சத்குரு:

ஓர் அரசியல்வாதியிடம் கேளுங்கள். பிச்சைக்காரனிடம் கேளுங்கள். கொள்ளையடிப்பவனிடம் கேளுங்கள். சிறு திருட்டுகள் செய்பவனிடம் கேளுங்கள். தத்துவவாதியிடம் கேளுங்கள். யாராக இருந்தாலும் தங்கள் கோபத்தில் ஒரு நியாயம் இருப்பதாகவே சொல்வார்கள்.

ஒரு தாவரமோ, மிருகமோ, பூச்சியோ அடுத்தவர்களைத் தங்களைப்போல் மாற்றிவிடத் திட்டம் போடுவதில்லை. மனிதன் மட்டும் தன் கொள்கைகளை மற்றவர் மீது திணிக்க முற்படுகிறான்.

ஒரு தாவரமோ, மிருகமோ, பூச்சியோ அடுத்தவர்களைத் தங்களைப்போல் மாற்றிவிடத் திட்டம் போடுவதில்லை. மனிதன் மட்டும் தன் கொள்கைகளை மற்றவர் மீது திணிக்க முற்படுகிறான். ஒத்து வராதவர்களுடன் அவனுடைய போராட்டம் துவங்கிவிடுகிறது.

கோபத்தை ஒரு சக்தி என்று தவறாக நினைத்து பலரும் அதை ஒரு கருவியாக்கிக்கொண்டுவிட்டார்கள்.

மதத்தின் கவுரவத்துக்காகக் கொலை செய்வதுகூட நியாயமான கோபம் என்று சொல்லிக்கொள்ளப்படுகிறது. வன்முறையில் ஈடுபடும் பல தீவிரவாதிகளிடம் கேட்டால் அவர்களும் தங்கள் கோபம் நியாயமானது என்றே சொல்வார்கள். கோபத்துக்கு ஒரு நியாயம் கற்பிப்பது எந்த விதத்திலும் புத்திசாலித்தனமல்ல.

கோபத்தை ஒரு சக்தி என்று தவறாக நினைத்து பலரும் அதை ஒரு கருவியாக்கிக்கொண்டுவிட்டார்கள். ஆனால் அந்தக் கருவியை அடுத்தவர் மீது ஏவும்போது, ஏவியவர் மீதே அல்லவா அது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது? அவர் எதிர்பார்த்த முடிவு மோசமாக அல்லவா மாறிப் போகிறது?

தனிமனிதர்களிடம் ஆரம்பிக்கும் இந்த வேகம் உருண்டு திரண்டு குடும்பப் பகை, சமூகப் பகை, நாட்டுப் பகை என்று விரிவடைந்துகொண்டே போய்விட்டது. பழிவாங்குவது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கலாச்சாரமாகவே மாறிவிட்டது.

கண்களை மூடிக்கொண்டு உங்கள் உள்ளங்கைகளை மேல்முகமாகத் திருப்பி வையுங்கள். உங்கள் மூச்சைக் கவனியுங்கள். அதே கைகளைக் கீழ்முகமாகத் திருப்பி வைத்து மூச்சைக் கவனியுங்கள். இப்போது, மூச்சு வேறுவிதமாக இயங்கும். உடலுறுப்புகளை எந்தவிதத்தில் வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் உயிர் சக்தியின் ஓட்டம் மாறுகிறது. இதுபற்றிய கவனம் இல்லாமல், கோபத்தில் கைகளை இப்படியும் அப்படியுமாக வீசிக் கூச்சலிடும்போது, உயிர் சக்தி எத்தனை குழப்பத்துக்குள்ளாகும் என்று யோசியுங்கள்.
கவனமின்றி, எவ்வளவு தூரம் உங்கள் சக்தியை நீங்கள் வீணடித்துக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் சரியானபடி இயங்கவில்லையென்றால், உங்களுக்கு எதுவும் சரியாக நடக்காது.

