சத்குரு: ஒருவர் எவ்வாறு குறிப்பிட்ட சக்திகளை உணர்ந்துகொள்வது மற்றும் வெவ்வேறு மக்களும், பல்வேறு வடிவங்களும், பலவிதமான வெளிகளும் எப்படி உங்கள் மீது தாக்கத்தினை உண்டாக்குகிறது என்பதைப் பற்றி சமீபத்தில் என்னிடம் கேட்கப்பட்டது. பிரதிஷ்டையின் அறிவியல் இதுதான். பிரதிஷ்டை செய்வதற்கு ஒரு மனிதரே சிறந்த பொருள், ஏனென்றால் இந்த பூமியில் இருக்கும் எல்லா பருப்பொருள் வடிவங்களிலும், மனித வடிவம்தான் உச்சபட்ச பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. ஒரு மனிதரை பிரதிஷ்டை செய்வது மிகவும் எளிது. ஆனால், மனிதர்களுடன் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் அவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். இப்போதே அவர்களை பிரதிஷ்டை செய்துவிட முடியும். ஆனால் நாளை காலைக்குள், அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று நமக்குத் தெரியாது. எல்லாவற்றுக்கும் மேல், அவர்களுக்கு வழங்கப்படுவது என்னவாக இருந்தாலும் அதனுடன் நேர்மையாக இருக்கச்செய்வதே ஒரு பெரிய விஷயம், குறிப்பாக இன்றைய உலகில். அதன் காரணமாக, நாம் வேறு வடிவங்களை பிரதிஷ்டை செய்கிறோம்

அளக்கமுடியாதது, ஆனால் அறியமுடிவது

இன்றைக்கு நவீன அறிவியல் பொருள்தன்மையான விஷயங்களை ஆய்வு செய்வதிலேயே இன்னமும் முனைப்பாக இருந்து வருகிறது. உங்களுடன் தொடர்புடைய பொருள்தன்மையான அனைத்தும் வெளியிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. என்னுடைய உடல் என்று நீங்கள் அழைத்துக்கொள்வது, இந்த பூமியின் ஒரு சிறு துண்டுதான். நீங்கள் சாப்பிட்ட உணவின் மூலம் சிறுகச் சிறுக சேர்த்துக்கொண்டீர்கள். உங்களைக் குறித்த பொருள்தன்மையான அனைத்தும் நீங்கள் சேகரித்துள்ளவைதான் என்றால், அப்போது அது நீங்களாக இருக்கமுடியாது. எனில், நீங்கள் என்பது என்ன? நிச்சயமாக பொருள் தன்மை தாண்டிய ஒரு பரிமாணம் இருக்கிறது. அதனை நீங்கள் அலட்சியப்படுத்தினால், வாழ்வு என்பதே இல்லை. ஆனால் தற்போது, தங்களை அறிவியல்பூர்வமானவர்களாக எண்ணிக்கொள்ளும் மனிதரின் காரண அறிவானது, “கருவியைக்கொண்டு என்னால் அளக்கமுடிவது என்னவோ, அதைத் தவிர்த்து வேறு எதுவும் இருப்பதற்கில்லை,” என்று முடிவு செய்யும் அளவில்தான் இன்னமும் இருக்கிறது. அதன்படி, நீங்கள் அனைவரும் இங்கு இல்லை. ஏனென்றால், உங்களை அளவீடு செய்யமுடியாது!.

உங்களுடன் தொடர்புடைய பொருள்தன்மையான அனைத்தும் வெளியிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. என்னுடைய உடல் என்று நீங்கள் அழைத்துக்கொள்வது, இந்த பூமியின் ஒரு சிறு துண்டுதான்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒருமுறை எனக்கு இது நிகழ்ந்தது. பொதுவாக இந்த சங்கடங்களுக்கு எப்போதும் என்னை நான் உட்படுத்திக்கொள்வதில்லை. ஆனால், வெகுகாலம் முன்பு, ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில் நான் செய்யவேண்டியிருந்தது. நான் ஒரு ஆராய்ச்சி மையத்தில் இருக்க நேர்ந்தபோது, அவர்கள் என்னிடம், “நாங்கள் உங்களது காமா அலைகளை அளக்க விரும்புகிறோம்,” என்றனர். “என்னிடம் காமா அலைகள் இருப்பது எனக்குத் தெரியாது,” என்றேன். அவர்கள், “இல்லை, உங்களுடைய மூளையில் காமா அலைகள் உள்ளன, நாங்கள் அவைகளை அளவீடு செய்வோம்,” என்றனர். பிறகு அவர்கள் எனது உடல் மீது பதினான்கு மின்கம்பிகளை இணைத்துவிட்டு, “தியானியுங்கள்” என்றனர். நான், “எனக்கு தியானம் செய்வது எப்படி என்று தெரியாது,” என்றேன். அவர்கள், “நீங்கள் அனைவருக்கும் தியானம் கற்றுத் தருகிறீர்கள்,” என்றனர். “ஆமாம், நான் கற்றுத் தருகிறேன். ஏனென்றால், அவர்களுக்கு அசைவில்லாமல் எப்படி உட்கார்ந்திருப்பது என்பது தெரியவில்லை. உங்களுக்கு வேண்டுமென்றால், நான் அசைவில்லாமல் உட்கார்ந்திருப்பேன்,” என்றேன். அவர்களது பிரச்சனை, நான் என்னவிதமான தியானம் செய்கிறேன் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஒரு பெயர் மற்றும் அதற்கான வழிமுறை வேண்டும். மேலும், அவர்களுக்கு அதன் முடிவை அளவீடு செய்யவேண்டும்.

