3 நாட்களில் கற்றுத்தரப்படும் எளிய-சக்திவாய்ந்த பயிற்சியான 'உயிர்நோக்கம்' வகுப்புகள் சென்னையில் ஜூலை 18 முதல் துவங்கின. ஈஷாங்கா ஆசிரியர் ஹரிப்ரியா, தான் வழங்கிய உயிர்நோக்கம் வகுப்பு, 3 நாட்களில் தன்னை எப்படியெல்லாம் உயர்த்தியது என்பதை இங்கே பகிர்கிறார்!

நமஸ்காரம்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு வடிவமைத்து வழங்கியுள்ள 'ஈஷா உயிர்நோக்கம்' எனும் சக்தி வாய்ந்த பயிற்சியை மக்களுக்கு வழங்கும் கருவியாக நான் இருக்கிறேன். ஆம்! நான் ஈஷாங்கா ஆசிரியராக 'உயிர்நோக்கம்' பயிற்சியை வழங்கிய என் முதல் அனுபவத்தை உங்களிடையே பகிர்ந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். ஜூலை 18 அன்று, முதன்முதலாக சென்னையில் பல இடங்களில் வகுப்புகள் துவங்கப்பட்டன. முதல் நாள் வகுப்பு எப்படி அமையப்போகிறதோ எனும் சுவாரஸ்ய உணர்வு எனை ஆட்கொண்டது. வகுப்பு துவங்கும் மாலை வேளை வந்துவிட்டது. ஆனால் வகுப்பிற்கான பல ஏற்பாடுகள் இன்னும் செய்யப்படாமல் இருந்தன. மாலை 5.55 மணி வரை வகுப்பு துவங்குவதற்கான ஏற்பாடுகள் நிறைவடையவேயில்லை. நான் வகுப்பு துவங்கும் முன் சத்குரு படத்தை பார்த்த படி சும்மா அமர்ந்துவிட்டேன். எனது கண்களிலிருந்து கண்ணீர் வந்துகொண்டே இருந்தன.

எனக்கு ஒரு குழந்தையை பெற்று வளர்த்த அனுவம் இல்லை என்றாலும், அவர்கள் அனைவரையும் என் குழந்தைகளாகவே அங்கு உணர்ந்தேன்.

சத்குரு அருளால் திடீரென்று அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு சரியாக 6 மணிக்கு நான் சத்குருவின் கருவியாக அங்கே பங்கேற்பாளர்கள் முன் நின்றேன். சத்குருவின் அருளன்றி இதனை நிகழ்த்தியிருக்க முடியாது. சத்குருவே அங்கு வந்து அந்த வகுப்பிற்குத் தன்னார்வத் தொண்டு புரிந்ததாகவே நான் உணர்கிறேன்.

அங்கே அமர்ந்திருந்த பங்கேற்பாளர்களின் கண்களிலிருந்த ஆர்வம் என் கண்களில் நீரைப் பெருக்கெடுக்கச் செய்தது. வகுப்பு நேரம் முடிந்ததும் பங்கேற்பாளர்கள் என்னை வந்து அணுகினர். என்னை அதற்கு முன்பு எவரும் அந்த அளவிற்கு மரியாதையாகப் பார்த்ததோ பேசியதோ இல்லை. அன்று நான் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஒரு தாயாக உணர்ந்தேன். எனக்கு ஒரு குழந்தையை பெற்று வளர்த்த அனுபவம் இல்லை என்றாலும், அவர்கள் அனைவரையும் என் குழந்தைகளாகவே அங்கு உணர்ந்தேன். அன்றிரவு முழுக்க என்னில் பெருகிய ஆனந்த உணர்வால் நான் தூங்கவே இல்லை. மறு நாள் வகுப்பிற்காகக் காத்திருந்தேன்.

2ம் நாள், நான் வகுப்பில் நின்றது, உட்கார்ந்தது, பேசியது என அனைத்தையும் முழு விழுப்புணர்வுடன் செய்தேன். நான் அதற்கு முன் அதுபோன்ற ஒரு விழிப்புணர்வை என்னிடம் உணர்ந்ததில்லை. நிறைவு நாளான மூன்றாம் நாளை அவ்வளவு சிறப்பாக எங்களால் செய்ய முடியும் என நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. வகுப்பு நிகழ்ந்த அந்த வீட்டில், நாங்கள் எளிய சில அலங்காரங்களை மட்டுமே செய்திருந்தோம். ஆனால், அந்த இடமே ஒருவித அழகுடன் ஒளிர்ந்ததைக் கவனித்தேன். ஒவ்வொரு பங்கேற்பாளரும் கையில் மலர்களுடன் அன்று வந்திருந்தனர். ஒருவர் நாங்கள் ஏதும் சொல்லமலேயே ஒரு வெள்ளைத் துணியை கொண்டு வந்து வழங்கினார்.

தீட்சை நிகழ்வின்போதுதான் நான் முதலாக என் முன் இருந்த உயிர்களை என்னுள் ஒரு பாகமாக அனுபவப் பூர்வமாகப் பார்த்தேன். அதுவரை மற்றவர்களிடம் பலவித வேறுபாடுகளை உணர்ந்துகொண்டே இருப்பேன்.

அங்கே பங்கேற்பாளர்கள் அனைவரும் பூமிக்கு வந்த புது உயிர்கள் போல மாறியிருந்தனர். அங்கே வகுப்பின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பங்கேற்பாளர்களைப் பார்க்குபோது 'மூன்று நாட்களில் இவர்கள் எப்படி இப்படி மாறினார்கள்!' என்று எனக்கே வியப்பாக இருந்தது. குருபூஜையில் நன்றி அர்ப்பணிக்கும்போது என்னை ஒரு வித சக்தி ஆட்கொண்டதை உணர்தேன். அங்கே நடந்தது என் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. பங்கேற்பாளர்கள் பயிற்சியில் தங்களுக்குள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்ய ஆர்வமாக என்னை அணுகினர். ஒரு அம்மா, தான் 40 நாட்கள் தொடர்ந்து பயிற்சி செய்துவிட்டு அதன் அனுபவத்தை என்னிடம் பகிர உள்ளதாகக் கூறினார். ஒரு வயதான அம்மா என்னை கண்ணீருடன் கட்டி தழுவிக்கொண்டார். அப்போது, 'இதை விட வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்?!' என்று என் மனம் உணர்ந்துகொண்டது.

நான் முழுமையை உணர்கிறேன். அந்த நாள் என்னை முழுமையாக்கியது. இந்த 'உயிர்நோக்கம்' முட்டாளாய் இருந்த என்னை முழுமையாக்கியதோடு, ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. இது என் முதல் அனுபவம் மட்டும்தான்! நான் இன்னும் நீண்டதூரம் தொடர்ந்து சத்குருவின் கைகளைப் பற்றிக்கொண்டு பயணிக்க உள்ளேன்.

ஹரிப்ரியா.ஷி
ஈஷாங்கா