குடும்பம் டென்ஷன், நிறுவனம் டென்ஷன், போக்குவரத்து டென்ஷன் என்றால், இந்தப் பூமியில் நீங்கள் வாழத் தகுதியில்லாதவர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஒருவரிடம் கோபத்தைக் காட்டினால்கூட, மற்றவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை போய்விடும்.

உங்கள் உடலையும், மனதையும்கூட கையாளத் தெரியவில்லையே, குடும்பத்தையும் நிறுவனத்தையும் எப்படிக் கையாளுவீர்கள்?

உங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற இறுமாப்பை விட்டுவிட்டு எதையும் ஆழ்ந்த கவனத்துடன் அணுகிப் பாருங்கள்.

ஒரு குழுவுக்கு நீங்கள் எதனால் தலைவனாக ஏற்கப்படுகிறீர்கள்? உங்களிடம் இருக்கும் தெளிவும், தொலைநோக்கும் தங்களிடம் இல்லை என்று அவர்கள் நினைப்பதால்.

அவர்கள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்? அவர்களால் எடுக்க முடியாத முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள் என்று. அது ஒருவிதத்தில் எப்படி பெருமையாக இருக்கிறதோ, அதேபோல், இன்னொரு விதத்தில் சுமையாகவும் இருக்கிறது.

அதைச் சந்தோஷமாகச் சுமக்கத் தெரியாதவர்களுக்கு சுலபத்தில் கோபம் வருகிறது.
ஒன்றாக இணைந்திருக்கிறீர்கள். ஒன்றாகப் பணியாற்றுகிறீர்கள். ஒவ்வொரு கட்டத்திலும், மற்றவர்களையும் உங்களில் ஒருவராக நினைத்து, அவர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைத் தந்து, அவர்களுடைய கருத்துக்களையும் கேளுங்கள்.

அவர்கள் கருத்துக்கு மாறாக நீங்கள் முடிவு எடுக்கும்போதும், அது அவர்கள் நலனுக்காகத்தான் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்படி அன்பாக நடந்துகொள்ளுங்கள். உங்கள் முடிவு சரியானதாக அமைந்தால், அதற்கு அவர்களும் துணையிருந்தார்கள் என்ற பெருமையை அவர்களுக்கு வழங்குங்கள்.

கோபமும் டென்ஷனும் உங்கள் வாடிக்கையாகியிருந்தால், இனி, ஒவ்வொரு முறையும் அதுபற்றிய கவனத்துடன் அணுகிப் பாருங்கள். கோபம் உதிரும், சொர்க்கம் நிலைக்கும்.

உங்கள் முடிவு ஒருவேளை தவறாகிப் போனாலும் அதிலும் அவர்கள் சுணங்காமல் பங்கெடுத்துக்கொள்வார்கள். உங்களுடன் உறுதியாக இணைந்து நிற்பார்கள். தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

நீங்கள் தலைவனாக இருக்க விரும்பினால், உங்களைச் சுற்றி பணிபுரிபவர்களுக்கு உங்கள் மீது முழு நம்பிக்கை இருக்க வேண்டும். உங்களைப்பற்றிய முழுக் கவனத்துடன் நீங்கள் இருந்தால்தான், மற்றவர்களுக்கும் நீங்கள் பொறுப்பேற்க முடியும்.

ஒரு பறவையை நோக்கி கல்லை விட்டெறிந்தால், சுற்றியுள்ள நூறு பறவைகளும் பறந்துவிடும். ஒருவரிடம் கோபத்தைக் காட்டினால்கூட, மற்றவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை போய்விடும். ஏதாவது தவறாகும்போது, உங்களைக் குற்றம் சாட்டிவிட்டு, எல்லோரும் தனித்தனியே உதிர்ந்து போவார்கள்.

கோபத்தை எப்படித் தவிர்ப்பது?

உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், அங்கே நீங்களே ஒரு பிரச்னையாகிவிடாத அளவுக்கு ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் போதும். எதுவுமே டென்ஷனாக இருக்காது.

ரிச்சர்டு கவுலி என்ற பிரபல மருத்துவரிடம் ஒருவன் வந்தான்.

"டாக்டர், எனக்கு முப்பத்திரண்டு வயதாகிறது. கட்டை விரலை சூப்பும் பழக்கத்தை இன்னமும் விடமுடியாமல் தவிக்கிறேன்" என்று வெகு கூச்சத்துடன் சொன்னான்.

"இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. ஆனால், எத்தனை வருடங்களுக்கு அதே கட்டை விரலைச் சூப்புவாய்? இன்றிலிருந்து கவனமாக வேறு விரலைப் பயன்படுத்து" என்று அறிவுறுத்தி அனுப்பினார், ரிச்சர்டு கவுலி.

ஒரே வாரத்தில் அவன் மறுபடி வந்தான்.
"முப்பது வருடமாகத் தவிர்க்க முடியாத பழக்கமாயிருந்தது. ஆறே நாளில் அந்தப் பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்டுவிட்டேன். எப்படி?"

"ஒரு விஷயத்தைப் பழக்க தோஷத்தில் செய்யாமல், ஒவ்வொரு முறையும் அதுபற்றி புதிதாய் முடிவெடுக்க வேண்டி வந்தால், அதைக் கவனத்துடன் அணுகுவோம். தேவையற்ற பழக்கம் தானாக உதிர்ந்துவிடும்.." என்றார், ரிச்சர்டு கவுலி.

கோபமும் டென்ஷனும் உங்கள் வாடிக்கையாகியிருந்தால், இனி, ஒவ்வொரு முறையும் அதுபற்றிய கவனத்துடன் அணுகிப் பாருங்கள். கோபம் உதிரும், சொர்க்கம் நிலைக்கும்.

நீங்கள் கடைநிலைத் தொழிலாளியாக இருந்தாலும் சரி, கட்டுப்படுத்தும் முதலாளியாக இருந்தாலும் சரி, உங்களை முதலில் நிர்வகித்துக்கொள்ளும் முழுமையான திறனின்றி நீங்கள் மேல்நிலைக்கு வர முனைந்தால், அது ஒரு விபத்தாகவே முடியும்.

வெளிச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமல் உங்கள் உள்தன்மையை நிர்வகிக்க முதலில் தெரிந்துகொள்ளுங்கள். சுற்றியிருப்பது சகதியாக இருந்தாலும், அதையே தன் உரமாகக்கொண்டு தாமரை தன்னுடைய பூரண அழகை வெளிப்படுத்தவில்லையா? நறுமணத்தைப் பரப்பவில்லையா?

உங்கள் வாழ்க்கையும் அப்படித்தான் அமைய வேண்டும். சுற்றுப்புறம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், உறுதியோடு செயல்பட்டு அதிலிருந்து உங்களுக்கான உரத்தை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

தன்னைப்பற்றிய பொறுப்பு ஒருவனுக்கு வந்தால்தான் மற்றவர்களுக்கும் அவன் பொறுப்பேற்று வழி நடத்த முடியும். அப்படியொரு கவனமான நோக்கத்துடன் வாழ்பவர்களால்தான் சிறந்த தலைவர்களாக விளங்க முடியும்.

Question: "என் கோபத்தையும் இரத்த அழுத்தத்தையும் எப்படிக் கட்டுப்படுத்துவது?"


சத்குரு:


கோபம் என்பது வேர். மன அழுத்தம் என்பது அதன் கனி. உங்களைப் பற்றிய கவனம் இன்றி நீங்கள் செயல்படுவதால் தான் கோபம் வருகிறது. விழிப்பு உணர்வுடன் இயங்கினீர்கள் என்றால், கோபம் வராது. கோபம் மூலம் வரும் இரத்த அழுத்தம் நேராது.