கடிதங்களையும் பார்சல்களையும் கொரியரில் அனுப்பி பார்த்திருப்போம். இயற்கை விவசாயி சச்சிதானந்தமோ அரிசி, பருப்பு, நாட்டு சர்க்கரை, செக்கு எண்ணெய் போன்றவற்றை கொரியரில் அனுப்பி சில்லரை விற்பனையில் சிறப்பான லாபம் ஈட்டி வருகிறார். வாடிக்கையாளர்களுக்கு விலைப் பட்டியலை எஸ்எம்எஸ் ஆக அனுப்புவது, ஆன்-லைன் பரிவர்த்தனை மூலம் பணத்தை பெற்றுக்கொள்வது என அவர் கையாளும் ஒவ்வொரு வழிமுறையும் மிகவும் வித்தியாசமாக உள்ளது.

அவரை சந்திப்பதற்காக தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூருக்கு சென்றிருந்தேன். அய்யம்பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கியதும் அங்கு வந்த சச்சிதானந்தம் மாத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். வரவேற்பறை போன்று இருந்த அந்த அறையின் ஓரத்தில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அருகில் இருந்த மர அலமாரியில் நாட்டு சர்க்கரை, சோள மாவு, உளுந்து, எண்ணெய் பாட்டில்கள் அடுக்கடுக்காக அடிக்கப்பட்டிருந்தன.

மார்க்கெட்டிங் ஃபீல்டுல எனக்கு இருந்த அனுபவங்கள் இயற்கை விவசாயத்துக்கும் கைகொடுத்துச்சு. நான் விளைவிக்கிற பொருள நானே நேரடியா சில்லரை விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். அதுக்கு சில யுக்திகளையும் அன்றாட பழக்கமா மாத்திக்கிட்டேன்.

சச்சிதானந்தத்துடன் பேசிக் கொண்டு இருக்கும்போது தான் அவர் இதற்கு முன்பு லண்டனில் 10 ஆண்டுகள் புத்தக விற்பனையாளராக பணிபுரிந்ததை தெரிந்து கொண்டேன்.

"டிகிரி முடிச்சுட்டு 15 வருசம் விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்தேன். அடுத்து பிசினஸ் பண்றதுக்காக 2006-ல லண்டன் போனேன். 10 வருசம் அங்க இருந்தேன். குடும்ப சூழ்நிலை காரணமா 2015-ல லண்டன்-ல இருந்து சொந்த ஊரான தஞ்சாவூருக்கே திரும்ப வந்துட்டேன். குத்தகைக்கு விட்ருந்த பாரம்பரிய நிலத்தை திருப்பி நானே இயற்கை விவசாயம் பண்ணலாம்னு முடிவு எடுத்தேன். அதுக்காக 2015-ல சுபாஷ் பாலேக்கர் ஐயா நடத்துன ஜூரோ பட்ஜெட் இயற்கை விவசாய பயிற்சி வகுப்புல கலந்துக்கிட்டேன். அப்பறம் ஈஷா விவசாய இயக்கம் நடத்துன சில பயிற்சிகள்லயும் கலந்துக்கிட்டேன். அதை வைச்சு கடந்த 3 வருசமா இயற்கை விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

கைகொடுத்த மார்க்கெட்டிங் அனுபவம்…

மார்க்கெட்டிங் ஃபீல்டுல எனக்கு இருந்த அனுபவங்கள் இயற்கை விவசாயத்துக்கும் கைகொடுத்துச்சு. நான் விளைவிக்கிற பொருள நானே நேரடியா சில்லரை விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். அதுக்கு சில யுக்திகளையும் அன்றாட பழக்கமா மாத்திக்கிட்டேன்.

நான் எங்க போனாலும் நான் விளைவிச்ச அரிசியோ பருப்போ பையில கொஞ்சம் எடுத்துட்டு போயிருவேன். என் கூட பேசுறவங்க தானாவே என்ன அரிசியெல்லாம் கையில் வச்சுக்கிட்டு திரியுறீங்கனு கேட்பாங்க. அப்போ நான் அவங்கக்கிட்ட இப்டி விளக்கமா எடுத்து சொல்வேன்.

