடிகிறது?” என்று. நான் “கவலைப் படாதீர்கள். நான் நடக்கும் பொழுது கூட விழும் சாத்தியம் உண்டு ஆனால் மோட்டார் சைக்கிளிலிருந்து விழவே மாட்டேன்” என்று சொல்வேன். அது என் வாழ்க்கையின் மிகப்பெரிய அம்சமாக இருந்தது

அந்த மரத்தடியில் எல்லோரும் கூடிப் பேசும்பொழுது கூட மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்குவது என்பது ஒரு பாவச்செயல் மாதிரி.

ஜாவா என்ற பெயர் கொண்ட ஒரு மோட்டார் சைக்கிள் மைசூரில் மிக பிரபலம். மோட்டார் சைக்கிள் ஆர்வலர்கள் பலர் இந்த வண்டியில் உள்ள காதலினால், அதன் எஞ்சினை ஏதோ செய்து அதி வேகமாக விரட்டவே பார்த்துக்கொண்டிருப்பார்கள். கல்லூரி வளாகத்திலுள்ள பெரிய அரச மரத்தடியின் நிழலில் – மோட்டார் சைக்கிளை விட்டு இறங்காமல் உலக விசேஷங்களைப் பற்றி தர்க்கம் செய்து கொண்டிருப்போம். வண்டியிலிருந்து இறங்குவது ஒரு பாவச்செயலுக்கு சமம். சிலர் அதை அரச மரத்தடி க்ளப் என்று அழைத்தார்கள். அந்தப் பெயரில் ஒரு சிறு மாதப்பத்திரிக்கை கூட வெளியிட்டோம்.

உலகத்தை சுற்றுவது

ஒரு காலத்தில் நான் மோட்டார் சைக்கிளிலேயே குறுக்கும் நெடுக்குமாக இந்தியாவை சுற்றி இருக்கிறேன். ஒரு முறை நேபாளம் வரை சென்று விட்டு, சான்றிதழ்கள் இல்லாததால், எல்லையை கடக்க முடியாமல், திரும்பி இருக்கிறேன். தேச எல்லையைத் தாண்ட சில சான்றிதழ்கள் தேவை என்பதே தெரியாது. “என்ன சான்றிதழ், என்னிடம் மோட்டார் சைக்கிளின் லைசென்ஸ் தவிர வேறு ஒன்றும் கிடையாது” என்றேன். அதற்கு “பாஸ்போர்ட் தேவை” என்று அவர்கள் சொன்னார்கள். நானோ எனது மோட்டார் சைக்கிளில் நான் எங்கு வேண்டுமானலும் செல்ல முடியும் என்ற நினைப்பில் இருந்தேன். எனக்கு பாஸ்போர்ட் என்பது என்ன என்பதே தெரியாது. வேறு வழியில் போகலாம் என்றால் அங்கேயும் எல்லை சுங்க அதிகாரிகள் தடுத்து விட்டார்கள்.

உலகை எனது மோட்டார் சைக்கிளில் சுற்றுவது எனது கனவு.

உலகை எனது மோட்டார் சைக்கிளில் சுற்ற வேண்டுமென்பது எனது கனவு. நான் ஏதோ சில வியாபாரம் செய்து விட்டு, பணம் சேர்த்துக் கொண்டு, வண்டியில் கிளம்பி விட வேண்டும் என்றே நான் நினைத்து இருந்தேன். நல்ல கண்டிஷனில் வண்டியை வைத்து இருந்தேன், நினைத்த பொழுது வியாபரத்தை யாரிடமாவது விற்று விட்டு, வண்டியில் கிளம்ப தயாராக இருந்தேன். வேறு ஏதோ ஒன்று நடந்ததால் எனது ஆசை நிறைவேறவே இல்லை.

பிற்காலத்தில், எங்களின் கல்யாணத்துக்குப் பிறகு மூன்று வருடங்கள், நானும் விஜியும் மோட்டார் சைக்கிளிலேயே வாழ்ந்தோம். ஒரு வருடத்தில் 60,000 கிலோமீட்டருக்கு மேலே பிரயாணம் செய்தோம். சில சமயங்களில் ஏதோ ஒரு காரணத்திற்காகவும், பல சமயங்களில் காரணமேயில்லாமல் சுற்றினோம். சுற்ற வேண்டும் என்று தோன்றினால், நேரம் பார்க்காமல், நட்ட நடுராத்திரியில் கூட கிளம்பி விடுவோம், மும்பை எல்லை வரை சென்றுவிட்டு, மைசூர் திரும்புவோம்..