மிகக் கடுமையான மலையேற்றப் பாதையில் வெகு சிலருடன் கைலாயம் நோக்கி சென்று கொண்டிருக்கும் சத்குரு, தன் வழியில் நமக்காக இந்த வார சத்குரு ஸ்பாட்டை எழுதியிருக்கிறார். மலையேற்ற அனுபவத்தை நம்முடன் கவித்துவமாய் பகிர்ந்து கொள்ளும் அவர், சிவன் அருகாமை வரை அவர்களை அழைத்துச் செல்வேன் என்று சொல்லி நம்மை சிலிர்ப்படையச் செய்கிறார். படித்து மகிழுங்கள்!

பல்வேறு செயல்களில் கொஞ்சம்கூட ஆயத்தம் இல்லாமல் இறங்குவது என் வாடிக்கையாகிவிட்டது. மிக நீண்ட ஒரு மலையேற்றத்திற்கு போதுமான அளவு தயார் செய்வதும், கால்களுக்கு உரிய பயிற்சி கொடுப்பதும், உயர்ந்த மலை முகடுகளில் பவனி வர நுரையீரலின் இசைவையும் பெறுவது மிக அவசியம்.

ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வில்லா, கடுமையான பயணங்களால் இதோ இங்கு கைலாஷிற்கு எந்தவிதமான ஆயத்தமும் இன்றி வந்திறங்கி இருக்கிறேன். உணவு கட்டுப்பாடோ அல்லது நடைப் பயிற்சியிலோ நான் ஈடுபடவில்லை. ஒரு சில தினங்கள், மலைப் பகுதிகளில் கோல்ஃப் விளையாடியதே நான் செய்த பயிற்சி. இந்த கோல்ஃப் விளையாட்டிற்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும், இந்த விளையாட்டினால் என் கால்களை நான் பயன்படுத்தி இருக்கிறேன். சாதாரணமாக என்னுடைய பிஸியான நாளில் 12 லிருந்து 14 மணி நேரம் வரை உட்கார்ந்து கொண்டு இருப்பதிலேயே ஓடிவிடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

லும்பினியிலிருந்து கண்ணுக்கு விருந்தாய் அமைந்த மலைச் சிகரங்களினூடே, கடுமையான போக்குவரத்து சிக்கல்களுக்கு நடுவே பயணப்பட்டு காத்மான்டு சென்றடைந்தோம். பங்கேற்பாளர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வதற்கும், அறிமுகமாகிக் கொள்வதற்கும் காத்மான்டு உறுதுணையாய் இருந்தது. லும்பினியை வந்தடைய எனக்கு 35 வருடங்கள் பிடித்திருக்கிறது. 1979 ஆம் வருடம் மோட்டார் சைக்கிளில் நேபாள எல்லைக்கு நான் வந்தேன். என்னிடம் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இல்லாததால் என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை. எல்லையைக் கடந்தவுடன் கௌதமர் பிறந்த மண் இருக்கிறது என்று எனக்கு தெரியும், ஆனால் லும்பினியை அடைய எனக்கு இத்தனை காலம் ஆகியிருக்கிறது.

காத்மான்டுவிலிருந்து நேபால்குஞ்சிற்கு நாம் செய்த விமானப் பயணம் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் அந்த விமான ஓட்டுநர் ஏதோ விநோத காரணத்திற்காக காற்றை எதிர்த்து விமானத்தை தரையிறக்காமல், காற்று கீழ்திசையில் வீசும்போது தரையிறக்கி தீடீரென ஒரு பிரேக் அடித்து, பீதியைக் கிளப்பிவிட்டார்.

நேபால்குஞ்ச் என்னும் இந்த இடத்திற்கு வானியல் நிலைப்படி பயணிகளை நாட்கணக்கில், இன்னும் சொல்லப் போனால் வாரக் கணக்கில் தன்னுடன் பிடித்து வைத்துக் கொண்ட பெருமை உண்டு. ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில், நாம் நேபால்குஞ்சிலிருந்து 18 அடி உடைய டார்னியர் ரக விமானத்தில் கிளம்பினோம். காளைகளைப் போல் கடுமையாக வேலை செய்வதற்கு பெயர் போன இந்த ரக விமானங்கள் மிகக் கடுமையான நிலப்பகுதிகளில் கூட வேலை செய்திருக்கின்றன. இந்த விமானத்தின் வடிவமைப்பிலும் பயன்படுத்தும் உபகரணங்களிலும் பழமை இருந்தாலும், இவை நம்பகத்தன்மையில் நாய்களைப் போன்றவை.

சிமிகோட்டில், அற்புதமான அமைப்புடன் கூடிய, 100 லிருந்து 280 டிகிரியுடைய தரையிறங்கு தளம் உள்ளது. காத்மான்டுவில் தொடங்கி சிமிகாட்டை 3 மணி நேரத்திற்குள் வந்தடைவது என்பது இந்தப் பகுதிகளில் அதிசயமாக பார்க்கப்படுகிறது. பொதுவாக சுமுகமான பயணங்களுக்கு வானிலை இங்கு துணை புரிவதில்லை. ஆனால் வானிலை கடவுளர்களோ நமக்கு சாதகமாகவே இருந்திருக்கின்றனர்.

