நம் நாட்டில் பலர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். நிலத்தடி நீரே மாசுபடும் சூழ்நிலையில் உள்ளவர்கள் ஊட்டச்சத்தை எப்படி தனியாக கவனிக்க முடியும்... நம் உடலுக்கு சத்தாக இருக்கும் காய்களில் முருங்கையும் ஒன்று. அதன் மகத்துவத்தை விளக்குகிறது இக்கட்டுரை.

டாக்டர். சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா

நம் இந்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகளில் 60 சதவீதத்திற்கும் மேல் ஊட்டச்சத்து குறைபாட்டினால் (Mal-Nutrition) பாதிக்கபட்டிருக்கின்றனர். இது பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் பிரச்சனை மட்டுமல்ல, பெரும்பான்மை நடுத்தர வர்க்கத்தினரும், இதற்கு விதிவிலக்கு அல்ல.

“ஊட்டச்சத்துக் குறைபாடா? இதெல்லாம் ஒரு விஷயமா?!” என அடுத்த பக்கத்தைப் புரட்ட எத்தனிக்கிறீர்களா? ஒரு நிமிடம் ப்ளீஸ்....

ஒரு பெண்ணுக்கோ குழந்தைக்கோ இரத்த சோகையோ ஊட்டச்சத்துக் குறைபாடோ இருந்தால் என்ன விளைவு? அடிப்படையில் இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாட்டால்தான் வருகிறது.

குழந்தைகள் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து, சுவாசப் பாதை, தோல், ஜீரண மண்டலம் சார்ந்த தொற்றுநோய்களுக்கு எளிதில் அடிக்கடி சிக்குகிறார்கள்.

பெண்களுக்கு பூப்பெய்தல் தள்ளிப்போவது, மாதவிடாய் சிக்கல் ஏற்படுவது, அடிக்கடி சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவது, கர்ப்பம் தரிப்பதில் சிக்கல், தரித்தாலும் இரத்த சோகை உள்ள தாய், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தையையே பெற்றெடுக்கிறாள்.

இந்த ஆபத்தான சுழற்சி, ஒரு சமூகத்தை தலைமுறை தலைமுறையாய் உடல் மனஅளவில் ஒரு முழுமை பெறாத நிலைக்குத் தள்ளுகிறது. அடிக்கடி ஏற்படும் உடல்நலக்குறைபாடு, மருத்துவச் செலவுகள், உற்பத்தி திறன் பாதிப்பு என ஒட்டு மொத்த சமூகத்தின் வளர்ச்சிப் பாதைக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு, ஆரோக்கிய அடிப்படையில் ஒரு முக்கியத் தடைக்கல் என்பதை நாம் அறிந்து கொள்வது மிக அவசியம். இந்தி நடிகர் ஆமீர் கானை முன்னிறுத்தி, அரசு சமீபமாக வெளியிட்டு வரும் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் வீரியம் நம்மில் எத்தனைப் பேரின் கவனத்தை ஈர்த்தது என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.

சமுதாய ஆரோக்கியத்தின் அடிப்படைக் கோளாறை சீர் செய்ய, மருத்துவச் சமூகம் முதல் சாமானியன் வரை பல தளங்களில் முன்னெடுக்க வேண்டிய செயல் திட்டங்கள் பல. இதில் அரசு இயந்திரமும் அடக்கம். இருப்பினும், நாம் அனைவருக்குமே ஓரளவுக்கு பரிச்சியமான, நம் கண்முன்னே இருக்கும் தீர்வை மட்டும் இந்த இதழில் உங்களுடன் பகிர்கிறேன்! இல்லை, ஞாபகமூட்டுகிறேன்!

பிரம்ம விருட்சம்:

வீட்டிற்குள் பிரச்சனையை வைக்கும் இறைவன் தான், கொல்லைப் புறத்தில் தீர்வையும் வைக்கிறான்! ஆச்சரியம்! அதிசயம்! ஆனால் இனிப்பான உண்மை!!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள், murungaikkeeraiyil ulla sathukkal

வைட்டமின் சி: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; எளிதில் தொற்றும் சளி/ காய்ச்சலிலிருந்து பாதுகாப்பு; வலிமையான ‘ஆன்டி ஆக்ஸிடென்ட்’ ஆதலால், கேன்சர், மாரடைப்பு உள்ளிட்ட நாட்பட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பு.

கால்ஸியம்: வலுவான பற்கள், எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது

வைட்டமின் ஏ: தெளிவான கண் பார்வை, தோல் பராமரிப்புக்கு நல்லது.

புரதம்: உடல் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது.

இரும்புச் சத்து: இரத்தத்தின் ஹீமொக்ளோபினை அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபட உதவும்.

இவை அனைத்தையும் மீறி, உடல் தானாகவே உற்பத்தி செய்ய இயலாத 9 அத்தியாவசிய அமினோஅமிலங்கள் நிறைந்த மிகச்சில உணவுகளில் முருங்கையும் ஒன்று!!

