சேலம் அருகே உள்ள காஞ்சேரி மலை அடிவாரத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களுடன் சுமார் 150 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது ‘லிட்டில் ஊட்டி’ வேளாண் காடு. தமிழகத்தின் மிகப்பெரிய வேளாண் காடான அங்கு அக்.14-ம் தேதி 600 விவசாயிகளை திரட்டி மாபெரும் மரம் வளர்ப்பு பயிற்சியுடன் கூடிய கருத்தரங்கை நடத்தியது நமது ஈஷா வேளாண் காடுகள் இயக்கம். அந்த நிகழ்ச்சி குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ உங்களுக்காக…

சேலம் மாவட்டம் தம்மப்பட்டியில் இருந்து 24 கி.மீ தொலைவில் உள்ள காஞ்சேரி மலை புதூரில் தான் இந்த மாபெரும் மரம் வளர்ப்பு பயிற்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன் வந்திருந்தனர்.

மரம் தங்கசாமி அவர்களுக்கு அஞ்சலி…

இருபுறங்களும் மரங்கள் சூழந்த இடத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே தன் வாழ்நாள் நோக்கமாக கொண்டு வாழ்ந்து மறைந்த திரு. மரம் தங்கசாமி அவர்களை நன்றியுணர்வுடன் நினைவு கூறும் விதமாக 2 நிமிட மவுன அஞ்சலியோடு நிகழ்ச்சி தொடங்கியது.

ஈஷா பசுமை கரங்கள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி ஸ்ரீமுகா வரவேற்புரை நிகழ்த்தினார். ஈஷா வேளாண் காடுகள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழ்மாறன் திட்ட விளக்க உரை நிகழ்த்தினார்.

புதிய முன்னெடுப்பின் துவக்கம்!

திரு.தமிழ்மாறன் அவர்கள் பேசுகையில், “தமிழகத்தின் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் ஈஷா பசுமை கரங்கள் திட்டத்தின் ஒரு அங்கமே ஈஷா வேளாண் காடுகள் இயக்கம். மரம் வளர்ப்பு குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவதே எங்களின் முக்கிய பணி. தொலைபேசியில் மட்டுமின்றி விவசாயிகளின் நிலத்துக்கே நேரில் சென்று ஆலோசனை வழங்கி வருகிறோம். தமிழகம் முழுவதும் இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நேரடி ஆலோசனை வழங்கி உள்ளோம்.

இதன் அடுத்தக்கட்டமாக, ஒவ்வொரு மண்டலத்திலும் இதுபோன்றதொரு ஒரு பயிற்சியை பெரிய அளவில் நடத்த முடிவு செய்துள்ளோம். மேலும், வேளாண் காடு வளர்ப்பில் முன்னோடியாக திகழும் விவசாயிகளின் வேளாண் காட்டிலேயே அந்த பயிற்சி நடைபெறும். அந்த முன்னெடுப்பின் தொடக்கமே இன்றைய பயிற்சி. வருங்காலங்களில் வெவ்வேறு மண்டலங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் இதுபோன்ற பயிற்சிகள் தொடர்ந்து நடத்த உள்ளோம்.” என்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

லிட்டில் ஊட்டியில் ஈஷா நர்சரியின் பங்களிப்பு!

அவரை தொடர்ந்து ‘லிட்டில் ஊட்டி’ வேளாண் காட்டின் உரிமையாளர் டாக்டர் திரு.துரைசாமி அவர்கள் பேசினார். அவர் பேசுகையில், “என்னுடைய தோட்டத்தில் தேக்கு, சந்தனம், மகோகனி என கிட்டத்தட்ட அனைத்து விதமான டிம்பர் மரங்களும் உள்ளன. இதுதவிர, நூற்றுக்கணக்கான பழ மரங்களும், பூ மரங்களும் உள்ளன. இங்கு மொத்தம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. அதில் சுமார் 60 ஆயிரம் மரங்கள் ஈஷா நர்சரிகளில் இருந்து வாங்கி வந்து நடப்பட்டவை. ஈஷா நர்சரிகளில் வாங்கும் மரங்கள் விலை குறைவாகவும் தரமாகவும் உள்ளது. மேலும், மரம் வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களையும் ஆலோசனைகளையும் ஈஷா வேளாண் காடு குழுவினரிடம் கேட்டு தெரிந்துகொள்கிறேன். இந்த காட்டின் வளர்ச்சியில் ஈஷாவுக்கு முக்கிய பங்குள்ளது. அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

இதையடுத்து நடந்த அமர்வுகளில் மரப் பயிர் சாகுபடியில் முன்னோடியாக திகழும் இயற்கை விவசாயிகள் மரம் வளர்ப்பு குறித்த பல்வேறு அம்சங்கள் தொடர்பாக உரை நிகழ்த்தினர்.

முன்னோடி விவசாயிகளின் அனுபவங்கள்!

மறைந்த திரு.மரம் தங்கசாமி அவர்களின் மகன் திரு. கண்ணன் தனது தந்தையின் மரம் வளர்ப்பு முறை குறித்தும் அதனால் ஏற்பட்ட பலன்கள் குறித்தும் பேசினார்.

