உலக யோகா தினத்தையொட்டி யோகா மற்றும் தியானத்தை பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு சத்குரு அவர்களின் பதில்களை உங்களுக்காக ஒரு தொகுப்பாய் வழங்குகிறோம்...

Question: யோகாவுக்கும் தியானத்திற்கும் என்ன வித்தியாசம்?

சத்குரு:

பொதுவாக கண்களை மூடி உட்கார்ந்தாலே தியானம் என்று சொல்கிறார்கள். ஆனால், கண்களை மூடி நீங்கள் செய்யக்கூடியவை பல - ஜபம், தவம், தாரணை, தியானம், சமாதி, சூன்யா என்பவை போக சிலர் முதுகை நேராக வைத்து உட்கார்ந்தபடியே தூங்குவதில்கூட வல்லவர்களாக இருக்கலாம். இதில் தியானம் என்பது யோகாவின் ஒரு அம்சம் மட்டுமே.

தியானம் என்பது நீங்கள் செய்யக்கூடிய ஒரு செயல் என்பதில்லை. அது ஒரு குறிப்பிட்ட தன்மைதானே ஒழிய, ஒரு செயல் அல்ல. நீங்கள் தியான நிலையில் அல்லது தியான தன்மையில் இருக்க முடியும், தியானம் செய்ய முடியாது.

எளிமையாக பார்ப்போம். இப்போதைய நிலையில் உங்கள் மனம்தானே உங்களுக்கு boss? நீங்கள் மனமென்ற அதிகாரியின் பிடியில் உள்ள அடிமைதானே? தியானத்தன்மை உங்களுக்குள் மேலும் மேலும் நிலைபெறும்போது, நீங்களே அதிகாரியாக மாறிவிடுகிறீர்கள். மனம் உங்கள் ஆணையினை ஏற்கும் அடிமையாகிறது. எப்போதும் நீங்கள்தானே boss ஆக இருக்க வேண்டும்?

அதிகாரத்தை மனத்தின் கையில் கொடுத்துவிட்டால், அது கொடுங்கோல் ஆட்சிதான் செய்யும். உங்களை எல்லாவிதமான துன்பங்களுக்கும் ஆளாக்கிடும், அதற்கு ஒரு முடிவே இருக்காது. அதிகாரத்தில் இருக்கும்போது மட்டுமே மனம் கொடூரமானது. அதே மனம் உங்கள் அடிமையாகிவிட்டால் அற்புதமானது. மனம் ஓர் இனிய அடிமை. அதை அப்படியே வைத்திருங்கள்.

தியானத்தை முயற்சி செய்தவர்களில் அநேகமானவர்கள் தியானம் செய்வது மிகவும் கடினமானது என்று சொல்கிறார்கள். காரணம் அவர்கள் தியானம் "செய்ய" முயற்சிக்கிறார்கள். நீங்கள் "செய்யக்கூடியது" அல்ல தியானம். ஆனால், நீங்கள் தியானம் நிகழ அனுமதிக்க முடியும். தியானநிலை உணர முடியும். ஏற்கனவே சொன்னது போல், தியானம் ஒரு தன்மையே ஒழிய அது ஒரு செயல் அல்ல.

உங்கள் உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்தி ஆகிய நான்கையும் ஒரு குறிப்பிட்ட பக்குவத்திற்கு வரும்படி பண்படுத்தினால், தியானம் என்பது இயல்பாகவே உங்களுக்குள் நிகழ்கிறது.

செடி வளர்ப்பது போல்தான் இது. மண்ணை வளமாக வைத்து, தேவையான உரம் போட்டு, நீரும் ஊற்றும்போது, சரியான விதையாக இருந்தால், அது செடியாகி, மலர்ந்து கனி கொடுத்தே தீரும். மலரும், கனியும் நாம் வேண்டும் என்று நினைப்பதால் வந்துவிடுவதில்லையே! சரியான, தோதான சூழலை செடிக்கு உருவாக்குவதால்தானே மலரும், கனியும் வருகிறது.

அதேபோல்தான் உங்களுக்குள்ளேயும். உங்களுடைய உடல், மனம், உணர்ச்சி, சக்தி என்ற நான்கிலும் சரியான சூழலை உருவாக்கினால், தியானம் இயல்பாகவே உங்களுக்குள் மலர்ந்துவிடும். நீங்கள் உங்களுக்குள் உணரக்கூடிய நறுமணம் தியானம்.

