‘வெற்றி வேல்! வீர வேல்!’ என்று உணர்ச்சி பொங்க கோஷமிட்ட படி, நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடியபோது வெளியில் ஒரு பொது எதிரி இருந்தனர். அவர்களை எதிர்த்து ஊக்கமும் உத்வேகமும் கொண்டு செயல்பட்டு வெற்றி பெற்றனர் மக்கள். ஆனால் இன்றோ எல்லாமே நம் கையில்! இப்போது ஊக்கமும் உத்வேகமும் குறைந்து விட்டதாக தோன்றுகிறதே?! இதன் உளவியல் பின்னணி குறித்து பேசும் சத்குரு, எதிர்கள் இல்லாமல் உத்வேகத்துடன் செயல்படும் வழியை கூறுகிறார்.

Question: நம்மைச் சுற்றி வாழும் மக்களிடையே ஊக்கத்தை உண்டு செய்வது எப்படி?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரே ஒரு நாள் பெரும் விழா அல்லது கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து மக்களை ஊக்கப்படுத்திவிட முடியும் என்பது இன்று பல இடங்களில் தென்படும் ஒரு நம்பிக்கை. ஆனால் அது அப்படி நடக்காது. ஒரே ஒரு நாளில் நீங்கள் அவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை அளிக்க முடியாது. அதற்கு தினசரி அளவில் அர்ப்பணிப்பான பணி தேவைப்படுகிறது - அது ஒரு ஆயுட்காலப்பணி. பெரும்பான்மையான உலகத் தலைவர்கள், பொதுவான வெளி எதிரி ஒருவனை உருவாக்கி அவனுக்கு எதிராக மக்களை ஒன்றிணைத்தனர். ஒரு வெளி எதிரியை உங்களால் உருவாக்க முடிந்தால், மிக எளிதாய் ஒவ்வொருவரையும் வீதியில் இறங்கி போராடச் செய்யமுடியும்.

வெளி எதிரிகளை விட, உங்களுடைய வரையறைகள் - உங்களுக்குள் இருக்கும் பயம், கவலை, கோபம், வெறுப்பு - தான் உங்களுடைய பெரிய எதிரிகள், இந்த எதிரிகள் உங்களுக்கு உள்ளேயே இருக்கிறார்கள் என்று மக்களுக்கு சொல்லி புரியவைத்து அவர்களை ஊக்கம் பெறச் செய்ய உங்களுக்கு அபாரமான உறுதியும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது.

ஆனால், வெளி எதிரிகளை விட, உங்களுடைய வரையறைகள் - உங்களுக்குள் இருக்கும் பயம், கவலை, கோபம், வெறுப்பு - தான் உங்களுடைய பெரிய எதிரிகள், இந்த எதிரிகள் உங்களுக்கு உள்ளேயே இருக்கிறார்கள் என்று மக்களுக்கு சொல்லி புரியவைத்து அவர்களை ஊக்கம் பெறச் செய்ய உங்களுக்கு அபாரமான உறுதியும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது. ஆனால் உறுதி, அர்ப்பணிப்பு இவற்றுக்கெல்லாம் இன்றைய உலகில் துரதிர்ஷ்டவசமாக பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. எனவே ஏதோ ஒரு நாள் சாகசம் செய்து அதிலேயே மனிதர்களை ஊக்கம் பெற வைப்பது என்பது இன்றைய நிலையில் சாத்தியம் அல்ல. மனிதர்களை ஊக்குவிப்பது என்பது ஒரு செடியை பராமரிப்பது போல். அந்த செடி மரமாய் வளர்ந்து உங்களுக்குக் கனிகளை கொடுக்கவேண்டும் என்றால், நீங்கள் ஒவ்வொரு நாளும் சிரத்தை எடுத்து நீர் ஊற்றி கவனித்துக்கொள்ளவேண்டும்.

