பொதுவாக, அதிசயம் என்றாலே விபூதி வரவழைப்பது, நீரின் மேல் நடப்பது என்றுதான் பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். இதுபோன்ற செயல்களை தன் வாழக்கையில் பார்த்த சத்குரு, இவையெல்லாம் அதிசயங்கள் இல்லை என்கிறார். அப்படியென்றால் சத்குரு சொல்லும் உண்மையான அதிசயம் எது? பதில் அறிய தொடர்ந்து படியுங்கள்...

சத்குரு:

சத்குருவின் சிறு வயதில் பார்த்த அதிசயங்கள்...

என் சிறு வயதில் யார் யாரோ நிகழ்த்திக் காட்டிய அதிசயங்களைப் பார்த்து இருக்கிறேன்.

வாழ்க்கையின் மர்மங்களைப் புரிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாக, ஆவிகளைப் பிடித்து பாட்டில்களில் அடைப்பதாகச் சொன்னவர்கள், பொம்மையை நடந்து காட்ட வைத்தவர்கள், கை தட்டியே முட்டைகளை உடைத்தவர்கள் என்று பலர் என் கவனத்தைக் கவர்ந்தார்கள்.

வாழ்க்கையின் கணங்களை முழுமையாகக் கவனிக்கத் தெரியாத முட்டாள்கள்தான் வேறு அதிசயங்களை நாடிப் போவார்கள்.

இப்படித்தான் ஒரு குறிப்பிட்ட வேப்ப மரத்திலிருந்து இனிப்பான பால் வருகிறது என்ற சேதி ஈர்த்தது. ஆயிரக்கணக்கானவர்கள் அந்த மரத்தைச் சுற்றி கூடி இருந்தார்கள். ஒரு சாரார் அதை மாரியம்மனின் அருள் என்று சொன்னார்கள். வேறு சிலரோ, யேசுவே அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டுவதாகச் சொன்னார்கள்.

அந்த வேப்பமரத்தின் பாலைச் சுவைத்துப் பார்த்தேன். அதில் கசப்பு இல்லை; இனிப்பும் இல்லை. சொல்லப்போனால், எந்தச் சுவையுமே இல்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இனிப்பான பால் வந்திருந்தால்கூட, அது வேப்பமரம் செய்த தவறு என்றுதான் நினைத்திருப்பேன். அதை அதிசயமாக்கி வழிபட ஆரம்பித்துவிட்டவர்களை என்ன சொல்வது?

'கோயிலுக்குப் போயிருந்தேன். சாமி சிலை மீது வைத்த பூ தானாகவே என்னை ஆசிர்வதிப்பதுபோல விழுந்தது' என்று அதிசயப்பட்டுச் சொல்பவரைக் கவனித்திருக்கிறேன். பசை போட்டுப் பொருத்தாத பூ, புவியீர்ப்பு விசையில் கீழ் நோக்கி வருவது இயல்புதானே? அதில் பிரமிப்பதற்கு என்ன இருக்கிறது?

இதைவிடப் பெரிய அதிசயங்களை நான் கண்டிருக்கிறேன். ஒரு பொருள் திருடு போய்விட்டாலோ, குழந்தைக் காணாமல் போய்விட்டாலோ, அது அங்கே இருக்கிறது என்று சொல்லும் நபர்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கும், குற்றவாளிகளுக்கும் தொடர்பு உண்டோ என்று கூட யோசித்திருக்கிறேன். துப்பு கிடைக்காத வழக்குகளில், அவர்கள் உதவியை நாடி போலீஸ்காரர்களும் வந்திருக்கிறார்கள்.

பிற்பாடு இந்த நிகழ்வுகள் எனக்கும் சாத்தியம் என்று உணர்ந்தேன். ஆனால், ஒன்றிரண்டு முறை அதைப் போன்ற விஷயங்களில் ஈடுபட்டு, உயர்வான சக்தியை விரயம் செய்தபோது, எனக்கே என் மீது வெறுப்பு வந்தது. விட்டுவிட்டேன்.

அக்தர் பாபா பிழிந்த பால்...

எனக்கு 21, 22 வயது இருக்கும். அக்தர் பாபா என்பவரைச் சந்திக்கும் வாய்ப்பு வந்தது. அவர் ஒரு எலுமிச்சையைப் பிழிந்தார். அதிலிருந்து பால் வந்தது. அதை அருந்தக் கொடுத்தார். ஒரு ஸ்பூன் அளவுதான் அருந்தியிருப்பேன். அடுத்த மூன்று நாட்களுக்குப் பசியும் இல்லை. தூக்கமும் இல்லை. முழுமையாக விழித்திருந்தேன். அது என்ன என்று அவரிடம் கேட்டேன். அவர் பதில் சொல்லாமல் சிரித்தார். உண்மையில், எனக்குப் பேரதிசயமாகத் தோன்றியதெல்லாம் வேறு அம்சங்கள்.

