கத்தியைக் கொண்டு பழங்களையும் நறுக்க முடியும், விரலையும் வெட்டிக்கொள்ள முடியும். எந்த ஒரு கருவியானாலும் நமக்குப் பயன்படும்படி செய்துகொள்வதும் அல்லது நம் அழிவிற்கு வழிவகுக்கும்படி செய்துகொள்வதும் நம் கையில்தான் உள்ளது. இப்போது, செல்ஃபோனுடைய கூர் முனைகள் நம்மைப் பதம்பார்க்கத் துவங்கியுள்ள நிலையில், அபாயச் சங்காக இந்தக் கட்டுரை...


டாக்டர். சாட்சி சுரேந்தர்,

ஈஷா ஆரோக்யா

"'செல்' என்பது தமிழ் இலக்கணப்படி ஓர் ஏவல் வினைச்சொல். தெரியுதா தம்பி?" என்கிறார் ஐந்தாம் வகுப்பு தமிழாசிரியர். ஆனால் நம் வீட்டு பொடியனோ, "அய்யா, என் செல் 'நோக்கியா', எங்கப்பா செல் 'சாம்சங்', எதிர் வீட்டு பிங்கியோடது 'கொரியா'ன்னு தெரியும். நீங்க சொல்றது புரியலை அய்யா!" என்கிறான்.

இன்று வண்டு, சிண்டு, நண்டுகளின் கைகளில் தவழுகின்ற இந்த செல்போன்கள், கடந்த 20 வருடங்களில் மனிதனின் குறைந்தபட்ச தேவையை, "உணவு, உடை, உறைவிடம், உள்ளங்கை செல்போன்," என மாற்றிவிட்டன.

செல்போன்களின் ரிஷிமூலம்

இரண்டாம் உலகப் போரில் இராணுவத் தகவல் தொடர்புக்காக ரேடியோ அலைவரிசையின் மூலம் இயங்கக்கூடிய சாதனங்கள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம், 2 முதல் 4 வார்த்தைகள் மட்டுமே ஒரு நேரத்தில் பரிமாறிக் கொள்ள முடியும். இவை நவீன செல்போன்களின் 'பாட்டன்கள்' எனலாம்.

குழந்தைகளின் (குறிப்பாக 12 வயதுக்கு கீழ்) மண்டை ஓடு முழுவதும் வளர்ச்சியடையாத நிலையில், கதிர்வீச்சு மூளையில் ஊடுருவ வாய்ப்பு அதிகமாதலால், அவர்களை செல்போன் உபயோகிக்க ஊக்கப்படுத்தக் கூடாது. இது கர்ப்பிணி பெண்களுக்கும் பொருந்தும்.

பின்பு 1973ல், பொறியாளர் மார்டின் கூப்பர், ஒரு செங்கல் அளவிலான செல்போன் மூலம் விஞ்ஞானி ஜோயலிடம் பேசிய முதல் உரையாடல் வரலாறு. ஆனால் 40 வருடங்களில் தன் கண்டுபிடிப்பு சிலிம் மாடல், ஃப்ளிப் மாடல், ஆண்ட்ராய்டு, டாப்லட் என உலகையே சட்டைப் பாக்கெட்டில் கட்டிப் போட்டுவிடும் என்பதைச் சத்தியமாய் நம்பியிருக்க மாட்டார் கூப்பர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஒரு சாமான்யனின் பார்வையில்...

என் தந்தைக்கு வயது 62. அவரது பால்யத்தில், தஞ்சாவூரிலிருந்து இருபதே மைல் இருந்தாலும் திருவையாற்று அத்தையிடம் தன் வீட்டிலிருந்தே பேச முடியும் என்ற கனவை எழுபது, எண்பதுகளில் பரவலாக்கப்பட்ட தொலைபேசிகள் (லேன்ட் லைன்) நனவாக்கின. என் பால்ய பருவத்திலோ, ஒரு தொலைபேசியை வயர் இணைப்பின்றி போகும் இடமெல்லாம் கொண்டு சென்று நினைத்த நபருடன், நினைத்த நேரத்தில் பேச முடியும் என்று நான் கற்பனைக் கூட செய்து பார்க்காத ஒரு புரட்சியை கடந்த 15 ஆண்டுகளில் செல்போன்கள் நம் சமூகத்தில் நிகழ்த்தி விட்டன.