’இது இயற்கை முறையில எந்த ரசாயனமும் போடாம விளைவிச்சது. வீட்டுக்கு எடுத்துட்டு போயி சமைச்சு சாப்பிட்டு பாருங்க. பிடிச்சிருந்தா கால் பண்ணுங்க வீட்டுக்கே அரிசிய பார்சல் அனுப்புறேன்’னு சொல்லி என்னோட போன் நம்பர அவங்கக்கிட்ட கொடுத்துருவேன். கூடவே கொஞ்சம் சாம்பிளும் கொடுத்துருவேன். இந்த முறையிலதான் என்னோட கஸ்டமர்ஸ் படிப்படியா அதிகரிக்க ஆரம்பிச்சாங்க” என்று தன் விற்பனை யுக்தியை பகிர்ந்துகொண்டார் சச்சிதானந்தம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பாரம்பரிய ரகங்களைக் காக்கும் விவசாயி…

நெல்தான் அவருடைய பிரதான விளைப்பொருள். அறுவடை செய்யும் நெல்லை, எப்பொழுதும் நெல்லாகவே விற்பது கிடையாது. அதை 3 நாட்கள் வெயிலில் நன்கு காய வைத்து, அதை சாக்கு மூட்டையில் கட்டி 6 மாதங்கள் குடோனில் சேமித்து வைக்கிறார். அவ்வாறு சேமித்து வைப்பதால் அரிசியின் சுவையும் தரமும் அதிகரிப்பதாக கூறுகிறார். 6 மாதங்களுக்கு பிறகு மில்லில் கொடுத்து அதை அரிசியாக மாற்றி 10 கிலோ மற்றும் 25 கிலோ சிப்பங்களாக மாற்றிவிடுகிறார்.

இதுகுறித்து, அவர் சற்று விளக்கமாக சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். “நான் பெரும்பாலும் பாரம்பரிய நெல் ரகங்களதான் அதிகம் விளைவிக்கிறேன். எங்க பகுதியில் பாசன வசதி நல்லா இருக்கு. அதுனால முப்போகமும் நெல் அறுவடை பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்போ அறுபதாம் குறுவை அறுவடை பண்ணப்போறேன். இதுக்கு முன்னாடி வெள்ளை பொன்னி, குள்ள பொன்னி, சீரக சம்பா, சாவித்ரி போன்ற ரகங்களை அறுவடை பண்ணி வித்துருக்கேன். ஒரு கிலோ அரிசி 70 ரூபாய்க்கு விக்கிறேன்.

கொரியரில் பறக்கும் விளைபொருட்கள்…

முழுக்க முழுக்க சில்லரை வியாபாரம்தான் பண்றேன். உள்ளூர்ல இருக்குறவங்க நேர்ல வந்து வாங்கிட்டு போயிருவாங்க. வெளியூர்காரங்களுக்கு புரொஃபசனல் கொரியர்-ல அனுப்புறேன். குறைஞ்சது 5 கிலோவாவது ஆர்டர் பண்ணாதான் கொரியர் அனுப்புவேன்.

அன்றாடம் பயன்படுத்துற 3 முக்கிய பொருட்கள நான் விற்பனை பண்றேன். 1. சாப்பாட்டு அரிசி; இட்லி, தோசை பண்றதுக்கான இட்லி அரிசி, உளுந்து, 2. எண்ணெய் வகைகள், 3. நாட்டு சர்க்கரை. இந்த பொருட்களுக்கு எப்போதுமே தேவை இருந்துக்கிட்டே இருக்கும்.

கொரியர்ல அவங்களோட வீட்டுக்கே நேரடியாக பொருட்கள் போய் சேர்ந்துரும். டெலிவரி ஆனதும் என்னோட பேங்க் அக்கவுண்ட்டுக்கு பணம் அனுப்பி வச்சுருவாங்க. இப்படி சில்லரை முறையில நேரடி விற்பனை பண்றது மூலமாக 20 சதவீதம் வரை கூடுதல் லாபம் கிடைக்குது

என்னோட வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை கைவசம் இருக்குற பொருட்களோட விவரத்தையும், அதோட விலையையும் எஸ்எம்எஸ் பண்ணிருவேன். அதை பாத்துட்டு அவங்க ஆர்டர் பண்ணுவாங்க. பெரும்பாலும், சென்னை, கோவையில இருந்து அதிக ஆர்டர் வருது. இதுதவிர, தமிழ்நாடு முழுக்க இருந்தும் ஆர்டர் வரும்.

