ரக்குல் ப்ரீத் சிங்: இன்றைய காலத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களும், கற்பழிப்பும், வீட்டிற்குள் நிகழும் வன்முறையும் அதிகரித்துவிட்டதை பார்க்கிறோம். நாம் அனைவரும் இதற்காக வருத்தப்படுகிறோம். கடுமையான தண்டனைதான் இதற்கான தீர்வு என்று நமக்குத் தெரியும், ஆனால் அது நடப்பதில்லை. அதனால் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுத்து, இந்தியாவை நம் அனைவருக்கும் பாதுகாப்பான இடமாக மாற்ற என்ன செய்யமுடியும் என்று நினைக்கிறீர்கள்?

சத்குரு: நமஸ்காரம் ரக்குல். ஆம், பெண்களின் பாதுகாப்பும், அவர்களுக்கு எதிரான தவறுகளும், நாம் மிகுந்த கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள், இதை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் நாம் பார்க்கவேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரையில், கடினமான தண்டனையை நான் இதற்கான தீர்வாக பார்க்கவில்லை.

தண்டனை என்பது எப்போதும் குற்றம் நடந்தபிறகே வருகிறது. அது முக்கியம்தான், ஆனால் தீர்வு அதுவல்ல.

ஒரு சமுதாயமாக, நாம் மாற்றத்தின் தருணத்தில் இருக்கிறோம் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் இன்னும் தீர்வுகாணாத பல அடிப்படை பிரச்சனைகள் இந்த சமுதாயத்தில் இருக்கின்றன. ஒரு சமுதாயமாக, பெண்கள் பெரும்பாலும் வீட்டிலிருந்த ஒரு தலைமுறையிலிருந்து, வீதிகளுக்கு வந்து முன்பு பொதுவாக ஆண்கள் செய்த எல்லா செயல்களிலும் பெண்கள் ஈடுபடும் ஒரு தலைமுறையாக நாம் மாறிவருகிறோம். அதனால் அனைவர் மனங்களிலும், நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் அதன் அங்கமாக பெண்கள் இருப்பதை சாதாரணமாக பார்ப்பதற்கு, இதுகுறித்த விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும், அவர்கள் மனங்கள் வளர்ந்து முதிர்ச்சியடைய வேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இருபாலரும் நெருக்கமாக இருந்து வேலைசெய்வது மக்களுக்கு பழக்கமில்லாததால் பல விஷயங்கள் நிகழ்கின்றன. இதில் சட்டநடவடிக்கையும் தண்டனையும் நிச்சயம் முக்கியமானது, ஆனால் தண்டனை என்பது எப்போதும் குற்றம் நடந்தபிறகே வருகிறது. அது முக்கியம்தான், ஆனால் தீர்வு அதுவல்ல. அடிப்படையான பிரச்சனை என்னவென்றால், தற்போது நிறைய இளைஞர்கள், குறிப்பாக ஆண்கள், முதல்முறையாக கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். அதோடு அடிப்படையான மனித பாலுணர்வுக்கு நாம் எதுவும் செய்யவில்லை. அதைப் பற்றி விவாதிக்கக்கூட நாம் தயாராக இல்லை.

ஹார்மோன்களின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் 15 முதல் 25 வயதுக்குட்பட்ட பருவத்திற்கு எந்த தீர்வுகளும் இல்லை. நம்மிடம் ஒழுக்கநெறிகள் இருக்கின்றன, அவை பழங்காலத்தில் நன்றாகவே இருந்தன. ஆனால் நாம் இப்போது எப்படிப்பட்ட காலகட்டத்தில் இருக்கிறோம் என்றால், இதற்கு திருமணத்தின் வடிவிலான ஒரு திட்டவட்டமாக தீர்வு 25 வயதிற்குப் பிறகுதான் வருகிறது. ஒருகாலத்தில் அதை 16 அல்லது 17 வயதில் செய்துவிடுவார்கள், ஆனால் இப்போது 25 வயதிற்குப் பிறகுதான் திருமணம் நிகழ்கிறது.

ஒரு தேசமாக, ஒரு சமுதாயமாக, இதை எப்படி அணுகப்போகிறோம் என்று நாம் விவாதிக்கும் நேரம் வந்துவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதர்களுக்கு தேவைகள் இருக்கின்றன. இதை மக்கள் நாகரீகமான முறையில் அணுகுவதற்கு நாம் எப்படி உதவப்போகிறோம்? இது நாம் விவாதித்து, தீர்வுகண்டு, ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று. சட்டமும் தண்டனையும் மட்டுமே இதற்குத் தீர்வாகாது. கல்வி, சமுதாயத்தின் வளர்ச்சி, மற்றும் சட்டம் ஒழுங்கு - இவை ஒன்றாக சேர்ந்தால்தான் இதற்கு தீர்வுகாண முடியும்.

ஓரளவு மக்கள் செல்வாக்குடன், ஓரளவு அதிக எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடையும் இடத்தில் இருக்கும் நீங்கள் அனைவரும், குறிப்பாக சினிமாத்துறையில் இருப்பவர்கள் அனைவரும் இதுபற்றி வெளிப்படையாக பேசுவது முக்கியம். மனித பாலுணர்வு என்று ஒன்று இருக்கிறது, அதற்கு நாம் ஏதாவது செய்யவேண்டும் என்பது சமுதாயத்தில் சாதாரணமாக பேசும் உரையாடலின் அங்கமாகிடவேண்டும்.

அனைவரும் துறவிகளாக மாறி தங்கள் தேவைகளைக் கடந்து சென்றுவிடப் போவதில்லை. பெரும்பாலான மனிதர்கள் இதை வேறுவிதமாக அணுகத் தேவையாக இருக்கிறது. ஒரு சமுதாயம் இதற்கு எப்படி வழிவகை செய்யப்போகிறது? இது நாம் பரிசீலிக்கவேண்டிய ஒன்று. இப்படிப்பட்ட குற்றங்கள் குறையவேண்டும் என்று நாம் விரும்பினால், நம் சமுதாயத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று விரும்பினால், சில அடிப்படைகளுக்கு நாம் தீர்வுகாண வேண்டியது மிகவும் முக்கியம்.

ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!

YAT18_Newsletter-650x120