மனிதர்களுக்கு இன்று இந்த அளவிற்கு ஊக்கப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதற்கு ஒரு முக்கியகாரணம், இன்றைய கல்வித் திட்டங்கள். அவை நூறு சதவிகிதம் தகவல் வழங்குவதாக மட்டுமே இருக்கிறது, ஊக்கம் அளிப்பதாக இல்லை. தேவையான ஊக்கம் பெறாத மனிதர்கள் தாங்கள் வகுத்திருக்கும் எல்லைகளைக் கடந்து வளரமாட்டார்கள். ஒரு மனிதன் ஊக்கம் பெறும்போதுதான், தான் வாழும் சூழ்நிலையைக் கடந்து வளர முயற்சிப்பான். ஆனால் இன்றைய கல்வி, ஊக்கத்தை உருவாக்காமல் வெறும் தகவல் பரிமாறுவதாகவே இருக்கிறது. இதனால் துரதிர்ஷ்டவசமாக, ஆசிரியர்களுக்கு இருக்கவேண்டிய மதிப்பும் மரியாதையும் குறைந்து போகிறது. ஏனெனில் ஆசிரியர்கள் பாடம் என்ற பெயரில் வெறும் தகவல்களைத்தான் பரிமாறுகிறார்கள் என்னும்போது, அதே தகவலை அவர்கள் ஏதோ ஒலி, ஒளிநாடாக்கள் மூலமாகவோ அல்லது இணையதளங்கள் மூலமாகவோ பெற்றுவிட முடியும். எனவே ஒரு ஆசிரியர் சொல்வதை காது கொடுத்துக் கேட்கவேண்டிய அவசியம் மாணவர்களுக்கு இருப்பதில்லை. தகவல் பரிமாற்றம் என்று வந்தபின், ஒரு ஆசிரியரைவிட, ஒரு புத்தகமே சிறந்தது. இணையம் அதைவிட சிறந்ததாயிற்றே!

மேன்மேலும் அறியவேண்டும் என்ற ஏக்கத்தை உருவாக்கும் ஒரு கருவியாய் ஆசிரியர் செயல்பட்டால் மட்டுமே, ஆசிரியரின் பணி என்பது எதையோ ஒன்றை வழங்குவதாக இருக்கும். அவ்வாறு இல்லாமல், வெறும் தகவல் ஒப்புவிக்கும் நிலையில் ஒரு ஆசிரியர் செயல்பட்டால், அதற்கு அந்த ஆசிரியர் தேவையில்லை, அவரைவிட புத்தகம் அல்லது ஒலி-ஒளி சாதனங்கள் சிறந்தவை. ஏனெனில் மனிதன் எப்போதுமே தவறான விளக்கங்கள் தரமுடியும். கல்வி வெறும் தகவல் பரிமாற்றமாக மாறியது சொல்லற்கரிய சேதத்தை விளைவித்து விட்டது. பல செயல்களை சாதிக்கக் கூடியதிறம் நிறைந்த இளமைக் காலம், துரதிர்ஷ்டவசமாக, சரியான தூண்டுதல்கள் இல்லாத காரணத்தால் வீணாகிவிடுகிறது.

