சத்குரு: சிவன் அழிக்கின்ற கடவுள். இந்தியாவில், சிவனுடைய முகம் பெரும்பாலும் மறைந்தே போய்விட்டது. லிங்க வடிவாகவே அவனை வழிபடுகின்றனர். பாலியல் அடையாளமாக உள்ள ஒன்றை வழிபடுவது, அதிலும் மகாதேவனையே அவ்வாறு வழிபடுவது, மிக விசித்திரமானதாக இருக்கிறதல்லவா? இவ்வாறு கடவுளை குறிப்பதையும், வழிபடுவதையும் இந்த கலாச்சாரத்தில் மட்டுமே காணமுடியும். மற்ற மதங்களும், கலாச்சாரங்களும், இது சரி இது தவறு, இது நல்லது இது கெட்டது என்ற அறநெறிகளின் அடிப்படையில்தான் செயல்படுகின்றன. அது உள்நிலை விழிப்புணர்வினால் விளைந்ததன்று.

சிவா என்பது மனித அமைப்பின் ஆண்தன்மையும் பெண்தன்மையும் சஹஸ்ராரத்தில் இணையும் நிலையாகும். அந்த நிலையில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு பேரானந்தத்தை ஒருவர் உணரமுடியும்.

சிவனை இவ்வாறு லிங்க வடிவில், வழிபடுவதன் காரணம் என்ன? உயிரியல் சம்பந்தமான இணைதலை பாலியல் தொடர்பு என்கிறோம். இது ஆண்தன்மையும் பெண்தன்மையும், மனித அமைப்பின் கீழ்நிலையிலுள்ள, மூலாதார சக்கரத்தில் இணைவதாகும். அதுவே, மிக உயர்ந்த நிலையில், சஹஸ்ரஹார சக்கரத்தில் இணைந்தால், அதனை ஞானோதயம் என்று அழைக்கிறோம். இதனை சிவனும் சக்தியும் இணைவது என்றும் கூறலாம். அந்த நிலையை மஹேஷ்வரா என்று அழைக்கிறோம்.

உங்கள் உயிர்சக்தி கீழ்நிலையில், மூலாதாரத்தில் செயல்பட்டால், உங்கள் சக்திநிலை பாலியல் மூலத்தில் செயல்படுகிறது என்றாகும். அதுவே சஹஸ்ராரத்தில் செயல்பட்டால், அதனை தன்னை உணர்வது, ஞானோதயம் என்கிறோம். இது மனிதனின் விலங்குத் தன்மை தெய்வத் தன்மையை அடைவதைக் குறிப்பதாகும். சிவா என்பது மனித அமைப்பின் ஆண்தன்மையும் பெண்தன்மையும் சஹஸ்ராரத்தில் இணையும் நிலையாகும். அந்த நிலையில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு பேரானந்தத்தை ஒருவர் உணரமுடியும்.

சிவனுக்கும் லிங்கத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

இந்த லிங்க வடிவம் ஒரு வாயிலைப் போன்றது. இந்த வாயில் இல்லையென்றால், ஆதியோகியாகிய சிவன் வந்திருக்க வாய்ப்பில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சிவனுக்கும் லிங்கத்திற்கும் என்ன வித்தியாசம்? அது ஒரு சேண்ட்விச் (Sandwich) போன்றது. ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், எதனை நாம் சிவா என்று அழைக்கிறோமோ, ஒன்று அது இந்த பிரபஞ்சத்தின் அடிப்படையான வெறுமைத் தன்மையைக் குறிக்கிறது. மற்றொன்று, அந்த வெறுமையை உணர்ந்த ஆதியோகியைக் குறிக்கிறது.

லிங்கம் என்ற வார்த்தை லினா என்ற வார்த்தையிலிருந்து உருவானது. லினா என்றால் உருவம் என்று பொருள். லிங்கம் என்பது ஒருவித பக்குவமடைந்த உருவம். படைத்தலுக்கு மூலமான அந்த வெறுமை, பலவிதமான படைப்புகளாக மாறுவதற்கு முன்னால், இந்த லிங்க வடிவத்தை பெற்றிருந்தது. படைப்பிற்குப் பிறகு, படைத்தலுக்கு மூலமான வெறுமைக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர் ஆதியோகியான சிவன். ஆகவே, படைப்பின் மூலமான வெறுமையாகவும் உள்ள படைப்புகளிலேயே அந்த மூலத்திற்கு மிக நெருங்கியவனாகவும், இருபுறமும் ரொட்டியாக சிவா இருக்க, நடுவிலுள்ள நிரப்பும் வடிவமாக இந்த லிங்கம் விளங்குகிறது.

இந்த லிங்க வடிவம் ஒரு வாயிலைப் போன்றது. இந்த வாயில் இல்லையென்றால், ஆதியோகியாகிய சிவன் வந்திருக்க வாய்ப்பில்லை. அதே சமயம், இந்த வாயில் ஒன்று இருப்பதை நாம் உணர்ந்ததால்தான், அதற்கு அப்பால் உள்ள வெறுமையை, சிவா என்ற தன்மையை அறிய முடிந்தது. அதனால்தான், இந்த வெறுமைக்கு மிக நெருக்கமான படைப்பையும், சிவா, ஆதியோகி என்று அழைக்கிறோம். இந்த வாயில் இல்லையென்றால், அவனையும் என்னைப்போல ஒரு மனிதனாகவே மக்கள் நினைத்திருக்கக்கூடும். என்ன, என்னைவிட அவனுக்கு அதிகமான கைகளும், கால்களும் இருப்பதாக மனித மனம் கற்பனை செய்திருக்கும், அவ்வளவுதான்.

