பொங்கல், சங்கராந்தி கொண்டாடி புதியவற்றைத் தொடங்கும் நாளில், நாம் எப்படி இருந்து புதியவற்றை தொடங்க வேண்டும் என்பதை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விவரிக்கிறார் சத்குரு...

சில காலம் அதே மனிதர்கள் அருகில் நீங்கள் வாழும்போது, அவர்களைப் பற்றி அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்குத் தெரியவரும். சில நேரம் அவர்கள் உங்களுக்கு அழகாகத் தெரிவார்கள், சில நேரம் அசிங்கமாக, பெருந்தன்மையுடன் அல்லது அற்பமாக - இப்படி அனைவரின் நாடகமும் உங்கள் முன் விரியும். அவர்கள் எப்படி யோசிப்பார்கள், எப்படி உணர்வார்கள் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். இதன் விளைவாக, ஒவ்வொருவரைப் பற்றியும் நீங்கள் ஒரு அபிப்ராயம் பெரிதாக உருவாக்கிகொள்வீர்கள்.

போகியும், பொங்கலும் வருகிறது - வருடத்தில் இது பழைய குப்பைகளை எரிப்பதற்கான காலகட்டம். தட்சிணாயனத்திலிருந்து உத்தராயணத்திற்கு சூரியன் திசை திரும்புகிறது. அதாவது சாதனா பாதையிலிருந்து கைவல்ய பாதைக்கு. அப்படியென்றால் இது அறுவடைக்கான நேரம். பிறரைப் பற்றியும், உங்களைப் பற்றியும் நீங்கள் என்னென்ன அபிப்ராயங்கள், முடிவுகள் மற்றும் கருத்துக்களை வைத்திருக்கிறீர்களோ அவற்றை களைய வேண்டிய நேரம் இது. ஒரு அழகான உயிராக மலர்வதற்கான சாத்தியங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. எந்தளவிற்கு உங்களிடம் பிறரைப் பற்றி அபிப்ராயங்கள், முன்முடிவுகள், கருத்துகள் உள்ளதோ, அந்தளவிற்கு உங்களுக்கும் ஞானத்திற்கான சாத்தியத்திற்கும் ஒரு மிகப் பெரிய இடைவெளி வந்துவிடும். உங்களையும் மற்றும் சுற்றியுள்ளோரையும் ஒரு புதிய துவக்கத்திற்கு அனுமதியுங்கள்.

இராமாயணத்தில் ஒரு அழகான கதை உண்டு. இராமனின் வாழ்வில் பல துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்தது. தனது ராஜ்ஜியத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, கானகத்திற்கு சென்று கடினமான வாழ்க்கையை வாழ்ந்தான். பிறகு சீதையை இராவணன் கடத்திச் சென்றான். சீதையின் மேல் உள்ள அன்பால், தென்னகம் நோக்கி நடந்து வந்து, ஒரு படையைத் திரட்டி, இலங்கையை அடைந்து, போர் தொடுத்து, இராவணனைப் போரில் கொன்று வீழ்த்தினான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இராவணனுக்கோ 10 தலைகள். அவற்றை வெட்டிய பின்புதான் இராமனால் இராவணனைக் கொல்ல முடிந்தது. போரை வென்ற இராமன், " நான் பெரும் பாவம் செய்துவிட்டேன். இதற்காக நான் இமயமலை சென்று தவம் செய்யப் போகிறேன். ஏனெனில் சிவனின் மாபெரும் பக்தனை, ஒரு அபூர்வமான பண்டிதனை, ஒரு மாபெரும் அரசனை, பெருந்தன்மையுடையவனை நான் கொன்றுவிட்டேன் " என்றான். இதைக் கேட்ட மற்றவர்கள் திகைத்துப் போனார்கள். இராமனின் தம்பியான லட்சுமணன், "என்ன பேசுகிறீர்கள்? அவன் உன் மனைவியை கடத்திச் சென்றவன்" என்றான். அதற்கோ ராமன், "அவனின் 10 தலைகளில், ஒரு தலைக்கு அளவுகடந்த ஞானமும், தெய்வ பக்தியும் இருந்தது. அதை வெட்டியதற்காக நான் வருந்துகிறேன்." என்றான்.

ஒவ்வொருவருக்கும் பத்து அல்லது அதற்கும் மேலான தலைகள் உள்ளது. ஒரு நாள் உங்கள் தலை முழுக்க பொறாமை நிறைந்திருக்கிறது. இன்னொரு நாள் பேராசை, மற்றொரு நாள் வெறுப்பு, காதல், காமம், அழகு அல்லது அசிங்கம் இப்படி ஏதாவது ஒன்று நிறைந்திருக்கிறது. இல்லையென்றால் இவை எல்லாவற்றையும் நீங்கள் ஒரே நாளில் அனுபவிக்கிறீர்கள். ஒருவரிடம் சில கண நேரம் பேராசையை நீங்கள் அடையாளம் கண்டால், அவர் பேராசைக்காரர் என்று முடிவுகட்டி விடுகிறீர்கள். இன்னொருவரிடம் பொறாமையைப் பார்த்தால், அவர் பொறாமை பிடித்தவர் என்று முடிவுகட்டி விடுகிறீர்கள். ஆனால் உண்மையில் அனைவருக்கும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு தலைகள் செயல்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் அன்பு, அழகு, தாராளம், கருணை போன்ற தலைகள் ஒன்றாவது இருக்கும். மக்கள் செய்யும் தவறே என்னவென்றால், ஒருவரிடம் அப்படிப்பட்ட குணத்தை அடையாளம் காண்பதை விட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக அந்த நபரைப் பற்றி குற்றம் சொல்கிறார்கள்.

