“உங்கள் வாழ்வில் நடக்கும் எவ்வளவு சிறிய செயலாக இருந்தாலும் சரி, அதில் எந்த அளவுக்கு கவனம் செலுத்த விரும்புகிறீர்கள் என்பதை பொறுத்தே ஒரு தனிப்பட்ட உயிர் எவ்வளவு வளமாக அல்லது வாட்டமாக இருக்கமுடியும் என்பது அமைகிறது. இதையே நாம் யோகா என்கிறோம். எப்படி அமர்வது, எப்படி நிற்பது, எப்படி சுவாசிப்பது, எப்படி எல்லா செயல்களிலும் ஈடுபடுகிறீர்கள், உங்கள் இதயதுடிப்பு எப்படி இருக்க வேண்டும், உங்களுக்குள் இருக்கும் உயிர் எப்படி உயிர்ப்புடன் நடக்க வேண்டும் - என அனைத்தையும் கவனிக்கும்போது நீங்கள் யோக நிலையில் இருக்கிறீர்கள்.”

– சத்குரு

கவனத்தில் கொள்ள வேண்டிய கவனம்!

சத்குரு: ஒருவரால் யோகியாக இருக்கமுடிகிறது, ஆனால் இன்னொருவர் அப்படி இல்லை. இதற்கு ஒரே காரணம் கவனமின்மையே. ஒருவரால் கலைத்துறையில் பிரமாதமாக ஜொலிக்க முடிகிறது மற்றொருவர் அப்படியில்லை.. ஏன்.? இதுவும் கவனமின்மையே. ஒருவர் குறிபார்த்து சுடுவதில் வல்லவராக இருக்கிறார், வேறு ஒருவரால் அது முடியவில்லை. ஏன்..? கவனமின்மையே காரணம் என்பது தெளிவாகிறதுதானே. மிக எளிமையானதிலிருந்து மிக நுட்பமானதுவரை எதுவாக இருந்தாலும், ஒருவர் அதை இன்னும் அடையாமல் இருக்க காரணம், கவனம் குறைவாக இருப்பது மட்டுமே.

உங்களது கவனம் இப்போது எந்த அளவில் இருந்தாலும், இதுவே உங்களால் முடிந்த அதிகபட்ச கவனிக்கும் திறனல்ல. உங்களிடம் தேவைக்கு அதிகமாகவே கவனம் இருக்கிறது. ஆனால் அது உங்களிடம் இருக்கிறது என்ற அறிகுறிகூட இல்லாமல் இருப்பதால் இப்போது உங்களால் அணுக முடியாத நிலையில் இருக்கிறது. எனவே குறைந்தபட்சமாக, இப்போது உங்களிடம் உள்ள முழுகவனத்தையும் பயன்படுத்த வேண்டும்தானே. மனதளவிலான உங்கள் கவனம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை கவனித்துப்பார்த்தால், உங்கள் வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில், செயல்களில், நேரங்களில், கவனம் என்பது வெவ்வேறு நிலைகளில் இருக்கிறது. அலுவலகத்தில் ஒருவிதமான நிலையில் உங்கள் கவனம் இருக்கும். தியானத்தில் ஈடுபடும்போது வேறு ஒரு நிலையில், உங்களுக்கு விருப்பமான உணவை உண்ணும்போது முற்றிலும் வேறான நிலையில் என உங்கள் கவனம் பலநிலைகளில் மாறுபடுகிறது. இதுவரையில் உங்கள் வாழ்நாளில் எதாவது ஒரு சூழ்நிலையில் உங்களின் அதிகபட்சமான கவனத்தை செலுத்தி இருப்பீர்கள். ஆனால் அதுவே உங்களது கவனத்தின் உச்சம் அல்ல. அதைவிட அதிகமான கவனம் உங்களிடம் இன்னும் இருக்கிறது.

