எதைச் செய்தாலும் அதை திறம்படச் செய்யவேண்டும் என்பது என் கருத்து. ஒருவர் இன்னொருவருடன் பந்தம் ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறார் என்றால், அதுவும்கூட திறம்பட நிகழவேண்டும். பந்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள், ஆனால் அதன்பின் ஒன்றாக இருக்க மறுக்கிறார்கள்! உங்களுக்கு பந்தம் ஏற்படுத்திக்கொள்ள விருப்பமில்லை என்றால், அது உங்கள் இஷ்டம். ஆனால் நீங்கள் பந்தம் ஏற்படுத்திக் கொள்ள விரும்பினால், அதை நன்றாக, ஆழமாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். விவாஹா என்பது அதுதான் - இந்த பந்தத்தை இன்னும் சிறந்த முறையில் ஏற்படுத்திக் கொள்வது.

ஒரு எளிமையான உதாரணம் கொண்டு இதை விளக்கலாம். சாதாரணமாக மரசாமான்களை (நாற்காலி, அலமாறி போன்றவற்றை) எடுத்துக்கொண்டால், தனித்தனியாக இருக்கும் மரக்கட்டைகளை ஒன்றாக இணைத்து அவை உருவாக்கப்படுகின்றன. அவை திருகாணி (screw) கொண்டு பிணைக்கப்படுகின்றன. அமெரிக்காவில் எல்லாவற்றையும் ஆணி அடித்துச் சேர்க்கிறீர்கள். ஆனால் உலகின் மற்ற இடங்களில் இரு மரக்கட்டைகளை திறம்பட இணைக்க, திருகாணியைத்தான் பயன்படுத்துகிறோம். திருகாணியில் ஒரு சௌகரியம் என்னவெனில், தேவையிருப்பின் திருகாணியை எதிர்பக்கத்தில் திருப்பி இரண்டையும் தனித்தனியாய் பிரிக்க முடியும். ஆனால் ஆணி அடித்துச்சேர்த்தால், அந்த ஆணியை வெளியெடுக்க முடியாது. ஆணி அடித்தபின் அவற்றைப் பிரிக்க வேண்டும் என்றால், அவற்றை உடைத்துத்தான் பிரிக்கவேண்டும்.

இந்தப் பிணைப்பு சரியான முறையில் மிகக் கச்சிதமாக இருக்கவேண்டும். ஆனால் அதேநேரம் ஏதோ எதிர்பாராத காரணத்தினால், அவற்றைப் பிரிக்கவேண்டும் என்றாலும், ஓரளவு முயற்சி செய்து அவற்றை பிரிக்க முடியவேண்டும்.

இந்தியாவில் இதுபோல் ஆணி உபயோகித்தால், அந்த தச்சரை ஒதுக்கிவிடுவார்கள். பாரம்பரிய இந்திய தச்சுத் தொழிலில் இரு மரக்கட்டைகளை ஒன்றிணைக்க (சிறு) மர-பிரம்புகளை உபயோகித்தனர். இவற்றைக் கொண்டு அந்த மரக்கட்டைகள் பிரியாதவாறு நன்கு இணைக்கமுடியும். அதேசமயம் அது நிரந்தர இணைப்பும் அல்ல. தேவையிருப்பின், தட்டித்தட்டி அந்த பிரம்புகளை அகற்றி அந்த பரக்கட்டைகளை பிரிக்கவும் முடியும். ஆனால் அதற்கு போதிய திறனும், முயற்சியும் தேவைப்படும். கிழக்கத்திய பகுதிகளில் இதில் அவர்கள் நன்கு தேர்ந்திருந்தார்கள். எல்லாவிதமான பிணைப்புகளும் இதுபோல்தான் இருக்க வேண்டும்.இந்தப் பிணைப்பு சரியான முறையில் மிகக் கச்சிதமாக இருக்கவேண்டும். ஆனால் அதேநேரம் ஏதோ எதிர்பாராத காரணத்தினால், அவற்றைப் பிரிக்கவேண்டும் என்றாலும், ஓரளவு முயற்சி செய்து அவற்றை பிரிக்க முடியவேண்டும்.இல்லையென்றால், நாம் உபயோகிக்கும் பொருள் பற்றி நமக்கு அக்கறையில்லை என்று பொருள்படும்.

