சத்குரு:

நாம் சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகள் ஆகின்றன. பல்வேறு படையெடுப்புகள், ஆக்கிரமிப்புகள், போராட்டங்களின் மரணவேதனைகளை கடந்து வந்துள்ள இந்த மகத்தான நாகரிகம், பெருத்த தியாகத்திற்கு பிறகு 72 ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திரம் பெற்றது. 72 ஆண்டுகளில் குறிப்பிடும் படியான பல விஷயங்கள் செய்யப்பட்டிருந்தாலும், நம் தேசத்தில் இன்னும் பல விஷயங்களை நாம் சரிசெய்ய வேண்டியுள்ளது. நம்முடைய விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் வியத்தகு பணிகளை செய்துள்ளன, நம் வணிக நிறுவனங்கள் அற்புதமான விஷயங்களைச் செய்துள்ளன, நம் கல்விமுறைகள் வளர்ந்திருக்கின்றன, கட்டமைப்புகள் வளர்ந்திருக்கின்றன, இந்திய தேசத்தவர் உலகம் முழுக்க சென்று, பல்வேறு வெற்றிகளை சாதித்து, வாழ்வின் பல்வேறு பரிமாணங்களில் வெற்றியாளர்களாய் திகழும் அதே சமயத்தில், நம் தேசத்தின் உயிராதாரமான நிலையை ஒரு சில விஷயங்கள் அரித்து தின்று கொண்டிருக்கின்றன. இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் இதில் ஈடுபட்டு, தங்களால் இயன்ற வகைகளில் அவற்றை சரிகட்ட வேண்டும்.

ஜாதி-மத பாகுபாடு - இது நம் தேசத்தின் உயிராதாரத்தை தின்று கொண்டிருக்கிறது. இதனை நாம் சரிகட்ட வேண்டும். ஜாதி, மதம், இனம், சமூகத்தை கடந்து நம் அடையாளங்கள் வளரவேண்டும்.

வரும் பத்தாண்டுகளில், மூன்று மிக முக்கிய விஷயங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒன்று, ஜாதி-மத பாகுபாடு - இது நம் தேசத்தின் உயிராதாரத்தை தின்று கொண்டிருக்கிறது. இதனை நாம் சரிகட்ட வேண்டும். ஜாதி, மதம், இனம், சமூகத்தை கடந்து நம் அடையாளங்கள் வளரவேண்டும். நாம் வீட்டில் என்ன வழக்கத்தை கொண்டிருந்தாலும், நம் அடையாளம் நம் தேசத்துடன் இருக்கவேண்டும் - ஒற்றை அடையாளம் கொள்ளவேண்டும். வெற்றிகரமான தேசமாய் முன்னோக்கிச் செல்ல இது மிக மிக முக்கியம்.

வெற்றிகரமான தேசம் என்று நான் சொல்லும்போது, நம் தேசத்திலுள்ள 50 கோடி இளைஞர்கள் குறித்து நான் பேசுகிறேன். இந்த உலகிலேயே மிக இளமையான தேசம் நம்முடையதுதான். சாதி-மத பேதங்கள், இன்னும் நாம் கட்டுண்டிருக்கும் சிறுசிறு அடையாளங்களை கடந்து, நாம் ஒரு தேசமாய் நம்மை பிணைத்துக் கொள்ளவேண்டும். இந்த ஒரு விஷயத்தை நாம் செய்தால், நம் இளைஞர்களை உயிரோட்டம் உள்ளவர்களாகவும், ஒரு நோக்குடையவர்களாகவும் நம்மால் ஆக்க முடியும். நம் தேசத்தில் ஒரு பேரதிசயத்தை நம்மால் உருவாக்கிட முடியும்.

ஊழல் நம் தேசத்தின் அமைப்புமுறைகளை அரித்து தின்றிருக்கிறது. பிறப்புச் சான்றிதழிலிருந்து இறப்புச் சான்றிதழ் வரையிலும், வங்கி பரிவர்த்தனை வரையிலும் தொழில்நுட்பத்தை கொண்டு வரவேண்டும். அனைத்தும் தொழில்நுட்பத்தின் கீழ் வரும்போது, ஊழலுக்கான இடம் இல்லாமல் போகும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தற்சமயம், மக்கள்தொகை விகிதாச்சாரத்தில் பங்குவீதம் உள்ளது. இந்த அனுகூலமான நிலை அதிகபட்சமாக அடுத்த பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்குத்தான் நிலைத்திருக்கும். அடுத்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில், ஒருவருக்கொருவர் எதிராய் செயல்படாமல், யாருக்கும் எதிராய் பேசாமல், ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளாமல், நாம் ஒரு தேசமாய் இணைந்தால், நாம் வியக்கத்தக்க ஒரு தேசமாய் மாறிவிடுவோம். நம்மிடம் அந்த ஆற்றல் உள்ளது. நம்மிடம் அதற்கு தேவையான அறிவாற்றல் உள்ளது. நம்மிடம் திறமை உள்ளது. பல விதங்களிலும் உலகிற்கு சரியான பாதையை வழங்கக்கூடியவர்களாய், இந்த உலகம் நம்மை உயர்வாகப் பார்க்கிறது.