அவர்களுக்கானதை நான் கொடுக்கப்போவதாக இல்லை. ஆகவே, நான் அதேநிலையில் உட்கார்ந்திருந்தேன். சுமார் இருபது நிமிடங்கள் கழிந்த பிறகு, முழங்கையில் எங்கே தட்டினால் அதிகம் வலிக்குமோ அந்தக் குறிப்பிட்ட இடத்தில் ஏதோ உலோகப் பொருளினால் தட்டிக்கொண்டிருந்தனர். அது அவர்களுடைய பரிசோதனையின் ஒரு பகுதியாக எண்ணி நான் உட்கார்ந்திருந்தேன். பிறகு அவர்கள் எனது கணுக்கால் மற்றும் முழங்காலில் தட்டத் தொடங்கினர். தொடர்ந்து தட்டியதால் வலித்தது. அதன் பிறகு நான் கண்களைத் திறந்து, “நான் ஏதாவது தவறு செய்கிறேனா? ஏன் பலமாகத் தட்டுகிறீர்கள்?” என்று கேட்டேன். அவர்கள், “எங்களுடைய கருவிகளின்படி நீங்கள் இறந்துவிட்டீர்கள்” என்றனர். “இது மகத்தான கண்டுபிடிப்பு” என்று கூறினேன். ஆனால், அதற்குப் பிறகு நீண்ட யோசனை செய்துவிட்டு, “இல்லை, உங்களுடைய மூளை இறந்துவிட்டதாகத் தோன்றுகிறது,” என்றனர். நான் கூறினேன், “முதலாவது கருத்தையே நான் ஏற்றுக்கொள்கிறேன். “நான் இறந்துவிட்டேன்” என்பது சரியாகத் தோன்றுகிறது. “மூளை இறந்துவிட்டது” என்பதாக நீங்கள் எனக்கு சான்றிதழ் அளித்தால், அது நன்றாக இருக்காது.”

நான் ஏன் இதை கூறுகிறேன் என்றால், நீங்கள் என்கின்ற ஆதார சக்தியாகிய உயிர், இதை ஏதோ ஒரு கருவியில் அளக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா? பொருள்தன்மையான செயல்பாடுகளை மட்டும்தான் நம்மால் அளக்கமுடியும், அப்படித்தானே? மேலும், உங்களுடைய எல்லா பொருள்தன்மையான விஷயங்களும் வெளியிலிருந்து சேர்க்கப்பட்டவைதான். அது பூமியின் ஒரு பகுதிதான். அது உங்களுடையது அல்ல. ஆகவே, ‘நீங்கள்’ என்கிற பரிமாணத்தை அளவீடு செய்ய முடியாது என்ற காரணத்தினால், ‘நீங்கள்’ இங்கு இல்லை என்று நினைத்தால், என்ன ஒரு மகத்தான தீர்மானம் இது?

ஒரு உயிர் இன்னொரு உயிரை சந்தித்தால், அது அறிந்துகொள்கிறது; உயிரானது மரணத்தைச் சந்திக்கும்போது, அது அறிந்துகொள்கிறது