மனிதர்களுக்கும்கூட இது பொருந்தும். ஒரு பந்தத்தில் இருவரை நாம் இணைக்கும்போது, அது கிட்டத்தட்ட நிரந்திர பிணைப்பாக இருக்கவேண்டும். என்றாலும் ஏதோவொரு எதிர்பாராத சூழ்நிலை காரணமாக அவர்களைப் பிரிக்கவேண்டும் என்றால், உதாரணத்திற்கு இருவரில் ஒருவர் இறந்துவிட்டால், மற்றவரும் அவரைப் பின்தொடர்ந்து இறந்துவிடக் கூடாது. நிரந்திரமாக இருவரையும் பிணைத்துவிட்டால், அப்படித்தான் நடக்கும். பழங்காலத்தில் பலருக்கும், "என் கணவன் (அ) மனைவி இறந்துவிட்டால், நானும் இறந்துவிடுவேன்" என்பதுபோன்ற உணர்வு இருந்தது. ஆனால் அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது. இன்று, அவருக்குப் பிடிக்காத ஏதோவொன்றை நீங்கள் செய்தாலும், அவர் விட்டுச் சென்றுவிடுவார். இதுபோன்ற உலகில் நிரந்திரப் பிணைப்பை ஏற்படுத்தக் கூடாது. இந்தப் பிணைப்பு எந்தளவிற்கு இருக்கவேண்டும் என்றால், ஏதோ நாளை காலை டூத்பேஸ்ட்-ல் சண்டை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதுபோன்ற சண்டைகளை எல்லாம் தாக்குப்பிடிக்கும் அளவிற்கு இந்தப் பிணைப்பு இருக்கவேண்டும். ஆனால் அதேசமயம், எதிர்பாராத விதத்தில் ஏதோவொரு சூழ்நிலை ஏற்பட்டால், சிறிதளவு முயற்சிசெய்தாலே அந்தப் பிணைப்பை விடுவிக்கவும் முடியவேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இதில் "சங்கமம்" என்பதை அவர்கள் ஓரளவிற்கு உணரமுடியும், இது நல்லது. இதை அடிக்கல்லாய் வைத்து இன்னும் உயரிய அளவில் அவர்கள் சங்கமத்தை உணர முற்படுவார்கள் என்று எண்ணுவோம்.

ஏதோ காரணத்தினால் அந்த பிணைப்பை விடுவிக்கிறோம் என்றால், விடுவிக்கப்பட்டது ஒரு பொருளாக இருந்தாலும் சரி, மனிதனாக இருந்தாலும் சரி, அதற்கு ஒரு விலையிருக்கும்; பாதிப்பின் சுவடு இருக்கும். பிணைப்பை சரியான முறையில் செய்யாமல் இருந்தாலே தவிர, இந்த பாதிப்பின் சுவடை தவிர்க்க முடியாது. இப்போது மரசாமான்களை தனித்தனி மரக்கட்டைகளாய் பிரிக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவற்றைத் தனித்தனியாகப் பிரித்தாலும் அவை பிணைப்பட்டு இருந்ததற்கான சுவடாக அதில் ஓட்டைகள் இருக்கும். இல்லையா? அந்த ஓட்டைகளை அடைப்பதோ, மறைப்பதோ அத்தனை எளிதல்ல. இதுபோல் மனிதர்களுக்கும் நடக்கும். பிரிவுகள் ஏற்படும்போது இன்று பலரும், "நான் தாண்டி வந்துவிட்டேன்" என்று சொல்வது பிரபலமாக இருக்கிறது. "நான் தாண்டி வந்துவிட்டேன்" என்றால் "விடுதலை பெற்றுவிட்டேன்", "உயர்நிலைகளை அடைந்துவிட்டேன்" என்று அர்த்தமல்ல. அதற்கு அர்த்தம், "நான் அடுத்த குழிக்குள் இருக்கிறேன்" என்பது. ஆம். "நான் தாண்டி வந்துவிட்டேன்" என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அங்கு ஏற்பட்ட ஓட்டைகள் அப்படியே உள்ளது. இதனால் அவ்வப்போது பாதிப்புகளும் ஏற்படும்.