லிங்கத்தின் வகைகள்

லிங்கம் என்பது ஒரு வடிவம், இதனை சரியாக சக்தியூட்டினால், அது சக்தியின் இருப்பிடமாக என்றென்றும் அழியாமல் நிலைத்திருக்கும். இவற்றை எப்படி உருவாக்குவது? தேவைக்கேற்றாற் போல் வெவ்வேறு விதமான லிங்கங்களை எப்படி உருவாக்குவது? இதற்கென ஒரு அறிவியலே இருக்கிறது.

தியானலிங்கம் என்பது ஏழு சக்கரங்களும் உச்சநிலையில் சக்தியூட்டப்பட்டுள்ள லிங்கமாகும். இது முக்கியமாக மனிதனின் ஆன்மீக நல்வாழ்விற்காக உருவாக்கப்பட்டது.

இப்போது நவீன விஞ்ஞானத்தில் ஒன்றை கண்டறிந்துள்ளனர். ஒவ்வொரு கேலக்சியின் மூலமும், அதன் நடுவில், நீள்வட்ட வடிவில் உள்ளதாம். லிங்கமும் ஒரு நீள்வட்ட வடிவம்தான். ஒன்றுமில்லாத தன்மை அல்லது படைத்தலுக்கு மூலமான வெறுமை படைத்தலாகும்போது, முதலில் அது லிங்க வடிவத்தைப் பெறுகிறது. மறுபடியும் படைத்தல் ஒன்றுமில்லாத தன்மையுடன் கரைந்து போவதற்கு முன், இந்த வடிவத்தைப் பெறுகிறது. ஆதியும் அந்தமுமாகவும், தெய்வீகத்தின் வாயிலாகவும் விளங்குவது லிங்க வடிவம்தான். பண்டைய காலம் முதல் லிங்க வடிவமாகத்தான் சிவனை குறித்தார்கள், வழிபட்டார்கள்.

லிங்கங்களில் பல வகைகள் உள்ளன. மனித உடலிலுள்ள ஏழு சக்கரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு சக்கரத்திற்குரிய லிங்கங்களை உருவாக்க முடியும். தியானலிங்கம் என்பது ஏழு சக்கரங்களும் உச்சநிலையில் சக்தியூட்டப்பட்டுள்ள லிங்கமாகும். இது முக்கியமாக மனிதனின் ஆன்மீக நல்வாழ்விற்காக உருவாக்கப்பட்டது.

 

மற்ற வாழ்வியல் தேவைக்கேற்பவும் குறிப்பிட்ட லிங்கங்களை உருவாக்க முடியும். உடல்நலம் மற்றும் நல்வாழ்க்கைக்கு மணிபூரக லிங்கம். கிரேக்க நாட்டில், உலகின் தொப்புள் கொடி என்று அழைக்கப்படும் ஓரிடத்தில், பல ஆயிரம் கால மணிபூரக லிங்கம் ஒன்று அமைந்துள்ளது. இதனை நம் நாட்டிலிருந்து சென்ற யாரோ ஒரு யோகி அங்கு பிரதிஷ்டை செய்துள்ளார். பொருள், செல்வம் ஆகியவற்றிற்காக வேறுவிதமான லிங்கங்களை அமைத்தார்கள். பொதுவாக கோயில் அமைக்க மன்னர்கள் நிதி வழங்கியதால், அவர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக, பெரும்பாலும் மணிபூரக லிங்கத்தையே பிரதிஷ்டை செய்தார்கள்.

சில மன்னர்கள்தான், இந்த அடிப்படை வாழ்வியல் தன்மைகளையும் தாண்டிய லிங்கத்தை உருவாக்க முற்பட்டார்கள். அவர்கள் அனஹத லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய உதவினார்கள். அவை ஆத்மலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. இவை அன்பு, பக்தி ஆகிய தன்மைகளை கொண்டுள்ளன. இந்த வகை லிங்கங்கள் மக்களுக்கு மிக இணக்கமாகவும், எளிதில் தொடர்பு படுத்திக்கொள்ளும் விதமாகவும் விளங்குகிறது.

சில பகுதிகளில், மாந்திரீக பயன்பாட்டிற்காக, லிங்கங்களை உருவாக்கியுள்ளனர். இவை மூலாதார லிங்கங்களாகும். இது மிகுந்த ஸ்தூல நிலையில் உருவாக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த லிங்கங்களாகும். இந்த வகை கோவில்கள் பொதுவாக ரகசியமாகவும், வடிவமைப்பில் சிறியதாகவும் இருக்கும். இதுபோன்ற கோவில்கள் அசாம் மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளில் உள்ளன. அவை பூத்நாத் என்று அழைக்கப்படுகிறது. மேற்கூறிய லிங்கவகைகளில் பெரும்பாலும் மணிபூரக லிங்கங்கள்தான் பரவலாக உருவாக்கப்பட்டுள்ளன.

அடுத்த பகுதியில்…

இந்த பதிவின் தொடர்சியாக அடுத்த பகுதியில், ஜோதிர்லிங்கங்கள் என சொல்லப்படக்கூடிய லிங்கங்களின் மகத்துவம் என்ன என்பதையும், தியானலிங்கம் ஒரு ஜோதிர்லிங்கமாகத் திகழ்வது குறித்தும் சத்குரு பேசுகிறார்.

 

msr-nl-banner