கொரியர்ல அவங்களோட வீட்டுக்கே நேரடியாக பொருட்கள் போய் சேர்ந்துரும். டெலிவரி ஆனதும் என்னோட பேங்க் அக்கவுண்ட்டுக்கு பணம் அனுப்பி வச்சுருவாங்க. இப்படி சில்லரை முறையில நேரடி விற்பனை பண்றது மூலமாக 20 சதவீதம் வரை கூடுதல் லாபம் கிடைக்குது"  என்றார் சச்சிதானந்தம்.

காலை உணவை முடித்துக் கொண்டு அருகில் இருந்த அவரது நெல் வயலுக்கு சென்றோம். தற்போது 14 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளார். நாற்று பருவம், களை எடுக்கும் பருவம், கதிர் முதிர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் பருவம் என 3 பருவங்களையும் அவரது வயலில் பார்க்க முடிந்தது. அறுவடைக்கு மட்டுமின்றி நாற்று நடுவதற்கும் இயந்திரத்தை தான் அவர் பயன்படுத்துகிறார். நன்கு தூர்பிடித்து அறுவடைக்கு தயாராக இருந்த அறுபதாம் குறுவை ரக நெல் வயலில் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டேன்.

"ஒரு இயற்கை விவசாயி தன்னுடைய விளைப்பொருட்களை நேரடியாக மக்கள்கிட்ட விக்கும்போது விவசாயிக்கு நல்ல லாபம் கிடைக்குது; மக்களுக்கும் விஷமில்லாத உணவு கிடைக்குது. அதனால, முடிஞ்ச அளவுக்கு எல்லா இயற்கை விவசாயிங்களும் நேரடி விற்பனையில ஈடுபடணும். இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்குறதுக்கு நேரடி விற்பனை ஒரு முக்கிய காரணி" என்றார் சச்சிதானந்தம்.

பெட்டிச் செய்தி:

இயந்திர நாற்று நடவால் ஏற்படும் பயன்கள் குறித்து இயற்கை விவசாயி சச்சிதானந்தம் கூறிய சில தகவல்கள்:

paddy-machine-cultivation

 

  • எளிய முறையில் நாம் விரும்பும் நேரத்தில் விரைவாக நாற்று நட முடியும். கூலி ஆட்களை எதிர்பார்த்து நேரத்தை வீணடிக்க வேண்டிய தேவை இருக்காது.
  • நாம் விரும்பும் எண்ணிக்கையிலும் இடைவெளியிலும் மிக துல்லியமாக நாற்றுக்களை நட முடியும். இதனால், விதை நெல் மிச்சமாகும். போதிய சூரிய ஒளியும் காற்றோட்டமும் கிடைத்து பயிர் நன்கு தூர் பிடிக்கும்.
  • ஆட்களை கொண்டு நடும்போது சிலர் மண்ணில் ஆழமாக நட்டுவிடுவார்கள். இதனால் அந்த பயிர் முளைப்பதில் சற்று தாமதம் ஆகும். இயந்திர நடவில் இந்த பிரச்சினை ஏற்படாது.
  • ஆட்களை கொண்டு நாற்று நடுவதை காட்டிலும் இயந்திர நடவில் செலவு குறைவு.

விதை விதைப்போம்...

 

ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் களப் பயிற்சிகளில் கலந்துகொள்ள 83000 93777 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

நன்றி: தினத்தந்தி

(குறிப்பு: இந்த கட்டுரை தினத்தந்தி நாளிதழில் வெளியானது)

ஈஷா விவசாய இயக்கம் பற்றிய விவரங்களுக்கு முகநூல் மற்றும் Youtube channelலில் இணைந்திடுங்கள்!