ஆகவே, பிரதிஷ்டை என்பது பொருள்தன்மையின் இயல்பற்ற, சக்தியின் பரிமாணமாக இருக்கிறது. அது நிலை நிறுத்தப்பட்ட உயிர்சக்தியாக இருக்கிறது. பிரதிஷ்டை என்பது வீரியம் மிகுந்த உயிர்சக்தியின் செயல்முறையை உருவாக்குவதற்கான ஒரு வழி. சில கலாச்சாரங்களில், குறிப்பாக இந்தியாவில், ஒரு காலத்தில் ஒவ்வொரு வீதியும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்றைக்கும்கூட, அற்புதமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட வெளிகள் இங்கு உயிர்ப்புடன் இருக்கின்றன. நீங்கள் அப்படிப்பட்ட இடங்களுக்குச் சென்று உணரவேண்டும். நீங்கள் ஒரு வெற்றுவெளிக்குள் நடந்து சென்றால், அந்த வெளியானது எப்படி உயிர்ப்புடன் இருக்கிறது அல்லது உயிரிழந்து இருக்கிறது என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியும். அது ஏதோ ஒரு அளவீடு கொண்டு அளக்கக்கூடியதா? இல்லை. உயிர் மட்டுமே உயிரை அறிகிறது. ஒரு உயிர் இன்னொரு உயிரை சந்தித்தால், அது அறிந்துகொள்கிறது; உயிரானது மரணத்தைச் சந்திக்கும்போது, அது அறிந்துகொள்கிறது. இதை அளப்பதற்கு ஏதேனும் கருவி இருக்கிறதா? இல்லை. ஏனென்றால், உங்களுடைய எல்லாக் கருவிகளும் பொருள்தன்மையான செயல்முறைகளை மட்டுமே அளக்கமுடியும்.

பிரதிஷ்டை செய்யப்பட்ட வெளிகளில் வசித்தல்

பிரதிஷ்டை என்பது குவிக்கப்பட்ட உயிர்சக்தி. பிரதிஷ்டை செய்யப்படாத வெளிகளில் எந்த மனிதரும் வாழக்கூடாது. மனிதகுலத்தின் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், குறிப்பாக பதினான்கு வயதுக்குக் குறைவாக இருக்கும் குழந்தைகள், பிரதிஷ்டை செய்யப்பட்ட வெளிகளில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கான நேரத்தை செலவழிப்பதில் நீங்கள் உறுதியுடன் இருந்தால், என்னை நம்புங்கள், வளரிளம் பருவத்தின் இந்த முட்டாள்தனமான பிரச்சனைகள் எதுவும் அவர்களுக்கு இருக்காது. இப்போது குழந்தையாக இருந்தால், டையாபர் பிரச்சனைகள்; சிறார் என்றால் ஓடிக்கொண்டே இருப்பது பிரச்சனை; வளரிளம் பருவம் என்றால் வேறொரு பிரச்சனை; நடுத்தர வயது என்றால் ஒருவிதமான நெருக்கடி; முதுமை என்றால் கேட்கவே வேண்டியதில்லை அவ்வளவு பிரச்சனை. நீங்கள் எப்போதுதான் வாழப்போகிறீர்கள்? வாழ்க்கை முறையை நீங்கள் ஒரு பிரச்சனையாகப் பார்க்கிறீர்கள். அதை நீங்கள் பிரச்சனையான ஒன்றாகச் செய்துவிட்டீர்கள். ஏனென்றால், வாழ்வை உங்களது காரண அறிவுக்குள் பொருத்திவிட முயற்சி செய்கிறீர்கள். அது அல்ல, உங்களது காரண அறிவு இந்த வாழ்வுக்குள் கச்சிதமாகப் பொருந்துகிறது. இந்த வாழ்வை காரண அறிவுக்குள் பொருத்துவதற்கு நீங்கள் முயன்றால், அது செயல்படப் போவதில்லை.

பிரதிஷ்டை என்பது ஒரு பரிமாணமாக, உங்களுடைய ஒட்டுமொத்த சக்தி உடலும் வெடித்தெழும் விதமாக, உயிர்சக்தியை நிலைப்படுத்தும் ஒரு அறிவியலாகவும், தொழில்நுட்பமாகவும் இருக்கிறது

பிரதிஷ்டை என்பது ஒரு பரிமாணமாக, உங்களுடைய ஒட்டுமொத்த சக்தி உடலும் வெடித்தெழும் விதமாக, உயிர்சக்தியை நிலைப்படுத்தும் ஒரு அறிவியலாகவும், தொழில்நுட்பமாகவும் இருக்கிறது. இந்த மாதிரியான பல வெளிகளை நாம் உருவாக்கியுள்ளோம். மக்கள் அதற்குள் நடந்தால், அங்கு உணரப்படும் தீவிரத்தின் காரணமாக, கண்ணீர் பெருக்கெடுக்கத் தொடங்குகிறது. ஏன் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. தினமும், கட்டுக்கடங்காத அன்பு, ஆனந்தம் மற்றும் பரவசத்தின் கண்ணீரால் உங்களது கன்னங்கள் நனைக்கப்பட வேண்டும். இது நிகழவில்லையென்றால், நீங்கள் இன்னமும் வாழத் துவங்கவில்லை.