பூமித்தாயின் புன்னகை - இயற்கை வழி விவசாயம் - பகுதி 40


ஈஷா விவசாய இயக்க முகநூல் பக்கத்தில் நாம் வெளியிடும் பல்வேறு விவசாயத் தகவல்களைப் பார்த்து நம்முடன் தொடர்புகொண்ட திரு.சிவக்குமார் அவர்கள், ஈஷா விவசாயக் குழுவினரை அவரது பண்ணைக்கு அழைத்திருந்தார், அறிமுகத்தைத் தொடர்ந்து பண்ணையைக் குறித்து பேசத் தொடங்கினோம்...

இயற்கை விவசாயத்திற்கு மாறிய கதை

"ஒரு நாள் அலுவலகம் முடிந்து எனது பண்ணைக்குச் சென்றேன், பண்ணையில் களைகள் எல்லாம் கருகிக்கிடந்தன, களைக்கொல்லி தெளித்ததினால் காய்ந்து போயிருந்தது. அதற்கு முன்பு களைக்கொல்லி அடித்திருந்தாலும் அன்று என் மனதில் ஆற்றவொன்னாத் துயரம் குடிகொண்டது, கருகிக்கிடந்த அவற்றைப் பார்த்து தாங்க முடியாத துக்கம் ஏற்பட்டது. அங்கேயே நின்றுகொண்டு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அழுதுகொண்டே இருந்தேன். இப்படி மண்ணையும் உயிரையும் சித்திரவதை செய்வது பெற்ற தாயை சித்திரவதைப் போல உணர்ந்தேன்."என்று இயற்கை விவசாய நுழைவு பற்றி நெகிழ்ச்சியாக தெரிவித்த திரு.சிவக்குமார் அவர்கள் சத்தியமங்கலத்தில் ஒரு இயற்கை விவசாயி.

தொழிலதிபர் என்ற அடையாளத்தை மறந்து ஒரு இயற்கை விவசாயியாக மாறிவருகிறார். இயற்கை விவசாயம் ஒரு ஆன்ம விவசாயம் என்பதை உணர்ந்துள்ளார். உலக அளவில் பல கோடிகளில் வியாபாரம் செய்து வரும் ஒரு தொழிலதிபர், 2013ல் விவசாயம் செய்யத் தொடங்கி, 2015ல் இயற்கை விவசாயத்திற்கு மாறியவர்.

களைபிடுங்காத பயிர் கால் பயிர்'ன்னு நம்ம ஊர்ல பெரியவங்கோ நல்லா சொல்லி வச்சிப்போட்டு போனாலும் போனாங்க, அதுக்காக களைக்கொல்லி அடிச்சு அல்லாத்தையும் அழிக்கோணுங்களா? தாய்மடி மாதிரி இருக்குற இந்த பூமி என்னாகுமுங்க? நிலத்துல பயிர் மட்டும் இருந்தா போதுமா, பூச்சிபொட்டுன்னு எதுவும் இருக்க வேண்டாங்களா? விவசாயிக ஒவ்வொருத்தரும் இதைய ரோசன பண்ணி பாக்கோணும்னு இந்த கள்ளிப்பட்டி கலைவாணி கேட்டுக்கிறேனுங்க.

அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்த அந்த நிகழ்வைப் பற்றி அவர் கூறும் போது... "இரசாயன விவசாயத்தை நான் வீணாப் போன விவசாயம்னுதான் சொல்லுவேன். விவசாயம் செய்யத்தொடங்கி இரண்டு வருஷத்திலேயே அது தப்பான விவசாயம்னு தெரிஞ்சு அதுக்கு மூட்டை கட்டினேன், பண்ணையில் இருந்த எல்லா இரசாயன உரங்களையும், பூச்சிமருந்துகளையும் கடைக்காரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டேன், இரசாயனத்தால் வளர்ந்த பயிர்களையும் முற்றிலுமாக நீக்கிவிட்டேன். அந்தநாள் எனக்கு மறக்க முடியாத திருநாள்" என்று கூறிய அவர், அந்தத் திருநாளை மறக்காமல் "15 ஜூலை 2015" என்று பண்ணையின் பெயர் பலகையிலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சத்தியமங்கலத்தில் 73 ஏக்கரிலும், ஊட்டியில் 13 ஏக்கரிலும் இயற்கை முறையில் பல்வேறு வகையான பயிர்களையும் சாகுபடி செய்துவருவதோடு, சிறப்பாக சந்தைப்படுத்தவும் செய்கிறார். தொடர்ந்து நம்மிடம் ஆங்கிலம் கலந்த தமிழில் பேச்சைத் தொடர்ந்தார்.

