சத்குரு:

 

index-finger-inked#1 உங்கள் வாக்கு உங்கள் குரல்

ஒரு குடியரசு நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தேசத்திற்காக வேறு எதுவுமே செய்யவில்லை என்றாலும், குறைந்தபட்சம் வாக்கையாவது பதிவு செய்ய வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனும் இந்த தேசத்தின் நலனுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் சிறந்தவர் என்பதை சீர்தூக்கிப் பார்த்தே அவருக்கோ அல்லது அவரது கட்சிக்கோ வாக்களிக்க வேண்டும். இந்த சுதந்திரம் அனைவர் மனதிலும், குறிப்பாக இளைஞர்கள் மனதில் வரவேண்டும். உங்கள் வாக்கு பதிவாவதை உறுதி செய்து கொள்ளுங்கள். சரியான தகவல்களை ஆராய்ந்து பார்த்து உங்கள் ‌உரிமையை பொறுப்புடன் நிறைவேற்றுங்கள்.

ஒருவர் வாக்களிக்க தவறினால், இந்த தேசத்தை பற்றி எந்த கருத்தையும் வெளியிட அவருக்கு எந்த உரிமையும் இல்லை. நம் வாக்கை பதிவு செய்வதன் மூலம் தேசம் முக்கியம் என்பதை மட்டும் நாம் ‌வெளிப்படுத்தவில்லை; இது ஒரு மகத்தான வாய்ப்பு.

எப்போது தேர்தல் வந்தாலும் மக்களிடமிருந்து, "சத்குரு, நாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?" என்ற வழக்கமான கேள்வி வரும். நீங்கள் உங்கள் மூளையை பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும்‌. நீங்கள் நிச்சயமாக வாக்களிக்க வேண்டும் என்பது ஒருபக்கம் இருந்தாலும், யாருக்கு வாக்களிப்பது என்பதை நீங்களேதான் முடிவு செய்ய வேண்டும். இவருக்கு வாக்களியுங்கள் என நான் சொன்னதை பின்பற்றி சில லட்சக்கணக்கான மக்கள் கண்ணை மூடிக்கொண்டு எதற்கோ தங்கள் வாக்கை பதிவு செய்வதை நான் விரும்பவில்லை. இது ஜனநாயகத்தை அழிக்கும் செயல்‌. நான் நிச்சயமாக அப்படி செய்யமாட்டேன்.

என் மகள் வந்து "எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்" என்று கேட்டால்கூட நான் கட்சியை அடையாளம் காட்டமாட்டேன். "உனக்கும், உன்னை சுற்றியுள்ள மக்களுக்கும் எது நல்லது என்பதை கவனித்துப் பார்த்து அந்த கட்சிக்கு வாக்கை பதிவு செய், நான் சொல்வதையும் நீ கேட்க வேண்டாம்" என்று நான் கூறுவேன்.

index-finger-inked#2 நான் வாக்களிக்காமல் இருந்தால் பெரிதாக என்ன ஆகிவிடும்?