வீட்டுக் கொல்லையிலேயே வைட்டமின்/ இரும்பு முதலான கனிம சத்துக் களஞ்சியமாய் விரவி நிற்கும் முருங்கையை சங்கத் தமிழர் “பிரம்ம விருட்சம்” என பெயரிட்டது பொருத்தம்தானே?

இரத்த சோகை, கேன்சர், வயிறு உபாதைகள் முதலிய 300க்கும் மேற்பட்ட நோய்களை வராமல் தடுக்கும் வல்லமை கொண்ட முருங்கையை வெறும் “முந்தானை முடிச்சு” சமாச்சாரமாக பார்க்கும் மனநிலையில் இருந்து தமிழ் கூறும் நல்லுலகம் மாற வேண்டும்.

முருங்கைக் கீரை/சூப்

இரத்த சோகையால் உடலில் ஏற்படும் மந்தம், தளர்ச்சி, முடி உதிர்தல் போன்றவை நீங்கவும், உடற்சூடு தணியவும், கண் நோய் தீரவும், தாய்ப்பால் பெருகவும் செய்கிறது. நம் வீட்டுப் பாட்டிகளைக் கேட்டால், சொல்லிக் கொடுப்பார்கள், எப்படி ஒரு பிள்ளை பெற்ற மகராசிக்கு, முருங்கைக் கீரையை நெய்யில் வதக்கி, எள்ளுப்புண்ணாக்கைத் தூவிக் கொடுத்து ஊட்டம் அளித்தோம் என்பதை!

“பாப்பாக்கு என் பால் பத்தல டாக்டர்...”

“அந்த பன்னாட்டு கம்பெனியின் பவுடரைக் கொடுத்தால், அவன் விளம்பரத்தில் காட்டும் ‘அமுல் பேபி’ மாதிரி ஆகிடுவாளா என் பாப்பா?” எனக் கூறும் புதுத் தாய்கள் அந்தப் பாட்டிகள் வாழ்ந்த காலத்தில் மிகச் சொற்பமே!

முருங்கைக் கீரை ஆய்ந்து, மிளகுடன் சேர்த்து ரசம் வைப்பது உடல் வலி நீக்கும். சளி முதலான கோழையை அகற்றும்.

முருங்கைப் பூ மற்றும் காய்

  • டிவி, இன்டெர்னெட் என சதா துன்பப்படும் நம் கண்களை, முருங்கைப் பூவில் இளைப்பாற்றலாம்.
  • பசும்பாலுடன் முருங்கைப் பூவைப் பொடித்து சேர்த்து, காய்ச்சி அருந்தி வர, கண்களில் ஈரப்பதம் மிகுந்து, குளிர்ச்சி மிகும்; பார்வை கூர்மையாகும். குழந்தைகளுக்கு ஞாபகத்திறன் அதிகரிக்கும்.
  • ஆண்மை/வன்மை/தாதுவிருத்தி/விந்து கெட்டிப்படுத்தும் திறன் மிகுந்த முருங்கைக் காய்/பூவை சூப் செய்து பருகலாம். காய்ச்சல், உடல் வலி, வயிற்றுப் புண் போன்றவைகளுக்கும் சிறந்த நிவாரணி.
  • சிறுநீர் பெருக்கும் தன்மை முருங்கைக் காய்க்கு உள்ளதால், வாரம் இரு முறை எடுத்தால் நம் இரத்தம் மற்றும் சிறுநீர் மண்டல சுத்திகரிப்பிற்கு ஒர் எளிய உபாயம்.

குறைத்துவிட்டோமா முருங்கைப் பயன்பாட்டை?

“வீட்டில் ஒரு முருங்கை மரம் வளர்த்தாலே, குடும்பத்தின் ஆரோக்கிய சூழ்நிலையில் ஒரு பெரிய மாற்றத்தை உணர முடியும்!” என்கிறார் சத்குரு.

ஒரு ஞானியின் இத்தகைய அழைப்பை நினைத்தால், நம் வாழ்வில் அன்றாடம் நம் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள பொக்கிஷத்தைக் கூட நம் நல்வாழ்வுக்காக நாம் முழுமையாய் உபயோகப்படுத்தவில்லையோ என்கிற எண்ணமே மேலோங்குகிறது!

வாரத்திற்கு, குறைந்தபட்சம் மூன்று நாளாவது, நம் மதிய உணவை சாம்பார், பொரியல், ரசம் என அலங்கரித்த முருங்கைக்கு, சமீபமாய், அதுவும் நகரத்துத் தனிக்குடித் தனங்களில் மாதம் ஒரு முறை வாய்ப்பளிப்பதே அரிதாகிவிட்டது.

“முருங்கைக் கீரை கடைகளில் கிடைப்பதில்லை, அப்படியே கிடைத்தாலும் அதைக் கழுவி... உருருருருவி.... கஷ்டம் சார்! சமையல் எப்போ முடியறது? ஆஃபீஸ் எப்போ போறது? முருங்கைக் காய்... சமயத்தில ரொம்ப காஸ்ட்லி காய்கறி ஆகிடுது!” எனும் நம் அம்மணிகளின் நொண்டிச் சாக்குகளுக்குக் காரணம், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்க்கும், ‘நோகாமல் நொங்கெடுக்கும்’ இங்கிலீஸ் காய்கறிகளுக்கும் நாம் பழகிவிட்டதுதான்.