இராமன் சொல்லவருவது என்னவென்றால், இராவணன் என்ன மோசமான செயல்கள் செய்திருந்தாலும் சரி, அவனின் ஒரு அம்சம் அளப்பறிய சாத்தியங்களைக் கொண்டதாக இருந்தது. ஒருவரிடம் ஏதேனும் தவறை நீங்கள் காண நேர்ந்தால், அந்தத் தவறை தண்டியுங்கள், அந்த நபரை அல்ல. இந்த அடிப்படை கொள்கையை பின்பற்றுங்கள் போதும். இந்த ஒரு அறிவை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கொண்டு வந்தால், கர்ம மூட்டையிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். இதை நீங்கள் பிறருக்கு செய்யும்போது, உங்களுக்கும் இதே நடக்கும்.

"காதல் என்பது ஒருவரைப் பற்றி அடுத்தவருக்குத் தெரியாத ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடப்பது" என்று ஒருவர் சொன்னார். நீங்கள் ஒரு அற்பமான, புத்தியற்ற வாழ்க்கையை வாழ்ந்தால்தான் இது உண்மை. இல்லையென்றால், ஒருவரைப் பற்றி அதிகம் தெரிய வரும்போது, அவர் மீது உங்களுக்கு அதிக கருணையும் அன்பும்தான் பொங்க வேண்டும். அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் அனைத்தையும் நீங்கள் தெரியும்போது, அவர்களும் உங்களைப் பொன்ற மனிதர்தான் என்பது உங்களுக்குப் புரியும்.

தன் மனைவியைக் கடத்திய, மேலும் பல இழிவான செயல்களை செய்தவனைக் கொன்ற இராமன், அவனைக் கொன்றதற்காக தவம் செய்தான். அப்படி இருந்தாலும் இராவணனின் அந்த ஒரு அற்புதமான தலையைக் கண்டான். இத்தகைய அற்புதமான விவேகம் இருந்ததால்தான் இராமன் வணங்கப்படுகிறான். வாழ்க்கையின் பல அம்சங்களில் அவன் தோற்றிருந்தாலும், அந்தத் தோல்விகள் அவனின் ஞானத்தையும் குணத்தையும் மாற்றிவிடவில்லை. வாழ்க்கை அவனுக்கு என்ன செய்திருந்தாலும் சரி, அவற்றையெல்லாம் அவன் கடந்து உயர்ந்து நின்றான்.

இராமனை ஓர் உதாரணமாக நீங்கள் வருடம் முழுவதும் நினைவுகொள்ள வேண்டும். ஒரு மனிதரைப் பற்றி குற்றம் சொல்வதை விடுத்து அவரின் தரத்தை நீங்கள் அடையாளம் காண முடிந்தால், வரவிருக்கும் குரு பௌர்ணமிக்கு முன்பு, அதாவது தட்சிணாயணம் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் ஒரு வளமான அறுவடையை ஈட்டியிருப்பீர்கள். ஒரு ரோஜா செடியில் ரோஜாவை விட முட்கள் தான் அதிகம், அப்படி இருந்தாலும் அதை ரோஜா செடி என்றுதான் அழைக்கிறோம், ஏனென்றால் அதன் அழகைத்தான் நாம் அடையளம் காண்கிறோம். ஒரு மாமரத்தில் மாங்கனிகளை விட மா இலைகள் தான் அதிகம், அப்படி இருந்தும் அதை மாமரம் என்கிறோம், ஏனென்றால் அதன் கனிகளின் சுவையைத்தான் நாம் அடையாளம் காண்கிறோம்.

ஒவ்வொருவருக்குள்ளும், ஒரு துளியேனும் இனிமை உள்ளது. நாம் ஏன் அதை பார்ப்பதில்லை? உங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமும் இதை நீங்கள் செய்ய வேண்டும் - மோசமானவர் என்று நீங்கள் கருதும் எந்த ஒரு மனிதருக்குள்ளும் அந்த ஒரு துளி இனிமையை அடையாளம் காண முயலுங்கள். நீங்கள் அதை பிறரிடம் கண்டால் மட்டுமே அது உங்களுக்குள்ளும் பிரதிபலிக்கும். அதே நீங்கள் பிறரிடம் மோசமானவற்றைக் கண்டால், உங்களுக்குள்ளும் அதேதான் பிரதிபலிக்கும். அதற்காக எல்லாவற்றிற்கும் நீங்கள் கண்களை மூடிக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம் இல்லை. ஒரு மரத்தின் இலைகளைக் காண்கிறீர்கள், ரோஜா செடியின் முட்களைக் காண்கிறீர்கள் ஆனால் அவற்றின் கனிகளையும் மலர்களையும்தான் நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவுதான்.

இதனை நாம் நிகழச் செய்வோம்!

Love & Grace