ஈஷாவிற்கு வருகைதரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இலவச உபயோகா வகுப்பு வழங்கப்படுகிறது. கற்றுக்கொடுப்பது ஈஷா வித்யா மாணவர்கள். உலக யோகா தினக் கொண்டாட்டங்களின் துவக்கமாக ஈஷா மேற்கொண்டுள்ள இந்த முயற்சியில் இந்த இளம்தளிர்களின் பங்களிப்பு குறித்து ஒரு பார்வை!

கோடை விடுமுறை துவங்கியாச்சு... புத்தகப்பையை வீசிவிட்டு, டிவியின் முன்பு பொழுதை கழிக்கப் போகவில்லை இவர்கள்! ஈஷா யோகா மையத்திற்கு வருகைதரும் பார்வையாளர்களுக்கு இலவசமாக உபயோகா கற்றுத் தரும் யோகா ஆசிரியர்களாக மாறியுள்ளனர். ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி சீருடைகளுடன் சாதனா ஹால் முன்னிலையில் காத்திருக்கிறார்கள். வருபவர்களிடம் நமஸ்காரம் செய்துவிட்டு, “அரைமணி நேரம் நீங்கள் செலவழித்தால் போதும் அண்ணா!” என்று சொல்லி, இலவச யோகா வகுப்பு குறித்து சுருக்கமாக எடுத்துரைக்கிறார்கள்.

தாங்கள் அனைவரும் தங்கள் சுற்றத்தாருக்கும் நண்பர்களுக்கும் சமூகத்திலுள்ள மற்றவர்களுக்கும் உபயோகாவை இலவசமாக வழங்கவிருப்பது தங்களுக்கு ஆவலைத் தூண்டும் விஷயமாக இருப்பதாகக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

2வது உலக யோகா தினம் வருகின்ற ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதையொட்டி, ஈஷா சார்பில் இந்த இலவச உபயோகா வகுப்பு வழங்கப்படுகிறது. இந்த செயல்திட்டத்தில் இந்த மாணவர்கள் யோகா ஆசிரியர்களாக மாறியதுதான் கூடுதல் அழகுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 8 ஈஷா வித்யா பள்ளிகளிலிருந்து, 8 மற்றும் 9ஆம் வகுப்பை சேர்ந்த ஈஷா வித்யா மாணவர்கள் இந்த உன்னத செயலில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். 13 முதல் 14 வயதே நிரம்பிய இந்த இளம் மாணவர்கள் ஈஷா உபயோகா பயிற்சியை வழங்குவதற்கான பயிற்சியளிக்கப்பட்டுள்ளதோடு, வகுப்பிற்கு பார்வையாளர்களை அழைத்து வருவது, பயிற்சியைப் பற்றி எடுத்துரைத்து வகுப்பில் சேர்ப்பது, வகுப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வது முதல் வகுப்பை நடத்துவது வரை, தாங்களே அனைத்து பொறுப்பையும் சிரமேற்கொள்கின்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குருவால் வடிவமைத்து வழங்கப்பட்டுள்ள இந்த உபயோகா பயிற்சியானது, ஆரோக்கியம், மன அழுத்தமின்றி வாழ்தல் மற்றும் உள்நிலை நல்வாழ்வு ஆகியவற்றை ஒருவர் அடையும் நோக்கில் அமைந்துள்ளது. ஏப்ரல் 16ல் துவங்கி மே 29 வரை தினமும் நடைபெறும் இந்த வகுப்புகளை 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறுப்பெடுத்து நிகழ்த்துகிறார்கள். தினமும் காலை 10 மணிக்கு துவங்கும் வகுப்புகள் மாலை 5 மணி வரை அரைமணிநேரத்திற்கு ஒரு வகுப்பு என தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆங்கிலத்திலும் சிறப்பு வகுப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. கடந்த 12 நாட்களில் சுமார் 7000க்கும் மேற்பட்டோர் இந்த வகுப்பில் கலந்துகொண்டு பலனடைந்துள்ளனர்.

விழுப்புரம் ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் சிலர் ஒரு குழுவாக இணைந்து, ஈஷா மையத்தில் தங்கியிருந்து இந்த செயல்திட்டத்தில் தங்கள் பங்களிப்பை வழங்கிவருகின்றனர். இக்குழுவிலுள்ள மாணவி சந்தியா (வயது 13)கூறுகையில், “நாங்கள் இங்கே வரும்போது ஏதோ தன்னார்வத் தொண்டு புரிவதற்காகத்தான் வருகிறோம் என்று நினைத்திருந்தோம். ஆனால், இங்கு நாங்கள் யோகா ஆசிரியர்களாக மாறுவோம் என நினைத்துப்பார்க்கவில்லை! எப்படி வகுப்பை நடத்துவது; பேசும் விதம் மற்றும் நிற்கும் விதம் என அனைத்துமே எங்களுக்கு முறையாக அறிவுறுத்தப்பட்டது. முதலில் வகுப்பை முன்னின்று நடத்தும்போது சற்று நடுக்கமும் பதற்றமும் இருந்தது. தற்போது தன்னம்பிக்கையுடன் மைக் பிடித்து பேசவும் வகுப்பை நடத்தவும் எங்களால் முடிகிறது.” என்று தெரிவித்தார்.