ஒரு சிறிய உணவு இடைவெளிக்கு பின்பு தாராபாணியை நோக்கி மலையேற்றம் செய்யத் துவங்கினோம். 9 கி.மீ மட்டுமே இருந்தாலும் நட்டுக்குத்தலான பாறைகளுக்கு இடையே அந்த செங்குத்தான இறக்கத்தில் நடப்பது கால் முட்டுக்களுக்கு பலத்த சவாலாகத்தான் இருந்தது. கடைசி குழு நம் டென்டிற்கு வந்தடைய 9 மணி நேரம் பிடித்தது. எப்போதும் போல வலியும் பீதியும் இவர்களை ஆட்டிப் படைக்க, ஒருசிலர் பின்வாங்க நினைத்தாலும், நானோ அவர்களை விடுவதாய் இல்லை. இரண்டாம் நாள் மலையேற்றத்தில், தாராபாணியிலிருந்து கெர்மி வரை 10 கிமீ பயணத்தை அவர்கள் சுலபமாய் செய்திருக்கிறார்கள். இந்த மலையேற்றத்தில், ஒருவரை கொல்லக் கூடிய செங்குத்தான மலை வீழ்ச்சிகள் இருந்தாலும், அதிகமான மலை இறக்கங்களோ பாறைகளோ இல்லை.

இதோ நாம் கெர்மியில் இருக்கிறோம். எழில் கொஞ்சும் ஒரு அழகான பள்ளத்தாக்கினை தரிசித்து கொண்டிருக்கிறோம். கண் இரண்டு போதாது இதைக் காண! இன்னும் ஆன்மீகச் செயல்முறைகளை நாம் துவங்கவில்லை. கால்களையும் நுரையீரல்களையும் பதப்படுத்திக் கொண்டிருக்கிறோம். நாளையிலிருந்து, இந்த பிரதேசமும், கைலாயமும் மானசரோவரும் என்ன வழங்க இயலுமோ அதனை இவர்கள் சிறப்பாக உள்வாங்கிக் கொள்ள தயார் செய்யும் அடித்தளத்தை உருவாக்குவோம்.

பொதுவாக மக்கள் சாகசங்களில் சிக்கிக் கொள்பவர்களாகவோ, சாதித்துவிட்டேன் என்ற பெருமிதத்தில் மிதப்பவர்களாகவோ இருக்கிறார்கள். அப்படி இல்லாமல் இருந்தால், இந்தக் கடினமான மலையேற்றம் ஒருவரை அதிகம் கிரகித்துக் கொள்பவராக, புரிந்து கொள்பவராகச் செய்யும். என்னுடன் இங்கிருப்பவர்கள் சற்றே நயமானவர்களாய் உள்ளனர். நானும் இந்த மலைகளும் அந்த மஹாதேவனின் வாயிற் கதவுகளை இவர்களுக்கு உடைத்து திறப்போம் என நம்புவோம்.

அந்த சூரியனும் சற்றே அந்த மலைச் சிகரங்களுக்குள் தன்னை மறைத்துக் கொண்டான். ஆஹா நிச்சயமாக அவனுக்கும் வேறு வேலைகள் இருக்கும் அல்லவா? உலகின் பிற பகுதிகளுக்கு ஒளி உண்டாக்கி சூடாக்க வேண்டுமே! அங்கு பல்வகைப்பட்ட உயிர்கள் அவனின் கதகதப்பிற்காக காத்துக் கிடக்கின்றனவன்றோ!

இந்த வைகறைப் பொழுது மந்திரம் போல் மயக்குகிறது. பச்சைகள் கரும் பச்சைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. மலை முகடுகள் தன் தொன்மையின் ஆழத்தினுள் மூழ்கத் துவங்குகின்றன. தன் குடியிருப்புகளுக்குள் குடிபுகுந்து கொண்டிருக்கும் கால்நடைகளின் வாசமும் ஓசைகளும், சமையற்கட்டு புகையும் அருகாமையிலுள்ள சிறிய கிராமத்திலிருந்து வீசிக் கொண்டிருக்கிறது. அனைத்திற்கும் மேலாக கீழே அங்கு ஓடிக் கொண்டிருக்கும் நதியின் கர்ஜனையும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அனைத்தும் ஒரு கணத்தில் மாறிவிடும், இதோ சடசடவென கரைபுரண்டோடி கோடிக்கணக்கான மக்களை ஊட்டி வளர்க்கக் காத்திருக்கும் இந்த விலைமதிப்பில்லா நதியின் ஓட்டத்தைத் தவிர! ஆனால் வலியில் துடிக்கும் தசைகளோ பொழுது சாய காத்திருக்கிறது. ஆர்ப்பரிக்கும் இந்த நதியும் தாலாட்டாய் மாறி நித்திரை தேசத்திற்குள் ஒருவரை அழைத்துச் செல்லும்!

Love & Grace