மானாவாரி நிலங்களில் வேம்பு நடுவது குறித்து புதுக்கோட்டை விவசாயி திரு. கருப்பையாவும், வரப்போரங்களில் வளர்த்த மரங்களை விற்று ரூ.15 லட்சம் வருமானம் பார்த்த அனுபவம் குறித்து பேராவூரணியை சேர்ந்த திரு.அகிலனும், மலைவேம்பு சாகுபடி மற்றும் விற்பனை குறித்து முத்தூரைச் சேர்ந்த திரு.வெங்கடேசனும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தென்னையில் ஊடுபயிர்கள் சாகுபடி செய்வது குறித்து பொள்ளாச்சியை சேர்ந்த திரு. வள்ளுவனும், மர கொள்முதல் தொடர்பாக சத்தியமங்களத்தை சேர்ந்த மர வியாபாரி திரு.சோமசுந்தரமும் விரிவாக பேசினார்கள். மதிய உணவு இடைவெளிக்கு பிறகு நடந்த அமர்வில் டிம்பர் மரங்களில் மிளகு சாகுபடி செய்வது குறித்து புதுக்கோட்டை இயற்கை விவசாயி திரு.ராஜாகண்ணு பேசினார். இறுதியாக, மரம் வளர்ப்பு மற்றும் விற்பனையில் பின்பற்ற வேண்டிய அரசு நடைமுறைகள் குறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த வனத் துறை அதிகாரி திரு.சரவணன் மிக தெளிவாக எடுத்துரைத்தார்.

பின்னர், நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் அனைவரும் 5 குழுக்களாக பிரிந்து வேளாண் காட்டை சுற்றி பார்த்தனர். கேள்வி-பதில் அமர்வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

மரம் வளர்ப்பு பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகள் சிலரின் அனுபவ பகிர்வுகள்:

மதுராந்தகத்தைச் சேர்ந்த திருமதி.சசிகலா:

எங்களுடைய பண்ணையில் ஏராளமான மரங்களை நாங்கள் வளர்த்து வருகிறோம். குறிப்பாக, 54 வகையான பழ மரங்களை வளர்க்கிறோம். எங்களுக்கு தேவையான அனைத்து மரக் கன்றுகளையும் ஈஷா நர்சரிகளில் தான் வாங்கி வருகிறோம். மரம் வளர்ப்பில் எந்த சந்தேகம் இருந்தாலும் தமிழ்மாறன் அவர்களுக்கு போன் செய்து கேட்டு தெரிந்துகொள்வோம்.

இன்றைய பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. குறிப்பாக, டிம்பர் மரங்களுக்கு இடையே மிளகு உள்ளிட்டவற்றை ஊடுப்பயிராக சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்ட முடியும் என்பதை தெரிந்துகொண்டேன். மேலும், விற்பனை முறைகள் குறித்தும் ஏராளமான விஷயங்களை புதிதாக தெரிந்துகொண்டேன். இதையெல்லாம் தாண்டி போக்குவரத்து வசதியற்ற ஒரு தொலைத்தூர பகுதியில் 600 விவசாயிகளை வரவழைத்து இவ்வளவு அற்புதமான நிகழ்ச்சியை ஈஷா நடத்தி முடித்துள்ளது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இதுபோன்ற பயிற்சி அடுத்த நடத்தினால் என் நண்பர்களுக்கு கட்டாயம் பரிந்துரைப்பேன்.

கரூரைச் சேர்ந்த விவசாயி திரு.நல்லசிவம்:

7 ஆண்டுகளுக்கு முன்பு ஈஷாவின் வழிகாட்டுதலின்படி, 2 ஏக்கரில் மரங்களை நட்டு இருந்தேன். அவை தற்போது 20 அடியை தாண்டி மிக சிறப்பாக வளர்ந்துள்ளது. இன்றைய பயிற்சியில் மூடாக்கு போடுவதால் ஏற்படும் பயன்கள், சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை, மிளகு பயிரிடும் முறை போன்ற ஏராளமான் விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

சென்னையைச் சேர்ந்த திரு.தினேஷ்குமார்:

நீண்ட நாட்கள் கழித்து வருமானம் தரும் டிம்பர் மரங்களுக்கு இடையில் ஊடுபயிர்கள் நட்டால் குறுகிய காலத்தில் தனியாக வருமானம் கிடைக்கும் என்பதை இந்த பயிற்சியின் மூலம் தெரிந்துகொண்டேன். கலப்பு மரங்கள் வளர்ப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்து அறிந்துகொண்டேன். குறிப்பாக, மர விற்பனையில் உள்ள சட்ட நடைமுறைகள் குறித்து வனத் துறை அதிகாரி ஒருவரே நேரடியாக வந்து பேசியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த பயிற்சியை மிகப் பெரிய அளவில் நடத்திய ஈஷாவுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வருங்காலத்தில் நான் எனது மனைவியுடன் சேர்ந்து விடுமுறை நாட்களில் ஈஷா நர்சரியில் தன்னார்வ தொண்டு செய்யலாம் என முடிவு செய்துள்ளேன்.

ஆசிரியர் குறிப்பு : ஈஷா விவசாய இயக்கம் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.

ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் 

94425 90062

முகநூல் : ஈஷா விவசாய இயக்கம்