"தற்போது பெரும்பாலான மக்களுக்கு பொறாமை, பேராசை, கோபம் போன்ற பல்வேறு உணர்வுகள் அதிகமாக இருப்பதற்கு காரணம் நாம் சாப்பிடும் இந்த விஷமான உணவுகள்தான் என்று எனக்குத் தோன்றியது.

இரசாயன விவசாயம் செய்ய வேண்டாம் என்று நான் முடிவெடுத்தாலும் இயற்கை விவசாயம் குறித்து எதுவும் எனக்குத் தெரியாது என்பதால் பல இயற்கை விவசாயிகளை சந்தித்தேன். நம்மாழ்வார் புத்தகங்கள் மற்றும் பல இயற்கை விவசாய புத்தகங்களைப் படித்தேன். ஆரம்பத்திலேயே அகலக்கால் வைக்காமல் சிறிது சிறிதாகவே இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினேன்."

மனசு புண் பட்டு போச்சுன்னா மனசில் நல்ல விஷயங்களை புகவிட்டு ஆத்தனும்னு' பெரியவங்க சொல்லியிருக்காங்க இல்லீங்க?! அதுமாறி இரசாயன விவசாயத்தில் புண்பட்ட மனசை இயற்கை விவசாயம் செய்து ஆசுவாசப் படுத்தியிருக்காருங்கோ நம்ம சிவக்குமார் அண்ணா. நம்ம தமிழ்நாடு முழுக்க இயற்கை விவசாயத்த புக விடணும்கறதுதானுங்க ஈஷா விவசாய இயக்கத்துக்கு நோக்கமா இருக்குது.

அவரது நிலத்தில் ஆரம்பத்தில் மண் பரிசோதனை செய்ததில் 0.28 மட்டுமே இருந்த அங்ககக் கரிமம் (Organic Carbon) தற்போது 1.9 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. இதற்காக தொடர்ந்து பலமுறை பலதானிய விதைப்பு செய்திருக்கிறார். கார்பன் அளவு அதிகரிக்க அதிகரிக்க, களையும் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. எங்கெல்லாம் அங்ககக் கரிமம் அதிகமாக இருந்ததோ அங்கெல்லாம் களை குறைவாக இருப்பதாகவும், களை அதிகமாக இருக்கும் இடத்தில் எல்லாம் அங்ககக் கரிமம் குறைவாக இருப்பதாகவும் விளக்குகிறார். இந்தியாவின் சராசரி அங்ககக் கரிம அளவு 0.3 என்பதையும், மண்வளத்திற்கும் களைக் கட்டுப்பாட்டிற்கும் அங்ககக் கரிமம் அவசியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

பலபயிர் சாகுபடி...

"ஆரம்பத்தில் காய்கறிகளை சிறிய அளவிலேயே சாகுபடி செய்தேன். நாட்டுரக விதைகளை தேடிப்பிடித்து வாங்கினேன். 2016 ஆகஸ்ட் பிறகுதான் பெரிய அளவில் காய்கறிகளை உற்பத்தி செய்யத் தொடங்கினேன். 16 ஏக்கரில் காய்கறி இருக்கு, வருஷம் முழுவதும் காய்கறிகள் வரும் வகையில் நான்கு நான்கு ஏக்கராக நிலத்தைப் பிரித்து சாகுபடி செய்கிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

காய்கறிகளைத் தவிர வாழை, பயறுவகைகள், நிலக்கடலை, துவரை, கொள்ளு, மஞ்சள், தென்னை, எள்ளு, கடுகு, சீரகம் போன்ற வீட்டுக்குத் தேவையான பெரும்பாலான பொருட்கள் என் பண்ணையிலேயே கிடைக்கும். கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணை போன்றவற்றை நானே உற்பத்தி செய்து கொள்கிறேன். இது தவிர பாரம்பரிய நெல் ரகங்கள் மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, பவானி, பொன்னி போன்றவற்றையும் சாகுபடி செய்கிறேன். பழமரங்களை 32 ஏக்கரில் நடவு செய்துள்ளேன். மல்கோவா, இமாம்பசந்த், அல்போன்சா, மொசாம்பி, நெல்லி, அத்தி போன்றவை இரண்டு வருடக் கன்றுகளாக உள்ளன. அவற்றில் மஞ்சளை ஊடுபயிராக சாகுபடி செய்து வருகிறேன்.”