Question: அசைவ உணவு சாப்பிடுகிறேன். மது அருந்துகிறேன். நான் யோகா செய்யலாமா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

யோகா எதையும் தடை செய்வது கிடையாது. வாழ்வு பற்றிய ஆழமான புரிதல்தான் யோகா. போதைக்காகத்தானே குடிக்கிறீர்கள்? நீங்கள் உங்களுக்குள்ளேயே இயல்பாக ஒரு பரவசத்தை உருவாக்கிக்கொள்ள தெரிந்தால், புகை, மது போன்றவற்றை தேடமாட்டீர்கள் இல்லையா? நான் இதுவரை எந்த போதைப் பொருளையும் தொட்டது இல்லை. ஆனால், என் கண்களைப் பாருங்கள், நான் ஒரு நிரந்தர போதையிலேயே இருக்கிறேன். யோகிகளுக்கு மது, போதைப் பொருட்கள் என்பவை எல்லாம் சொற்பமானவை. காரணம், உயிர்சக்தியின் தீவிரத்தாலேயே அதைவிட ஆயிரம் மடங்கு போதையை உங்களுக்குள்ளேயே உருவாக்கிட எங்களால் முடியும். அதனால், வெறும் குடி எதற்கு? தெய்வீகத்தை பருகிட வாருங்கள்!

Question: என்னுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு யோகா உதவுமா? எப்படி?

சத்குரு:

தன்னை வளர்த்துக் கொள்வதற்காக கிடையாது, யோகா. தன்னை கரைத்துக் கொள்வதற்காகவே யோகா. தனியொரு துண்டாக கிடக்கும் ஓர் உயிர், அனைத்தையும் உள்ளடக்கிய பிரபஞ்சத்துடன் ஒன்றிக் கரைந்து கலந்திட உதவும் வழிமுறையே யோகா. நீங்கள் உங்களை எல்லையுள்ள ஒரு அம்சமாக உணர்கிறீர்கள். அதிலிருந்து நகர்ந்து உங்களை எல்லையற்றதாக உணர்ந்திடுவதே யோகா. இந்த ஐக்கியம் ஏற்படும்போது, நமக்குள் உணர்ந்திடும் முழுமையே யோகா. அதன்பின், உங்கள் வாழ்வுடன் நீங்கள் விரும்பியபடியெல்லாம் விளையாடிட முடியும். அதேசமயம், வாழ்வு உங்கள் மேல் ஒரு கீறல்கூட ஏற்படுத்த முடியாது. இந்தச் சுதந்திரம் உங்கள் கையில்.

Question: யோகா என்றால் சமஸ்கிருதத்தில் "சங்கமம்," என்று பொருள். இந்த சங்கமத்தை நோக்கி நாங்கள் செல்ல ஏதாவது எளிமையான பயிற்சிகள் உண்டா?

சத்குரு:

இந்த ஐக்கியத்தை கொண்டுவரச் செய்யும் மிகமிக எளிமையான யோக வடிவம் என்றால், அது நமஸ்காரம் செய்வதுதான். உங்களுக்குள் பல நிலைகளில் முரண்பாடுகள் உள்ளன. மிக அடிப்படையான முதலாவது முரண் அல்லது பிரிவினை என்றால் அது உங்களுக்குள் உள்ள ஆண்தன்மையும் பெண்தன்மையுமே. இதையே இடகலை, பிங்கலை அல்லது இடது மூளை, வலது மூளை அல்லது சூரியன், சந்திரன் என்று குறிப்பார்கள். இந்த இரு மாறுபட்ட துருவங்கள் உங்களுக்குள் ஒரு உராய்வில் இருக்கும்போது, அது வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான விதங்களில் பிரதிபலிக்கிறது. பாதிப்பு தருகிறது. கைகள் இரண்டையும் சேர்த்து நமஸ்காரம் செய்யும்போது, இந்த இருவேறு துருவங்களுக்கு, இருமைகளுக்கு இடையே ஒரு இசைவு ஏற்படுகிறது. ஐக்கியம் உருவாகிறது. இதன்மூலம் உலகுடன் ஒன்றிட முடியும்.

Question: யோகா செய்ய ஆசிரியர் அவசியமா? நானே செய்துகொள்ள முடியுமா?

சத்குரு:

நீங்கள் தொலைவில் உள்ள ஒரு ஊருக்கு போக வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள், சரியான வழியும் தெரியாது என்றால் என்ன செய்வீர்கள்? வழிகாட்டும் வரைபடம் இருந்தால் நன்றாயிருக்கும் அல்லவா? நீங்களாக போய் சேரமுடியாது என்று இல்லை, ஆனால் அதற்கு எவ்வளவு காலமாகுமோ, தெரியாது. திக்குத் தெரியாத, புரிந்திடாத பாதையில், வழிகாட்டும் வரைபடமும் இல்லை என்றால், அதற்கு வாழ்நாளே பத்தாமல் போகலாம். வரைபடம் இருந்தால், எளிமையாக கடக்கலாம். நல்ல டிரைவருடன் சென்றால், மிகவும் எளிமையாக கடக்கலாம், அவ்வளவுதான் வித்தியாசம். நாம் அறிந்திடாத பாதையில் போகும்போது, ஏற்கனவே அதில் நடந்து பழகிய ஒருவரை துணைகொள்வதுதானே புத்திசாலித்தனம்?

Question: குருவாக இருப்பது ஒரு நல்ல வேலை வாய்ப்பா?

சத்குரு:

என்னிடம் ஒருவர் கேட்டார், "சத்குரு, உங்களை குருவாக கொண்டது எங்களுக்கு அற்புதமாக உள்ளது. எங்களை சீடர்களாக கொள்வதில் உங்களுக்கு எப்படி?" என்றார்.

