சத்குருவின் வழிகாட்டுதலில், உழவர் உற்பத்தியாளர் அமைப்பு!

சத்குருவின் வழிகாட்டுதலுடன், உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகள் சுமார் 500 பேரை ஒன்றிணைத்து செப்டம்பர் 18ம் தேதியன்று துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இடைவணிகத் தலையீடுகள் இன்றி நேரடியாக விற்பனை செய்ய முடியும். காலை 11 மணிக்கு, இருட்டுப்பள்ளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், மத்திய வேளாண்துறை சேர்ந்த சிறு விவசாயிகள் வேளாண்தொழில் கூட்டமைப்பின் இயக்குநர் திரு.ப்ரவேஷ் ஷர்மா ஐ.ஏ.எஸ். அவர்கள், மற்றும் தமிழக அரசின் வேளாண்மை சார்ந்த சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் தொழில் இயக்குநர் திரு.அனில் மேஷ்ரம் ஐ.ஏ.எஸ். அவர்களும் கொடியசைத்து துவக்கி வைக்க, அப்பகுதி விவசாயிகள் உற்பத்தி செய்த தேங்காய்கள் நிறைந்த வேன் சந்தைக்குக் கிளம்பியது. முதற்கட்டமாகத் தொண்டாமுத்தூர் பகுதியில் துவங்கப்பட்டுள்ள இந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, எதிர்காலத்தில் தமிழ்நாடு முழுக்க விரிவடைவதற்கான முயற்சியில் ஈஷா ஈடுபட்டுவருகிறது.

சென்னை மெகா வகுப்பில் 13,000 கன்றுகள்

செப்டம்பர் 13-15 தேதி வரை சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் சத்குரு நிகழ்த்திய மெகா யோகா வகுப்பு சிறப்பாக நடந்து முடிந்தது நாம் அறிந்ததே! இவ்வகுப்பில், ஈஷா பசுமைக் கரங்களால் சுமார் 13,000 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்ட நிகழ்வு, அதில் முத்தாய்ப்பாய் அமைந்தது. மேலும் பிளாஸ்டிக் கவர்களின் உபயோகத்தைத் தவிர்க்கும் வகையில், ஈஷா பசுமைக் கரங்கள் அன்பர்கள், மறுசுழற்சி முறையில் உருவாக்கப்பட்ட காட்டன் பைகளை அறிமுகப்படுத்தினர். 300 காட்டன் பைகள் விற்பனை ஆனது மகிழ்வளிக்கும் தகவலாகும்.

சென்னை இல்லத்தரசிகளின் "ப்ரயாஸ்"

சென்னை L&T நிறுவன ஊழியர்களின் இல்லத்தரசிகள் ஒன்றிணைந்து "ப்ரயாஸ்" என்ற குழுவை உருவாக்கியுள்ளனர்.
15 - 20 பேர் கொண்ட குழுவாக உள்ள இவர்கள், சென்னை ஈஷா பசுமைக் கரங்களிலும், L&T யின் நாற்றுப் பண்ணைகளிலும் தன்னார்வத் தொண்டு புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.