நம்முடைய நேரம், முயற்சி, சக்திகளை இந்த தகவல் பரிமாற்றத்திற்கு (கல்விக்கு) நாம் செலவிடுவது போல், மனிதர்களை ஊக்குவிப்பதற்கும் போதுமான நேரம், முயற்சி மற்றும் சக்தியை நாம் முதலீடு செய்யவேண்டும். ஊக்கத்தையும், ஆர்வத்தையும் தூண்டிவிடும் கல்வியின் பரிமாணம், இன்னமும் ஆரம்பிக்கப்படவே இல்லை. உதாரணமாக, 60 ஆண்டுகளுக்கு முன், நம் நாடு சுதந்திரம் பெறுவதற்காக போராடிக் கொண்டிருந்தபோது, நம் மக்கள் முழுமையான ஊக்கத்தோடு, எதற்கும் தயாராக இருந்தார்கள். தங்களின் நாட்டிற்காக உயிர் துறக்கக் கூட அவர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால் இந்த 60 ஆண்டுகளில் மக்களை ஊக்குவிக்க நாம் ஒன்றுமே செய்யவில்லை. அதனால் இன்று நம் மக்கள், தொட்டதிற்கெல்லாம் சலித்துக் கொள்ளும், ஆர்வமே இல்லாத ஊக்கம் இழந்த மனிதர்களாய் இருக்கிறார்கள். தேவையான ஊக்கம் இல்லாததால், இன்று நம் நாட்டு மக்களுக்கு, ‘நான் இந்தியன்’ என்ற உணர்வைக் கொண்டு வருவதே கூட பெரும் போராட்டமாக இருக்கிறது. ஒருவர் விடாமல் இந்தியர் அனைவருக்கும் அந்த உணர்வைக் கொண்டுவர, ஊக்கத்தைக் கொண்டுவரத் தேவையான, முறையான ஒருமுக முயற்சி இங்கு நடக்கவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாய் ஏதோ முயற்சிகள் நடந்தது என்றாலும், ஒருமுகமாய் பெரும் முயற்சி ஏதும் நடக்கவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு, நான் அமெரிக்கா சென்றிருந்தபோது, 1930களில் பிரசுரிக்கப்பட்ட ஒரு இதழில் இருந்த விளம்பரத்தைப் பார்த்தேன். 1930களில் தான் பல்வேறு நாடுகளில் இருந்தும், பற்பல கலாச்சாரப் பின்னணிகளில் இருந்தும், வெவ்வேறு மொழிகள் பேசும் பலர், அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, அமெரிக்கக் குடியுரிமையை ஏற்றுக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இப்படி வெவ்வேறு பின்னணியில் இருந்து வருபவர்கள் அனைவரையும் ஒன்றாய் இணைக்க, அதிகாரிகள் ஒரு மாபெரும் முயற்சியை மேற்கொண்டனர். இந்த விளம்பரம் அதற்காக உருவாக்கப்பட்டது என்றும், இதேபோல் இன்னும் வேறுபல விளம்பரங்களையும் அந்த அதிகாரிகள் உருவாக்கினார்கள் என்றும் நான் பின்னர் அறிந்தேன். இந்த விளம்பரம் இத்தாலிய நாட்டிலிருந்து வந்து குடியேறிய பெண்களுக்காகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

ஊக்கம் என்ற ஒன்று தம்முள் ஊற்றெடுத்தால் தான், மனிதர்கள் தங்கள் எல்லைகளையும் தாண்டி பணி புரிவார்கள். ஊக்கம் இல்லாதபோது, ‘என்னால் இதுதான் முடியும்’ என்று தங்கள் எல்லைக்குள்ளேயே சுருங்கிக் கொள்வார்கள்.

அதில் இத்தாலிய பெண்கள், ‘அமெரிக்கப் பெண்ணாக’ மாறுவதற்குத் தேவையான குறிப்புகள் இருந்தது. அவர் தன் சமையலறையை எப்படி வைத்துக் கொள்ளவேண்டும், ‘ஏப்ரனை’ (சமையல் செய்யும்போது மேலாடை அழுக்காகாமல் கட்டும் துணி) எப்படி கட்டிக் கொள்ளவேண்டும், ஒரு அமெரிக்கக் குடும்பத்தலைவியாக அவள் தன் குடும்பத்தினருக்கு எப்படி உணவு பரிமாற வேண்டும் என்று விரிவாக அச்சாகியிருந்தது. அமெரிக்காவிற்குக் குடியேறிய ஒவ்வொரு இத்தாலிய பெண்ணிற்கும் இந்த பிரசுரம் வழங்கப்பட்டது. இதை அவர்கள் அவர்களின் சமையலறையில் ஒட்டிவைத்து, அதைப் பார்க்கும்போதெல்லாம் அவர்கள் ‘அமெரிக்கர்கள்’ என்ற உணர்வு அவர்களுக்கு மேலோங்கவும், அவ்வாறு தங்களை மாற்றிக் கொள்வதற்கு ஊக்கமாகவும் அது இருக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டார்கள். இந்த உதாரணத்தை நான் இங்கு சொல்லக் காரணம், இப்படி வெவ்வேறு கலாச்சாரத்தில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்களை ஒன்றிணைத்து, அமெரிக்காவை ஒரு தேசமாய் வளர்க்க அந்த அதிகாரிகள் இந்த அளவிற்கு சிந்தித்து, முயற்சியில் இறங்கினர். எல்லோரையும் ஒரே நாட்டவராய், ஒரே கலாச்சாரத்திற்குள் கொண்டுவர, நீங்கள் எப்படி உணவு பரிமாற வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்கவும் கூட அந்த அரசாங்கம் தயாராய் இருந்தது.