மக்களின் மனதில் இப்படியும் தோன்றும்: "எப்படியும் எல்லோரும் வாக்களிக்க போகிறார்கள். நான் வாக்களிக்காமல் இருந்தால் என்ன ஆகிவிடும்?" நாம் இன்னமும் நமது குடும்பம், சமூகம் போன்ற அடையாளங்களுடன் வலுவாக பிணைக்கப்பட்டு இருக்கிறோம். இதனால், "நானும் என் குடும்பமும் ‌நன்றாக இருந்தால் போதும், நாட்டில் எது நடந்தாலும் அதை பற்றி ‌கவலையில்லை. தேர்தல் விடுமுறை நாளும் அதுவுமாக யார் போய் வரிசையில் நிற்பது? நம் குடும்பத்துடன் சுற்றுலா அல்லது ‌சினிமாவுக்கு போகலாம் அல்லது வேறு ஏதாவது செய்யலாமே"‌ என்றும் தோன்றலாம். இது ஏன் இப்படி என்றால், குடும்பத்தின் மீது நீங்கள் ‌வைத்திருக்கும்‌ அடையாளம், இந்த ‌தேசத்தின்‌ மீது வைத்திருக்கும் அடையாளத்தை விட மிகப்பெரியதாக இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆங்கிலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான மார்க் ட்வெய்ன் இந்த கதையை பகிர்ந்து கொள்வதில் அலாதி விருப்பமுள்ளவர். நீண்ட நாட்களுக்கு முன் நடந்தது இது. நிலாவில் வேறுவிதமான மக்கள் வசிக்கின்றனர் என நம் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்களுடன் தொடர்புகொள்ள வேண்டும் என்ற ஆவல் அனைவரிடமும் ஏற்பட்டது. ஆனால் அப்போது அப்போலோ போன்ற விண்வெளி ஓடங்களோ, தொலைதொடர்பு கருவிகளோ எதுவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. எந்த வகையிலும் தொடர்புகொள்ள முடியாத நிலையில் ஒரு பளிச் யோசனை தோன்றியது. "நாம் எல்லோரும் சேர்ந்து ஒரே நேரத்தில் நமது வீட்டு கூரைகளில் ஒருங்கிணைவோம். அங்கிருந்து எல்லோரும் ஒரே குரலில் ஒரே வார்த்தையை நம்மால் முடிந்தவரை சத்தமாக எழுப்புவோம்; நாம் ஒரே நேரத்தில் "யாரு?" என்ற வார்த்தையை சத்தமாக ‌எழுப்புவோம். அவர்களிடம் இருந்து என்ன பதில் வருகிறது என்று பார்ப்போம்" என முடிவு செய்தனர்.

அந்த நாளும் வந்தது, எல்லோரும் வீட்டு கூரைகளில் ‌குழுமினார்கள். அதில் ஒருவருக்கு மட்டும், "இது ஒரு அபூர்வமான தருணம், இவர்கள் எல்லோரும் ஒரே குரலாக ஒலிக்கப் போகிறார்கள், ஆனால் என் குரலோ மிருதுவாக இருக்கிறது‌. நான் மட்டும் சத்தம் போடாமல் இருந்தால் என்ன ஆகிவிடும்? எல்லோரும் சேர்ந்து "யாரு?" என்று மாபெரும் குரலொலி எழுப்பும் இந்த அசாதாரணமான தருணத்தை நான் காதார கேட்கப் போகிறேன்" என்று முடிவு செய்தார். அந்த குறிப்பிட்ட நேரமும் வந்தது, நிசப்தத்துடன் கழிந்தது.

அரசியல் கட்சிகளால் பணம் மற்றும் பல வழிகளையும் பயன்படுத்தி தள்ளி வரப்படுபவர்களை தவிர ‌வேறு யாருமே வாக்களிக்க வராத‌ ஒரு தேர்தல் நாளும் வந்துவிடலாம். பொறுப்பின்றி இருக்கும் நிலை அது.

 

index-finger-inked#3 சுயமாக வாக்களியுங்கள், கும்பலில் ஒருவராக அல்ல

"மக்களாட்சி" என நாம் அழைக்கும்போது, ஒவ்வொரு தனிமனிதரும் தன் தேர்வை பதிவு செய்கிறார்கள். மக்களாட்சி இந்த அடிப்படையில்தான் ஏற்பட்டது‌ - நீங்கள் எந்த பரம்பரையில் இருந்து வருகிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள், அல்லது உங்கள் தந்தை என்னவாக இருந்தார் - இது எதிலும் நமக்கு ஆர்வமில்லை. நீங்கள் யார், நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதில் மட்டுமே நமக்கு ஆர்வம். ஒவ்வொரு குடிமகனுக்கும் தங்கள் வாழ்க்கையை எப்படி வேண்டுமோ அப்படி ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இதில் இருக்கிறது.

