சத்குரு: என் சிறு வயது முதலே எதைப் பார்த்தாலும் எனது கண்ணின் பின்ணணியில் ஒரு மலைத்தொடர் தெரிந்து கொண்டேயிருக்கும். எனக்கு பதினாறு வயது இருக்கும், சில நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, அவர்கள் எனக்கு ஏதோ கிறுக்கு பிடித்து விட்டது என்றும், மலைகளெல்லாம் தெரியாது என்றும் சொன்னார்கள். அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது என்னைத் தவிர வேறு எவருக்கும் அந்த மலைத்தொடர் தெரியவில்லை என்று. சில நேரம் அந்த மலைத்தொடர் எங்கு உள்ளது என்பதை தேடத்தோன்றும், ஆனால் அதை பொருட்படுத்தாமல் தள்ளிவிடுவேன். அதாவது உங்கள் மூக்குக்கண்ணாடியில் ஏதேனும் அழுக்கு ஒட்டிக்கொண்டிருந்தால், சில நிமிடங்களில் அது பழகிப் போய்விடும் அல்லவா அது போலத்தான். வெகு நாட்களுக்குப் பிறகு, எனது பூர்வ ஜென்மங்களின் ஞாபக அலை அடித்த பின், தியானலிங்கத்திற்காக இடம் தேடும் பொழுதுதான், அந்த மலை உச்சியைத் தேட ஆரம்பித்தேன்.

நான் பல இடங்களில் தேடினேன். எனது மோட்டார் பைக்கில் கோவாவிலிருந்து கன்னியாகுமரி வரை நான்கு முறையேனும் அங்கிருந்து இங்கு, இங்கிருந்து அங்கு என்று அலைந்திருப்பேன். அது மேற்கு தொடர்ச்சி மலையில்தான் எங்கோ இருக்குமென்று நம்பினேன். மேலே கார்வாரிலிருந்து கர்நாடகா – கேரளா பார்டர் வரை ஒவ்வொரு தெரு, மண் பாதை விடாமல் ஆயிரம் கிலோமீட்டராவது மோட்டார் சைக்கிளில் தேடி இருப்பேன்.

பிறகு தற்செயலாக கோயம்பத்தூரின் வெளியே உள்ள ஒரு கிராமத்திற்கு வந்தேன். வண்டியை ஒரு வளைவில் செலுத்தும் பொழுது, வெள்ளையங்கிரியின் ஏழாவது மலை தெரிந்தது. சிறு வயது முதல் என் கண்களில் தெரிந்த அந்த மலை இதோ என் கண் முன்னே! அந்த நொடி முதல் அந்த மலையின் நிழல் மறைந்து விட்டது.

உலகிலேயே எது மிக உயர்ந்த மலை என்று என்னிடம் கேட்டால், வெள்ளையங்கிரிதான் என்று நான் சொல்வேன், ஏனென்றால் எனக்கு இவை வெறும் மலைத்தொடர் அல்ல - நான் பிறந்தது முதல் எனது கண்ணுக்குள்ளிருந்து வாட்டிய இடம், என்னுள்ளே இருந்து கொண்டு எனக்கு மட்டுமே வழிகாட்டியாக இருந்த ஒன்று. இவை வெறும் பாறைகள் அல்ல, எனக்கு தியானலிங்கத்தை உருவாக்கத் தேவையான ஞானத்தை அளித்த ஒரு கிடங்கு.