பரபரப்பான வாழ்க்கையில், நாம் ஓடும் ஓட்டத்தில், மிகச் சுலபமாகத் தவறவிடுவது நம் உடல், மன நலம்தான். ஆரோக்கியம் காக்கும் எளிய உபாயங்களையும் இந்த ஓட்டத்தில் அலட்சியமாகத் தொலைக்கிறோம். அந்த லிஸ்டில் முருங்கையும் ஒன்றே!

விழித்துக் கொள்ளவில்லை என்றால், முருங்கைப் பவுடரை பன்னாட்டு கம்பெனியின் அழகிய கேப்ஸுல் வடிவில், உணவுக்குப்பின் எடுத்துக்கொள்ள நாம் தயாராக வேண்டியது தான்.

(பி.கு: அல்ரெடி, கேப்ஸுல் சந்தைக்கு வந்தாச்சு, வேண்டுவோர் கூகுளைச் சொடுக்கவும்!)

“சர்க்கரை நோயால் கிட்னி ஃபைலியர் ஆனால், எந்த இடத்தில் டயாலிசிஸ் செய்வது? ஹார்ட் அட்டாக் வந்தால் எங்கு ஆன்ஜியோ செய்வது?” என்பதில் நாம் காட்டும் அக்கறையை, நோய் தடுப்பு, ஆரோக்கிய மேம்பாடு குறித்த அடிப்படை விஷயங்களுக்கும் கொடுத்துப் பின்பற்றுவதே அறிவுடைமை. இதைச் செய்யாமல் விட்டு, ஆட்டமெல்லாம் ஆடி முடித்து, டோட்டல் சிஸ்டமும் டேமேஜ் ஆனபின், ‘மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொள்ளையடிக்கிறார்கள்’, ‘மருத்துவர்கள் வியாபாரம் செய்கிறார்கள்’ எனக் குறைக் கூறி காலம் கழிப்பது மடைமை.

அன்றெல்லாம், வீடு கட்டத் துவங்கும் முன்னே முருங்கைக் கொம்பை நட்டு வைத்தனர். அதைத்தான் குடும்பத்தின் மெடிக்கல் இன்ஷுரன்ஸாக பாவித்தனர்.

மீண்டும், நாம் அந்த இன்ஷுரன்ஸை எடுக்கலாமே? ஒன் டைம் இன்வெஸ்ட்மென்ட், மிகச் சொற்பமே!! தலைமுறைக்கும் பலன்கள்!! நல்ல டீல்தானே?

முருங்கை வளர்ப்பு முறைகள்

  • முருங்கை விதை (அல்லது) முருங்கைக் கொம்பை 1*1*1 அடி குழியில், எரு உரமிட்டு, மாட்டு சாணத்தை கொம்பின் நுனிப்பகுதியில் உருண்டையாக வைத்து நட வேண்டும். மதில் சுவருக்கு குறைந்த பட்சம் 3 அடி இடைவெளி தேவை.
  • முருங்கை விதை நாட்டு மருந்து கடைகள், நாற்றுப் பண்ணைகளில் கிடைக்கும். முருங்கைக் கொம்புகளை பக்கத்து வீட்டுக் கொல்லைகளில் கேட்டு வாங்குவதோ அல்லது எடுத்துக்கொள்வதோ உங்கள் சாமர்த்தியம்!
  • வறட்சியைத் தாங்கக் கூடிய பயிர். ஆதலால், குறைந்த அளவு நீர் பாய்ச்சினாலே போதுமானது. முளைவிடும் காலம் வரை மட்டும் பராமரித்தாலே போதும்.
  • வளர்ந்த முருங்கை மரங்களில் பொதுவாக காணப்படும் ரோமம் அதிகமுடைய புழுக்களால் தோல்களில் அரிப்பு, தடிப்பு போன்ற தொந்தரவு ஏற்படுவது உண்டு. மேலும், இவற்றிற்கு மொத்த மரத்தையும் மொட்டை அடித்துவிடும் திறமை உண்டு. (மொஸ்கட்டான், என்பது தஞ்சை பகுதியின் வழக்கு மொழி சிறுவர்கள் சண்டையில், எதிராளியின் சட்டைக்குள் பிடித்துப் போடப்படும் ஃபேவரைட் பழிவாங்கும் வஸ்து!!)
  • பெரும்பாலும் இந்தப் புழுக்கள், இரவு நேரங்களில் கீரைகளை மொய்க்கும், பகல் நேரங்களில் கூட்டாக தண்டு பகுதியில் கூடியிருக்கும். அவற்றின் தொல்லை அதிகமிருப்பின், அந்நேரம் சிறிது டிடெர்ஜென்ட் கரைசலை தெளிப்பதன் மூலம் விடுபடலாம்.