எந்த அர்த்தத்தில் என்றால், இந்த உலகின் எதிர்கால வெற்றியாளர்களாய், அடுத்த இருபது ஆண்டுகளில் இவ்வுலகின் மிகச் சிறந்த வெற்றியாளர்களாய்தான் இந்தியாவை அனைவரும் பார்க்கின்றனர். இது வருவதைக் கூறும் ஆருடம் அல்ல, இது நம் திட்டமாக இருக்கவேண்டும். நாம் இதனை நிகழச்செய்ய வேண்டும்.

அடுத்தது, ஊழல். ஊழல் நம் தேசத்தின் அமைப்புமுறைகளை அரித்து தின்றிருக்கிறது. இதற்காக, பல விஷயங்கள் தற்சமயம் செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு முக்கியமான விஷயம், நாம் ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் தொழில்நுட்பத்தை புகுத்தவேண்டும். ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் - பிறப்புச் சான்றிதழிலிருந்து இறப்புச் சான்றிதழ் வரையிலும், வங்கி பரிவர்த்தனை வரையிலும் தொழில்நுட்பத்தை கொண்டு வரவேண்டும். அனைத்தும் தொழில்நுட்பத்தின் கீழ் வரும்போது, ஊழலுக்கான இடம் இல்லாமல் போகும். இதற்கான முயற்சிகளில் மக்கள் ஒத்துழைக்க வேண்டும், இம்முயற்சியில் அரசையே நாம் முந்திச்சென்று இதனை நிகழச்செய்ய வேண்டும். ஏனெனில், இது நமது நலத்திற்காக செய்யப்படுவது. நாம் எந்த மாதிரியான தூய்மையான சூழ்நிலையில் வாழ்கிறோம் என்பது முக்கியம். ஊழல் என்பது வெறும் பணம் சார்ந்ததல்ல, நம் தேசத்தில் நிலவும் அடிப்படை மனித மாண்பினை இது தகர்த்துவிடும்.

பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலும், ஆக்கிரமிப்புகளின் ஆபத்துகளும் - நமது அரசிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், இவை மறுமுறை நம் தேசத்தில் நிகழாதவாறு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடுத்த விஷயம், பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலும், ஆக்கிரமிப்புகளின் ஆபத்துகளும். நமது அரசிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், இவை மறுமுறை நம் தேசத்தில் நிகழாதவாறு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். கடந்த ஆயிரம் ஆண்டுகளாய், நமக்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்களை நாம் மறந்திடக்கூடாது. குறிப்பாக, கடந்த 250 ஆண்டுகளாய் இழைக்கப்பட்டவற்றை... அதே நேரத்தில், நமக்கு கடந்த காலத்தில் நேர்ந்தது குறித்து நாம் ஆத்திரம் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை - இது மிக மிக முக்கியம். இந்தக் கலாச்சாரம் பல்வேறு வலிகளுக்கு உள்ளானது. வலிகளை விவேகமாய் மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும், அது நம் வாழ்வில் வடுக்களாய் மாறிவிடக்கூடாது. நாம் சற்றே முதிர்ச்சி பெற்று, இந்த அனுபவம் நம்மை பக்குவமான நிலையில் கொண்டுசேர்த்து, அதன்மூலம், இந்த தேசத்தையும் உலகையும், வருங்கால சந்ததியினர் நல்லபடி வாழக்கூடிய நிலையில் நாம் மாற்றியமைக்க வேண்டும்.

ஒருவருக்கொருவர் எதிராக வேலை செய்து கொண்டிருக்காமல், ஒருவருக்கொருவர் எதிராக பேசிக் கொண்டிருக்காமல், தேசத்திற்காக பேசி, தேசத்திற்காக பணியாற்றி, இதனை நிகழச் செய்திடுவோம்.

இந்த சுதந்திர தினத்தில், நீங்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இதனை தங்களது பணியாய் எடுத்துக்கொண்டு, நம் தேசத்தை அரித்து தின்று கொண்டிருக்கும் இந்த மூன்று விஷயங்களை களைய நீங்கள் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். நம்மால் இயன்ற வகைகளில் இவற்றை களைந்து, ஒருவருக்கொருவர் எதிராக வேலை செய்து கொண்டிருக்காமல், ஒருவருக்கொருவர் எதிராக பேசிக் கொண்டிருக்காமல், தேசத்திற்காக பேசி, தேசத்திற்காக பணியாற்றி, இதனை நிகழச் செய்திடுவோம். ஏனெனில், கிட்டதட்ட 40 கோடி மக்கள் நம் தேசத்தில் சரியாக சாப்பிடாமல் உள்ளனர். அவர்களுக்கு போதிய ஊட்டச்சத்து இல்லை. அதனால், இது நிகழ்ந்தே ஆகவேண்டும்.

இவை நிகழ, ஒற்றுமையிலும், நம் தேசத்தை கட்டமைப்பதிலும் கூட்டு நடவடிக்கை அவசியம்.

இந்த எழுபத்தி இரண்டாவது சுதந்திர தினத்தில் உங்கள் ஒவ்வொருரிடமும் நான் வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், நம் தேசத்தில், அடிப்படை ஊட்டச்சத்து கூட இல்லாமல் பரிதவிக்கும் அந்த துர்பாக்கியசாலி மக்களுக்கு, அடுத்த ஐந்திலிருந்து பத்து வருடங்களுக்குள் அவர்களது வாழ்க்கை சூழ்நிலை மாறவேண்டும் - இதில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள நாம் உறுதியெடுத்துக் கொள்வோம்.

அன்பும் அருளும்,