ஈஷாவில் நடந்த மாரத்தான் போட்டி, அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம், உலக புத்தக தினத்தில் ஈஷாவின் முயற்சிகள் என ஈஷாவின் சில சுவாரஸ்ய நிகழ்வுகள் உங்களுக்காக!

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஈஷா வித்யா நடத்திய கோடைகால முகாம்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஈஷா வித்யா தத்தெடுத்துள்ள பதினைந்து அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறையை பயனுள்ளதாக அமைக்கும் வகையில் கோடைகால பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. சேலத்தில் ஏப்ரல் 22 முதல் 24 வரையிலும், விழுப்புரத்தில் ஏப்ரல் 15 முதல் 17 வரையும் நிகழ்ந்த இந்த முகாம்கள், முறையே வனவாசி மற்றும் விழுப்புரம் ஈஷா வித்யா பள்ளிகளால் ஒருங்கிணைக்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் ஐந்து அரசு பள்ளிகளைச் சேர்ந்த 127 மாணவ-மாணவிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் பத்து அரசு பள்ளிகளைச் சேர்ந்த 149 மாணவ-மாணவிகளும் முகாமில் பங்குகொண்டு பலனடைந்தனர். பருத்தி வேலைப்பாடுகள், எம்பிராய்டரி வடிவமைப்பு, ஆடையலங்கார வடிவமைப்பு, கடற்பாசி பயன்படுத்தி மலர் உருவாக்குதல், உபயோகா பயிற்சி, நாடகப் பயிற்சி, பொம்மலாட்ட பொம்மைகள் உருவாக்குதல், காகித ஸ்டாண்டுகள் செய்தல், 3D காகித வேலைப்பாடுகள், முகமூடி உருவாக்குதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

சேலம் முகாமின் இறுதிநாளில் குருவம்பட்டி விலங்கியல் பூங்காவிற்கும், விழுப்புரம் முகாமின் இறுதிநாளில் திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயில், தேசிய தொல்பொருள் பூங்காவிற்கும் மாணவர்கள் பார்வையிடுவதற்காக அழைத்துச்செல்லப்பட்டனர்.

உலக பூமி தினத்தை முன்னிட்டு ஈஷாவில் மாரத்தான்!

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னிறுத்தி உலக பூமி தினத்தை முன்னிட்டு, ஈஷாவில் மாரத்தான் ஓட்டம் (மே 1) நிகழ்ந்தது. சத்ரபதி சிவாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஈஷா பசுமைக் கரங்கள் இணைந்து இந்த மாரத்தான் ஓட்டப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தன. இரண்டாம் ஆண்டாக உலக பூமி தினத்திற்காக ஈஷாவில் நிகழ்ந்த இப்போட்டி, இன்று காலை 6 மணிக்கு மாதம்பட்டி கிராமத்தில் துவங்கியது.

ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு, முட்டத்துவயல் வழியாக ஈஷாவில் வந்து நிறைவடைந்த இந்த மாரத்தான் போட்டிக்கான தூரம் சுமார் 20 கி.மீ. ஆசிரமவாசிகள், தன்னார்வத் தொண்டர்கள் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் போட்டியில் ஆர்வத்துடன் பங்குகொண்டனர். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

உலக புத்தக தினத்திற்காக ஈஷா மேற்கொண்ட விழிப்புணர்வு முயற்சிகள்!

உலக புத்தக தினமான கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதியன்று, தமிழகமெங்கும் ஈஷா சார்பில் வாசிக்கும் பழக்கத்தை மக்களிடத்தில் அதிகரிக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள் தொடங்கி வைக்கப்பட்டன. சத்குருவின் வார்த்தைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக ஈஷா இதனை மேற்கொண்டது!

தமிழகத்தின் முக்கிய நகரங்கள், சுற்றுலா ஸ்தலங்கள் மற்றும் சிறிய ஊர்கள் உள்ளடக்கிய அனைத்து இடங்களிலும் (சுமார் 100க்கும் மேற்பட்ட மையங்களில் 180க்கும் மேற்பட்ட பொது இடங்களில்) தன்னார்வ தொண்டர்கள் ஸ்டால் அமைத்து, 25,000 சிற்றேடுகளை (Teaser book) இலவசமாக வழங்கியதோடு, சத்குரு புத்தகங்களை விற்பனைக்கும் வைத்தனர். அனைத்து இடங்களிலும் மக்கள் ஆர்வத்தோடு வந்து புத்தகங்களையும் சிற்றேடுகளையும் பெற்று சென்றுள்ளனர்.