நாம் எப்போதுமே ஜாதி, மதம், இனம் அல்லது குடும்பம் என்ற அடிப்படையில்கூட வாக்கை பதிவு செய்யக்கூடாது ‌என்பது மிக முக்கியம். நமது வாக்கு நிச்சயமாக ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற வேண்டும். அமெரிக்காவில் பார்த்தீர்கள் என்றால் இது இரண்டு விதமான மதம் போல இப்போது நிற்கிறது - நீங்கள் சுதந்திர கட்சியா? குடியரசு கட்சியா? அவ்வளவுதான். மக்களோ, "என் தாத்தா குடியரசு கட்சியில் இருந்தார், என் அப்பாவும் குடியரசு கட்சி, அதனால் நானும் குடியரசு கட்சிதான்" என நினைப்பதால் தேர்தலுக்கு முன்னதாகவே முடிவு தீர்மானிக்கப்பட்டதாகி விடுகிறது.

இப்போது அமெரிக்காவில், வெறும் நான்கு அல்லது ஐந்து சதவீத மக்கள்தான் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன். மற்றவர்கள் எல்லோரும் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள். இந்தியாவை பொறுத்தவரை அநேகமாக இது பத்து முதல் பதினைந்து சதவீதம் என்ற அளவில் இருக்கக்கூடும்.

அரசியல் கட்சிகளில் உறுப்பினராக சேரும் இந்த நடைமுறையே ரத்து செய்யப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன் - ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டால், அது சரியாக ‌செயல்பட்டாலும், சரியாக ‌செயல்படவில்லை என்றாலும், எப்படியும் அந்த கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என நான் முடிவு செய்துகொள்கிறேன். "நான் இடதுசாரி, வலதுசாரி அல்லது நடுநிலை" என உங்கள் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் இந்த முடிவை எடுத்த கணமே மக்களாட்சி முறையை அழித்துவிட்டு மீண்டும் நிலப்பிரபுத்துவத்தை நோக்கி எடுத்துச் செல்கிறீர்கள். ஆதிகாலத்தில் இருந்து ஆட்சி மாற்றம் நடக்க வேண்டிய போதெல்லாம் போர் மட்டுமே தீர்வாக இருந்தது. "நாங்கள் இந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள், எனவே நாங்கள் இப்படி மட்டுமே வாக்களிப்போம்" என்றால், நீங்கள் மீண்டும் ஆதிகாலத்திற்கு மக்களாட்சியை அழைத்துச்செல்ல முயற்சி செய்கிறீர்கள். அதன் பின்னர் மக்களாட்சி என்பதே இருக்காது. மக்களாட்சி முறை என்பதில், ஒவ்வொரு தேர்தலிலும் உங்கள் நிலைப்பாடு ‌என்ன என்பதை நீங்கள் மதிப்பிடுகிறீர்கள். எப்போதுமே நிரந்தரமானதாக அந்த முடிவு இருக்கக்கூடாது. ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும், நமது மாநிலத்திற்கு, நமது நாட்டிற்கு இப்போது யார் சிறப்பாக செயல்படக் கூடியவர் என்பதை மதிப்பிடுபவர்களாக நாம் இருப்பது மக்களாட்சிக்கு முக்கியமான ஒன்று.

 

index-finger-inked #4 வேண்டாம் நோட்டா

"நோட்டா" என்று கூறும்போது நீங்கள், "யாரையுமே என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று சொல்கிறீர்கள். இது மிக புத்திசாலித்தனமாக தோன்றலாம், ஆனால் இப்படி செய்தால் ஒரு தேசத்தை உருவாக்க முடியாது. நீங்கள் ஒரு தேர்வை தெரிவு செய்ய வேண்டும். எவ்வளவு மோசமான வாய்ப்புகள் உங்கள் முன் வைக்கப்பட்டாலும், அதிலிருந்து இருப்பதிலேயே கொஞ்சம் குறைந்தளவு மோசமாக இருக்கும் தேர்வை நீங்கள் செய்ய வேண்டியது இருக்கிறது. நீண்ட கால அடிப்படையில் இந்த தேசத்தில் நலனை ஏற்படுத்த விரும்பினால், நீங்கள் விலகி நின்று கொண்டு, "யாருக்கும் தகுதியில்லை" என பேசக்கூடாது. அப்படி கூறுகிறீர்கள் என்றால் நீங்கள் முன்வந்து நில்லுங்கள்.

