நில்... கவனி... சாப்பிடு! - பகுதி 16

தினமும் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்பவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் வெகு சொற்பமாகவே இருக்கும். பழ உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன, தினமும் ஏன் பழங்கள் சாப்பிட வேண்டும் என்பதை இந்தப் பகுதியில் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

நமது உடலில் 80% நீர் உள்ளது. அதே போல், பழங்களிலும் 80% நீர்ச் சத்து உள்ளது. பொதுவாக நாம் உண்ணும் உணவில் நீர்ச் சத்து அதிகம் இருப்பது நல்லது. அப்படிப்பட்ட உணவுகள் முக்கியமாகப் பழங்களும் காய்கறிகளும்தான். பழங்களில் உடலுக்கு அதிகம் சேரக் கூடாத கெட்ட கொழுப்புச் சத்துக்கள் இல்லை. ஆனால், பால், மாமிசம் போன்ற மிருகங்களிடமிருந்து கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்களில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது.

பழங்களின் நன்மைகள்!

அநேகம் பேருக்குத் தெரியாத ஒரு விஷயம், மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய அதிகம் உதவுவது பழங்கள்தான். பழங்கள் நமது மூளைக்கு நேர்மறை அதிர்வுகளைத் தருகின்றன. இதற்கு என்ன காரணம் என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்துகொண்டு இருக்கின்றனர். நல்ல பழங்களைத் தினமும் சாப்பிட்டால், எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் ஞாபகத்துக்குக் கொண்டு வரலாம். பரீட்சைக்குத் தயாராகும் குழந்தைகள் பழம் சாப்பிடுவது நல்லது. இது நிச்சயம் தேர்வில் வெற்றியைப் பெற்றுத் தரும்.

பழங்களைச் சாப்பிடுவது நம் மனதுக்கு இதமளிக்க முக்கியக் காரணம், இதனைப் பெற நாம் யாரையும் வதைக்கவில்லை, இம்சிக்கவில்லை.

பழங்கள்... நார்ச் சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி நிரம்பியவை. அதோடு நமது திசுக்களை அழித்துவிடாமல் பாதுகாக்கும் பைடோ கெமிக்கல்ஸ் நிரம்பியவை. இதனால் பழங்களைச் சாப்பிடுவதால் நோய் வராமல் தடுக்க முடியும். அன்றாடம் பழங்களைச் சாப்பிடுவதால் புற்று நோய், இருதய நோய், மாரடைப்பு, மறதி, காட்ராக்ட் மற்றும் மூப்பில் வரக்கூடிய பல நோய்களைத் தடுக்கலாம். பழங்களைச் சாப்பிடுவதால் நமக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இத்தனை நன்மைகள் இருந்தும் மக்கள் ஏன் அதிகம் பழங்களைச் சாப்பிடுவதில்லை? அவர்கள் மனதில் பழங்கள் மிக விலை உயர்ந்தவை என்ற எண்ணம் பதிந்துள்ளது. நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். பணத்தைப் பலவித உணவுகளுக்கு எப்படியெல்லாம் செலவழிக்கிறீர்கள்? அதில் சிலவற்றைத் தவிர்த்து, அதற்குப் பதில் பழங்களை வாங்கி சாப்பிட்டுப் பயனடையுங்கள்.

பழங்கள் மட்டுமல்லாமல் பழரசங்களையும் சாப்பிடலாம். இவற்றைத் தொடர்ந்து முப்பது நாட்கள் சாப்பிட்டால்தான் அதன் பலனை நாம் அறிய முடியும். சாப்பாட்டைச் சாப்பிடுவதற்கு இருபது நிமிடங்களுக்கு முன் பழரசம் அருந்தலாம். அதன் நல்ல சத்துக்கள் ரத்தத்தில் எளிதில் கலக்கும்.

பழங்களைச் சாப்பிடுவது நம் மனதுக்கு இதமளிக்க முக்கியக் காரணம், இதனைப் பெற நாம் யாரையும் வதைக்கவில்லை, இம்சிக்கவில்லை. மரத்தில் காய்த்து, கனிந்து தொங்கிக்கொண்டு இருக்கும் அவை, நீங்கள் பறித்துச் செல்லக் காத்திருக்கின்றன. பழங்களைச் சாப்பிடுவதால் நாம் இயற்கைக்கு உறுதுணையாக இருக்கிறோம். எப்படி? பழத்தைத் தின்னும் நாம் கொட்டையை வீசி எறிகிறோம். இதனால் நாம், செடிகள் பல இடங்களில் வளர உதவுகிறோம். இப்படித் தன் இனம் பரவுவதை எதிர்பார்த்துத்தான் மரத்தில் பழுத்துத் தொங்கும் பழங்களும் காத்திருக்கின்றன.

ஒரு மனிதனின் உணவு முறை எப்படி இருக்க வேண்டும்?

முதலில் பழரசம் அல்லது பழங்களைச் சாப்பிட்டு உணவைத் தொடங்க வேண்டும்.

இதனால் வயிற்றில் ஏற்படும் சுகத்தை உணர்வீர்கள்.

நிச்சயமாகப் பழம் சாப்பிடும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும்.

உலகம் 70% அளவு தண்ணீரால் சூழப்பட்டிருக்கிறது. மனித உடலில் 80% நீர்ச் சத்து உள்ளது. உலகோடு உடலை ஒத்து வாழச் செய்ய 80% நீர்ச்சத்து உள்ள பழங்களைச் சாப்பிடுவதே சிறப்பாகும்.

நீர்ச் சத்துள்ள காய்கறிகளையும், பழங்களையும் ஏன் அதிகம் சாப்பிட வேண்டும்? திட உணவுகளைச் சாப்பிடும்போது அவை ஜீரணிக்க அதிக நேரமாகும். அதுவே ஒரு கப் பழ சாலட் அரைமணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். இதையே பழச்சாறாகச் சாப்பிடும்போது அதன் சத்துக்கள் ரத்தத்தில் வெகு வேகமாகக் கலந்துவிடும். இதனால் உடலின் சக்தி, உணவை ஜீரணிக்கச் செலவிடுவதற்குப் பதிலாக உடலின் வேறு செயல்பாடுகளுக்குப் பயன்படக்கூடும்!

அடுத்த வாரம்...

சர்க்கரை வள்ளிக் கிழங்கின் அபார பலன்கள் குறித்து அறிந்துகொள்ளலாம்!

நில்... கவனி... சாப்பிடு! தொடரின் பிற பதிவுகள்