அதோடு வாழை சாகுபடியில் ஒரு புதுமையை செய்திருக்கிறார் திரு.சிவக்குமார். அதாவது, மூன்று மாதத்திற்கு ஒரு முறை வாழையை நடவு செய்கிறார். ஒரு ஏக்கருக்கு தேவையான 600 கன்றுகளை ஒரே ரகமாக நடவு செய்யாமல் 6 வகையான ரகங்களை 100 கன்றுகள் வீதம் நடவு செய்கிறார். இதனால் நுகர்வோருக்கு பல்வேறு ரக வாழைப் பழங்களை வருடம் முழுவதும் தரமுடிகிறது, இதில் மேலும் புதுமை செய்யும் வகையில் ஒவ்வொரு ரகத்திலும் மாதம்தோறும் 30 கன்றுகள் நடவு செய்வதற்கு தற்போது திட்டமிட்டுள்ளார்.

எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?*

இயற்கை விவசாயத்தில் பல சவால்களை சந்தித்தாலும் அதை இதயபூர்வமாக எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார்...

"ஆரம்பதில் குறைந்த அளவு உற்பத்தி செய்து, பின் படிப்படியாக உற்பத்தியை அதிகரித்ததால் எனக்கு விற்பனையில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால் பூச்சிக் கட்டுப்பாடு, களைக் கட்டுப்பாடு போன்றவை அதிக சிரமத்தைத் தந்தது. இயற்கை விவசாயம் பிடித்த விஷயமாக இருந்ததால் அதில் வரும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டும் என்ற ஆர்வம்தான் வந்தது. ஐயோ இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கி இப்படி மாட்டிக்கொண்டோமே! என்ற எண்ணம் ஒருபோதும் ஏற்படவில்லை."

"முதலில் பார்த்தீனியம் அதிகப் பிரச்சினை தந்தது, அதில் உப்புத் தண்ணீர் விடச் சொன்னார்கள், உப்பைப் போட்டு மண்ணை வீணாக்க எனக்கு விருப்பமில்லை, பூப்பதற்கு முன்பே பார்த்தீனியத்தைப் பிடுங்கி ஒரு குழியில் போட்டு அதில் உப்புத் தண்ணீரை ஊற்றினேன். பார்த்தீனியம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. என்னிடம் விவசாயத்தில் அனுபவம் உள்ள இரண்டு பேரும், விவசாயம் படித்த நான்கு பேரும் பணிபுரிகிறார்கள், எந்தப் பிரச்சினை வந்தாலும் அதற்குத் தீர்வு காண நாங்கள் முயல்கிறோம்."

நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கலந்தை, கடைநிலம் எருக்கு" ன்னு நம்ம முன்னோர்கள் விவசாய நிலத்தில வளர்ற களைகளைப் பத்தியெல்லாம் வெகரமா சொல்லி வச்சிருக்காங்கோ. ஆனா இந்த பாழாப்போன பார்த்தீனியத்த பாத்தீங்கன்னா எல்லா நிலத்திலயும் வளருதுங்களே! ஆனாலும் இயற்கை அல்லாத்துக்குமே தீர்வு வச்சிருக்குதுங்கோ. நாமதானுங்க அதைய கவனிச்சு செயல்படுத்தோணும்.

நமது முன்னோர்கள் வாழ்க்கையில் விவசாயம் என்பது ஒரு வாழ்வியலாக இருந்தது, ஆனால் தற்போது விவசாயம் என்பது வாழ்வாதாரமாகவும், வியாபாரமாகவும் மாறியிருப்பதால், இயற்கை விவசாயம் வெற்றிகரமான விவசாயம் என்பதை விவசாயிகளுக்கு உணர்த்த வேண்டியது அவசியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

"ஒரு வெண்டைச் செடியில் இருந்து ஒரு வாரத்திற்கு ஒரு கிலோ காய் கிடைக்கும், ஆனால் சில நேரங்களில் 400 கிராம்தான் கிடைக்கும். இது பொதுவாக விவசாயத்தில் வரக்கூடிய சவால். இப்படி ஆவதற்கு என்ன காரணம், இதில் என்னென்ன தவறுகள் நடந்துள்ளது என்பதைக் கண்டறிந்து தீர்க்க வேண்டியுள்ளது. நிலக்கடலை ஒரு டன் கிடைக்கும் என எதிர்பார்த்தால் 700 கிலோதான் கிடைக்கிறது. எது எப்படி இருந்தாலும் இவ்வளவு மகசூல் எடுக்க வேண்டும் என்ற நோக்கம் வைத்துக்கொண்டு வேலை செய்கிறோம். கூடிய விரைவில் அதை அடைந்து விடுவோம்."

உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற இலக்கில் செயல்பட்டாலும், விற்பனையில் கவனம் இல்லை என்றால் இயற்கை விவசாயத்தில் ஜெயிக்க முடியாது என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கும் சிவக்குமார் விற்பனையிலும் ஜொலிக்கிறார்...

விவசாயி என்ற பெருமிதம் வேண்டும்...

விவசாயிகள் மக்களின் பசியை ஆற்றக்கூடியவர்கள், அவர்கள் யாரிடமும் அவர்களைத் தாழ்த்திக்கொள்ளக் கூடாது என்கிறார். இதைப்பற்றி கூறும்போது "என்னிடம் பொருட்களை வாங்குபவர்களிடம் 'ஆணை' (Order) என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் 'கோரிக்கை' (Request) என்ற வார்த்தையைப் பயன்படுத்துக்கள் என்றே கூறுவேன். விவசாயிகளின் கை எப்போதும் உயர்ந்து இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம், யாரிடமும் நானே சென்று காய்கறிகளை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்வதில்லை. எனது காய்கறிகளை சுவைத்தவர்கள் மூலமாகவே விளம்பரம் கிடைத்துவிடுகிறது."

இவரது விளைபொருட்களை சென்னை, கோவை, திருச்சி, பெங்களூர் போன்ற நகரங்களுக்கு அனுப்புகிறார், 400க்கும் மேற்பட்டவர்கள் இவரது பொருட்களை வாங்குகிறார்கள். "எனது காய்கறிகளை ஒருவர் வாங்க வேண்டும் என்றால் அவருக்கு நல்ல கர்மா இருக்க வேண்டும்." என்று பெருமிதப்படுகிறார்.

சென்னையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு காய்கறிகளை கொடுக்கிறார், இவரது இயற்கையான காய்கறிகளை சாப்பிட்டபின் முதியோர்களின் உடல்நலம் ஆரோக்கியமாக இருப்பதால் மாதாமாதம் நடைபெறும் மருத்துப் பரிசோதனைகளின் தேவை குறைந்துவிட்டதாகக் கூறி, அந்த முதியோர் இல்ல நிர்வாகி இவரை அழைத்து பாராட்டியுள்ளார். அந்த மருத்துவரும் இவரது காய்கறிகளை சுவைத்து விட்டு "எனது வேலைக்கு நீங்கள் வேட்டு வைத்தாலும் பரவாயில்லை, எனக்கும் நீங்களே காய்கறி அனுப்புங்கள்" என்று கூறுமளவுக்கு காய்கள் சுவையுடன் இருக்கிறது.

காய்கறிகள் தரமாக இருந்தாலும் வாங்குவதற்கு சிலர் தயக்கம் காட்டுவதும் உண்டு. அவர்களுக்கு புரியவைத்தால் நிச்சயம் வாங்குவார்கள் என்பதை ஒரு உதாரணத்துடன் எங்களுக்குக் கூறினார், "பொதுவாக நாட்டுரக காய்கறிகளின் தோல் சற்று கடினமாக இருக்கும், ஒரு முறை புடலங்காயை கடையில் கொடுத்தபோது "தோல் தடிமனாக இருக்கு, முத்திப்போச்சு" என்று கூறி புடலங்காயை வாங்க மறுத்துவிட்டார்கள். நான் வீட்டிற்கு சென்று அந்த காயைச் சமைத்து கொண்டுவந்து அவர்களுக்குக் கொடுத்தேன், அதை சாப்பிட்டவர்கள் "இவ்வளவு சுவையாக இருக்கிறதே" என்றுகூறி என்னிடமிருந்த எல்லா காய்களையும் வாங்கிக்கொண்டார்கள்." என்று பூரித்தார்.

இயற்கை விவசாயம் ஆன்ம விவசாயம்!

தொடர்ந்து ஆன்மீக நோக்கத்தில் பேசத்தொடங்கியவர், ஆன்மீகத்தின் ஒரு பகுதிதான் இயற்கை விவசாயம் என்றும், "நான் வேறு தொழிலில் இருந்து விவசாயத்திற்கு எப்படி வந்தேன் என்பதைவிட, விவசாயத்திற்கு வந்துவிட்டேன் என்பது என் வாழ்வில் முக்கியமான விஷயம், இயற்கை விவசாயம் என்னை ஒரு ஏகாந்தத்தை நோக்கி இட்டுச் செல்கிறது. பூமி தாயைப் போன்றது, விதை தந்தையைப் போன்றது. நல்ல பூமியில் நல்ல விதை விழுந்தால் நல்ல பயிர்கள் தானாகவே வரும்." என்று பூமித்தாயின் மேல் நேசத்துடன் இருக்கிறார்.