எல்லா டீக்கடைகளிலும், கல்லூரிகளிலும், "எல்லா அரசியல்வாதிகளும் மோசமானவர்கள், அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள்" என்பதை பற்றிய விவாதங்கள் நடக்கிறது. இந்த தேசத்தை கொள்ளையர்கள் கையில் ஒப்படைத்துவிட்டு நாம் வேடிக்கை பார்த்து கொண்டு - வாக்களிக்கும் பொறுப்பைக் கூட தட்டிக் கழித்தால் - அரசியல்வாதிகளை விட பெரிய திருடர்கள் நாம்தான், இல்லையா?

ஐம்பது சதவீத மக்கள் சரியாக உணவு உண்ணவில்லை என்பதை சாதாரண சூழ்நிலையாக என்னால் பார்க்க முடியவில்லை. இது நெருக்கடியான நிலை. இப்படி ஒரு சூழ்நிலையில், நான் ஓட்டு போட வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்விக்கே இடமில்லை.

எனவே இந்த பொறுப்புணர்வு வரவேண்டும். மக்களாட்சியின் அடிப்படையான பொறுப்பை நாம் புரிந்து கொள்ளாதபோது, மக்களாட்சி என்ற கோட்பாட்டிற்கே நாம் தகுதியற்றவர்கள் ஆகிறோம். இதனால் வேறு ஏதாவது நம்மை ஆட்சி செய்ய துவங்கிவிடும்.

மக்களாட்சி என்பது நாம் வேடிக்கை பார்க்கும் விளையாட்டு அல்ல, இதில் நம் பங்களிப்பும் இருக்கிறது.

index-finger-inked#5 மக்களின் தீர்ப்பே தலைவர்களை தீர்மானிக்கும்!

மக்களாட்சி என்பதற்கு நமது தமிழில் ஜனநாயகம் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. மக்களே நாயகர்களாக இருக்கிறார்கள் என்பது மக்களாட்சி முறைக்கு பொருத்தமான வார்த்தைதான். உங்கள் நேசத்திற்குரிய தேசத்தை நிர்வகிக்க உங்கள் பிரதிநிதியாக ஒருவரை தேர்ந்தெடுக்கிறீர்கள். அவர்கள் உங்கள்மீது அதிகாரம் செலுத்துபவர்கள் அல்ல. உங்களுக்கு சேவை செய்ய தேர்வானவர்கள். வாக்கை பதிவு செய்தவுடன் நமது கடமை முடிந்து விடுவதில்லை. ஒவ்வொரு நாளும் இதில் நீங்கள் பங்கேற்க வேண்டியுள்ளது. சொர்க்கத்தில் இருந்தோ நரகத்தில் இருந்தோ ஒரு அரசியல்வாதி திடீரென இங்கே வந்து குதித்துவிடவில்லை. உங்களில் ஒருவராக இருந்தவர்தான் அவர். குடிமக்களின் முக்கியமான கடமை இவர்களுக்கு ஆதரவு அளித்து, அவர்களிடமிருந்து சிறப்பான செயல் வெளிப்படுவதை கவனிப்பதே. தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மக்கள் எந்த கட்சியை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். ஆனால் ஒருவர் தேர்வானதிற்கு பின்னர், அவர்களின் கரங்களை எப்படி வலுப்படுத்தி ஆதரவளிப்பது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். இந்தியா போன்ற ஒரு தேசத்தில் அரசின் கொள்கைகளை நடைமுறை படுத்துவது என்பது ஓரளவுக்கே சாத்தியம். அரசிடம் கொள்கை அளவில் பல திட்டங்கள் இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்த போதுமான கரங்கள் இருப்பதில்லை. எனவே மக்கள்தான் பல்வேறு நிலைகளிலும் இதை நடைமுறையில் சாத்தியமாக்க வேண்டும். மக்கள் அரசுடன் கைகோர்த்து மாபெரும் இயக்கமாக எதையும் முன்னெடுத்து செல்ல துணை நிற்காத வரை அரசின் எந்த திட்டமும் வெற்றியடைய குறைந்தபட்ச வாய்ப்பே உள்ளது. அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்த மக்கள் தீவிரமாக ஈடுபடும்போது, அதிகாரத்தில் இருப்பவர்களும் அதற்கு ஈடுகொடுத்தாக வேண்டும்.