"யோகியாக வாழும் அனுபவம் அற்புதமானதுதான். குருவாக இருப்பதுதான் விரக்தியூட்டக்கூடியது," என்று நான் சொன்னேன். காரணம், எது மிக எளிமையானதோ, நீங்கள் அதை உணரச் செய்திட ஒரு விஷயத்தை ஒரு கோடி விதங்களில் பேச வேண்டியிருக்கிறது. வாழ்நாள் முழுக்க அப்படி பேசியும் பலருக்கு அது புலப்படுவதே இல்லை.

குருவாக இருப்பது ஒரு வேலை வாய்ப்பு அல்ல. இதைப் பிழைப்புக்கான வாய்ப்பாக கருதினால், மனிதர்கள் வாழ்வின் மற்ற பரிமாணங்களை உணர்ந்திட வழி நடத்த முடியாது. உங்கள் உயிருக்கும், வாழ்வுக்கும் மேலாக அதை கருதினால் மட்டுமே முடியும்.

Question: ஆன்மீகத்தால் இளைஞர்களுக்கு பயன் உண்டா?

சத்குரு:

இளைஞர்கள் என்றாலே மிகுதியான சக்தி. ஆனால், சமநிலையும் நோக்கமும் இல்லாத கட்டற்ற சக்தி ஆபத்தானது, அழிக்க வல்லது. சமநிலையாக இருப்பவர்கள் மட்டுமே தங்களுக்குள் இருக்கும் திறமையையும் தகுதிகளையும் முழுமையான அளவுக்கு பயன்படுத்த முடியும். அப்படியென்றால், தியானத் தன்மையை உணர்வது என்பது இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமானதாகிறது, இல்லையா? இளைஞர்கள் இப்போதைவிட சற்று சமநிலையுடையவர்கள் ஆனால், இளமை எனப்படும் இந்த சக்தி, அவர்களுக்கும், அவர்களைச் சுற்றியுள்ள எல்லாருக்கும் நலம் தருவதாக அமையும்.

இளைஞர்கள், அவர்களுடைய தொழிலையும், நாட்டையும் இந்த உலகத்தையும் நிர்வகிக்க தொடங்கும் முன், முதலில் தங்களை நிர்வகிக்கக் கற்றுக்கொள்வது மிக மிக அவசியம். யோகா என்பதே உங்கள் உள்நிலையை நிர்வகிக்கும் ஒரு விஞ்ஞானம்தான். உங்கள் உள்ளுக்குள் ஏற்படும் மகிழ்ச்சியும் அமைதியும், ஆனந்தமும், வெளியே நிகழும் ஏதோ ஒன்றை சார்ந்து இல்லாமல், நீங்களே உங்களுக்குள் நிகழ்வதை உருவாக்கிக்கொள்ள முடியும். அந்த நுட்பம்தான் யோகா.

Question: விழிப்புணர்வை மேம்படுத்திட முதல்படி என்ன?

சத்குரு:

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை, "ஆஹா! நான் இன்னும் உயிருடன் இருக்கிறேனே!" என்று நினைவூட்டிக் கொள்ளுங்கள்.

"இது என்ன பெரிய விஷயமா?" என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால், நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், லட்சக்கணக்கான மனிதர்கள் நாளைக் காலையில் கண்விழிக்கப் போவதில்லை. இது தினமும் நடக்கிறது. அதனால், நாளைக் காலையில் நீங்கள் இன்னும் உயிருடன் இருந்தால், புன்னகையுங்கள்! நீங்கள் "கண் விழித்தது" என்ற நிகழ்வு ஒரு சாதாரண விஷயம் அல்ல. பிறகு, உங்களுக்கு வேண்டியவர்கள் எல்லாரும் உயிருடன் இருக்கிறார்களா என்று பார்த்திருங்கள். "ஆஹா! பிரமாதமல்லவா?" இலட்சக்கணக்கான பேர் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழக்கிறார்கள். ஆனால், உங்களுக்கு நெருக்கமானவர்கள் இன்று இருக்கிறார்கள் என்றால், அது அற்புதமானதில்லையா?

இந்த நிலையற்ற தன்மையைப் பற்றி, உங்களுக்கு கவனம் இருந்தால்தான், உயிரின் இயல்பை உணர்ந்திட உண்மையான ஆசை உருவாகும். உங்களுக்கு அர்த்தமற்ற விஷயங்களில் ஈடுபடுத்திக்கொள்ள நேரம் இருக்காது. உங்களுக்கு எது முக்கியமானதோ, உண்மையிலே உங்களுக்கு வாழ்வில் எது அர்த்தமுடையதோ, அதை மட்டுமே செய்வீர்கள். இப்படி உயிருடன் இருக்கிறோமே, அது அற்புதமானது என்று உணரும்போது, உங்களுக்குள் விழிப்புணர்வு என்பது தானாகவே நிகழ்கிறது.