சிலவருடங்களுக்கு முன், மங்களூருக்கும் சுப்ரமண்யா-வுக்கும் இடைப்பட்ட மலைப்பகுதியில் உள்ள இருப்புப்பாதை (ரயில் தண்டவாளம்) வழியாக ஒரு சிறுகுழுவை மலையேற்றம் அழைத்துச் சென்றிருந்தோம். இந்த பாதை நெடுக சுமார் 300க்கும் மேற்பட்ட பாலங்களும், 100க்கும் மேற்பட்ட குகைப்பாலங்களுமாக நிறைந்திருக்கும். பயணத்தின் பெரும்பாலான நேரங்களில், ஒன்று பாலத்தின் மீது இருப்போம் அல்லது குகைக்குள் இருப்போம் என அற்புதமான ஒரு மலைப்பயணம் அது. ஒருசில குகைகள் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை. பகல் நேரத்திலேயே, உங்கள் கைகளை உங்களாலேயே பார்க்க முடியாத அளவுக்கு உள்ளுக்குள் கும்மிருட்டாக இருக்கும். அநேகமாக பெரும்பாலான மக்களுக்கு இப்படிப்பட்ட இருட்டான இடத்தில் இருக்கும் வாய்ப்பே அமைந்திருக்காது. நட்சத்திரங்களின் மினுமினுப்பு கூட, குறைந்தபட்சமாக பார்வை புலன் இருக்கிறது என்பதையாவது காட்டும். ஆனால் இந்த குகைகளில் நுழைந்த சிறிது நேரத்திற்கு பிறகு, நம் கண்கள் திறந்துதான் இருக்கிறதா என்ற சந்தேகமே உங்களுக்கு வந்துவிடும். அவ்வளவு இருட்டாக இருக்கும்.

அந்த குகைகளுக்குள் செயற்கையாக எந்த வெளிச்சத்தையும் உருவாக்காமல் அப்படியே அனைவரையும் நடக்கச்செய்தோம். முதலில் கொஞ்சம் மிரட்சியாக இருந்தாலும், நடக்கத் துவங்கிய பின் அனைவருமே இருள் தந்த புது ஆனந்த அனுபவத்தில் திளைத்தனர். நீங்கள் இப்படிப்பட்ட ஒரு இருளான இடத்தில் இருக்கும் சூழ்நிலை உருவானால் இயல்பாகவே உங்கள் கவனம் கூர்மையாகும். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு ஷணத்திலும் இதே கவனத்தைத் தொடர முடிந்தால் நீங்களே ஒளிரத் துவங்குவீர்கள்.

நமது ஆசிரமவாசிகளை, ஒவ்வொரு சிறிய அம்சத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று தொடர்ந்து துரத்தி கொண்டே இருப்போம். இது வெறுமே தூய்மைக்காகவோ, அந்த இடத்தின் அழகுக்கு மெருகூட்டவோ மட்டுமல்லாமல், சுற்றியுள்ள அனைத்தின் மீதும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஒரு சிறிய கல் புரண்டு கிடந்தாலும், அது உங்கள் கவனத்திற்கு வரவேண்டும்.

அந்தக் கல் பற்றியல்ல நமது கவனம், நமது கவனம் சிறு கல் புரண்டிருந்தாலும் கவனிக்குமளவு நாம் கூர்மையாக இருக்க வேண்டும் என்பதே. உங்கள் கவனத்தை ஒரு உச்சத்திற்கு கொண்டு வர முடிந்தால், எப்போதுமே அந்த கூர்மையான கவன உணர்வுடன் இருக்க பழகிய பின், உங்களுக்குள் எதை கவனிக்க வேண்டும், எதை கவனிக்காமல் விடவேண்டும் எனும் வழிமுறைகளை நாம் கற்றுத்தர முடியும். உங்கள் கவனம் தீவிரமடையும்போது, அதை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

உங்கள் வாழ்க்கை எங்கே துவங்குகிறது, எங்கே முடிகிறது என்பதே தெரியவில்லையே என்பது உங்கள் கவனத்திற்கு வந்தபோதுதான் உங்களுக்கு ஆன்மீக வாய்ப்பு நிகழ்ந்தது. நீங்கள் அதுவரையில் செய்து கொண்டிருந்ததே எல்லாமாக, வாழ்க்கையே இதுதான் என்பதைப்போல எதையோ செய்து கொண்டிருந்த நிலையில், கொஞ்சம் கவனித்துப் பார்த்தபோது, "இதுவல்லவே நமக்குத் தேவையானது" என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

ஆன்மீகம் இருக்கும் திசையில் நீங்கள் முதல்படி எடுத்து வைத்ததே, ஒரு குறிப்பிட்டவிதமான கவனம் ஏற்பட்டதால்தான். நீங்கள் ஈடுபடும் அனைத்திலும் உங்கள் கவனத்தை மேம்படுத்தும்போது, உங்கள் கவனிக்கும் திறன் கூர்மையானதாக மேம்படும்போது, அதை பயன்படுத்தி அற்புதங்களையே நிகழ்த்த முடியும்.