உங்கள் வாழ்வை நீங்கள் எப்படியெப்படியோ சமாளித்துச் செல்லலாம். மாலையானால் மதுபானம் அருந்தி, காலையில் தாமதமாக அதாவது அலுவலகத்திற்கு செல்லவேண்டிய நேரத்திற்கு 5 நிமிடம் முன்பு எழுந்து, அலுத்துக்கொண்டு, சலித்துகொண்டு அலுவலகத்தில் நேரத்தைக் கடத்தி, உங்களை நீங்கள் பிஸியாக வைத்துக் கொள்ளலாம். இப்படி பலவகைகளில் உங்களை நீங்கள் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் யாரேனும் ஒருவரை 3 நாட்களுக்கு ஒரே இடத்தில் செய்வதற்கு ஒன்றுமில்லாமல் அமரவைத்தால், அவர்களுக்குள் இருக்கும் ஓட்டையின் பாதிப்பை பொறுக்கமுடியாமல் அவர்களுக்கு பித்துப் பிடித்துவிடும். இருக்கும் ஓட்டைகளை மேலோட்டமாக மூடிமறைப்பதும், அவற்றை சரிசெய்வதும் முற்றிலும் வெவ்வேறானவை. சும்மா மேலோட்டமாக அதை நீங்கள் மறைக்க முற்படலாம், ஆனால் நிஜமாகவே அந்த ஓட்டையை சரிசெய்வது அத்தனை எளிதல்ல. இது கரையான்கள் இருப்பதுபோன்று. வீட்டில் சாயம் பூசப்பட்ட மரசாமான் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவற்றை கரையான் அரித்தால், வெளியில் இருந்து பார்க்க அது முன்போல் அப்படியே இருப்பதாகத் தோன்றும். ஆனால் அதைக் தொட்டுப்பார்த்தால், உங்கள் விரல் நேரே உள்ளே செல்லும். ஏனெனில் அப்போது வெளியில் பூசப்பட்டிருக்கும் அந்த சாயம் மட்டும்தான் எஞ்சியிருக்கும். கரையான் மரத்தை மட்டும்தான் உண்ணும், சாயத்தை விட்டுவிடும். அது "இயற்கை உணவு"வாசியாயிற்றே! மரம் முழுவதையும் மிக நேர்த்தியாக உண்டுவிடும் என்பதால் வெறும் சாயம் மட்டும்தான் எஞ்சியிருக்கும்.

உடல், மன அளவில் தோழமை என்பதைத் தாண்டி இருவருக்கிடையே சங்கமம் நிகழும்போது அங்கே அழகானதொரு சக்திசூழல் உருவாகும்.

எதைப் பிணைத்தாலும் அதை சரியாகச் செய்யவேண்டும். இல்லையெனில் அதைச் செய்வதில் என்ன அர்த்தமிருக்கிறது? இரு உயிர்களை ஒரு பந்தத்தில் இணைக்கும்போது, ஒருவர் இறந்தால், மற்றவரும் இறந்துவிடுவார்; ஒருவர் ஞானமடைந்தால், மற்றவரும் ஞானமடைந்துவிடுவார்; எனும் அளவிற்கு அவர்கள் இருவரையும் ஆழமாகப் பிணைக்கலாம். இவை இதிலிருக்கும் நல்ல சாத்தியங்கள். ஆனால் சராசரியாகப் பார்த்தால் நோய்வாய்ப்படுவது, இறப்பது, பித்துப்பிடிப்பது போன்றவற்றின் விகிதம்தான் ஞானமடைவதைவிட மிக அதிகமாக இருக்கிறது. அதனால் இந்தளவிற்கு ஆழமாக இருவரை பிணைப்பதற்குப் பதிலாக, அவசியம் இருப்பின் ஓரளவிற்கு முயற்சி மேற்கொண்டு அவர்கள் இருவரையும் விடுவிக்க முடியும் எனும் அளவிற்கு அவர்களை பந்தத்தில் இணைக்கலாம். எனினும் நாம் முன்பே பார்த்ததுபோல் இப்படி விடுவித்தால் அதற்கான விலையை நாம் கொடுக்க வேண்டியிருக்கும்.