என்னென்ன இடுபொருட்கள்...

இடுபொருட்கள் பற்றிக் கேட்டபோது, "தக்கபூண்டு, சணப்பு, எள்ளு, கம்பு போன்ற பலதானிய விதைப்புதான் எனக்கு முக்கியமான இடுபொருள்கள். இதனால்தான் மண் இந்த அளவுக்கு மாறியுள்ளது, வெளியிலிருந்து நுண்ணுயிர்க் கலவையை மட்டும் வாங்குகிறேன். மற்றபடி ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம், தேமோர் கரைசல், மீன் பாகு, பூச்சி விரட்டிகள், அஸ்திரங்கள், மண்புழு உரம் போன்றவற்றை நானே தயாரித்து பயன்படுத்திக் கொள்வேன்." என்கிறார். நாட்டுமாடுகள் 40 வைத்திருக்கிறார். வேளாண் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்தும், இடுபொருட்கள் தயாரிப்பு குறித்தும் அவ்வப்போது இங்கு பயிற்சி நடத்தப்படுகிறது.

எதிர்காலத் திட்டம்...

“இயற்கை விவசாயத்தை மற்ற விவசாயிகளுக்குக் கொண்டு செல்வது குறித்து கேட்டதற்கு, “எனது மகளிடம் எனது தொழிலை ஒப்டைத்துவிட்டு தற்போது ஒரு முழுநேர விவசாயியாக மாறியிருக்கிறேன். என் முயற்சியில் 5,00,000 ஏக்கர் நிலத்தையாவது இயற்கைக்கு மாற்ற வேண்டும். என்று என் மனைவியிடம் நான் சொல்வதுண்டு, இதுதான் என் ஆசை. இயற்கை விவசாயம் பெரிய அளவில் நன்மை செய்யக்கூடியது என்றாலும், இயற்கை விவசாயத்திற்கு மாறுவது என்பது ஒரு நாள் விஷயமல்ல, தற்போதைக்கு இயற்கை விவசாயத்தை ஆத்மாத்மார்த்தமாக செய்ய நினைப்பவர்களுடன் சேர்த்து செய்ய விருப்பம்."

இறுதியாக இயற்கை விவசாயம் வளரவேண்டுமானால் மக்களின் ஆதரவும் வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

"நான் நுகர்வோருக்கும் விவசாயிகளுக்கும் சொல்வது இதுதான், விவசாயிக்கு எப்படி நுகர்வோர்கள் அவசியமோ, அவ்வாறே நுகர்வோர்களுக்கு நல்ல இயற்கை விவசாயி அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவர் அவரது வருமானத்தில் 5 சதவீதமாவது இயற்கையான காய்கறிகளை வாங்குவதற்கு செலவு செய்ய வேண்டும். இயற்கை பொருட்களை வாங்கி விவசாயிகளுக்கு பக்கபலமாக இருந்தால்தான் விவசாயிகளிடம் பெரிய மாற்றம் வரும். நிறைய விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு வருவார்கள்." என்று நிறைவு செய்தார், நாங்களும் அதை ஆமோதித்தோம்.

வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடுன்னு' அந்தக் காலத்துல சும்மாவா சொல்லி வச்சாங்கோ?! நல்ல சோறு சாப்பிட நாலு காசு செலவு செய்ய கணக்கு பார்க்கிறவிங்க, வீட்டுல சாமா சட்டுன்னு ஆடம்பர விஷயங்க வாங்கறதுக்கு காசை தண்ணியா செலவு செய்வாங்கோ. இதெல்லாம் அவங்களே பார்த்து ரோசன பண்ணி பாத்து மாத்திக்கோணுமுங்க.

சிவக்குமார் அவர்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெற்று திரும்பும்போது, அவரது பண்ணையில் இருந்த பயிர்களும் அவருக்கு நன்றி தெரிவிப்பதுபோல் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன.

தொடர்புக்கு: திரு. சிவக்குமார்: 98490 01586

தொகுப்பு: ஈஷா விவசாய இயக்கம்: 83000 93777

முகநூல்: ஈஷா விவசாய இயக்கம்