என் பள்ளி வயதில் ஒரு கோடை விடுமுறை. என்னை அப்போது பார்த்தவர்கள் எனக்குக் கிறுக்குப் பிடித்துவிட்டது என்றே நினைத்தார்கள். ஏதாவது ஓர் எறும்பு தென்பட்டால், ஒரு பூதக் கண்ணாடியைக் கையில் பிடித்துக் கொண்டு, அதனுடன் தரையில் ஊர்ந்தே பின் தொடர்வேன். புள்ளி போல் இருந்து கொண்டு அது எப்படி அவ்வளவு வேகமாக நடக்கிறது என்று ஆராய்வதே என் வேலை. அது ஏதாவது ஓட்டைக்குள் போய்விட்டால், அடுத்த எறும்பைத் தேடிப் போவேன்.

சில எறும்புகளுக்கு ஆறு கால்கள் இருந்தன. சிலவற்றுக்கு எட்டு கால்கள் இருந்தன. அவற்றை எப்படி ஒருங்கிணைத்து அவை கச்சிதமாக இயக்குகின்றன, எப்படி நினைத்த திசையில் நடக்கின்றன என்று இன்றுவரை ஆச்சர்யப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறேன். மனிதன் கண்டுபிடித்த எந்த இயந்திரமும் எறும்புக்குக் கிட்டேகூட வர முடியாது.

புள்ளியளவே உள்ள சிறு பூச்சிகளுக்கு எங்கே சிறகுகள் இருக்கின்றன. அவற்றை இயக்கி அவை எப்படிப் பறக்கின்றன? மரங்கள் ஏன் மேல் நோக்கி வளர்கின்றன? கையளவு மண்ணையும் நாற்றமெடுத்த சாணத்தையும் தாவரத்திடம் கொடுத்தால், அதை எப்படி நறுமணம் வீசும் ஒரு பூவாக மாற்றிக் காட்டுகிறது?

இந்தப் பூமியில் தினம் தினம் இதுபோல் நிகழ்ந்து கொண்டே இருக்கும் கணக்கில்லாத அதிசங்களைக் கண்டு இன்றைக்கும் பிரமிக்கிறேன்.

குரு தந்த விளக்கம்

ஒரு குருவிடம் சீடன், "உங்களை ஆச்சர்யப்படுத்திய அதிசயம் எது?" என்று கேட்டான்.

குரு சொன்னார், "ஒவ்வொரு விடியலிலும் பூமி புதிதாகி இருக்கிறது. அதைக் கவனிக்கத் தவறுவது நாம்தான். வாழ்க்கை உனக்கான பொக்கிஷங்களை வைத்துக் கொண்டு காத்திருக்கிறது. அது சிறு புன்னகையாகவோ, பெரிய வெற்றியாகவோ எதிர்ப்படலாம். கணத்துக்குக் கணம் உன்னைச் சுற்றியுள்ளது எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது. எது வாடிக்கையானது என்று அலட்சியமாக நினைக்கிறாயோ, அதையே முழுமையான கவனத்துடன் வேறு கோணத்தில் பார். முற்றிலும் புதிய வாய்ப்புகளும், புதிய நம்பிக்கைகளும் கொண்ட சந்தர்ப்பமாக அது மலரும்."

முழுமையான ஈடுபாட்டுடன் ஊன்றிக் கவனித்தால், இந்தப் பிரபஞ்சத்தில் சிறு சிறு விஷயம் கூட பேரதிசயம்தான். அரைகுறை மனதுடன் எதையும் நான் அணுகியது இல்லை. அப்படி வாழ்ந்து கொண்டு இருப்பதாலேயே, வாழ்க்கை ஒரு கணம்கூட எனக்கு சலித்துப் போகவில்லை.

ஆங்கிலக் கவிஞர் எலியட் 'எல்லாவற்றையும் முதல் தடவை பார்ப்பதுபோல் கவனி' என்று சொன்ன வாக்கியத்தில் நிறைய அர்த்தம் பொதிந்திருக்கிறது.

வாழ்க்கையின் கணங்களை முழுமையாகக் கவனிக்கத் தெரியாத முட்டாள்கள்தான் வேறு அதிசயங்களை நாடிப் போவார்கள்.

உண்மையான அதிசயம் எது?

ஒவ்வொரு மனிதனும் வேதனைகளற்று, அமைதியாக வாழ்வதற்கு வழி காட்டுவதுதான் இப்போது தேவையான அதிசயம். அவனையும் சுற்றி உள்ளவர்களையும் ஆனந்தமாக வைத்துக் கொள்வதற்கு வழி செய்வது, உன்னதமான அதிசயம்.

மனித சக்தியின் மேன்மையை உணராதவர்கள்தான் மற்ற சக்திகளைப் பற்றிப் பேசிக்கொண்டு இருப்பார்கள். மற்ற எந்த சக்தியைவிடவும் மனித சக்தி மிகத் தீவிரமானது. பல அதிசயங்களை நிகழ்த்தவல்லது!