இந்த பந்தத்தினால் ஏற்படும் பிணைப்பை நாம் இன்னும் உறுதியாக, ஆழமாக ஆக்கலாம். ஆனால் விவாகரத்து, மரணம், நோய் போன்றவற்றையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். இன்றைய சமூக நிதர்சனங்களை கருத்தில் கொண்டு, இந்த விவாஹா செயல்முறை எந்தளவிற்கு ஆழமாக இருக்கவேண்டும் என்பதை நிர்ணயித்து உள்ளோம். இதை இன்னும் ஆழப்படுத்தலாம், ஆனால் மைக்ரோ-நொடி அளவிற்கு கணக்கு பார்க்கும் இன்றைய உலகில், மீதமிருக்கும் வாழ்நாள் முழுவதும் "ஒருவருடனேயே" இணைந்து இருப்பது சிறையில் இருப்பதற்கு சமானமாகப் பார்க்கப்படுகிறது. முந்தைய தலைமுறையில் மிக எளிதாக, "மரணம் எங்களைப் பிரிக்கும்வரை" என்று சொன்னார்கள். ஆனால் இன்று அதுபோல் சொல்வதற்கு யாருக்கும் தைரியம் வருமா? என்பது சந்தேகத்திற்கு இடமாகிறது.

விவாஹா என்பது இரு ஜீவன்களை இயற்கை முறையில் பிணைக்கும் ஒரு செயல்முறை. இதில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ ஓரளவிற்கேனும் எது யார்? என்று புரியாத அளவிற்கு பிணைப்பு நிகழவேண்டும். இதில் "சங்கமம்" என்பதை அவர்கள் ஓரளவிற்கு உணரமுடியும், இது நல்லது. இதை அடிக்கல்லாய் வைத்து இன்னும் உயரிய அளவில் அவர்கள் சங்கமத்தை உணர முற்படுவார்கள் என்று எண்ணுவோம். அதை அவர்கள் செய்கிறார்களோ இல்லையோ, இந்த "விவாஹ"த்தை நடத்தி வைப்பவருக்கு இது மிக அழகான அனுபவமாய் இருக்கும். இரு ஜீவன்களை ஒன்றிணைத்து, அவர்கள் இருவரும் ஒருவர்போல் உணரும் சூழ்நிலையை உருவாக்குவதே ஒருவரின் வாழ்வில் மாபெரும் சாதனாவாக இருக்கமுடியும்.

உடல், மன அளவில் தோழமை என்பதைத் தாண்டி இருவருக்கிடையே சங்கமம் நிகழும்போது அங்கே அழகானதொரு சக்திசூழல் உருவாகும். இதற்கு சாட்சியாக இருப்பவர்களுக்கு, அங்கே சிந்தும் தேனை சுவைத்திடும் வாய்ப்பு கிடைக்கும். இது பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதுபோல்: "உங்களுக்குள் எவ்வித அனுபவமும் நிகழவில்லை என்றாலும், ஏதோ ஒருவித சங்கமநிலையில் இன்னொருவர் திளைக்கும்போது, அவரைப் பார்த்தாலே நிறைய பலன் கிடைக்கும். இதுபோன்ற ஒரு செயல்முறை நடக்கும்போது, வேறு யாரோவொருவர் அவருடைய எல்லைகளை விரிவடையச் செய்துகொள்ளும்போது, அதற்கு சாட்சியாக இருப்பவருக்கும்கூட அபரிமிதமான பலன்கள் கிடைக்கிறது." இந்த விவாஹா செயல்முறையிலும் இது ஓரளவிற்கு நடக்கும்.

அன்பும் அருளும்