கொஞ்சம் ஓவராத்தான் பேசுறோமோ?!

உடனடி தகவல் தொடர்புக்கு தற்காலத்தில் செல்போனின் தேவை இன்றியமையாதது என்றாலும் குறிப்பாக இந்தியாவில் தேவையை மீறி அவற்றின் பயன்பாடு கட்டுப்பாடு இழக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. சமீபத்திய கணக்கெடுப்பு கூறும் தகவல்... உலகில் 500 கோடி பேருக்கு செல்போன் இணைப்பு உள்ளது (உலக மக்கள் தொகை 750 கோடி). அதில் 60 கோடி இணைப்புகள் இந்தியாவிலாம்!

இதன்மூலம் நாம் குறைந்தபட்சம் புரிந்து கொள்ள வேண்டியது, இன்றைய மனித சமூகம் 20 வருடங்களுக்கு முன்பைவிட 500 கோடி மடங்கு அதிக கதிர்வீச்சை உள்வாங்குகிறோம் என்பதையே!

காணாமல் போன குருவி, பட்டாம்பூச்சி இனங்களுக்கு செல்போன் கதிர்வீச்சு தான் காரணம் என இனங்கண்டுள்ளோம்.

சமீப காலமாய் குண்டூசி விற்பவர் கூட இடது காதுக்கு ஒன்று, வலது காதுக்கு மற்றொரு போன் என பரபரவென இயங்கும் காட்சிகளைக் கண்டால், "நான் ரொம்ப பிஸி!" என வசனம் பேசும் கவுண்டமணியாரின் கதாபாத்திரம்தான் நினைவில் வருகிறது.

மேலும் குறிப்பாக இளைஞர், இளைஞிகள் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதில் ஆதாயம் தேடும் செல்போன் நிறுவனங்களோ, 'கூல் கப்பிள் ஆபர்,' 'சூப்பர் ஜோடி ப்ளான்,' என பல ப்ளான்களைப் போடுவதும், 2ஜி, 3ஜி என லட்சம் கோடிகளில் கல்லா கட்டுவதும் நாடறிந்த ஒன்றே! இந்தப் போக்கினால் தனிமனித அளவிலும், சமூக அளவில் ஏற்படும் எதிர்வினைகள் நாம் ரசிக்கும்படியாக இல்லை.

அதிகப் பேச்சு, அதிக ஆபத்து

"வரங்களைக் கூட சாபங்களாய் மாற்றும் திறன் மனிதனுக்கு உண்டு," என்பதற்கு நமது வரைமுறையற்ற செல்போன் பேச்சும், அதன் பரிசாய் நாம் பெறும் கதிர்வீச்சுமே மௌன சாட்சி!

லட்சம் கோடிகளில் புரளும் வணிகம் என்பதாலோ என்னவோ அதிக கதிர்வீச்சினால் ஏற்படும் உடல், மனநலக் கேடுகளை அறிவியல் உலகம் இன்று வரை அதிகம் பேசமாட்டேன் என்கிறது. ஐ.நா வின் உலக சுகாதார அமைப்பு, செல்போன் கதிர்வீச்சு 'கேன்சரை உண்டாக்கலாம்' எனப் பட்டும் படாமல் தன் முடிவை அறிவிக்கிறது. இதை மீறியும் உலக அளவில் மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட விஞ்ஞானிகள் அபாய சங்கை ஊதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதீத கதிர்வீச்சுக்கு உட்படுவோருக்கு ஏற்படும் பாதிப்புகளில் அவர்கள் குறிப்பிடுபவை:

  • கவனக்குறைவு, மனச்சோர்வு, மறதி (திருமண நாளை மறப்பது, தொடங்கி, செல்ஃபோனில் பேசிக் கொண்டே வண்டி ஓட்டி, அல்பாயிசில் முடிவது வரை)
  • படபடப்பு, ஆழ்ந்த தூக்கமின்மை, மன உளைச்சல் (தூங்கும்போது கூட ரிங்டோன் அடிக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங்க்!!!)
  • ஹார்மோன் சமநிலையில் பாதிப்பு, ஒற்றைத் தலைவலி
  • மூளைப் புற்றுநோய்கள்

செல்போனும் மூளைப் புற்றுநோயும் அதிகம் விவாதிக்கப்படும் பொருளாக இருந்தாலும் கூட, அதற்கு முன்னர் நாம் மேலே கூறிய மனப்பிறழ்வுகளால் இளைய தலைமுறையும் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அது ஆபத்துதான்.

கதிர்வீச்சைக் குறைக்கும் வழிகள்:

  • மிகவும் தேவையெனில் மட்டும் உபயோகிப்பதும் பேசும் கால்களின் (calls) நேரத்தைக் குறைப்பதும் நலம். முடிந்த அளவு SMS மூலம் மட்டும் தொடர்பு கொள்வது நலம்.
  • பொதுவாக செல்போனை உடலுக்கு அருகில் (காதோடு) வைத்து பயன்படுத்தும்போது கதிர்வீச்சு அபாயம் பல மடங்காகிறது. ஆகையால் காதில் பொருத்திக் கொள்ளும் சாதனத்துடன் செல்போனை உடலில் இருந்து தூரத்தில் வைத்து உபயோகித்தல் நலம்.
  • சிக்னல் வலுவான இடங்களில் மட்டும் உபயோகிப்பது நலம். இது செல்போன் வெளியேற்றும் கதிர்வீச்சினைக் குறைக்கிறது.
  • குழந்தைகளின் (குறிப்பாக 12 வயதுக்கு கீழ்) மண்டை ஓடு முழுவதும் வளர்ச்சியடையாத நிலையில், கதிர்வீச்சு மூளையில் ஊடுருவ வாய்ப்பு அதிகமாதலால், அவர்களை செல்போன் உபயோகிக்க ஊக்கப்படுத்தக் கூடாது. இது கர்ப்பிணி பெண்களுக்கும் பொருந்தும்.
  • கதிர்வீச்சை உள்வாங்கும் தன்மை (SAR - Specific Absorption Rate) குறைவாக உள்ள போன்களை கேட்டறிந்து வாங்கி உபயோகிக்கலாம்.

ஏன்? முடிந்தால், செல்போனே பயன்படுத்தாமல் கூட வாழமுடியும் என்றால், நல்லதுதானே? 15 வருடங்களுக்கு முன்பும் செல்போனின்றி லேண்ட் லைன் (Land line) உபயோகித்து நாம் வாழ்ந்தோம் அல்லவா? விஷயம் அறிந்த மேற்கத்தியர்கள் பலரும் "அதி அவசியதேவைக்கு மட்டுமே செல்போன், மற்ற நேரம் லேன்ட் லைன்" என்கிற ட்ரெண்டுக்கு மாறி வருவதை நாம் கவனிக்கத் தவறக் கூடாது!

உர மருந்துகள், ப்ளாஸ்டிக், அணு அறிவியல் முதலிய அனைத்தும் உருவாக்கப்பட்ட போது கொண்டாடப்பட்டவைதான்! அவற்றை அன்றே அதன் தறிகெட்ட பயன்பாட்டால் ஏற்படும் பின்விளைவுகளை எச்சரித்தவர்களும் இருந்திருப்பார்கள். அவை 50, 60 வருடங்களுக்குப் பிறகுதான், பெரும்பான்மையினரின் புத்திக்கு உறைக்கத் தொடங்கியிருக்கிறது! இதே தவறை நாம் செல்போன் விஷயத்திலும் செய்ய வேண்டாமே!

அளவாய் பேசி அழகாய் வாழலாமே!


ஈஷா ஆரோக்யா மருத்துவமனை:

சென்னை ஆதம்பாக்கம்: 044 - 42128847
சேலம்: 0427 - 2333232
கரூர்: 04324 - 249299