சாதனா ஹாலின் முன்புறம் பார்வையாளர்களிடம் சில மாணவர்கள் வகுப்பு குறித்து எடுத்துரைத்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த மாணவி வினிதா கூறும்போது, “அனைவருமே இந்த வகுப்பில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். வகுப்பு குறித்த தகவல்களை ஆவலுடன் கேட்கிறார்கள்.” என்றார்.

“நாங்கள் வயதில் இளையவர்களாக இருந்தாலும் கூட, நாங்கள் கூறுவதை செவிமடுக்க அனைவரும் தயாராகவே இருக்கின்றனர். எங்களிடமிருந்து யோகா கற்றுக்கொள்வதில் மக்கள் ஆர்வமாகவே உள்ளனர்.” என்று மாணவி சந்தியா கூறியது இளைய தலைமுறையினர் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதாய் இருந்தது.

ஒருவார காலம் ஈஷா யோகா மையத்தில் தங்கி தங்கள் பங்களிப்பை வழங்கிவிட்டு, வீட்டுக்கு திரும்பும் சில மாணவிகள் கூறுகையில், ஈஷா தங்களுக்கு சொர்க்கம்போல இருந்தது எனறு வர்ணித்ததோடு, இந்த இடத்தைவிட்டு போவதற்கு தங்களுக்கு மனமில்லை என்றும் வருந்தினர். ஆனால், தாங்கள் அனைவரும் தங்கள் சுற்றத்தாருக்கும் நண்பர்களுக்கும் சமூகத்திலுள்ள மற்றவர்களுக்கும் உபயோகாவை இலவசமாக வழங்கவிருப்பது தங்களுக்கு ஆவலைத் தூண்டும் விஷயமாக இருப்பதாகக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஈஷா வித்யா மாணவர்கள் யோகா ஆசிரியர்களாக மாறியுள்ளது சற்று புதிதாக இருந்தாலும், யோகப் பயிற்சிகள் ஒன்றும் இந்த மாணவர்களுக்கு புதிதல்ல! ஈஷா வித்யாவின் பாடத்திட்டத்தில் யோகப் பயிற்சிகளுக்கென ஒவ்வொரு நாள் காலையிலும் பிரத்யேக வகுப்புநேரம் கொடுக்கப்படுகிறது.

உபயோகா, ஒரு எளிய பயிற்சியானாலும் கூட மூட்டுகள், தசைகள் மற்றும் சக்திமண்டலத்தை புத்துயிர்கொள்ளச் செய்யும் சக்திவாய்ந்த பயிற்சியாக உள்ளது. ஒருவர் உடலளவில் முழுமையாக வாழ்வதற்கு இப்பயிற்சி வழிவகுக்கிறது. முதலாவது உலக யோகா தினமான 2015 ஜுன் 21ஆம் தேதியை முன்னிட்டு நேரடியாக மட்டுமல்லாமல், ஆன்லைன் மூலமாகவும் உபயோகா பயிற்சிகள் 12 மில்லியன் பேர்களுக்கு மேல் ஈஷா சார்பில் கற்றுத்தரப்படுகின்றன.

சமீபத்தில் சத்குரு ஸ்பாட்டில், வரவிருக்கும் (2016) உலக யோகா தினத்திற்கான தனது திட்டங்களை சத்குரு பகிர்ந்திருந்தார்: “மனித ஜனத்தொகையில் முக்கிய அம்சமாக விளங்கும் குழந்தைகளை நாம் சென்றடைய விரும்புகிறோம்!”

இந்தியா முழுக்க குறைந்தபட்சம் பத்தாயிரம் பள்ளிகளை ஈஷா சென்றடைவதன்மூலம், எட்டு முதல் ஒன்பது மில்லியன் இளம் உயிர்களிடத்தில் யோகாவை கொண்டுசேர்ப்பதற்கான திட்டத்தை சத்குரு மேற்கோள்காட்டியிருந்தார். இந்த செயல்திட்டத்தில் நீங்களும் உங்களுடைய பங்களிப்பை வழங்கிடவும், மேலும் தகவல்களைப் பெறுவதற்கும் AnandaAlai.com/YogaDay என்ற முகவரியில் நுழையுங்கள்!