நம் தேசத்தில் இருப்பவர்கள் ஊக்கமும், எழுச்சியும் உடையவர்களாய் மாற, நாமும் முறையான ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். வெளிஎதிரி இல்லாமல், இங்கிருக்கும் ஒவ்வொருவரையும் எழுச்சி மற்றும் ஊக்கம் நிறைந்தவர்களாய் நாம் மாற்ற வேண்டும். சுயமாக ஒவ்வொருவரும் ஊக்கத்தோடு செயல்பட வேண்டுமெனில், இருப்பதிலேயே கொடிய எதிரி, வெளியில் அல்ல, உங்களுக்குள் தான் இருக்கமுடியும் என்பதை அவர்களுக்கு புரியவைக்க வேண்டுமெனில், அதற்கு ஒரு மாபெரும் ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படும்.

நம் மக்கள் ஊக்கமும், எழுச்சியும் உடையவர்களாய் மாற, நாமும் முறையான ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். ஒரு பொதுவான எதிரியை உருவாக்கி மக்களை ஓரணியில் திரளச் செய்வது எளிது. ஆனால் அப்படியில்லாமல், மனிதகுலத்திற்கே மிகப்பெரிய எதிரி உங்களுக்குள்தான் இருக்கிறது என்று எடுத்துச்சொல்லி, மக்களை ஊக்கம் நிறைந்தவர்களாய் ஓரணியில் எழுச்சிபெற வைப்பதற்கு ஒரு மாபெரும் ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுகிறது. இன்றைய தேவை இந்த ஊக்கம் தான். ஊக்கம் என்ற ஒன்று தம்முள் ஊற்றெடுத்தால் தான், மனிதர்கள் தங்கள் எல்லைகளையும் தாண்டி பணி புரிவார்கள். ஊக்கம் இல்லாதபோது, ‘என்னால் இதுதான் முடியும்’ என்று தங்கள் எல்லைக்குள்ளேயே சுருங்கிக் கொள்வார்கள். ஊக்கம் பிறக்கும்போதுதான், சராசரியாக மனிதர்கள் செய்வதையும் தாண்டி ஏதோ ஒன்றைச் செய்ய நமக்குள் உத்வேகம் பிறக்கும். இது நடந்தால் தான், ஒரு சமூகமாய் முன்னேறி பயனுள்ள ஏதோ ஒன்றை சாதிப்போம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்று ஏதாவது போராட்டம் நடத்தும்போதுதான், ஊக்கம் பெற்றவர்களாய் ஓரணியில் திரள்கிறார்கள். இவ்வாறு இல்லாமல், சாதாரண வாழ்க்கை சூழ்நிலைகளிலும் மக்கள் ஊக்கத்துடன், உத்வேகத்துடன் இருக்கவேண்டும். போர் என்று வந்துவிட்டால், மனிதர்கள் போர்க்களம் சென்று மரணம் அடைய தயாராக இருக்கிறார்கள். அது முக்கியமல்ல. சூழ்நிலைகள் சாதாரணமாக இருக்கும்போதும், நம் நாட்டிற்கும், இவ்வுலகிற்கும் தேவையான செயல்களை முழு உத்வேகத்துடனும், முழுமையான எழுச்சியுடனும் செய்வது தான் இன்று வேண்டும். இது ஒரு நாளில் நடக்கக் கூடியது அல்ல; வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து இதற்கான பணிகளை நாம் செய்துகொண்டே இருக்கவேண்டும்.

இது நிகழ, எல்லோரும் ஏதோ ஒருவகையில் பங்களிக்கும் நேரம் வந்துவிட்டது. அதற்காக, சாலைகளில் சென்று மற்றுமொரு விடுதலைப் போராட்டத்தை நாம் உருவாக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் செய்யும் ஒவ்வொரு செயலிலும், நமக்குள் உருவாக்கும் ஒவ்வொரு எண்ணம் மற்றும் உணர்விலும், நம்மைச் சுற்றி ஒரு நல்லசூழ்நிலையை நாம் உருவாக்கிக் கொள்ளமுடியும்.